Thursday, 12 November 2015

சங்கத்தமிழரின் உணவுமரபு



31.10.2014-தி.ஆ 2045-அவர்களுக்கு அப்போதுதான் திருமணமாகியிருந்தது. மிக இளவயது. இருவரும் தனிக்கு டித்தனம்போவதாக முடிவாகிவிட்டது. ஊரார் ஆசியுடன் குடித்தனத்தைத் தொடங்கியுமம் விட்டனர். துடித்துப்போ னா ள் மணப்பெண்ணின் தாய். தனிக்குடித்தனம் எப்படிச் சாத்தியம்? பொறுப்பேதுமின்றி துடுக்குத்தனத்துடன் உலா வித் திரிந்தவளால் தனக்குடித்தனம் நடத்த முடியுமா? அடுப்பங்கரையே தெரியாதவள் எப்படி ஆக்கிப் போடுவாள்?

தாய்மனதால் அமைதி கொள்ள இயலவில்லை. தன் தோழியை அழைத்து வேதனையைப் பகிர்ந்து கொண்டாள். மகளின் தனிக்குடித்தனச் ‘சிறப்பைக்’ கண்டு வருமாறும் கேட்டுக்கொண்டாள்.

அதுதான் மணமக்கள் குடியிருக்கும் வீடு. அருகே சென்ற தோழி உள்ளே செல்லாது மறைந்திருந்தே நடப்பதைப் பார்ப்பதென முடிவுசெய்தாள்.

கணவன் வேலைக்குச் சென்றிருக்க வேண்டும். திரும்பி வரும் கணவனுக்காக உணவு ஆக்கும் பணியில் இறங்கினாள் இளமனைவி.

நன்கு முற்றிய கட்டியாகியிருந்த தயிரை உறியிலிருந்து இறக்கி எடுத்தாள். எப்போதுமே நன்கு முற்றிய தயிர்தான் உணவுக்குச் சுவை தரும். ஆக்குவதற்;கு முன்பாகத் தயிரைக் கட்டித்தன்மை இல்லாதவாறு பிசைய வேண்டும். தன் மெல்லிய விரல்களால் தயிரைப் பிசைந்தாள். அவ்வேளை அவள் அணிந்திருந்த கலிங்கம் எனப்பட்ட பெறுமதியான சேலை நழுவிவிட்டது. நழுவிய சேலையை அள்ளியெடுத்துச் செருகியாக வேண்டும். தயிர் பிசைந்த கை. சேலையைத் தொட்டால் அது அழுக்காகி விடும். கை கழுவிப் பின் சேலையைச் செருகி மீண்டும் தயிரைத் தொட்டால் தயிரின் பதம் கெட்டுவிடும்.

அவளுக்குத் தயிரின் பதமே பெரிதாகவிருந்தது. தயிர்க்கறை படியச் சேலையை அள்ளிச் செருகிவிட்டு தன்பணி தொடர்ந்தாள்.

நெய்யோடு கடுகு மிளகு என்பன இட்டுத் தாளித்துப் பின் பிசைந்த தயிர் ஊற்றி மோர்க்குழம்பு செய்தாக வேண்டும். முறைப்படி தாளிக்கின்றாள். கடும் மிளகும் இன்ன பிறவும் நெய்யில் வதங்கிப் பொரிய, தாளிதப் புகை பொங்கி எழுந்தது. முகம் எங்கும் படிந்து கண்களினுள் புகைந்தது. கண்ணைக் கசக்கியபடி தாளிதத்தைத் துழாவிக்கொண்டிருந்தாள். தாளிதச் சட்டியைவிட்டு விலகவேயில்லை. சற்றே விலகினாலும் சுவை மாறிவிட வாய்ப்பு உண்டு.

ஒரு வழியாகத் தித்திக்கும் புளிச்சுவை நிறைந்த மோர்க்குழம்பை ஆக்கிவிட்டாள்.

கணவன் வீடு வருகின்றான். இன்முகத்தோடு உணவு பரிமாறுகிறாள். ‘இனிமையாக இருக்கிறதே உணவு’ என்றவாறு கணவன் மகிழ்ந்து உண்கிறான். அந்த அழகைக் கண்ணுறுகிறாள். நுண்மையான இன்பக் கோடுகள் அவள் முகமெங்கும் படர்ந்தன.

இது சங்க இலக்கியமான குறுந்தொகையில் இடம்பெற்றிருக்கும் ஓர் அழகிய காட்சி.

“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்

கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்

குவளை யுண்கண் குய்ப்புகை கமழத்

தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர்

இனிதெனக் கணவ னுண்டலின்

நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே.” கு.தொ. 167

சங்ககாலத்துக் குடும்பப் பெண்ணொருத்தி உணவு ஆக்குவதில் கொண்டிருந்த ஆழமான ஈடுபாட்டைப் புலப்படுத்துகின்றது இப்பாடல்.

சங்ககால மாந்தரது வாழ்வியல் அடையாளங்களில் அவர்கள் கைக்கொண்ட உணவுப் பழக்க வழக்கம் உன்னதமானதொரு இடத்தைப் பெறுகின்றது. உண்ணுதல் என்பது ஓர் உடல் சார்ந்த தேவையாக இல்லாமல் சமூகம் சார்ந்த செயலாகவே சங்ககாலத்தில் நோக்கப்பட்டிருக்கின்றது. அக்காலத்தே விருந்தினருக்குக் கொடுக்கப்பட்ட முதன்மையும், குடும்பம், ஊர் சார்ந்த நிகழ்வுகளில் உணவு பெற்றிருந்த சிறப்பும் உணவின் சமூகச் சார்பைப் புலப்படுத்துகின்றன.

உண், ஊன், உணவு போன்ற சொற்களின் வேர்ச் சொல் ‘உள்’ என்பதாகும் என்கின்றார் தொ. பரமசிவன். உட்கொள்ளுதல் என்ற செயலிலிருந்து பிறந்ததே இந்த வேர்ச்சொல் ஆகும்.

சங்ககாலத்தவரது வாழ்வை நுனிப்புல்லாக மேய்ந்தோர் சிலர் “அக்காலத்தோரின் உணவு மரபு போற்றுதற்குரியதல்ல” எனக் குறிப்பிடுகின்றனர். அவ்வாறானோரின் கருத்துகளை மறுதலிக்கவும், அக்காலத்தோரின் உணவு மரபினை இக்காலத்தோர் விளங்கிக்கொள்ளவும் வாய்ப்பாக இக்கட்டுரை எழுதப்படுகின்றது.

மனித குலத்தின் உணவு தொடர்பான தேடலே அவர்களது பண்பாட்டு வளர்ச்சிக்கு வழி வகுத்தது என்பர். சங்ககாலத்தோரின் வியத்தகு வளர்ச்சியில் உணவுப் பாரம்பரியத்தின் பங்கு இன்றியமையாததாக இருந்தது. மனிதனது உணவுத் தேவையானது இருப்பின் தேவையை நிறைவு செய்த போதும் அது இனம் சார்ந்த பண்பாட்டாலும், சுற்றுப்புறச் சூழல்களாலும் வரையறுக்கப்பட்டிருந்தது. சங்ககால இலக்கியங்கள் வெளிப்படுத்தும் உணவு தொடர்பான செய்திகள் ஒரே களத்தைக் கொண்டவையாகவும், ஓரே காலத்துக்கு உரியனவாகவும் இருக்கவில்லை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என வகுப்பப்பட்ட வாழ்களங்கள் தோறும் மாறுபட்ட உணவு மரபுகளை அவதானிக்க முடிகின்றது. ஒவ்வொரு களத்திலும் குறிப்பிட்ட பொருட்களே கிடைத்தன அல்லது உற்பத்தி செய்யப்பட்டன. இதனால் எல்லாக் களங்களுக்கும் எல்லாம் கிடைக்கவில்லை. தம்மிடம் மேலதிகமான இருப்பதைக் கொடுத்து பிற களத்தாரிடமிருந்து தேவையானதைப் பெற்றுக்கொண்டனர். எனவேதான் பண்டமாற்றும் பகிர்தலும் அக்காலத்தில் ஓங்கியிருந்தன.

சில நூற்றாண்டுகள் இடைவெளியைக் கொண்ட பல வளர்ச்சிப்படிகளினூடாகச் சங்ககாலத்தோரது உணவு மரபினை நாம் நோக்கலாம்.

தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், குறிப்பேடுகள் கல்வெட்டுகள் என்பன சங்ககால உணவுகள் குறித்துப் போதிய சான்றுகளைத் தருகின்றன.

தொல்காப்பியம் தமிழர் வாழ்வியலை நில அடிப்படையில் ஐந்தாக வகுக்கின்றது. ஐவகை நிலங்களில் வாழ்ந்தோர் தமிழர் என்ற போதிலும் நிலம் சார்ந்த பண்பாட்டு மாற்றங்களுக்கு ஏற்பவும், இயற்கை அமைவுகளுக்கிசைவாகவும் உணவுகளும் ஆக்கும் முறைகளும் வேறுபட்டிருந்தன.

தொல்காப்பியம் சுட்டிய ஐவகை நிலங்களுக்குமுரிய உணவும் நீர் வகைகளும் கீழே தரப்படுகின்றன.


➢ முல்லை நிலமக்களுக்கு உணவு- வரகு, சாமை

நீர் – கான்யாறு


➢ குறிஞ்சி நில மக்களுக்கு உணவு – திணை, தேன், மூங்கிலரிசி

நீர் – அருவி நீர், சுனை நீர்


➢ மருதநில மக்களுக்கு உணவு – செந்நெல் – வெண்ணெல்

நீர் – ஆற்றுநீர், மனைக்கிணற்றுநீர், பொய்கை நீர்


➢ நெய்தல் நிலமக்களுக்கு உணவு – உப்புக்கு விலைமாறிய பண்டம், மீனுக்கு விலைமாறிய பண்டம்

நீர் – மணற்கிணறு, உவற்குரிநீர்


➢ பாலை நில மக்களுக்கு உணவு – ஆறலைத்த பொருள், சூறை கொண்ட பொருள்

நீர் – அறுநீர் கூவலும், சுனை நீரும்.


தொல்காப்பியர் மரபியலில் என்னும் பகுதியில்,

“மெய் திரி வகையின் எண்வகை உணவில்” (பொரு 623)

என எட்டுவகை உணவைக் குறிப்பிடுகின்றார். இதற்கு உரை எழுதிய நச்சினார்கினியர் நெல், காணம் (கேப்பை), வரகு, இறுங்கு, தினை, சாமை, புல், கோதுமை என எண்வகைத் தானியங்களைக் குறிப்பிடுகிறார். ஆனால் சங்ககாலத் தமிழகத்தில் இறுங்கு, கோதுமை போன்ற தானியங்கள் வழக்கில் இல்லை. ஆயினும் வடமொழி செவ்வியல் இலக்கியங்கள், தானியவகை, பருப்புவகை, காய்கறி, பழங்கள், மணப்பயிர், பால்தயிர், ஊன், போதை ஏற்றும் குடிவகை என எட்டு வகை உணவுகளைக் குறிப்பிடுகின்றன. தொல்காப்பியர் குறித்த எட்டும் இவையாக இருக்கலாமோ என்ற ஐயமும் ஆய்வாளரிடத்தே உள்ளது.



தமிழில் எழுதப்பட்ட சமையல் நூல் ஒன்று சங்ககாலத்தில் இருந்ததைச் சிறுபாணாற்றுப்படை என்னும் நூல் குறிப்பிடுகிறது. ஓய்மானாட்டு நல்லியக்கோடன் பாணர்களுக்கு விருந்து படைக்கும்போது இந்த நூலிலுள்ள முறைமை வழுவாமல் சமைக்கப்பட்ட உணவை இட்டானாம்.



இந்த நூல் அருச்சுனனின் அண்ணன் வீமனால் எழுதப்பட்டதாம். இது வடமொழி நூலைத் தழுவியதாக இருக்கலாம். இலக்கியத் தொகுப்பிற்கு முன்பாகவே இந்நூல் அழிந்துவிட்டது.



“கா எரியூட்டிய கவர் கணைத் தூணிப்

பூ விரி கச்சைப் புகழோன் தன்முன்,

பனிவரை மார்பன், பயந்த நுண் பொருள்

பனுவலின் வழாஅப் பல் வேறு அடிசில்,

வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த

இளங் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து

விளங்கு பொற்கலத்தில் விரும்புவன பேணி,

ஆனா விருப்பின், தான் நின்று ஊட்டி, (சிறுபாணாற்றுப்படை 238-245)



இந்த நூல் குறித்த செய்திகள் மணிமேகலையிலும், சீவகசிந்தாமணியிலும் காணப்படுகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமையல் தொடர்பாகத் தனி;த்துவமான ஒரு நூல் எழுதப்பட்டிருக்கின்றது என்ற செய்தியே அக்கால உணவு மரபின் சிறப்பைக் காட்டுகின்றது.



அக்காலத்தே பத்துக்கு மேற்பட்ட சொற்களால் உணவைக் குறித்தனர்.


“உணாவே வல்சி உண்டி ஓதனம்

அசனம் பகதம் இரை ஆசாரம்

உறை, ஊட்டம்”

எனப் பிங்கல நிகண்டு உணவைக் குறிக்கும் பிற சொற்களைத் தருகின்றது. இவை தவிர புகா, மிசை என்னும் சொற்களும் உணவைக் குறிக்கப் பயன்பட்டிருக்கின்றன.

அடுப்பு – அட்டில் - குழிசி

நெருப்பைக் கண்டறிந்து அதைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகே சமையல் முறை சிறப்புற்றிருக்க வேண்டும் என்பதில் ஐயப்பாடு இல்லை. நெருப்பு மூட்டிச் சமைக்கும் அடுப்புகள் பற்றிய செய்திகள் இலக்கியங்களில் கூறப்பட்டிருக்கின்றன.



“முடித்தலை அடுப்பு” (புறம்.28.6)

“ஆண்டலை அணங்கடுப்பு” (மது.காஞ்.29)

“ஆடுநனிமறந்த கோடுயர் அடுப்பு” (புறம்.164)

“முரியடுப்பு” (பெரும்பாணாற்றுப்படை)

“களிபடுக்குழிசி கல் அடுப்பு” (நற்றிணை 41)



இவ்வாறான பல அடுப்புகள் அக்காலத்தே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அடுப்பு என்ற சொல்லாட்சி அக்காலத்திலிருந்தே வழக்கிலிருப்பது குறிப்பிடத்தக்கது. அடுப்புகளை விடவும் வேட்டைக்குச் செல்வோர் தீ மூட்டி இறைச்சியை வாட்டி உண்ணும் வழக்கமும் இருந்திருக்கின்றது.



உணவுமரபு வளர்ச்சியின் உன்னதமான நிலை இல்லங்கள் தோறும் தோற்றங் கொண்ட ‘சமையலறை’ எனலாம். அக்காலத்தே வீடுகளில் தனித்துவமான சமையலறைகள் இருந்திருக்கின்றன. அவற்றை அட்டில் என அழைத்திருக்கின்றனர்.



“உதியனட்டில் போல ஒலியெழுத்து அருவியார்க்கும்” என அகநானூறும்

“புளிற்றுநாய் குரைக்கும் புல்லென் அட்டில்” எனச் சிறுபாணாற்றுப்படையும்

“அறநிலை இய அகனட்டில்” எனப் பட்டினப்பாலையும் சமையலறைகளைக் குறிப்பிடுகின்றன.



அக்காலத்தே சமையற் பாத்திரங்கள் குழிசி என்னும் பெயரால் அழைக்கப்பட்டிருக்கின்றன. அவை உட்குழிந்து இருப்பதால் இப்பெயர் தோன்றியிருக்கலாம்.



“இருங்கட் குழிசி” (புறம்.65-2)

“மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி” (புறம்-168-9)

“அட்டகுழிசி அழற்பயந்தாங்கு” (புறம்-23)

“வெண்கோடு தோன்றாக் குழிசி” (புறம்-251)

“முரவு வாய் ஆடுறு குழிசி” (புறம்-371)

“களிபடுக்குழிசி” (நற்றிணை 41)



தண்ணீர் எடு;த்துவரப் பயன்பட்ட பாத்திரம் ஒன்று,



“தொகுவாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார்” - (அகநானூறு 393) என அழைக்கப்பட்டிருக்கின்றது.



இவை தவிர, புகர்வாய்க் குழிசி, சோறடு குழிசி போன்ற பாண்டங்களையும் மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.



சமையல் வகைகளும் உண்ணும் முறைகளும்



சங்கத்தமிழர் பல்வேறு சமையல் முறைகளைப் பயன்படுத்தியுள்ளனர். நீரிலிட்டு அவித்தல், அவித்து வேக வைத்தல், வறுத்து அவித்தல், சுடுதல், வற்றலாக்குதல், நெய்யிலிட்டுப் பொரித்தல், வேகவைத்து ஊறவைத்தல் போன்ற சமையல் முறைகளை இலக்கியங்களில் காணலாம்.

உணவு உண்ணும் முறைகளைத் தமிழர் பன்னிரெண்டாக வகுத்திருந்தனர். அவையாவன,

• அருந்துதல் - மிகச் சிறிய அளவே உட்கொள்ளல்.

• உண்ணல் - பசிதீர உட்கொள்ளல்.

• உறிஞ்சல் - வாயைக் குவித்துக்கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல்.

• குடித்தல் - நீரியல் உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்.

• தின்றல் - தின்பண்டங்களை உட்கொள்ளல்.

• துய்த்தல் - சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல்.

• நக்கல் - நாக்கினால் துலாவி உட்கொள்ளுதல்.

• நுங்கல் - முழுவதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல்.

• பருகல் - நீரியற் பண்டத்தை சிறுகக் குடிப்பது.

• மாந்தல் - பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல்.

• மெல்லல் - கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல்.

• விழுங்கல் - பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல்.



மிக நுட்பமாக உணவருந்தும் வழிகளை ஆய்ந்து பொருத்தமாகப் பெயரிட்டிருக்கும் சிறப்பு வியக்க வைக்கின்றது.

சங்கத்தமிழர் வாழ்நிலமெங்கும் நூற்றுக்கணக்கான உணவுமுறைகள் காணப்பட்டிருக்கின்றன. நிலம், குலம், தொழில் சார்ந்து அவை வேறுபட்டிருக்கின்றன.

இனி சங்கத் தமிழரது உணவு வகைகளையும் ஆக்கும் முறைகளையும் நோக்குவோம்.

சோறு

அக்காலந்தொட்டே வழக்கிருந்து வரும் சொல் சோறு. அக்காலத்திலேயே சோறுதான் முதன்மை உணவாக் திகழ்திருக்கின்றது. பலவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் அரிசியின் பயன்பாட்டை அறிந்திருக்கின்றனர். பழங்காலத் தமிழரது வாழ்வை வெளிப்படுத்தும் சான்றுகளாகத் திகழும் ஆதிச்ச நல்லூர் தொல்பொருட்கள் தமிழரது அரிசிப் பயன்பாட்டைப் புலப்படுத்துகின்றன.

கோதுடன் இருந்தால் நெல், குற்றியெடுத்தால் அரிசி, வேக வைத்தபின் சோறு எனப் பயன்படத்தப்பட்ட சொல் வழக்கங்களே அரிசிப் பயன்பாட்டின் ஆழத்தை வெளிப்படுத்துகின்றன.

வெண்நெல், செந்நெல் என்ற இருவகை நெல்லும் அக்காலந்தொட்டே வழக்கிலிருந்தன. நெல்லுக்கு வரி, செஞ்சாலி, செந்நெல், சொல், இயவை, ஐவனம் என்ற பெயர்களும் புழக்கத்தில் இருந்துள்ளன.

சோறு என்பதை அடிசில், அழினி, கூழ், அவிழ், கொன்றி, நிமிரல், புழுங்கல், பொம்மன், மிதவை, பருக்கை, பிசி, அன்னம் என்ற பல சொற்களால் குறித்தனர்.

பச்சரிசியால் பொங்கப்பட்ட சோற்றைப்; பொங்கல் என்றும்,

புழுங்கல் அரிசியால் பொங்கப்பட்ட சோற்றைப் புழுங்கல் என்றும் அழைக்கப்பட்ட வழக்கம் அக்காலத்தில் இருந்திருக்கிறது.

ஆக்கிய சோற்றுடன் பிற உணவுப் பொருட்களைக் கலந்து உண்டிருக்கின்றனர். கலக்கப்பட்ட பொருட்களுக்கு ஏற்ப, பல பெயர்களால் அவை அழைக்கப்பட்டன.


ஊன் சோறு : ஊனும் சோறும்

கொழுஞ்சோறு : கொழுப்பு நிணம் கலந்து ஆக்கியது

செஞ்சோறு : சிவப்பு அரிசிச் சோறு

நெய்ச்சோறு : நெய் கலந்தசோறு

புளிச்சோறு : புளிக்குழம்பு கலந்தசோறு

பாற்சோறு : பால் கலந்த சோறு

வெண்சோறு : வெள்ளிய அரிசிச் சோறு



அரிசியை மூன்று ஆண்டுக் காலம் பாதுகாக்கும் முறை பற்றிய தொழில்நுட்பம் பற்றிப் பழந்தமிழர் அறிந்திருந்தனர். (னு.ளு. ளுசiniஎயளய ஐலநபேயசஇ 1983இ ப.253)

இராச அன்னம் எனப்பட்ட உயர்வகை அசிரியினை பார்ப்பனர் உண்டனர் என்ற செய்தியும் இலக்கியத்தில் உண்டு.

பண்டமாற்றின் போது பெறுமதி மிக்க பொருளாக நெல் விளங்கியிருக்கின்றது. உப்பும் நெல்லும் ஒத்த பெறுமதி கொண்டதாக கருதப்பட்டிருக்கின்றது.

இருபுறமும் இரும்புப் பூண் கொண்ட உலக்கையால் உரலி;ல் இட்டு நெல் குற்றினர் என்ற செய்தியை,

“இருங்காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த

அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு

கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவிர்” (193-195)

எனச் சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுகின்றது.



சங்ககாலத்தில் அரிசிப்பொரி வழக்கில் இருந்திருக்கின்றது. புழுங்கிய நெல்லிலிருந்து பொரி எடுத்த செய்தியையும் பொரியோடு பாலையும் கலந்துண்ணும் வழக்கம் இருந்ததையும் ஐங்குறுநூறு (53) தெரிவிக்கின்றது.



சங்ககால ஒளவையார், அதியமான் சிறுசோறு, பெருஞ்சோறு வழங்கியதாகக் குறிப்பிடுகின்றார். தனிப்பட்ட ஒருவருக்கோ, சிறு குழுவிற்கோ வழங்கிய சோறு சிறுசோறு எனப்பட்டிருக்கலாம். மங்கல நிகழ்வையொட்டி சிறுசோறு வழங்கப்பட்தாகப் புறநானூறு (110) கூறுகின்றது. போர்வீரர்களுக்கும் பெரு நிகழ்வுகளிலும் வழங்கப்பட்ட சோறு பெருஞ்சோறு ஆகியிருக்கலாம். பாரதப் போரிலே பங்குபற்றிய வீரருக்கு சோறு வழங்கினான் என்பதற்காக “பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன்” என ஒரு சேர மன்னன் அழைக்கப்பட்டிருக்கின்றான்.



நெல்லரிசி தவிர மூங்கிலரிசி, வரகரிசி, சாமையரசி, திணையரிசி, கம்பரிசி, இறுங்கரிசி என்பனவும் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இவை தவிர, பயறு, உழுந்து, எள், கொள்ளு, அவரைப் பருப்பு போன்ற தானியங்களையும் பயன்படுத்தியிருக்கின்றனர்.

இவ்வகை அரிசிகளோடு கூடி ஆக்கப்பட்ட உணவு வகைகளை பின்னர் நோக்குவோம்.

ஊன் உணவு

சங்கத் தமிழரின் பெருவிருப்புக்குரிய உணவாகத் திகழ்ந்தவை ஊன் வகையறாக்களே. ஊர்வன, பறப்பன என்பவற்றோடு பல்வகை விலங்குகளும் உணவாகப் பயன்பட்டிருக்கின்றன. ஊனினைச் சுவைபட பல்வேறு விதங்களில் ஆக்கிப் பதப்படுத்தி உண்டிருக்கின்றனர். அவற்றை சற்று விரிவாக நோக்குவோம்.

ஊன், புலால், புலவு பைந்தடி, பைந்துணி, உணங்கல் எனப் பல பெயர்களால் இறைச்சி வகையாக்கள் அழைக்கப்பட்டிருக்கின்றன.

வெள்ளாடு, வரையாடு, செம்மறியாடு, பன்றி, மான், ஆமான், முயல் போன்ற விலங்குகளும், உடும்பு, அணில், எலி போன்ற சிறு பிராணிகளும், கோழி, காடை, காட்டுக்கோழி, புறா போன்ற பறவையினங்களும் மழைக்காலத்து ஈசல்களும் உணவாக்கப்பட்டிருக்கின்றன. சில பிரிவினரால் மாடு உணவாக்கப்பட்ட செய்திகளையும் சங்க இலக்கியம் கூறுகின்றது.



உணவு சேரிக்கக் கானகம் சென்ற ஒருவன் பிடித்து வரும் உயிரிகளைப் பட்டியலிடுகின்ற நற்றிணை.



‘உடும்பு கொளீஇ வரிநுணல் அகழ்ந்து

நெடுங்கோட்டுப் புற்றத்து ஈயல்

கொண்டி எல்லுமுயல் எறிந்த வேட்டுவன்’….-(நற்றிணை 59)



உடும்பினைக் குத்தித் தூக்கிக்கொண்டு, மண்ணைத் கிளறி வரித்தவளைகளைப் பிடித்துக்கொண்டும், உயரமான மண்புற்றுகளை உடைத்து அங்குள்ள ஈசல்களை அள்ளிக்கொண்டும் சுடவே ஓரு முயலினையும் கொண்டுவந்தான் வேடன்.



இறைச்சியை வேக வைத்தும் சுட்டும் தமிழர்கள் உண்டனர். வேக வைக்கப்பட்டது வேவிறைச்சி என்றும், தீயில் வாட்டப்பட்டது சூட்டிறைச்சி என்றும் அழைக்கப்பட்டது.



இக்காலத்தைப் போன்றே அக்காலத்திலும் இறைச்சியை உப்புக்கண்டம் போட்டு உண்ணும் வழக்கம் இருந்திருக்கின்றது.

இறைச்சித் துண்டங்களை இருப்புக் கம்பிகளில் கோர்த்து உப்பும் கருமிளகுத் பொடியும் கடுகும் சேர்த்து வாட்டியுண்டிருக்கின்றனர்.



வீரர்கள் தொடர்ந்து இறைச்சியைத் உண்டதால் நிலத்தை உழும் கலப்பையின் கொழு தேய்வதைப் போற் பற்கள் மழுங்கிப் போயின என்று பொருநர் ஆற்றுப்படை கூறுகின்றது.



இறைச்சியைக் காயவைத்துப் பதப்படுத்தி வற்றலாகவும் பயன்படுத்தியுள்ளனர்.



“இரும்புலி துறந்த ஏற்றுமான் உணங்கல்” என இச் செய்தியைப் புறநானூறு தெரிவிக்கின்றது.



இறைச்சியை எண்ணெயில் பொரிக்கும் பழக்கம் ஆரம்பகாலத்தில் இருந்திருக்கின்றது. கொதிக்கும் நெய்யில் இறைச்சி பொரிக்கும் போது எழும் ஓசை நீர் நிறைந்த பொய்கையில் மழைத்துளி விழுவது போல் இருந்தது எனப் புறநானூறு (386) கூறுகின்றது.



ஆட்டிறைச்சியைப் பற்றிய பல செய்திகள் சங்க இலக்கியமெங்கும் கூறப்பட்டிருக்கின்றன.



பரிசில் பெறச் சென்ற கூத்தன் ஒருவனுக்கு, தணலில் வேகப்பட்ட (தற்போதைய டீ டீ ஞ வகையைச் சார்ந்த) செம்மறியாட்டு இறைச்சியை கரிகால் வளவன் வழங்கி உபசரித்த காட்சி பொருநராற்றுப்படையில் இடம்பெற்றிருக்கின்றது.



“பதனறிந்து

துராஅய் துற்றிய துருவையம் புழுக்கின்

பராஅரை வேவை பருகெனத் தண்டிக்

காழிற் சுட்ட கோழூன் கொழுங்குறை

ஊழின் ஊழின் வாய்வெய் தொற்றி

அவையவை முனிகுவ மெனினே..."



இது எவ்வாறான உணவு தெரியுமா? அறுகம்புல்லைத் தின்று கொழுத்த செம்மறியாட்டின் இறைச்சியில் சமைக்கப்பட்ட உணவு. அந்த இறைச்சி, இரும்புக் கம்பிகளில் குற்றி பக்குவமாகச் சூடாக்கி வேகவைக்கப்பட்டது. அந்தச் சுவையான உணவினை ஆசையுடன், சூட்டோடு வாயிலிட, அதன் வெம்மை தாங்க முடியவில்லை. வாயில் இடப்புறமும் வலப்புறமுமாக மாற்றிமாற்றிச் சுவைத்து, இனி போதும் போதுமென மறுக்குமளவுக்குத் தான் உணவு உண்டதாகச் சொல்கிறான் அந்தக் கூத்தன்.



உடும்பு இறைச்சி அக்காலத்தோரால் பெரிதும் விரும்பி உண்ணப்பட்டிருக்கின்றது. இன்றும் ஈழத்தில் வன்னி மாவட்டத்தில் உடும்பு இறைச்சிக்குப் பெருமதிப்பு உண்டு.



உடும்புக்கறி சிறந்தது என்பதைக் குறிக்கும் “முழு உடும்பு, முக்கால் காடை, அரைக் கோழி, கால் அடு” என்ற பழைய தொடர் வழக்கிலிருந்திருக்கின்றது. அக்காலத்தில் நாய்களைப் பழக்கி உடும்பை வேட்டையாடியிருக்கின்றனர்.



சிவப்பரிசிச் சோற்றை மூடுமளவுக்கு நாய் கொண்டு பிடிக்கப்பட்ட உடும்புக்கறிப் பொரியலைப் பரிமாறி உண்ணச்செய்த சிறப்பை என்று பெரும்பாணாற்றுப்படை கூறுகின்றது.



“சுவல்விளை நெல்லின் செவ்வவிழ்ச் சொன்றி

ஞமலி தந்த மனவுச்சூ லுடும்பின்

வறைகால் யாத்தது வயின்றொறும் பெருகுவிர்" பெ.பா.ஆ.ப (129-133)



வேட்டையின் போது பெறப்பட்ட மான் இறைச்சியும் விரும்பிச் சுவைக்கப்பட்டிருக்கின்றது.



‘கோப்பெருநற்கிள்ளி என்ற சோழ மன்னன் தீ மூட்டும் கோலால் தீயை உண்டாக்கி, வேட்டையாடிய மானின் இறைச்சியைச் சுட்டு, வேட்டைக்குப்போன ஏனைய வீரர் வருவதற்கு முன்பாக உண்ணுமாறு கொடுக்கப் புவவர்கள் உண்டு பசி தீர்த்தனர்’ என்கின்றது புறப்பாடல் (150) ஒன்று.



இறைச்சிக்காக அக்காலத்தோரல் பெரிதும் விரும்பப்பட்ட மற்றுமொரு விலங்கு பன்றியாகும்.



‘நீரின்றி நிலம் வரட்சியுற்ற காலத்தில் நீர் பெறுவதற்கு வெட்டிய குழிகளில் பதுங்கியிருந்தவாறு நள்ளிரவில் வாகைப்பூவின் வடிவினைக் கொண்ட பன்றிகளின் வரவினை வேடுவர் எதிர்பார்த்திருப்பர்’ என்கிறது பெ.பா.ஆ.ப (106 -111)



இடித்த நெல்லைப் பன்றிக்கு உணவாகக் கொடுத்துக் கொழுக்க வைப்பர். அதனை பெண் பன்றியோடு சேரவிடாது குழிகளுக்குள் இட்டு வளர்த்து அதன் ஊனுக்குச் சுவை கூட்டிக் கொன்று கள்ளோடு உண்பர் என, மேலும் கூறுகின்றது பெ.பா.ப (34-35)



வேடுவர் முயலை வேட்டையாடி உண்டிருக்கின்றனர். திறந்த வாயையுடைய நாயோடு காட்டிற்குச் சென்று வேலிகளில் வலையைக் கட்டுவர். பின் பசிய பற்றைகளிலிருந்து முயலை வெளிப்படச் செய்து பிடிப்பர். பெ.பா.ஆ.ப (111-116)



சுவை கூட்டிய ஊன்கறியைச் சோறு, காய்கறி போன்ற பிற பொருட்களோடு சேர்த்து ஆக்கிய உணவுவகைகளைப் பின்னர் பார்ப்போம்.



நீருயிர் உணவு



நீர்வாழ் உயிரிகளான மீன், நண்டு, இறால், ஆமை, சிப்பி போன்றவற்றை பலவாறாகச் சமைத்து உண்டிருக்கின்றனர். நன்னீரிலும் கடலிலும் இவை பிடிக்கப்பட்டிருக்கின்றன.



நெய்தல் நில மக்களின் முதன்மைத் தொழில் மீன்பிடித்தலாகவே இருந்தது. சிறு மீன்களை வலையெறிந்தும் பெருமீன்களை உளி எறிந்தும் பிடித்திருக்கின்றனர். மீன் பிடிப்பதற்குப் பரவலாக தூண்டில் பயன்படுத்தியிருக்கின்றனர். குறித்தவகை மீன் தங்கத் தூண்டிலுக்கு மட்டுமே சிக்கும் என்பதைக் கண்டறிந்து தங்கத்தூண்டிலையும் பயன்படுத்தியிருக்கின்றனர் (நாஞ்சில் நாடன்).



இறால், சுறா போன்றவற்றோடு பலவகையான மீன்களைப் பிடித்தனர். மீன்களை உப்புக்கண்டம் போட்டு உலர வைத்து கருவாடாக்கியிருக்கின்றனர். சுட்ட கருவாட்டைப் பிற நிலத்தாரும் உணவாகக் கொண்டிருக்கின்றனர்.



மருதம் போன்ற பிற நிலத்தார் நன்னீர் மீன்களைப் பயன்படுத்தியிருக்கின்றனர். நீர் நிறைந்த வயல்களின் அகப்ட்ட மீன், நண்டு, ஆமை என்பன உணவாக்கப்பட்டிருக்கின்றன.


‘சுறவு கோட்டன்ன முள் இலைத் தாழை,’

‘கருங்கண் வரால்,’

‘கடுஞ்சுறா எறிந்த கொடுந் திமில் பரதவர்,’

‘இருஞ் சேற்று அயிரை,’

‘ஒழுகு நீர் ஆரல்,’

‘கணைக் கோட்டு வாளை’

என்ற மீன் வகைகளோடு 17 வகையான மீனினங்கள் சங்க இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ளன.



அயிரை, ஆரல், இரால், சுறா, வரால், வாளை போன்ற மீன்களைச் சுட்டும், வேகவைத்தும், புளிசேர்த்துக் குழம்பாகவும் அக்காலத்தார் எண்ட செய்திகளை இலக்கியங்கள் கூறுகின்றன. (பெரும்பாண் 280, குறும் 320, பட்டினப் 63, நற்றிணை 60)



வாளைமீனைச் சமைத்து உவியல் என்னும் தொடுகறி செய்ததையும் சோற்றுடன் அதைச் சேர்த்து உண்டதையும் புறநானூறு (395) கூறுகின்றது. பெரும்பாலும் பழஞ்சோற்றுக்கு இக்கறி கூட்டாக இருந்திருக்க வேண்டும்.



அயிரை மீன் துண்டுடன் புளிக்கறி ஆக்கி முரல் வெண் சோற்றுடன் உண்ட செய்தியையும் புறநானூறு(60 - 4-6) கூறுகின்றது.



நெய்தல் நில மக்கள் மீனை வாட்டி நெய் எடுக்கக் கற்றுக்கொண்டிருந்தனர். அந்த நெய்யிலே மீன் இறைச்சி போன்றவை பொரிக்கப்பட்டிருக்கின்றன. பிற நிலத்தார் பண்டமாற்றாக மீன் நெய்யைப் பெற்றுச் சென்றிருக்கின்றனர். (தமிழர் உணவு. பக். 110)



குழல் மீனைக் காயவைத்த உணவைக் ‘குழல் மீன் கருவாடு’ என்பர். நெய்தல் நிலவழியாகச் சென்றால் இத்தகைய குழல் மீன் கருவாட்டை உணவாகப் பெறலாம் என்பதை,



“வறல் குழல் வயின் வயின் பெறுகுவிர்”

என சிறுபாணாற்றுப்படை (163)

நெய்தல் நில மக்களின் உணவினைப் பற்றிக் குறிப்பிடுகின்றது.



நெய்தல் நிலக் கள்ளுக்கடைகளில் மீன் வறுவல் விற்கப்பட்டிருக்கின்றது.





காய்கூட்டு(கறிகள்.)



தொ. பரமசிவன் தமிழர் உணவு என்ற கட்டுரையில் காய்கறி என்ற சொல்லைக் கீழ்வருமாறு விளக்குகின்றார்.



“காய்கறி என்ற சொல் காய்களையும் மிளகையும் சேர்த்துக் குறிக்கும். மிளகாய் அறிமுகமாகும்வரை தமிழர் சமையலில் உறைப்புச் சுவைக்காகக் கறுப்பு மிளகினை (கருங்கறி) மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இறைச்சி சமைக்கும்போது அதிகமாக மிளகினைப் பயன்படுத்தியதால் இறைச்சியே 'கறி ' எனப் பின்னர் அழைக்கப்பட்டது. வெள்ளை மிளகினைத் (வால்மிளகு) தமிழர் குறைவாகவே பயன்படுத்தியுள்ளனர்.”



இன்றைய நாட்களில் எமக்குக் கிடைக்கின்ற காய்கறிகள் அப்போது இருக்கவில்லை. வழுதுணங்காய் என அழைக்கப்பட்ட கத்தரி, பாகல், பீர்க்கு, அவரை, முருங்கை, பல்வேறு கீரை வகைகள், அவரைப் பருப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை என்பனவே பயன்படுத்தப்பட்டுள்ளன.



வள்ளிக்கிழங்கு, கருணைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளும் உண்ணப்பட்டிருக்கின்றன.



தற்போது பெரிதும் பயன்படுகின்ற வெங்காயம், மிளகாய், தக்காளி, வெண்டைக்காய், மரவள்ளி, சக்கரைவள்ளி, உருளைக்கிழங்கு மைசூர்ப் பருப்பு, தேங்காய், பழப்புளி என்பன சங்ககாலத்தில் இருக்கவில்லை.



கடுகு, கருமிளகு, வெண்மிளகு, மஞ்சள், இஞ்சி, சீரகம் என்பனவும் அக்காலத்தே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.



வடஇந்தியாலிருந்து இஞ்சியும், சீனாவில் இருந்து மஞ்சளும் சங்ககாலத்திற்கு முன்போ அல்லது தொடக்கத்திலோ தமிழகத்திற்கு வந்திருக்கலாம் என பேராசரியர் கு.வி. கிருஸ்ணமூர்த்தி ‘தாவரமும் தமிழரும்’ என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.



முருங்கைக்காய் சங்ககாலத்திற்கு முன்னரே ஈழம்வழியாக வந்திருக்கலாம் என நாஞ்சில் நாடன் குறிப்பிடுகின்றார்.



தேங்காய் பிலிப்பைன் தீவுகளில் இருந்து ஈழம் வழியாகத் தமிழகத்திற்குள் புகுந்திருக்கலாம் என்பதுவும் பேராசிரியர் கு.வி. கிருஸ்ணமூர்த்தியின் கூற்று.



வெங்காயம், பெர்சியா மற்றம் ஆப்கானிலிருந்து 10ம் நூற்றாண்டில் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. சிலி நாட்டிலிருந்து மிளகாயும், ஐரோப்பிய நாட்டிலிருந்து உருளைக்கிழங்கும் போத்துக்கீயரால் 16ம் 17 நூற்றாண்டில் கொண்டுவரப்பட்டன.



பாதாம் பருப்பு, கிராம்பு என்பனவும் ஈழம் வழியாகத் தமிழகத்தி;ற்கு வந்தவையே என்பது பேராசிரியர் கு.வி. கிருஸ்ணமூர்த்தி கருத்தாகும்.



சங்ககாலத்தோர் தமிழ் நிலத்திற்கே உரித்தான பனைமரத்தைப் போற்றி வளர்த்திருக்கின்றனர். பல உணவுப் பொருட்களைப் பனையிலிருந்து பெற்றிருக்கின்றனர்.



எனினும் 200க்கு மேற்பட்ட உணவுக்குரிய இயல் தாவர வகைகளை சங்கஇலக்கியங்கள் குறிப்பிட்டிருக்கின்றன.



காய்கறிகளை வேறுபொருட்களோடு கூட்டிச் சுவைபட சமைத்து இறைச்சி, சோற்றுடன் கலந்து உண்டிருக்கின்றார்கள்.



உணவுக்குச் சுவை கூட்டும் உப்பு சங்ககாலத்திற்கு முன்பே பாவனைக்கு வந்துவிட்டது. சங்க காலத்தில் உப்பு, விலை உயர்ந்த பொருளாகக் கருதப்பட்டது. “நெல்லும் உப்பும் நேராகும்” என்பதே அன்றைய நிலை. உமணர் என்போரே உப்பை விளைவித்து விற்பனை செய்தனர்.



தேன் அதிகம் பெறப்படுகின்ற குறிஞ்சி நிலத்தோருக்கு மட்டுமல்ல, ஏனைய நிலத்தோருக்கும் உயர்ந்த உணவுப்பொருளாகத் திகழ்ந்தது தேன். தேனைத் தனி;த்தும் வேறு பல உணவுகளோடும் கூட்டி உண்டிருக்கின்றனர்.

கனிகள்

சங்ககால மக்கள் பல்வேறு கனிகளை உண்டு மகிழ்ந்திருக்கின்றனர்.

மா, பலா, வாழை என்பவற்றோடு மாதுளம்பழம், நெல்லி, நாவற்பழம் நாரத்தம் பழம், கொவ்வை, ஆசினிப்பழம், களாம்பழம், காரைப்பழம், துடரிப்பழம் (இலந்தை) போன்றவற்றை அக்காலத்தோர் விரும்பி உண்டிருக்கின்றனர்.



வாழை ‘கதலி’ என்ற பெயரிலேயே இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது.



‘பெரும்பெயர் ஆதி’ என்ற மன்னனுடைய நாட்டிலுள்ள மக்கள் மணல் குவிந்து கிடக்கும் மணல் மேட்டில் ஏறி நின்று நாவற்பழத்தை கொய்து உண்டனர் என்ற செய்தியைப் புறநானூற்றுப் பாடலடிகள் தருகின்றன.



“கருங்கனி நாவலி லிருந்து கொய் துண்ணும்

பெரும்பெய ராதி பிணங்களிற் குட நாட்

டெயினர்” (புறம் 177 11-3)



உண்டவரை நீண்டநாள் வாழவைக்கும் ஆற்றல் கொண்டது நெல்லிக்கனி என்ற செய்தியை,



'சிறியிலை நெல்லித் தீங்கனி குறியா

தாத னின்னகத் தடக்கிக்

சாத னீங்க வெமக்கீந் தனையே (புறம் 91 9-11)

எனவரும் ஒளவையார் பாடிய புறப்பாடல் வழி அறியலாம்.



அன்னாசி, கொய்யா, பப்பாளி போன்ற பழங்கள் அக்காலத்தில் இருக்கவில்லை. அயல்நாடு சென்று வந்த வணிகர் பின்னாளிலேயே இவற்றை எடுத்து வந்தனர்.



அன்னாசி, பப்பாளி மலேசியாவிலிருந்தும், கொய்யா பெரு நாட்டிலிருந்தும் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகின்றது.





சிறப்புக்குரிய உணவு வகைகள்.



மேற்கூறப்பட்ட அரிசி வகைகள், தானியங்கள், ஊன் வகைகள், காய்கறிகள் என்பவற்றைக் கொண்டு சுவை மிக்க உணவுகளை ஆக்கிப் படைத்துள்ளனர் எம் முன்னோர். இன்று அந்நியப் பெயரில் அழைக்கப்படும் பல உணவுகள் சங்கத் தமிழர் உருவாக்கியவையே.



ஊன்சோறு: இன்று பிரியாணி என அழைக்கப்படும் இவ்வுணவு ஊன்சோறு என்ற பெயரால் சுவைமிக்க உணவாக அன்று ஆக்கப்பட்டிருக்கின்றது. இது சங்கப் புலவர்களால் ‘ஊன் துவையடிசில்’ எனச் சிறப்பிக்கப்பட்டிருக்கின்றது. ஐவகை நிலத்தாரும் பல்வகை உணவு முறைகளில் வேறுபட்டிருந்தாலும் ஒன்றுபட்டிருந்த ஓர் உணவுவகை ஊன்சோறுதான். பாமரமக்கள் முதல் மன்னர் வரை ஊன்சோற்றினை உண்டு மகிழ்ந்துள்ளனர்.



அக்காலத்தே சமையற்காரன் வாலுவன் என அழைக்கப்பட்டிருக்கின்றான். அத்ததைய வாலுவன் தன் கைகளையே அகப்பையாகக் கொண்டு, துழாவி

ஊன் சோற்றினைச் சமைத்து உண்போர் வரிசையறிந்து வழங்கினான் என்று மதுரைக்காஞ்சி கூறுகிறது.



"துடித்தோட்கை துடுப்பாக

ஆடுற்ற ஊன்சோறு

நெறியறிந்த கடிவாலுவன்"(மதுரைக்காஞ்சி 34 - 36)



வெண்சோற்றுடன், நெய் கலந்து, ஆட்டிறைச்சி சேர்த்து சமைத்துண்டனர்

என்ற செய்தியை நற்றிணை புலப்படுத்துகின்றது.



“மையூன் தெரிந்த நெய்வெண்புழக்கல்" (நற்றிணை 83, 4-9 வரிகள்)





சோறும் மரக்கறிகளும்



இறைச்சி வகையன்றி மரக்கறி உணவுகளும் அக்காலத்தே சிறப்புப் பெற்றிருந்தன. கடினமற்ற மென்மையான உடையாத முழு அரிசியால் ஆக்கப்பட்ட சோறு விரல் போல் நிமிர்ந்து தனித்தனியாக இருக்கின்றது. அதை பால் விட்டுச் சமைத்த பொரிக்கறிகளோடும், புளிக்கறிகளோடும் நிறைவாக உண்போம் என பொருநர் எனப்படும் கலைஞர் கூட்டத்தார் கூறுகின்றனர்.



முரவை போகிய முரியா அரிசி

விரல்என நிமிர்ந்த நிரல் அமைபுழுக்கல்

பரல்வறைக் கருனை காடியின் மிதப்ப

அயின்ற காலை” பொ. ஆ. ப. (113-116)





புளிக்குழம்பு



அக்காலத்தே புளிக்குழம்பு அல்லது புளிக்கறி பெரிதும் விரும்பி உண்ணப்பட்டிருக்கின்றது. பெரும்பாலும் சோற்றுடன் புளிக்குழம்பைக் கூட்டி உண்டிருக்கின்றனர். இப்போது நாம் பயன்படுத்து;ம புளி அக்காலத்தில் இருக்கவில்லை. புளிச்சுவைக்காக நாரத்தம் (எலுமிச்சை) காய்களைப் பயன்படுத்தியுள்ளனர். மாங்காய்ச் சாற்றினைச் சேகரித்து வைத்து புளிச்சுவை கூட்டியிருக்கின்றனர்.



நெல்லிக்காய், துடரிக்காய் என்பனவும் புளிச்சுவைக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.



புளிச்சுவையோடு கூடிய சோற்றைப் புளிச்சோறு, புளிக்குழப்புச் சோறு என அழைத்திருக்கின்றனனர். மீன் இட்டும் புளிக்கறி ஆக்கப்பட்டிருக்கின்றது. புளிக்குழம்பில் தயிர் மோர் என்பனவும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. (கு.தொ.167)



அவரை விதை, மூங்கிலரிசி, நெல்லரிசி, இவற்றைப் புளியுடன் சேர்த்துச் சமைத்த உணவினை நெய்யோடு கலந்து மருத நிலத்தில் வாழ்ந்த உழவர்; உண்டனர் என்பதை மலைபடுகடாம் கூறுகின்றது.



“செவ்வீ வேங்கைப் பூவின் அன்ன

வேய்கொள் அரிசி மிதவை சொரிந்த

சுவல் விளைநெல்லின் அவரையும் புளிங்கூழ்

அற்கிடை உழந்தநும் வருத்தம் வீட.....” மலைபடுகடாம் (434-443)



குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்த கானகர் எனப்பட்ட வேடுவர் வீட்டில் இறைச்சி வகையறாக்களோடு புளி சேர்த்து உணவு சமைக்கப்பட்டதை கூத்தராற்றுப்படை கூறுகின்றது.



“வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை

முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை

பிணவுநாய் முடுக்கிய தடியொடு விரைஇ

வெண்புடைக் கொண்ட துய்த்தலைப் பழனின்

இன்புளிக் கலந்து மாமோ ராகக்

கழைவளர் நெல்லின் அரியுலை ஊழ்த்து..." கூத்தராற்றுப்படை



‘நன்கு ஆக்கப்பட்ட கடமானின் கொழுப்பு மிக்க தசையும், பன்றித் தசையும் உடும்புக் கறியும் தருவார்கள். அத்துடன் புளியும் மோரும் இட்டு உலையேற்றிச் சமைத்த மூங்கில் அரிசிச் சோறும் தருவார்கள்’ என்கிறார்

இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்.





சோறும் ஊன்கறியும்.



சோற்றோடு ஊன்கறி சேர்த்து உண்டலே சங்ககாலத்தில் பெருவழக்காக இருந்தது. இவ்வுணவு வாழிடச் சூழலுக்கு ஏற்பவும், செல்வநிலைக்கமையவும் வேறுபாடு கொண்டிருந்தது.



மன்னர், நிலவுடமையாளர்; போன்றோர் விருந்தினரைப் போற்றும் வகையில் நெய்யிட்டு ஆக்கப்பட்ட இறைச்சியோடு பலவகைச் சோறும் வழங்கியிருக்கின்றனர்.



இத்தகைய விருந்துண்ட புலவர் பலர் தம் உணர்வையும் உணவின் சுவைகளையும் இலக்கியங்களில் பதிவு செய்திருக்கின்றனர்.



“அவன் எமக்கு வழங்கிய சுவைமிக்க சூட்டிறைச்சி பற்றிச் சொல்வேனா, இல்லை வளமான மனைக்குரிய கள் பற்றிக் கூறுவேனா இல்லை, குறுமுயலின் தசை கலந்து தந்த நெய் மணக்கும் சோற்றைச் சொல்வேனா” என்கிறார் ஒரு புலவர்.



கொழுந்தடிய சூடென்கோ

வளமனையின் மட்டென்கோ

குறுமுயலின் நிணம் பெய்த

நறுநெய்ய சோறென்கோ” - புறநானூறு “:396“



கரும்பனூர்க் கிழான் என்னும் சிற்றூர்த் தலைவன் வழங்கிய விருந்து குறித்து நன்னாகையர் என்னும் புலவர் புறநாநூற்றில் குறிப்பிடுகின்றார்.



ஊன் கலந்த சோற்றுணவில் நீரை விட அதிகளவு நெய்யிட்டுச் சுவை மிகக் கூட்டி சூடு குறையாது நாள்தோறும் தானும் உண்டு மற்றவர்களுக்கும் தந்தான். உண்ணமுடியாமல் எஞ்சிய உணவை இலை மடித்து எறிந்த நாட்களையும், பல்லில் சிக்கிக்கொண்டவற்றைத் தோண்டி எடுப்பதற்குமாகக் கழிந்த நாட்களையும் எண்ண முடியாது என்கிறார்.



“நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை

மண்ணாணப் புகழ் வேட்டு

நீர்நாண நெய் வழங்கிப்

புரந்தோனெந்தை யாமெவன்றொலைவதை

அன்னோனையுடைய மென்ப வினிவறட்கி

யாண்டு நிற்க வெள்ளி மாண்டக

உண்டநன்கலம் பெய்து நுடக்கவும்

தின்ற நன் பல் ஊன் தோண்டவும்

வந்தவைகலல்லது

சென்ற வெல்லைச் செலவறியேனே” – புறநானூறு : 384


புற்றீசல் புளிக்குழம்பு



மழைக்காலத்தில் தோன்றி குறுகிய நாட்களே வாழும் ஈசல்கள் சுவை மிகுந்த உணவாகப் பயன்பட்டிக்கின்றன.



செம்மையான புற்றிலிருந்து பிடிக்கப்பட்ட ஈசலை வறுத்து மோரில் ஊற வைத்துப் புளிக்கறி செய்தனர். இச் செய்தியை,



செம்புற்று ஈயலின் இன்அளைப் புளித்து

மென்தினை யாணர்த்து நந்துங் கொல்லேர்..” என புறநானூறு (119) கூறுகின்றது.



ஈசலைத் தயிர் அல்லது மோரோடு சேர்த்துச் சமைத்து உண்பது பண்டைக்காலத்தில் மரபாக இருந்தது என்பதற்கு அகநானூற்றுப் பாடல் ஒன்றும் சான்று தருகின்றது.



“சிறுதலைத் துருவின் பழுப்புறு விளைதயிர்

இதைப்புன வரகின் அவைப்புமாண் அரிசியொடு

கார்வாய்த்து ஒழிந்த ஈர்வாய்ப் புற்றத்து

ஈயல்பெய்து அட்ட இன்புளி வெஞ்சோறு

சேதான் வெண்ணெய் வெம்புறத்து உருக

இளையர் அருந்த …” (அகநானூறு - 394: 1- 7)



சிறிய தலையையுடைய செம்மறி ஆட்டினது பழுப்பு நிறம் போன்ற முற்றிய தயிரிலே, கொல்லையில் விளைந்த வரகின் குற்றிய அரிசியோடு, கார் காலத்து மழையில் நனைந்து ஈரமான வாயிலையுடைய புற்றிலிருந்து வெளிப்படுகின்ற ஈயலையும் சேர்த்துச் சமைத்த இனிதான சூடான புளியஞ்சோற்றினைப், பசுவின் வெண்ணெயானது வெப்பம் காரணமாக உருகிக்கொண்டிருக்க, உன் ஏவலாளர் அருந்துவர்.

பாலுணவு



சங்ககாலத்திற்கு முன்பே தமிழர்கள் பாலுணவு பற்றி நன்கு அறிந்திருந்தனர். வேட்டைச் சமூகநிலைக்கும் வேளாண் சமூகநிலைக்கும் இடைப்பட்ட காலத்தே மந்தை வளர்ப்பு தோற்றம் கொண்டிருக்கலாம். தொடக்கத்தில் பால், இறைச்சி என்பவற்றிற்காக மந்தை வளர்ப்பில் ஈடுபட்டாலும் பி;ன்னாளில் எருது போன்ற விலங்குகள் வேளாண் தொழிலுக்குப் பேருதவி பரிந்தன. இவ்வுதவிகளே பின்னாளில் மாட்டிறைச்சி உண்ணுதல் வழக்கற்றுப்போகக் காரணமாக இருந்திருக்கலாம்.



மிக நீண்டகாலத்தி;ற்கு முன்பாகவே தமிழர் பாலைப் புளிக்க வைத்துத் தயிராக்கவும். தயிரைக் கடைந்து மோர், வெண்ணெய், நெய் என நுட்பமாகப் பிரித்துப் பயன்படுத்தவும்; கற்றுக்கொண்டிருந்தனர்.

முற்றிய தயிரில் புளிக்குழம்பு செய்யப்படிருக்கின்றது. குளிர்ந்த மோர் சிறந்த பானகமாகக் கருதப்பட்டது. வெண்ணெய் பெறுமதி மிக்க உணவுப் பொருளாகத் திகழ்ந்திருக்கின்றது.



“நறுமோர் வெண்ணெயின்...” என மோர் கடைந்து வெண்ணை எடுக்கப்படுவதனை பெரும்பாணாற்றுபடை கூறுகின்றது.



பசுநெய் பெரும்பாலும் செல்வர்களாலேயே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.



அக்காலத்தில் மாடுகளே பெறுமதி மிக்க செல்வங்களாகக் கருதப்பட்டன. ஆநிரை கவர்தல், ஆநிரை மீட்டல் என்பன தமிழது போர் மரபுகளாகும்.

பார்ப்பனர் உணவு

வேதங்கள் ஒதும் பார்ப்பனர் சங்ககாலத்தில் வாழ்ந்திருக்கின்றனர். அவர்களைப் பற்றிய பல குறிப்புகள் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. அவர்கள் ஊன் உணவை முற்றிலும் தவிர்த்துக் காய்கறிகளையே பெரிதும் உண்டனர்.

தொல்காப்பியர் வாகைத் திணையில் “அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்“ எனக் குறிப்பிடுகின்றார். இத்தகைய பார்ப்பனர்களையே சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

இப்பார்ப்பனர் பாற்சோறும், பருப்புச் சோற்றும் உண்பர். அவர்கள் இராசா அன்னம் என்ற பெயருடைய உயர்ந்த நெற்சோற்றினை விரும்பி உண்பர். மாதுளம் பிஞ்சைப் பிளந்து, மிளகுப் பொடியும், கறிவேப்பிலையையும் கலந்து பசும் வெண்ணெயிலே வேகவைத்து எடுத்த பொரியலையும் வடுமாங்காயினையும் உண்பர்.

தயிர்ச்சோறு, மாங்காய்ச்சோறு, புளியஞ்சோறு போன்ற உணவு வகைகளையும் உண்பர். தம் வீட்டுக்கு வந்தோருக்கும் அவற்றைக் கொடுத்து மகிழ்வர். இச்செய்தியைப் பெரும்பாணற்றுப்படை (301-310) கூறுகின்றது.

மறையோர் வீட்டிற்குச் சென்றால் ‘கருடச் சம்பா அரிசியில் சமைத்த சோற்றையும், மோரில் கடைந்தெடுத்த வெண்ணெயில் மிளகுத்தூளும் கறிவேப்பிலையும் சேர்த்து வதக்கிய காய்கறிப் பொரியலையும், ஊறுகாயுடன் உண்டு மகிழலாம்’ என்று பாணன் கூறுவதாகப் பெரும்பானாற்றுப்படை மேலும் கூறுகின்றது.

செல்வந்தர் உணவு

வேட்டுவநிலையிலிருந்து வேளாண்நிலைக்குச் சமூகம் உயர்ந்தபோது

நிலவுடமைச் சமூக முறைமை தோற்றம் கொண்டது. நில உடைமையாளர்களாக ‘ஆண்டை’களும், தொழிலாளர்களாகக் ‘களமர்’களும் சமூக அமைப்பில் அங்கம் பெற்றனர். இச் சமூக மாற்றம் செல்வநிலையிற் பெரும் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியது. செல்வந்தர்; பெரும் செழிப்புடன் வாழ்ந்தனர். அவர்களது உணவுப் பழக்கமும் உயர்ந்ததாகவிருந்தது.



கடின வேலைகள் செய்து பழக்கப்படாத செல்வர், வீடுகளில் இருந்தபடியே உண்டு மகிழ்ந்தனர். அவர்களது உணவு முறைக்கு ஒரு சான்று தருகின்றது புறநானூறு.



“நீர் நிறைந்த குளத்தில் விழுகின்ற மழைத்துளிகளைப் போன்று, துள்ளித் தெறிக்கின்ற புதிதாக உருக்கிய நெய்யில் பொரிக்கப்பட்ட இறைச்சித்துண்டுகளின் வறுவல்களை மணம் நுகர்ந்து உண்பர். சூட்டுக்கோலால் கிழித்துச் சுடப்பட்ட இறைச்சித் துண்டுகளையும் உண்பர். வெள்ளியாலான பாத்திரத்தில் பால் வழியவும் சுடச்சுட உண்பர். இதனால் அவர்கள் உடல் வியர்த்ததேயன்றி, செய்கின்ற தொழிலால் உடல் வியர்த்தில்லை” என்கிறார் புலவர்.



‘நெடுநீர நிரை கயத்துப்

படுமாரித் துளிபோல

நெய்துள்ளிய வறை முகக்கவும்

சூடுகிழித்து வாடூன் மிசையவும்

ஊன் கொண்ட வெண்மண்டை

ஆன் பயத்தான் முற்றளிப்வும்

வெய்துண்ட வியர்ப்பல்லது.

செய்தொழிலால் வியர்ப்பறியாமை’ - புறநானூறு : 386



வளம்;மிக்கவர்கள் வெண்மையான நெற்சோறுடன் வீட்டில் வளர்ந்த பெட்டைக் கோழியின் பொரியலைச் சேர்த்து உண்டனர். இதனை,



“தொல்பசி அறியாத் துளங்கா இருக்கை

மல்லல் பேரூர் மடியின் மடியா

வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி

மனைவாழ் அளிக்ன் வாட்டொடும் பெறுகுவீர” (253-256)



எனப் பெரும்பாணாற்றுப்படை ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.



உழவோர் உணவு

வேளாண் சமூகத்தில் உழவர்களே மிகுந்திருந்தனர். பெரும்பாலானோர் அன்றாடம் உழைத்து உண்பவர்களாகவே இருந்தனர். அவர்கள் உண்ட உணவு பற்றிப் பல குறிப்புகள் உள்ளன.



கிள்ளிவளவனின் சோழ நாட்டில், சமைக்கும் பெண் அளக்காமல் அள்ளிக்கொண்டு வந்த வெண்ணெல்லைப் பூணுடன் கூடிய பருத்த உலக்கையால் குற்றி அரிசியாக்குவாள். அந்த அரிசியால் ஆக்கிய சோற்றை, புளித்த நீருள்ள உலையில் இடுவாள்.



மாமரத்தின் இனிய மாம்பழங்களைப் பிசைந்து செய்த மணமுள்ள புளிக்குழம்பும், பெரிய கரிய வரால் மீன் இறைச்சியும், கொம்புகளையுடைய சுறாமீனின் துண்டுகளும், வயலில் விளைந்த வள்ளைக் கீரையும், சிறிய கொடியில் முளைத்த பாகற்காயும், பாதிரி அரும்பின் இதழ் விரித்தாற் போன்ற தோலை நீக்கி, கலக்க வேண்டிய பொருள்களைக் கலந்து மூடிவைத்துப் பின் அவித்த சோற்றுடன் உழைப்போர்க்குப் பரிமாறுவாள்.



வைக்கோல் உள்ள இடங்களில் உழைக்கும் உழவர்கள் தாம் உண்ட கள்ளால் களிப்படைந்து மயங்கிச் சோர்ந்திருப்பின், விடியற் காலையில் பழஞ்சோற்றை உண்பர். இச் செய்தியைப் புறநானூறு (399) தருகின்றது.



‘அடுமகள் முகந்த அளவா வெண்ணெல்

தொடிமாணுலக்கைப் பரூஉக் குற்றரிசி

காடி வெள்ளுலை கொளீஇ நீழல்

ஓங்கு சினைமாவின் தீங்கனி நறும்புளி

மோட்டிரு வரா அற் கோட்டு மீன் கொழுங்குறை

செறுவின் வள்ளை சிறு கொடிப் பாகற்

பாதிரி யூழ் முகையவிழ் விடுத்தன்ன

மெய்களைந்தினனொடு விரைஇ

மூழ்ப்பப் பெய்த முழுவவிழ்ப் புழுக்கல்

அளிகளிற் படுநர் களியட வைகிற்

பழஞ்சோறயிலும்’ - புறநானூறு : 399



நன்செய் நிலம் என அழைக்கப்டுகின்ற மென்மையான மருத நிலத்து வயல்களைச் சார்ந்த உழவர் காடும் புல்லும் நிறைந்த முல்லை நிலத்தில் தம் மாடுகளை மேயவிட்டுக் களைப்பாறுவர். அவ்வேளை, குறு முயலின் குழைந்த சூட்டிறைச்சியுடன் நீண்ட வாளைமீனைக் கொண்டு செய்த அவியலைப் பழைய சோற்றுடன் உண்பர்.


‘மென்புலத்து வயலுழவர்

வன்புலத்துப் பகடுவிட்டுக்

குறு முயலின் குழைச் சூட்டொடு

நெடுவாளைப் பல்லுவியற்

பழஞ்சோற்றுப் புக வருந்தி - புறநானூறு : 395



வரகரிசிச் சோற்றை, அவித்த அவரைப் பருப்புடன் கலந்து உழவர் உண்டு வந்தனர். அதனையே விருந்தினர்க்கும் கொடுத்து மகிழ்ந்தனர் என்பதைப் பெரும்பாணாற்றுப்படை கூறுகின்றது.


“நெடுங்குரல் பூளைப்பூவின் அன்ன

குறுந்தாள் வரகின் குறளவிழ்ச் சொன்றி

புகர் இணர் வேங்கை வீசுண்டன்ன

அவரை வான் புழுக்கட்டிப் பயில்வுற்று

இன்சுவை மூரல் பெறுகுவிர்” (192-196)


இது ஏழை உழவர்களின் எளிமையான உணவாக இருந்தது.


அவரை விதை, மூங்கிலரிசி, நெல்லரிசி, இவற்றைப் புளியுடன் சேர்த்துச் சமைத்த உணவினை, நெய்யோடு கலந்து மருத நிலத்தில் வாழ்ந்த உழவுத் தொழில் புரிந்த ஏழைகள் உண்டு வாழ்ந்தனர் என்னும் செய்தியை மலைபடுகடாம் (434-443) குறிப்பிடுகின்றது.


இவ்வாறே வேடவர், பரதவர், எயிற்றியர், எயினர் எனப்பட்டோரும் தமக்கெனத் தனித்துவமான உணவு வகைகளைக் கொண்டிருந்தனர்.


நீரியல் உணவு


அக்காலத்தோரின் நீரியல் உணவு வகைகளில் முதன்மையானவை கூழும் கஞ்சியுமாகும். அதிகளவில் நீர் கலந்து சோறு கரையுமளவிக்கு வேக வைக்கப்பட்ட உணவு கஞ்சி எனப்பட்டது. அரிசி, வரகு, கேப்பை. கம்பு போன்ற தானியங்களைக் கொண்டும் கூழ் ஆக்கப்பட்டது.


சோறு வடித்த கஞ்சி ஆறுபோல் ஓடியது என்பதைப் பட்டினப்பாலை குறிப்பிடுகின்றது.


சோறு வாக்கிய கொழுங் கஞ்சி

யாறு போலப் பரந்து ஒழுகி,

என வருணிக்கிறது. (வரி 44-45)


பழந்தமிழர் பலவகையான பருகுநீர் வகைகளைப் பயன்படுத்தியிருக்கின்றனர். அவற்றுள் சில, இளநீர், கரும்புச்சாறு, நுங்கு, பானகம், பாயசம், அருவிநீர், சுனைநீர், பால், தயிர், மோர், மது என்பனவாகும்.


ஆலை இயந்திரங்களில் கரும்பை இட்டுச் சாறு பிழிந்தனர் என்ற செய்தியை “கரும்பி னெந்திரங் கட்டினோதே” என்ற வரிகளின் வாயிலாக மதுரைக் காஞ்சி புலப்படுத்துகிறது.


சங்ககாலத்துச் சி;ற்றுண்டிகள்


சங்கத்தமிழர் பல சிற்றுண்டி வகைகளை அறிந்திருந்தனர் என்பதற்குச் சங்க இலக்கியங்கள் சான்று தருகின்றன.


கும்மாயம் என்ற ஒருவகைச் சிற்றுண்டி பற்றிப் பெரும்பாணாற்றுப்படை 194-95) குறிப்பிடுகின்றது. இது பயற்றுடன் சர்க்கரை சேர்த்துச் செய்யபப்டுவதாகும்.


இனிப்புச்சுவைக்காகக் கருப்பஞ்சாற்றைக் கட்டியாக்கிப் பயன்படுத்திய செய்தியைப் பெரும்பாணாற்றுப்படை (259) தருகின்றது. பின்னாளில் இதுவே வெல்லக்கட்டியானது.


மதுரைக் காஞ்சி (624) மெல்லடை என்னும் அரிசி உணவைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. அடை என்றால் இலை என்று பொருள். இது இலை வடிவினதான பலகாரமாக இருக்கலாம்.


வெல்லப் பாகையும் பாலையும் கலந்து செய்த பண்ணியம் என்னும் உணவுப் பொருள் பற்றிப் புறநானூறு தெரிவிக்கின்றது


'உனு மூணு முனையி னினிதெனப்

பாலிற்பெய்தவும் பாகிற் கொண்டனவும்” (புறநானூறு 381).



பொருட்களைக் கூவி விற்பதால் கூவியர் எனப்பட்ட வணிகர் 'கரிய சட்டியில் பாகுடனே வேண்டுவன கூட்டி நூல்போல் அமைத்தவட்டம்” என ஒருவகைச் சிற்றுண்டியை விற்றதாகப் பெரும்பாணாற்றுப்படை (377-378) கூறுகின்றது.



“மதுரை நகரக் கடைத்தெருவில் சிற்றுண்டிக் கடைகள் இருந்தன. அவற்றிற் பாகினால் செய்யப்பட்ட நல்ல வரிகளுடைய தேனடையைப் போன்ற மெல்லிய அடைகள் செய்யப்பட்டன. பருப்பை உள்ளீடாய்க் கொண்டு, சர்க்கரை கூட்டிப் பிடித்த 'மோதகம்” என்ற ஒரு வகைத் தின்பண்டமும் செய்யப்பட்டது. இனிய பாகோடு சேர்த்துக் கரைத்த மாவைக் கொண்டு கூவியர் பல சிற்றுண்டி வகைகளைச் செய்தனர்” என மதுரைக் காஞ்சி (624-627) குறிப்பிடுகின்றது.



பொரியையும் பாலையும் கலந்து உண்ணும் வழக்கம் மிகப் பழமையானது. ஐங்குநூறு (53) இதைக் கூறுகின்றது. இப்போது உண்ணப்படுகின்ற ‘சீரியலை’ இது ஒத்ததாகும்.

ஊறுகாய் வகைகள்.



சங்கத்தமிழர்கள் பலவகையான ஊறுகாய்களைப் பயன்படுத்தியிருக்கின்றனர். மாங்காயில் நல்ல மிளகு கலந்து கறிவேப்பலை தாளித்து ஊறுகாய் செய்யும் வழக்கம் அக்காலத்தில் இருந்ததாகப் பெரும்பாணாற்றுப்படை (307-10) கூறுகின்றது. இதே போன்று மாதுளங்காய் ஊறுகாயும் பயன்பாட்டில் இருந்திருக்கின்றது.



“குடும்பத்துடன் உப்பை வண்டிகளில் ஏற்றி ஊர் ஊராய்ச் சென்று வாணிகம் செய்துவந்த உமணர், ஊறுகாய்ப் பானைகளைத் தம் வண்டிகளில் கட்டியிருந்தனர். அந்த ஊறுகாய், 'காடி' எனப்பட்டது. அது வைக்கப்பட்டிருந்த பாத்திரம் 'காடி வைத்த கலம்' எனப்பட்டது. 'புளியங்காய், நெல்லிக்காய் முதலியன ஊறவிட்டு வைத்ததனைக் 'காடி' என்றார்,' என்பது நச்சினார்க்கினியர் விளக்கம்” என இராச மாணிக்கனார் ‘சங்ககாலத்து உணவும் உடையும்’ என்ற தன் கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.





சமையல் நுட்பங்கள்



சங்கத்தமிழரின் உணவு முறைகளில் அதிகமாகக் காணப்பட்ட உணவுப் பொருட்கள் நேரடியாக இயற்கையிலிருந்து கிடைக்கப்பட்டவையே. காய்கறி, கனி, கிழங்கு, ஊன்வகை போன்றவற்றை இயற்கையிடத்தே பெற்றுப் பச்சையாகவும்; வேகவைத்தும் உண்டனர்.



உணவுத் தேடலுக்கான வேட்டையாடுதலே உணவுத்தொழில்நுட்பத்தை நோக்கிய தொடக்கம் எனலாம். குறித்த விலங்கினத்தைப் பிடிக்க கையாண்ட உத்திகளும், கண்டறிந்த வேட்டைக் கருவிகளுமே உணவுத் தொழில்நுட்பம் தொடர்பான தொடக்கச் சிந்தனைகள் ஆகும்.



வேடுவ சமூகத் தளத்தில் இருந்து ஆநிரை சமூகநிலைக்கு நகரும்போது இத்தொழில்நுட்பம் வளர்ச்சியடைகின்றது. பாலிலிருந்து தயிர் மோர், வெண்ணெய், நெய் உருவாக்கக் கற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.



மீன் பிடித்தல் மிக தொன்மையான தொழில். தூண்டில், வலைவீசுதல், உளி எறிதல் போன்ற போன்ற நுட்பங்கள் அன்றே பயன்படுத்தப்பட்டுள்ளன.



உணவைச் சுட்டுத்தின்ற காலத்தை தொடர்ந்து நீரில் வேகவைத்து உண்ணும் நிலைக்கு சமூகம் உயர்ந்தமைக்குக் காரணம் மட்பாண்டங்களின் பயன்பாடடை அறிந்தமையே. பலவகையான மட்பாண்டங்களைச் செய்யும் நுட்பங்களை அக்காலத்தோர் அறிந்து வைத்திருந்தனர். அகழ்வாய்வின் போது கிடைக்கப்பபெற்ற மட்பாண்டங்கள் இதற்குச் சான்று தருகின்றன.



சமூகநிலை மாற்றத்தின் அடுத்த தளமான வேளாண் நிலையே மேலும் பல நுட்பங்கள் தோன்ற வழிவகுத்தது.



உப்பு, நெய், மிளகு, கடுகு என்பவற்றை என்பவற்றை வேண்டிய அளவு சேர்த்துத் தாளிதம் செய்யும் நுட்பத்தைத் தெரிந்து கொண்டிருந்தார்கள். புளியிட்ட உணவு எளிதில் பழுதடையாது என் அறிந்தனர்.



நெல் குற்ற உரல் உலக்கையையும், அரைப்பதற்கு அம்மியையும் (நெடுநல்வாடை 50) கொழிப்பதற்குச் சுளகையும் உருவாக்கினர். உலர்ந்த சுரைக்காயும், மூங்கிற் குழாய்களும் நீர் கொண்டு செல்லப் பயன்பட்டிருக்கின்றன.



பல்வகையான நுட்பங்களுடன் பல்தரப்பட்ட மது வகையறாக்களை வடிக்கக் கற்றுக்கொண்டனர்.



கரும்பிலிருந்து பல படிமுறைகளினூடாகக் கருப்பங்கட்டியை உருவாக்கத் தெரிந்திருந்தனர்.



நிறைவுரை



சங்கத்தமிழரது உணவு மரபுகள் பற்றிய பல செய்திகள் இதுவரையில் மேலே கூறப்பட்டன. பெரிதும் சங்க இலக்கியச் சான்றுகளைக் கொண்டே இச் செய்திகள் பெறப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்கள் வௌ;வேறு காலகட்டங்களில் தோன்றியவை. சில பாடல்கள் காலத்தால் மிக முற்பட்டவை எனக் கருத இடமுண்டு.



இந்தக் காலஇடைவெளிகளை சங்கத்தாரது உணவப் பண்பாட்டிலும் காணலாம்.



ஒரே காலகட்டத்திலும் கூட, நில அமைவுகளும் போக்குவரத்து வசதியின்மையும் சங்ககாலத்தோரது வாழ் களங்களுக்கடையே பெரும் இடைவெளியை ஏற்படுத்தியிருந்தன. குறிஞ்சியில் பெறப்பட்ட தேன், நெய்தல் நிலத்தாருக்கு அரிய பொருள் ஆனது. நெய்தலில் விளைந்த உப்பு குறிஞ்சியாருக்கு எட்டாப் பொருளாயிற்று. பெரும் பணியினூடாகப் பெறப்பட்ட பசுநெய் பலருக்கும் கிட்டாத பெறுமதி மிக்கதானது. மருதத்தில் விளைந்த நெல் மலைக்கும் அலைக்கும் எளிதிற் கிடைக்கவில்லை.



எனினும் தத்தமது சூழலில் விளைந்த, பெறப்பட்ட உணவுவகைகளைக் கொண்டு குறைவிலாது தம் தேவைகளை நிறைவேற்றினர் சங்கத் தமிழர். பெரும் ஆடம்பரமற்ற எளிமையான உணவுப் பழக்கமே சங்கம் எங்கும் பெரிதும் விரவிக் கிடக்கின்றது.



பிற இனத்தாரது பண்பாட்டுப் படையெடுப்புகளால் பாதிக்கப்படாத தனித்துவமான உணவுப் பொருட்களும் சமையல் முறைகளும் சங்ககாலத்திலேயே காணப்பட்டிருக்கின்றன. சங்கத்தை அடுத்த அறநெறிக்காலத்தில் சமணம், பௌத்தம் போன்ற மதங்கள் பெற்ற செல்வாக்கு தமிழர் உணவு மரபில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுவரையில் தமிழர் உணவில் முதன்மையுற்றிருந்த ஊன்வகைகள் பின்தள்ளப்பட்டன. உணவொழுக்கத்தில் சைவம் அசைவம் போன்ற பாகுபாடுகள் தோன்றின. இறை வழிபாடு தழுவிய நோன்பு முறைகளும் மரக்கறி உணவுகளும் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கின.



இம்மாற்றங்கள் சமூக வளர்ச்சியின் பரிணாமப் படிகள் என எடுத்துக்கொண்டாலும் தமிழரின் தனித்துவ மரபுகள் இ;மமாற்றங்களினால் திரிபுகளுக்கு உட்பட்டதை நாம் ஏற்றாக வேண்டும்.



தமிழர் வாழ்வியல் நீட்சியில் எம் பழம்பெரும் பண்பாட்டை உணர்ந்து கொள்வதற்குச் சங்ககாலத்து உணவு மரபுகள் பெரும் துணை செய்கின்றன.



துணை நின்ற நூல்களும் இணையத்தளங்களும்:



தமிழர் உணவு: பக்தவத்சல பாரதி

பண்பாட்டு அசைவுகள்: தொ.பரமசிவன்

முல்லைநில உணவு முறைகள்: முனைவர் சு. அரங்கநாதன்

தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்: கே. கே. பிள்ளை

தமிழரும் தாவரமும்: பேராசிரியர் கு.வி. கிருஸ்ணமூர்த்தி

சங்ககாலத்து உணவும் உடையும்: மா.இராசமாணிக்கனார்.

பண்டைத் தமிழர் உணவுகள்: முனைவர் சி. சேதுராமன்

புறநானூறு

பெரும்பாணாற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை

பரிபாடல்

மதுரைக்காஞ்சி

நற்றிணை

பட்டினப்பாலை

அகநானூறு

Saturday, 7 November 2015

உலகின் தலைசிறந்த சிந்தனையாளர்கள் பட்டியலில் திருவள்ளுவர்!

உலகின் தலைசிறந்த சிந்தனையாளர்கள் பட்டியலில் திருவள்ளுவர். சிங்கப்பூரில் உள்ள பிரபல MDIS கல்வி நிலைய வளாகத்தில் திருவள்ளுவர் சிலை.சிங்கையில் உள்ள பிரபலமான மேலாண்மை பட்டப்படிப்பு வழங்கும் MDIS என்னும் (Management Development Institute of Singapore) கல்வி வளாகத்தின் நுழைவாயிலில் உலகின் தலைசிறந்த பத்து சிந்தனையாளர்களின் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளது.


இதில் தமிழர்களின் பெருமையான திருவள்ளுவருக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் நிறுவப்பட்டு பல ஆண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டில் பலருக்கும் இது குறித்த செய்தி தெரியாது. அதனால் இதை பற்றியான செய்தியை நாம் பதிவு செய்கிறோம்.

பல்லாயிரம் பன்னாட்டு மாணவர்கள் பயிலும் இந்த கல்வி நிலையித்தில் இத்தைகைய சிந்தனையாளர்களின் சிலைகளை வைத்திருப்பது , மாணவர்களுக்கு நன்னெறிகளை கற்றுக் கொடுப்பதொடு, நன்மை தீமைகளை மாணவர்கள் பகுத்துணர்ந்து அறிய இத்தகைய முயற்சியை மேற்கொண்டுள்ளது MDIS நிர்வாகம்.

இதில் உள்ள உலகின் தலை சிறந்த சிந்தனையாளர்களின் பட்டியில் இதோ…

இடமிருந்து வலம்.. லூயிஸ் பாஸ்டர், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், இப் கால்டன், பென் ஜான்சன், அரிஸ்டாட்டில், திருவள்ளுவர், பிளாடோ, கன்புயுசியஸ், சாக்ரடிஸ் மற்றும் மரியா மாண்டேசரி

இந்த சிலைகளை இந்த கல்வி நிலையத்தில் நிறுவுவதற்கு காரணமாக இருந்தவர் MDIS நிறுவனத்தின் பொதுச் செயலாளர் முனைவர் தேவேந்திரன் ஆவார். தமிழரான இவரது தாய் தந்தையின் பூர்வீகம் இலங்கை ஆகும். இக்கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்களை மனதளவில் ஊக்கப்படுத்தவும், அவர்கள் வாழ்க்கைக்கு தேவையான ஒழுக்கங்களை பெறுவதற்கும் இந்த தலைசிறந்த மனிதர்களின் உருவச் சிலைகள் உதவும் என்பதற்காக தேவேந்திரன் இந்த சிலைகளை கல்வி நிலையத்தின் வாசலில் நிறுவி உள்ளார். பன்னாட்டு மாணவர்கள் இப்போது யார் திருவள்ளுவர் என்பது பற்றியும் உலகப் பொது முறையாம் திருக்குறள் பற்றியும் அறிந்து வருவது தமிழர்களுக்கு பெருமை தானே.

இது போல் உலகில் பல்வேறு நாடுகளிலும் திருக்குறளின் பெருமையை பற்றியும் திருவள்ளுவரை பற்றியும் அறியுமாறு தமிழர்கள் தங்களால் முடிந்த செயல்களை செய்ய வேண்டும். தமிழுக்கு பெருமை சேர்க்கும் இத்தகைய செயலை நாம் அனைவரும் பாராட்டுவோம்.

தமிழர்களும் செவ்விந்தியர்களும்!

தமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :

உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்பு.இன்று உலகமே மாயன்(Mayan) என்கிற வார்த்தையை அறிந்திருக்கிறது. மாயன்(Mayan) Calendar-யை வைத்து உலகம் முழுவதும் இன்று பரபரப்பு கிளப்பப்படுகிறது. 2012-ல் உலகம் அழிந்திவிடலாம் என்கிற புனைவுகளும் தொலைக்காட்சி மர்மத் தொடர்களால் முன்னெடுக்கப்படுகின்றன.


Omlec, Aztec, மாயன்(Mayan), Inca இவைகள் வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்த மக்களுடைய நாகரீகங்களின் பெயர்கள். இவர்களை வெள்ளையர்கள் செவ்விந்தியர்கள் என்று பொதுபட அழைத்தார்கள். ஆங்கிலேயர்கள் இவர்களை செவ்விந்தியர்கள் என்று அழைத்ததற்கு வரலாற்று பின்னனி உண்டு.

கி.பி. 14, 15 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு செல்ல கடல் வழியைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அந்த காலகட்டத்தில் அட்லாண்டிக் பெருங்கடல் (Atlantic Ocean)-யை குறுக்காக கடந்து இந்தியாவிற்கு போய்விடலாம் என்று கொலம்பஸ் (Columbus) நம்பினார்.

அவருடைய நம்பிக்கையின்படியே அவர் அட்லாண்டிக் பெருங்கடல் (Atlantic Ocean)-யை கடந்தார். ஆனால் அவர் போய் சேர்ந்த கண்டம் அமெரிக்கா. ஆனால் Columbus தாம் வந்து இறங்கிய நாடு இந்தியா என்றே நம்பினார். அமெரிக்க கண்டத்தை சேர்ந்த மக்கள், இனக்குழு வழக்கப்படி தங்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிக்கொள்வது வழக்கம்.

இதை பார்த்த ஐரோப்பியர்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிய அந்த மக்களையும் தாங்கள் கண்டுபிடித்தது இந்தியா என்கிற நம்பிக்கையையும் ஒன்றாக்கி அந்த மக்களை செவ்ந்தியர்கள் (Red Indians) என்று அழைக்கத் தொடங்கினார்கள்.

கொலம்பஸ்(Columbus)-க்கு முன்பே Americo Vesbugi என்பவர் அமெரிக்க கண்டத்தை கண்டுபிடித்துவிட்டார் என்பது வேறு கதை. இவரை பெருமைபடுத்தும் விதமாகவே அந்த கண்டம் America என்று அழைக்கப்படுகிறது.


இந்த செவ்விந்தியர்கள் எப்படி இரு அமெரிக்க கண்டங்களிலும் (Green Land, Ice Land, Canada உட்பட) குடியெரினார்கள் என்பது இன்று வரை அவிழ்க்கப்படாத முடிச்சாக இருக்கிறது. ஆனால் ஒன்றை மட்டும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உருதிபடுத்தியிருக்கிறார்கள்.

அந்த ஒரு விசயத்தைப் பற்றிதான் நம்முடைய முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தெரியாமல் போயிற்று. வரலாற்று அறிவுக்கும் இவர்களுக்கும்தான் ஏழாம் பொறுத்தமாயிற்றே! வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்திய அந்த விசயம் செவ்விந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் தொடர்பு உண்டு என்பதுதான்.

இதை படிப்பவர்களுக்கு, இது எதோ இட்டுகட்டிய சமாச்சாரம், வலிந்து தமிழர்களுக்கு பெருமை தேடுகிற விசயம், உலகத்தில் உள்ளவர்களையெல்லாம் தமிழர்களோடு தொடர்புபடுத்துகிற மோசடி என்று நினைக்கத் தோன்றலாம் ஆனால் உண்மை இதுதான்.


நல்லவேளை இந்த உண்மையை கண்டுபிடித்தவர்கள் வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அதனால் நம்மவர்கள் இதை நம்பத் துணிவார்கள். நம்மவர்களுக்கு Made in Foreign என்றாலே ஒரு கிலுகிலுப்புதானே!

தமிழ் வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒருவர் இந்த உண்மையை கண்டிருந்தால் அவரை பைத்தியக்காரன் என்று முத்திரை குத்தி மூலையில் தள்ளி இருப்போம். தன் இனத்து அறிஞனை மதிக்காத எந்த இனமும் உருப்பட்டதாக வரலாறு கிடையாது. இதற்கு வாழும் உதாரணம் தமிழனே.


The Conquest of Mexico and Peru என்கிற வரலாற்று நூலை எழுதிய William H. Prescott என்பவரே முதன் முதலில் செவ்விந்தியர் தமிழர் தொடர்பை பற்றி பேசுகிறார். ஐரோப்பியர்கள் எப்படி செவ்விந்தியர்களை, மெக்சிகோ மற்றும் பெரூ நாடுகள் முழுவதிலிருந்தும் ஒழித்துகட்டினார்கள் என்பதை விலாவாரியாக இந்த நூல் விவரிக்கிறது.

இந்த நூலின் தொடக்கத்தில் செவ்விந்தியர்களின் பூர்வீகம் குறித்து பேசும் Prescott தமிழர் தொடர்பை அடித்து கூறுகிறார். வரலாற்று ஆராய்ச்சியாளர் இல்லையென்றாலும் சே குவேராவும் தன்னுடைய தென் அமெரிக்க பயண குறிப்புகளில் இதை பற்றி எழுதியிருக்கிறார்.


‘இன்காகள் (Incas) தென் அமெரிக்க சோழர்கள்’ என்கிற ஆராய்ச்சி நூல் ஒன்று தமிழிலும் இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் நூலகத்தில், யாரும் திரும்பி பார்க்க கூட யோசிக்கும் புத்தக அடுக்கில், தூசி தும்பட்டைகளுக்கு மத்தியிலிருந்து எடுத்து இந்த புத்தகத்தை நான் படித்திருக்கிறேன்.

இந்த புத்தகத்தை எழுதிய ஆராய்ச்சியாளரின் பெயரை நான் மறந்துவிட்டதின் காரணமாக என்னால் அது குறித்த தகவலை தர இயலவில்லை. இது வருத்தமளிக்க கூடி விசயம். இந்த கட்டுரை எழுதும் பொறுட்டு இந்த அறுமையான புத்தகத்தை நூலக்கத்தில் எவ்வளவோ முயன்று தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த புத்தகத்திற்கு மறுபதிப்பு இல்லை என்பதும் வேதனையான விசயம். தமிழ் அறிஞர்களின் ஆராய்ச்சி அறிவு இப்படிதான் கண்டுகொள்ள ஆளில்லாமல் காணாமல் போகிறது.


செவ்விந்தியர்களின் கலாச்சார கூறுகள் மிகத் தெளிவாக தமிழர்களின் கலாச்சார கூறுகளை உள்ளடக்கி இருக்கின்றன. தமிழர்களின் வானியியல், செவ்விந்தியர்களின் வானியியலோடு ஒத்துப்போகின்றன. செவ்விந்தியர்களின் வானியியல் நுட்பத்தை ஆராய்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், பல்லாயிரம் ஆண்டுகள் அனுபவத்தின் மூலமாகே இத்தகைய நுட்பங்களை பெற முடியும் என்றும் செவ்விந்தியர்களுக்கு இது ஒரே இரவில் கைவர சாத்தியம் இல்லையென்றும் கணிக்கிறார்கள்.

காரணம் செவ்விந்தியர்கள் ஒரிடத்தில் நிலைத்து வாழ்பவர்கள் கிடையாது அவர்களுடையது நாடோடி கலாச்சாரம். நாடோடி இனம் வானியியலில் தேர்ச்சி பெறுவது சாத்தியம் அற்றது. தமிழர்களுடனான தொடர்பே இவர்கள் வானியியலில் தேர்ச்சி பெறுவதற்கு உதவியிருக்கும் என்று கருதுகிறார்கள். மெசப்பத்தோமியா, எகிப்பது நாகரீகங்களின் தொடர்புகள் செவ்விந்தியர்களிடம் கிடையாது.


செவ்விந்தியர்கள் ஏறக்குறைய 3000 ஆண்டுகளாக அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை, நிலையான விவசாய முறை சார்ந்த நிலவுடமை கலச்சாரம் கொண்டது கிடையாது. காடு சார்ந்த பொருட்களும், கால் நடைகளுமே அவர்களுடைய சொத்துகள்.

தென் அமெரிக்காவில் காடுகளிலும், வட அமெரிக்காவில் இடம் விட்டு இடம் நகரும் வகையிலுமே அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துகொண்டார்கள். அமெரிக்கா போன்ற இயற்கை வளம் நிறைந்த நாட்டில், செவ்விந்தியர்கள் நிலையான விவசாய சமூகத்தை ஏற்படுத்தாதது ஆச்சரியமான விசயம்.

Mel Gibson-னின் Apocalypto படம் தென் அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை மிகத் துள்ளியமாக காட்சி படுத்தியிருக்கும். Hollywood-ன் இனவெறிப் பிடித்த Cowboy படங்களில் வெள்ளையர்களுக்கும் செவ்விந்தியர்களுக்கும் இடையிலான சண்டை காட்சிகளில் வட அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை தெரிந்து கொள்ளலாம்.


ஐரோப்பியர்களுக்கு அமெரிக்கா என்று ஒரு கண்டம் இருப்பதே கி.பி. 12, 13 நூற்றாண்டுகளுக்கு பிறகுதான் தெரியவந்தது. ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு அமெரிக்கா கண்டத்தோடு தொடர்பு இருந்திருக்கிறது. இது கற்பனை கதைப் போல இருந்தாலும் இதற்கு வலுவான சான்று உண்டு.

தென் பசிபிக் மகாகடலில் (Pacific Ocean) ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சி(Ocean Archeology) மேற்கொண்ட சமயத்தில் மிகப் பெரிய சரக்குக் கப்பல் ஒன்றை கண்டுபிடித்தார்கள். முழுவதும் மரத்தால் கட்டப்பட்டிருந்த இந்த கப்பல் வணிகப் பொருட்களுடன் முழ்கியிருக்கிறது.

Carbon-Dating முறையின்படி இந்த கப்பலின் வயது இன்றிலிருந்து 2500 வருடங்களுக்கும் மேல் என்று தெரிந்திருக்கிறது. தரவுகளை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், தமிழர்கள் வணிகத்திற்கு உபயோகப்படுத்திய கப்பல்களில் ஓன்று ஆஸ்திரேலிய கண்டத்தைத் தாண்டி அமெரிக்கா செல்லும் வழியில் பசிபிக் கடலில் முழுகியிருக்கிறது என்ற முடிவிற்கு வந்தார்கள்.


ஆராய்ச்சியார்கள் கண்ணை மூடிக்கொண்டு இந்த கப்பல் தமிழர்களுடையது என்கிற கணிப்பிற்கு வந்துவிடவில்லை. முதலில் இந்த கப்பல் எந்த மரத்தால் கட்டப்பட்டது என்று ஆராய்ந்தபோது தேக்கு மரத்தால் ஆனது என்று தெரிந்திருக்கிறது. தேக்கு தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே கிடைக்க கூடியது.

அதுமட்டும் இல்லாமல் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் கடல்களில் மிகப் பெரிய கப்பல்களை வைத்து வாணிபம் செய்த நாகரீகம் இரண்டே இரண்டுதான். ஒன்று தமிழர்களுடைய நாகரீகம் மற்றது எகிப்திய நாகரீகம். மூழ்கிய அந்த கப்பலின் கட்டுமான அமைப்பு எகிப்தியர்களின் சரக்கு கப்பல்களோடு பொறுந்திபோகவில்லை.

மேலும் எகிப்தியர்கள் கறையோரமாகவே பயணித்து செல்லக் கூடியவர்கள். அவர்களுக்கு நடுகடலில் கப்பல் செலுத்தத் தெரியாது. அதன் காரணமாக அவர்களுடைய கப்பல்களின் கட்டுமானமும் கரையோரமாக பயணிக்க ஏற்ற வகையில்தான் இருக்கும்.


கண்டுபிடிக்கப்பட்ட கப்பலோ மிகப் பெரியதாக நிறைய சரக்குகளை கையாளக் கூடியதாக இருந்ததோடு நடுகடலில் பயணம் செய்வதற்கு ஏற்றபடியும் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கப்பலில் இருந்த சரக்குகளும் தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்ககூடியவைகள்.

தமிழ் இலக்கியங்கள் மட்டுமே கடலில் பயணிக்கும் களங்களுக்கு உபயோகத்தின் அடிபடையில் அமைந்த பெயர்களைப் பற்றி கூறுகிறது. இவைகள் மூலம் தமிழர்களின் கடலோடும் அனுபவத்தை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது தமிழர்களுடைய வணிக கப்பல்தான் என்று உறுதி செய்திருக்கிறார்கள்.

ஆக வெள்ளையர்கள் நாடோடிகளாக சுற்றிதிரிந்த காலத்திலேயே தமிழன் ஆஸ்திரேலிய கண்டத்தையும், அமெரிக்க கண்டத்தையும் கண்டு அறிந்து வைத்திருந்தான். இந்த கண்டங்களோடு வணிகத் தொடர்புகள் அவனுக்கு இருந்திருக்கிறது. நம்முடைய சாபக்கேடு இவற்றை பற்றிய முறையான வரலாற்று ஆவணங்கள் இல்லாதது.

3000 ஆண்டுகளுக்கு முன்பே நடுகடலில் பயணிக்கத் தெரிந்த தமிழன், தன்னுடைய சிறப்புகள் பற்றி பதிய தவறியது கேடுகாலமே.


நல்லவேலை ஆரிய வேதங்கள் கடல் பயணத்தை தடை செய்திருக்கின்றன.. இல்லை என்றால் மூழ்கிய இந்த தமிழர்களுடைய கப்பலுக்கு தலைவன்(Captain) ஒரு பிராமணன் என்று இல்லாத வரலாற்றை இருப்பதுபோல் எழுதியிருப்பார்கள்.

தன்னுடைய சிறப்புகள் பற்றிய விழிப்புணர்வே அற்ற தமிழனும் அதை அப்படியே நம்பிவிடுவான்.உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்புகளைப் பற்றி பேச இன்று நாதியில்லை. ஆங்கொன்றும் இங்கொன்றுமாக நம்முடைய சிறப்புகள் குறித்து வரலாற்று ஆதாரங்கள் கிடைத்தாலும் வெகு மக்களிடம் அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழர்கள் தவறிவிடுகிறார்கள்.

தவறிவிடுகிறார்கள் என்பதை விட அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் இந்த அக்கறையின்மை, நாடு இழப்புகளிலும், இனப் படுகொலைகளிலும் தமிழனை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

நன்றி: மகேந்திரன் ஆறுமுகம்

அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி..!!!

தலைப்பு : “POTSHRED WITH TAMIL-BRAHMI SCRIPT FOUND IN OMAN”. அதாவது ஓமன் நாட்டில் கண்டெடுக்கப்பட்ட ஓட்டுச்சில்லில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் என்பது அதன் பொருள்.

இதைப்பற்றி இந்துவின் இணையதள இதழிலும் வந்தது. இந்தச் செய்தி உண்மையிலேயே தமிழின் தொன்மையையும் தமிழர்கள் கடல் கடந்து மிகப்பழங்காலத்திலேயே பல நாடுகளில் தங்கள் குடியேற்றத்தைச் செய்து கால் பதித்து கலாச்சாரத்தைப் பதித்திருக்கிறார்கள் என்பது ஒவ்வொரு தமிழனும் நெஞ்சு நிமிர்த்தி பெருமை கொள்ளத்தக்கது.

மேற்கூறிய செய்திகளில் தெரிய வருவது நம்மை அதிசயத்தில் உறைய வைக்கிறது. இப்படிப்பட்ட தமிழ் எழுத்துக்கள் தாங்கிய ஓட்டுச்சில்லுகள் மத்தியத் தரைக் கடலின் மேற்குப்பகுதியான எகிப்து முதல் கிழக்குப்பகுதியில் தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகள் வரை பல்வேறு இடங்களில் கிடைக்கின்றன என்றும் இதற்கான செய்திகள் அவ்வப்போது இந்து நளிதழ் உட்பட பல்வேறு மேலை நாட்டு செய்தித்தாள்களிலும் வெளிவந்திருக்கின்றன.

அடடா! “யாதும் ஊரே யாவரும் கேளிர்!” என்று தமிழன் சும்மா பாட்டாக மட்டும் பாடி வைக்கவில்லை.! ஓட்டிலும் எழுதி பல நாடுகளில் ஒட்டி வாழ்ந்திருக்கிறான் என்பது எவ்வளவு பெருமைபடத்தக்க செய்தி!

இப்போது கண்டுபிடிக்கப்பட்ட ஓட்டுச்சில்லு கோர் ரோரி (KHOR RORI) என்ற ஓமன் நாட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஓட்டுச்சில்லில் “நந்தை கீரன்” என்று எழுதப்பட்டிருக்கிறதாம்! இப்போது நாம் பேசிப்பழகி எழுதி வரும் தமிழ் எழுத்து வடிவில் அல்ல! மிகப் பழங்காலத்தில் தமிழ் எழுதப்பட்ட எழுத்து வடிவில்! அதை வல்லுனர்கள் தமிழ்-பிராமி என்று அழைக்கிறார்கள். தமிழ் என்பது சரி. அதென்ன பிராமி? இதில் ஒரு வரலாற்று மோசடி ஒளிந்து கொண்டிருக்கிறது.

இந்த ஓட்டுச்சில்லில் “நந்தை கீரன்” என்று எழுதப்பட்டிருக்கிறதாம்! இப்போது நாம் பேசிப்பழகி எழுதி வரும் தமிழ் எழுத்து வடிவில் அல்ல! மிகப் பழங்காலத்தில் தமிழ் எழுதப்பட்ட எழுத்து வடிவில்! அதை வல்லுனர்கள் தமிழ்-பிராமி என்று அழைக்கிறார்கள்.

தமிழ் என்பது சரி. அதென்ன பிராமி? இதில் ஒரு வரலாற்று மோசடி ஒளிந்து கொண்டிருக்கிறது.

ஒருவேளை, பிராமி என்பது சமஸ்கிருத எழுத்தா? சமஸ்கிருதம் எப்போதுமே எழுதப்பட்டதே இல்லையே! அதற்குத்தான் எழுத்து வடிவமே கிடையாதே! எல்லாம் வாய்மொழியோடு சரி! அதனால்தானே வடவேதத்திற்குக் கூட எழுதாக்கிளவி என்று கூறினார்கள்.

பழங்காலத்தில் சமஸ்கிருதத்தைப் பேசியவர்கள் அதை ஏன் எழுதவில்லை? சிந்திக்க வேண்டிய விசயம்! உலகிலேயே முதன்முதலில் தான் பேசும் மொழிக்கு எழுத்து வடிவம் கொடுத்தவன் தமிழன்! அதைக் கல்லிலும், ஓட்டிலும், ஓலையிலும் எழுதிப்பார்த்தவன் தமிழன்!

சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவமே கிடையாது. இன்று நாம் சமஸ்கிருதத்தை தேவநாகரி என்றும், கிரந்தம் என்றும் இரண்டு இரவல் வாங்கப்பட்ட எழுத்து வடிவில் எழுதிப்படிக்கிறோம். இது இரவல் வாங்கியது! சமஸ்கிருதத்திற்குச் சொந்தமில்லாதது.

கி.பி.5 ஆம் நூற்றாண்டில் சமஸ்கிருதத்திற்குத் தமிழ்நாட்டில் கிரந்தம் என்ற தமிழ் எழுத்துக்கள் உள்ளடக்கிய எழுத்து வடிவம் தமிழ் சிவாச்சாரியார்களால் பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது. அதனால் அதற்கு பல்லவ கிரந்தம் என்றே பெயர்.

அதற்குப்பின் பல நூற்றாண்டுகட்குப்பின் இந்தி மொழி உருவாகிய பின் வடநாட்டினர் சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவத்தை இந்தி வடிவில் கொடுத்ததுதான் தேவநாகரி.

அப்படியானால் மிகப் பழங்காலத்தில் சமஸ்கிருதம் உருவான போது ஏன் எழுத்து வடிவம் அதற்கு இல்லை? ஒரு நொண்டிச் சமாதானம் அதற்குச் சொன்னார்கள் – எழுதினால் அதற்கு ஆற்றல் போய்விடுமாம்!

இது இப்படி இருக்க மேற்கண்ட தமிழ் எழுத்துக்கள் கிறித்து பிறப்பதற்கு பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே எழுதப்பட்டு வந்திருக்கிறது என்று ஓமன் நாட்டில் கண்டெடுத்த ஓட்டுச் சில்லுகளைப்போல பல சான்றுகள் கிடைத்துக் கொண்டே வருகின்றன. இவ்வாறு முதன் முதலில் பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழில் எழுதி வந்திருக்க அதற்கு ஏன் பிராமி என்று ஒரு சமஸ்கிருதப் பெயர் கொடுக்கப்பட வேண்டும்?

இவ்வாறு முதன் முதலில் பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழில் எழுதி வந்திருக்க அதற்கு ஏன் பிராமி என்று ஒரு சமஸ்கிருதப் பெயர் கொடுக்கப்பட வேண்டும்?

(நலன் கருதி இந்த இடத்தில சில வரிகள் நீக்கப்பட்டுள்ளது., இணையத்தில் படித்து தெரிந்துகொள்ளவும்) உண்மையில் பல சமஸ்கிருத புராண நூல்களிலேயே – மொழிகளின் பட்டியல் ஒன்று வருகிறது. அதாவது கி.மு 3-வது நூற்றாண்டிலேயே எழுந்த ‘சமவயங்ககத்தா’ என்ற பிராகிருதத்தில் எழுதப்பட்ட சமண நூல் 18 வகை எழுத்துக்களைக் குறிப்பிடுகிறது.

அவையாவன.
1.பாம்பி
2.யவனானி
3.தோசபுரியா
4.கரோத்தி
5.புக்கரசரியா
6.போகவையா
7.பகாரியா
8.உயமித்ரகரியா
9.அக்கரபுட்டியா
10.தவனானியா
11.கிணிகையா
12.அங்காலிவி
13.கணிதாவிலி
14.காந்தவ்யவிலி
15.ஆடம்சாலிவி
16.மகாசனி
17.தமிழி
18.பொலிம்னி

இங்கே குறிப்பிடப்பட்டுள்ள எழுத்து வடிவப் பட்டியலில் தமிழி இருப்பது காண்க. தமிழ்தானே முதலில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்து வடிவம்? அப்படியானால் அதுதானே பட்டியலில் முதலில் இடம் பிடித்திருக்க வேண்டும்? ஏன் அது 17 ஆவதாகக் காட்டப்பட்டிருக்கிறது? காரணம், இப்பட்டியலை வடநாட்டினர் தயாரித்தனர். எனவே அவர்கள் தென்னாட்டுத் தமிழை இறுதியில் வைத்துவிட்டனர்.

சரி, கி.மு 3-ஆம் நூற்றாண்டிலேயே தமிழின் எழுத்து வடிவம் தமிழி என்று கூறப்பட்டிருப்பதைப் பார்த்தோம். தமிழின் எழுத்து வடிவம் தமிழி என்பதுதானே சரியாக இருக்கமுடியும்! அதென்ன பிராமி?

மேற்கண்ட அசோகன் காலமான கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் கூறப்பட்ட பட்டியலில் எங்காவது பிராமி என்று ஓர் எழுத்து வடிவம் வந்துள்ளதா?

இல்லையே.!
அப்படியானால் தமிழோடு பிராமி என்று ஒட்டு சேர்த்தவன் வேண்டுமென்றே ஓர் உள்நோக்கத்துடன் ஒட்டு சேர்த்திருக்கிறான்! அந்த உள்நோக்கம் தமிழின் தொன்மையைக் குறைக்க வேண்டும் – மாறாக வடமொழிக்கு முதன்மையை ஏற்ற வேண்டும் என்பதுதான். இது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது..!!



நன்றி -
http://arundhtamil.blogspot.ca/2012/12/124.html

(ஆன்மிக மாத இதழ், டிசம்பர் 2012 “தெய்வ முரசு” ஆசிரியர் மேசை பகுதியிலிருந்து)

Saturday, 31 October 2015

ஆங்கிலம் - தமிழரின் தாய்மொழி...!!!

மொழியியல் ஆய்வாளர்களும், அறிஞர்களும் மட்டுமே தொடுவதற்கு உரித்தான கருவை மையமாகக் கொண்ட கட்டுரை இது...

பல்வேறு அறிஞர்களால் பலமுறை, பல கட்டுரைகளில், பல்வேறு கருத்தரங்குகளில் எடுத்தாட்கொள்ளப்பட்ட ஒன்றும் கூட...

அவர்கள் அளவிற்கான தகுதிகள் இல்லையாயினும்... எண்ணமும், மொழியின்பால் ஒரு தேடலும் கொண்ட ஆர்வத்தில்...கொடுத்த நம்பிக்கையில்... அதை எனது பார்வையில்... என்னால் இயன்ற பங்காக இங்கே எழுத்துக்களாக்குகிறேன்.

"மொழி", "தாய்மொழி" மற்றும் "பண்பாடு"... இவற்றைப் பொறுத்தமட்டில் என் அகம் வேறு... சூழல் மற்றும் பழக்கத்தால் வார்க்கப்பட்ட என் புறம் வேறு...

ஒன்று உணர்வு சார்ந்தது... மற்றொன்று உலகம் சார்ந்தது...

அகம் விழிப்புணர்வு பெற்றாலும், புறம் இன்னும் அதற்கு முரண்பட்டுத்தான் நிற்கிறது.

அதனால் என்ன...? அகமே விழித்துக்கொண்டபின் புறத்தைப் பற்றியென்ன கவலை...? பழக்கத்தால் ஊறிப்போனதும், சூழலோடு கட்டப்பட்டதுமான அதன் பரிமாணங்கள் வெறும் வேடங்களாகவே இருந்துவிட்டுப்போகட்டுமே...?!

அந்த உணர்வின் ஊக்கத்துடனேயே தொடர்கிறேன்...

இப்படியொரு தலைப்பை இங்கே யோசிக்க வேண்டியிருந்தது இன்றைய சூழலின் கட்டாயம். அதுதான் சூழலுக்கும் பொருந்திப்போகிறது.

ஏனெனில், தமிழரைப் போல் ஆங்கிலத்தை ஆராதிப்பவர்கள், இந்தியாவில்... உலகத்தில்... அவ்வளவு ஏன், ஆங்கிலேயர்களில் கூடக் கிடையாது.

அதுதான் தற்காலத் தமிழரின் மொழியுணர்வு...!

ஆங்கிலம் இங்கே ஏற்படுத்தியிருக்கும் இத்தகைய தாக்கங்கள்தான் எனக்குள் எழும் ஆச்சர்யங்கள்...!!!

அந்த ஆச்சர்யங்களூடே சில சிந்தனைகளைச் செலுத்திப் பார்ப்பதே இங்கே என் விருப்பம்.

ஆங்கிலம் - வரலாறும், வளர்ச்சியும்
ஆங்கிலத்தின் தாக்கத்தைப் பற்றிப் பேசும்போது, குறைந்தபட்சம் அதன் வரலாற்றை மேலோட்டமாகவாவது தொட்டுச் செல்வது அவசியம்.

அதன்படி, ஆங்கிலத்தின் உலக வரலாறு என்று எடுத்துக்கொண்டால், அதன் தொடக்கம் ஏறத்தாழ இன்றிலிருந்து பின்னோக்கி 1600 ஆண்டுகள்.

அவற்றில் அதன் முதல் 600 ஆண்டுகள் என்பது இன்றைய ஆங்கிலத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட "பழைய ஆங்கில" (Old English)-த்தின் காலம்...

அடுத்த 400 ஆண்டுகளோ அதனினும் சற்றே வேறுபட்டு அமைந்த "இடைப்பட்ட ஆங்கில" (Medieval age English)-த்தின் காலம்...

அதற்குப்பின் வந்த "நவீன ஆங்கிலம்" (Modern English) கூட முதல் 200 ஆண்டுகள் "முன் நவீனம்" (Early Modern English) என்றும், அதற்கடுத்து இன்றைய காலகட்டம்வரை "பின் நவீனம்" (Late Modern English) என்றும் அதன் காலத்தைக் கூறிடுகிறது.

இதனை அடிப்படையாகக் கொண்டு நோக்கினால் ஆங்கிலத்தின் இந்திய வரலாறு, அதன் "பின் நவீன" (Late Modern English) காலகட்டத்தின் தொடக்கங்களில்தான், கிழக்கிந்திய நிறுவனத்தினரின் மூலம் இங்கே துவங்குகிறது என்பதை நாம் தெளிவாக அறிந்துகொள்ளலாம்.

எனில், இந்த நாட்டைப் பொறுத்தவரையில், இன்றுவரை ஏறத்தாழ நான்கு நூற்றாண்டு கால வரலாறு மட்டுமே கொண்ட 'ஆங்கிலம்' என்னும் மொழியினால்..., அதைவிடப் பன்மடங்கு அதிகமான காலந்தொட்டு நிற்கும் இந்திய மொழிகளையும், அதன் மக்களையும் ஆட்கொள்ளமுடிந்திருக்கிறது என்றால்... அதன் ஆளுமைத்திறன்தான் இங்கே வியப்புக்குரிய ஒன்று.

அதனினும் மேலாக, பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மை கொண்டதாக அறியப்படும் தமிழ் மொழியை, இன்று அதன் மக்களைக்கொண்டே புறந்தள்ள முடிந்திருக்கிறது என்றால்... அதன் வசீகரம் நிச்சயம் பிரமிப்பூட்டக்கூடியது என்பதில் ஐயமில்லை.

இன்று உலகளாவிய மொழியாக அது நிலை கொண்டதற்கு, உலகெங்கும் குடியேற்ற நாடுகளில் ப்ரிட்டன் (Britain) கொண்ட ஆதிக்கமே முதன்மைக் காரணமாகக் கொள்ளப்படுகிறது.

இருப்பினும், மாற்றங்களை வெகு விரைவாகத் தனக்குள் ஏற்றுக்கொண்டே செல்லும் அதன் தன்மையையே பிரதான காரணமாக மொழியியல் வல்லுநர்கள் முன் வைக்கின்றனர்.

ஆனால், அவ்வாறு குடியேற்றம் கண்ட நாடுகளில் மட்டுமன்றி, ஏறக்குறைய பரவலாக இன்று அனைத்து நாடுகளிலும் உலகத் தொடர்பு மொழியாக அது தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றிருப்பதையும் இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் தொடர்புமொழி என்கிற வகையில் மட்டும் ஆங்கிலத்தை ஏனைய உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள... அடிமைப்பட்ட தேசங்கள் அதைத் தங்கள் ஆட்சி மொழிகளில் ஒன்றாக்கிக்கொள்ள... ஒருங்கிணைந்த இந்திய தேசம் தன் பல்வேறு மொழி பேசும் மக்களுக்கிடையேயான இணைப்பு மொழியாக வைத்துக் கொள்ள... தமிழ்நாடோ அதைத் தன் வாழ்க்கை மொழியாகவே ஏற்றுக்கொண்டது.

"சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தோம்" என்ற நமது பழம்பெருமையெல்லாம் இப்போதைய வாழ்க்கைநிலையில் கதைக்கு உதவாத ஒன்று... வேண்டுமானால் இனி "சங்கம் வைத்து ஆங்கிலம்" வளர்க்கலாம்...

எப்படி வந்தது இந்த நிலை...?!

காலத்தின் பின்னோக்கிச் சென்று பார்த்தால்... ஆங்கிலேய ஆதிக்கத்தின் துவக்கத்தில், அவர்களுடனான தகவல் பரிமாற்றத்திற்காக மட்டுமே என இந்தியர்களால் முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆங்கிலம், பல மொழிகள், பல கலாச்சாரம், பல சிற்றரசுகள் எனச் சிதறிக் கிடந்த மக்களை விடுதலை வேட்கையை முன்னிறுத்தி ஒருங்கிணைக்க எளிதான வழியாகப் பயன்பாட்டில் கொள்ளப்பட்ட ஆங்கிலம்... அந்நிய ஆதிக்கத்தின் முடிவிலும், அவர்களின் அடியொட்டியே அரசு நிர்வாகம், உயர்மட்டத் தொழில் மற்றும் வணிகம், கல்வி வரையில் ஏற்றுக்கொள்ளப்பட, இறுதியில் அதுவே தவிர்க்க முடியாத ஒன்றாக... தவிர்க்கத் துணியாத ஒன்றாக, தவிர்க்க விரும்பாத ஒன்றாக இங்கு நிலைகொண்டுவிட்டது.

ஒரே ஆட்சி அமைப்பினை மையமாகக் கொண்டிருந்தாலும் பல மொழிகள், பல பண்பாடுகள் என இருக்கும் இந்த தேசத்தில் ஆங்கிலத்தை வைத்துக்கொள்வதற்கு அது ஒன்றே காரணமாகிப் போனது. வெளியிலிருந்து வந்த ஆங்கிலம் இங்கே, இப்படி அசைக்க முடியாத இடத்தைப் பிடிப்பதற்கு வேறு காரணங்களுக்குத் தேவையே இல்லாமல் போனது.

ஆயினும், அவர்கள் இங்கிருந்து அகன்றபோது கல்வி வரையில் ஊடுருவி நின்ற ஆங்கிலத்திற்கு, அதன்பிறகு இணை மொழி என்கிற தகுதியைத் தந்து, அவர்கள் சென்று இன்றோடு கிட்டத்தட்ட 64 ஆண்டுகளைக் கடந்து கொண்டிருக்கிற நிலையில் நம் மொழியையும் தாண்டி வளர்த்து விட்டோம்.

கடைசியில் அது நம் உணர்விலும் நிலைத்துவிட்டது.

இன்று படித்தவர்களைப் பொறுத்தவரையில் ஆங்கிலம்தான் அவர்களுக்கான அடையாளம்... பாமரர்களுக்கோ அந்த அடையாளமே தங்கள் சந்ததியினருக்கான இலக்கு...

அடுத்த தலைமுறையினரின் கல்வியில்... பயிலும் துறை எதுவாக இருப்பினும் ஆங்கில அறிவு மட்டுமே கல்வியின் அடிப்படையாக அமைக்கப்பட்டுவிட்டதால் அதனை நோக்கியே ஒருவித வேகம் இங்கே காணப்படுகிறது.

"ஆங்கிலம் நன்கு தெரிந்திருந்தால் போதும்... அனைவரும் மேதைகளே..!" என்றொரு எழுதப்படாத தீர்மானம்தான் தமிழ்நாட்டில் இப்போதைய நடைமுறைக் கொள்கை.

படிப்பும், அறிவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவேயன்றி நடைமுறையில் இரண்டும் வேறுவேறு என்பதோ, இந்த இரண்டிற்கும் அப்பால் மொழியறிவு என்பது முற்றிலும் வேறுபட்டது என்பதோ இங்கே பெரும்பாலும் உணரப்படவில்லை.

இந்தியாவில் ஆங்கிலத்தின் தாக்கத்தைப் பொறுத்தவரையில் மற்ற மொழியினருக்கும், தமிழருக்கும் வேறுபாடு உண்டு.

ஆங்கிலம் அவர்களிடையேயும் பயன்பாட்டில் இருந்தாலும், நம்மைப் போல அதை மகுடமாக அணிந்துகொள்ளும் வழக்கம் மட்டும் அறவே கிடையாது என்பதுதான் அது.

தமது தாய்மொழியைத் தவிர வேறு எந்த மொழியறிவும் அவர்களைப் பொறுத்தவரையில் சூழ்நிலைகளின் தேவைக்காக மட்டுமே.

இந்த நேரத்தில்தான் தமிழர்களின் மொழிப் போராட்டமான "ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை" நாம் நினைவுகூற வேண்டியதாகிறது.

மொழிப் போராட்டம்
ஒரு காலத்தில் மத்திய அரசால் அனைத்து மாநிலங்களிலும் கட்டாயமாக்கப்பட்ட ஹிந்தி (Hindi) மொழிக் கல்வியை, மொழிப் போராட்டங்களின் மூலம் தமிழ்நாட்டில் நுழைய விடாமல் செய்தவர்கள் தமிழ் மக்கள்.

நம்மைப் போல எதிர்ப்புக்குரல் எழுப்பாமல் ஹிந்தியை (Hindi) ஏற்றுக்கொண்டவர்கள் அண்டை மாநில மக்கள்.

ஆனால், அதனால் இருதரப்பிலும் நிகழ்ந்த மாற்றங்கள்தான் வேடிக்கைக்குரியது.

ஹிந்தியை ஏற்றுக்கொண்ட மாநிலங்களில் ஹிந்தியும் (Hindi) சரி, ப்ரிட்டிஷார் (British people) காலத்திலிருந்து இருக்கும் ஆங்கிலமும் சரி... அவர்களின் தாய்மொழிக்குரிய இடத்தை அசைக்கக்கூட முடியவில்லை. இந்த இரண்டு மொழிகளுமே அங்கெல்லாம் இரண்டாம்பட்சமாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

ஆனால், "தமிழைக் காப்போம்" என்ற முழக்கத்துடன் ஹிந்தியை (Hindi) நுழையவிடாமல் விரட்டியடித்த தமிழ்நாட்டிலோ, இன்று தாய்மொழியான தமிழே ஆங்கிலம் கொண்டு விரட்டப்படுகிறது.

ஹிந்தியை எதிர்க்கத் துணிந்த தமிழுணர்வு, இன்று ஆங்கிலத்திடம் தலைவணங்கி நிற்கும் இந்தக் காலகட்டம் ஒரு வரலாற்று வேடிக்கை...!

எண்ணிப் பார்த்தால், இது குறித்து கேள்விகள் பல தோன்றுகின்றன...

தமிழரிடம் மட்டுமே இவ்வாறு காணப்படும் "ஆங்கிலமே உயர்ந்த அறிவின் வெளிப்பாடு" என்றொரு உரத்த சிந்தனை... இந்தியாவில் வேறு எந்த மொழியினரிடமும் எழாத சிந்தனை... "எப்படி உருவானது?" "எப்போது விதைக்கப்பட்டது?""எதனால் அது இன்று இவர்களுக்குள் மிகப்பெரிய மரமாக வளர்ந்து நிற்கிறது?" என...

அதிலும், வரலாறு கூறும் தமிழரின் மீதான பண்பாட்டுப் படையெடுப்புகளையும், 'அனல் வாதம்', 'புனல் வாதம்' போலப் பலவழிகளில் திட்டமிட்டு அழிக்கப்பட்டதாக மற்றும் அந்நியரால் கொள்ளை கொண்டு போகப்பட்டதாகச் சொல்லப்படும் பல்துறை அறிவுச் செல்வங்களையும், இன்னும் சர்ச்சைகளுக்குரியதாகவே இருக்கும் திராவிட-ஆரியப் போர்களையும் பற்றி அறிய வரும்போது... "தமிழரிடம் இன்று அசைக்கமுடியாத நிலைக்கு வளர்ந்து நிற்கும் ஆங்கில மோகத்திற்குப் பின்னணியில்கூட அந்நியர் பலரின் முனைப்பு இருக்கலாமோ?" என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.


இருப்பினும்... இத்தகைய காலகட்டத்தில், இதுபோன்ற கேள்விகளைத் துணிவுடன் எழுப்பி ஆராயும் திடமோ, அதற்கான வலிமையான பின்புலமோ நம்மிடம் இல்லை. இந்த நிலையில், அவற்றை அலட்சியப்படுத்திக் கடந்து செல்வதே கட்டாயமாகிறது.

தமிழ் - தளர்ச்சி நிலை
இன்று தமிழ்நாட்டில் எழும் ஆங்கில உணர்ச்சிப் பிரவாகத்தில் "மொழி" என்பதற்கான பொருளுக்கே அவசியமில்லை.

இதனூடே "தாய்மொழியின் தேவை" பற்றிய பேச்செல்லாம் வெறும் கருத்துக் குப்பை... அவ்வளவுதான்.

பொதுவாக, இங்கே கல்வியில் "தமிழுக்கான" இடம் ஒரு மொழிப்பாடம் என்கிற எல்லை வரை மட்டுமே... அதில் கூட விருப்பமான ஒன்றைத் தேர்வு செய்துகொள்ள வாய்ப்பிருந்தால் அந்த இடமும் இல்லை.

உயர்கல்வி அடிப்படையிலான வேலைவாய்ப்புகளில் "தமிழ்" என்பது ஒரு தீண்டத்தகாத வார்த்தை...

தமிழரின் உலகியல் மற்றும் வாழ்வியலில் "தமிழ் உரையாடல்" என்பது ஒருவரின் அறிவுக் குறைபாட்டிற்கான அடையாளம்...

ஒரு தனிமனிதனின் அறிவை இங்கே ஆங்கிலத்தை அடிப்படையாகக்கொண்டும், முன்னேற்றத்தைப் பணத்தை அடிப்படையாகக்கொண்டும் மட்டுமே அளவிடும் மூர்க்கமான நடைமுறையைப் பின்பற்றத் தொடங்கி விட்ட சமூகச் சூழலில் "தமிழைத் தவிர்த்தலே நலம்" போன்ற தவறான கற்பிதங்கள்தான் அசைக்கமுடியாத உறுதியுடன் திகழ்கின்றன.

சமீபத்தில் ஒரு பேருந்துப் பயணத்தின்போது நடந்த நிகழ்வு ஒன்றை இங்கே கூறுவது அதற்கொரு உதாரணமாகலாம்...

பேருந்தில் அமர்ந்திருந்த ஒரு பள்ளி மாணவனிடம், அருகிலிருந்த ஒருவர் 'தம்பி, என்ன படிக்கறே...?' எனக் கேட்க, மாணவனோ 'பத்தாவது' என்றான்.

உடனே அவர் ஏளனமாக அவனைப் பார்த்துச் சிரித்தார். "என்னப்பா, படிக்கிற பையன்... 'டென்த் (Tenth)'-ன்னு பதில் சொல்ல வேண்டாமா...? என்ன... போ...!".

அவர் கூறியதை ஆமோதிப்பதுபோல் சுற்றியிருந்த சிலரும் அந்தச் சிறுவனைப் பார்க்க, அவனோ கூனிக் குறுகினான்.

இந்த நிகழ்வு நடந்தது தமிழ்நாட்டில்... அதுவும் தமிழருக்கிடையில்...

என்ன சொல்லிவிடமுடியும் இதைப் பற்றி இதற்கு மேல்...?!

சரியாகச் சொன்னால் இன்றைய நம் "தமிழ்", நமது அலட்சியங்களையும், அவமதிப்புகளையும் மீறித் தப்பித் தடுமாறி ஒட்டிக் கொண்டிருக்கும் "தமிழ்"...!

முழுமையான ஆங்கிலப் பழக்கம் தமிழர் அனைவருக்கும் சாத்தியமாகும் வரை இந்த ஒட்டுதல் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

அந்த முழுமை வரும் தலைமுறைகளில் நிச்சயம் சாத்தியமாகும்.

அந்தக் குறிக்கோளை அடைவதற்கான முத்தாய்ப்பு வேலைகளே இன்று அனைத்து இடங்களிலும் முழுவீச்சில் நடைபெற்றுகொண்டிருக்கின்றன.

சில தலைமுறைகளுக்குப் பிறகு, கல்விக்கான வாய்ப்பில்லாமல் ஒதுங்கும் சில மனிதர்களிடம் வேண்டுமானால் தமிழ் இருக்க நேரிடலாம், வெறும் பேச்சுத் தமிழாக...

அதன்பிறகான சில ஆண்டுகளில் அவர்களின் விகிதம் குறையக் குறைய, தமிழ் முழுமையாக ஒருநாள் இங்கிருந்து தகர்க்கப்படும்.

"தமிங்கலம்" (Thaminglish)
"எங்கெங்கு காணினும் சக்தியடா...! ஏழு கடல் அவள் வண்ணமடா...!" என்று இயற்கையைப் பாடிய பாரதிதாசன் இன்னும் சில காலம் இருந்திருந்தால், "எங்கெங்கு காணினும் ஆங்கிலமடா...! அது தமிழ் மாந்தரின் உயர்எண்ணமடா...!" என்றும் கூட தமிழ்நாட்டைப் பார்த்துப் பாடியிருக்கக் கூடும்.

"மெல்லத் தமிழினி சாகும்..." என்றுரைத்த ஓர் பேதையின் கூற்றுக்கே அன்று தன் பதைப்பைப் பாடலில் பதித்த பாரதி மட்டும் இன்றிருந்தால் அந்தப் பேதையின் முன் தலைகுனிந்து போயிருக்கவும் கூடும்.

பாரதியைப் பேதையாக்கி விட்டு, அவன் கண்ட பேதையை மேதையாக்கி விட்டது இன்றைய தமிழ்ச் சூழல்.

கல்வியில் தமிழை இழக்கத் துணிந்தோம்... உயர்மட்டத் தொழில் மற்றும் வர்த்தகங்களில் தமிழை விரட்டத் துணிந்தோம்... பொது இடங்களில், அறிவிப்புகளில், விளம்பரங்களில் மற்றும் நிறுவனப் பெயர்களில் என எல்லா இடங்களிலும் தமிழைத் தவிர்க்கத் துணிந்தோம்... நம் உரையாடல்களில் தமிழை மறக்கத் துணிந்தோம்... இல்லை, மிதிக்கவே துணிந்தோம்.

ஆம், தமிழ் மெல்லச் செத்துக் கொண்டுதானிருக்கிறது.

ஆங்கிலச் சொற்களுக்கான வெறும் இணைப்பு மொழியாக மட்டுமே மாற்றப்பட்டு "தமிங்கலம்" (Thaminglish) எனும் ஒரு விசித்திர மொழியாகி விட்டது.

உதாரணமாக,"காலையில் பார்ப்போம்" போன்ற தமிழ்ச் சொற்றொடரெல்லாம் அரிதாகி, "மார்னிங் (Morning) மீட் (Meet) பண்ணுவோம்" போன்ற "தமிங்கலச்" (Thaminglish) சொற்றொடர் இப்போது பெரிதாகி விட்டது.

"தமிங்கலம்" (Thaminglish) - இது முழுமையான ஆங்கிலத்தை நோக்கிய தமிழரின் பரிணாமச் சுவடு.

ஆங்கிலேயரையே பிரமிக்க வைக்கும் அற்புதம்.

பேச்சு மட்டுமல்ல... எழுத்திலும் கூட "மணிப்பிரவாள நடை" என்று வந்துவிட்டால், அதில் "தமிங்கலத்தைத்" (Thaminglish) தவிர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் இன்று வெகு அரிது.

அது சிலருக்குச் சூழ்நிலையால் வரலாம்... சிலருக்குப் பழக்கத்தால் வரலாம்... ஆனால், பெரும்பாலானோருக்கு அதுதான் விருப்பம்... அதுதான் பெருமை...

சொல் பரிமாற்றம் - ஓர் கண்ணோட்டம்
திசைச் சொற்களையும், கலைச் சொற்களையும் தனக்குள் அனுமதித்தும் தன்னிலை மாறாத தமிழ்தான், இப்போது நம்மால் "தமிங்கலம்" (Thaminglish) என்ற பெயரில் தன்னையே இழந்து கொண்டிருக்கிறது.

உலகில் பல்வேறு மொழிகளுக்கிடையே சொல் பரிமாற்றம் என்பது வெகு இயல்பான ஒன்று.

தமிழும் வெவ்வேறு காலகட்டங்களில் தனக்குப் புதிதான சொற்களைப் பிற மொழிகளிடமிருந்து "திசைச் சொற்கள்" எனவும், அறிவியல் சொற்களைக் "கலைச் சொற்கள்" எனவும் வரவேற்றுத் தன்னுள் ஏற்றுக்கொண்டு, எப்போதும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு வந்திருப்பதை மொழி வரலாறு மற்றும் ஆய்வுகள் உரைக்கின்றன.

தமிழிலிலிருந்தும் ஏராளமான சொற்கள் உலக மொழிகள் பலவற்றால் நேரடியாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. பல தமிழ்ச் சொற்கள் காலப்போக்கில் அந்தந்த மொழியாளர்களின் உச்சரிப்பிற்கு ஏற்பத் திரிந்து, நாளடைவில் அந்த மொழியின் சொற்கள் போலவே உருமாற்றம் பெற்றுமிருக்கின்றன.

தமிழின் "கட்டுமரம்", ஆங்கிலத்தில் "கேட்டமரன்" (CATAMARAN) ஆனது போல்... "மாங்காய்", "மேங்கோ" (MANGO) ஆனது போல்... இத்தகைய உருமாற்றங்கள் ஏராளம்.

ஆனால், அவற்றிலும் தமிழர் பலருக்கு மூலச் சொற்களான தமிழ்ச் சொற்கள் மீதெல்லாம் மரியாதையில்லை.

பிற மொழியினரிடமிருந்து, அதிலும் குறிப்பாக ஆங்கிலேயரிடமிருந்து திரிந்து வந்த சொற்கள் மீது மட்டுமே மரியாதை...

இங்கே மேலே கூறப்பட்டிருக்கும் "மேங்கோ" (Mango) என்ற சொல்லையே எடுத்துக்கொண்டால், அதை நம்மில் பலர் ஆங்கிலத்தில் உரையாடலில் பயன்படுத்தினால்கூட அதை ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால், தமிழ் உரையாடலில்கூட "மாங்காய்"க்குப் பதிலாக "மேங்கோ" (Mango) என்றே பயன்படுத்துவதுதான் விளங்கிக்கொள்ள முடியாத ஒன்று...

:"எனக்கொரு 'மேங்கோ ' (Mango) கொடு..." போன்ற உரையாடல்கள் வெகு இயல்பாகிவிட்டது.

அதேபோல், ஜப்பானிய மொழியின் "சுனாமி" (Tsunami) என்ற சொல்... அது பெரும்பாலானோருக்கு இங்கே 2004 - ம் ஆண்டிற்குப் பிறகுதான் அறிமுகமான ஒன்று...

ஆங்கிலத்தில் அதற்கீடான சொல் இல்லாததால், அதில் "சுனாமி" (Tsunami) என்று ஜப்பானிய சொல்லையே பயன்படுத்தத் தொடங்க... வெகு விரைவில் அது கிட்டத்தட்ட ஆங்கிலச் சொல்லாகவே தோற்றம் பெற்றுவிட்டது.

ஆனால், தமிழிலோ அதற்கீடாகப் பன்னெடுங்காலமாக "ஆழிப்பேரலை", "கடற்கோள்" போன்ற அழகிய சொற்கள் இருக்க...அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, நாமும் ஆங்கிலத்தைப் பின்பற்றி "சுனாமி"(Tsunami) என்றே அழைக்கத் தலைப்பட்டோம். நாளடைவில் அதற்குப் பழகியும் போனோம்.

"சுனாமி" (Tsunami)-க்குத் தமிழில் இப்படிச் சொற்கள் இருப்பதே நிறையத் தமிழருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்... அதிலும் சிலருக்கு "ஆழிப்பேரலை"யாவது தெரிந்திருக்கலாம். ஆனால், "கடற்கோள்" என்கின்ற சொல் தெரிந்திருப்பதற்கான வாய்ப்புகளோ மிக மிக அரிது.

கடல் கொண்டதாக உரைக்கப்படும் நம் பழந்தமிழ்ச் சங்கங்களைப் பற்றிச் சிறிதளவேனும் அறிந்தவர்களுக்கு வேண்டுமானால் "கடற்கோள்" பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கலாம்.

இருப்பினும், இப்போது இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்வதற்கு ஒன்றுமில்லை...

"தமிழ்" என்ற சொல் ஆங்கிலத்தில் "டமில்" (Tamil) என்று உச்சரிக்கப்பட்ட ஒரே காரணத்தினாலேயே, இன்று நம்மில் பலரும் அவ்வாறே உச்சரிக்கும் மிகக் கொடுமையான காலகட்டத்தில், பிற அருந்தமிழ்ச் சொற்கள் இங்கே பலருக்குத் தெரியாமல் போனதைப் பற்றியெல்லாம் பெரிதாகக் கவலைப்படுவது அவசியமற்றது.

ஆங்கிலம் உட்பட பிற மொழிகளிடமிருந்து பெற்ற திசை மற்றும் கலைச்சொற்களை மட்டும் தமிழில் பயன்படுத்தியவரையில் மொழியில் சேதம் ஏற்படவில்லை.

எப்போது அவற்றையெல்லாம் தாண்டி அனைத்திற்குமே ஆங்கிலச் சொற்களைச் செருகப் பழக்கப்பட்டோமோ... அப்போதிலிருந்தே மொழி சிதையத் தொடங்கியது. தமிழ் விட்டுப்போனது. பல தமிழ்ச் சொற்கள் நினைவுகளிலிருந்து மறைந்து போயின. "தமிங்கலம்" (Taminglish) செழித்து வளர்ந்தது.

திசை மற்றும் கலைச் சொற்களைத் தமிழில் பயன்படுத்துவது வேறு... ஆங்கிலச் சொற்களால் தமிழைத் "தமிங்கலம்" (Taminglish) ஆக்குவது வேறு...

எடுத்துக்காட்டாக, "லாரி (Lorry) வாடகை எவ்வளவு ?" என்று கேட்பதற்கும், "லாரி (Lorry) ஃப்ரைட் (Freight) எவ்வளவு ?" என்று கேட்பதற்கும் வேறுபாடு உண்டு.

முன்னதைத் தமிழ் என்று ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், பின்னதை அப்படி ஏற்றுக்கொள்ள முடியாது. அது "தமிங்கலம்" (Taminglish).

இங்கே "லாரி" மட்டுமே கலைச் சொல்... "ஃப்ரைட்(Freight) " என்பது ஆங்கிலம்.

கலைச்சொல் என்பது அறிவியல் சார்ந்தது. அறிவியல் வளர்ச்சியோ இன்று பெரும்பாலும் மேலை நாடுகளை மையம் கொண்டது.

நவீன அறிவியலின் மீதான ஆளுமை கடந்த சில நூற்றாண்டுகளாகவே நம்மிடம் இல்லை.

எனவே, நவீன அறிவியலால் மனித இனம் இன்று பெற்றிருக்கும் எந்திரங்கள், கருவிகள், பயன்பாட்டுப் பொருட்கள் அனைத்திற்குமான கலைச் சொற்கள் பொதுவாக ஆங்கிலத்திலேயே வழங்கப்பட்டு வருவதுதான் இப்போது உலகமெங்கும் இருக்கும் நடைமுறை.

அந்த வகையில் அவற்றை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

கலைச்சொற்களைத் தமிழில் உருவாக்குகிறோம்... தமிழ்ப் படுத்துகிறோம் என்று இறங்கி, அதையும் சரியாகச் செய்யாமல் சிலர் மொழியைப் படுத்தியெடுப்பதைக் காண்கிறோமே... அதற்கு மூலச் சொல்லே, அது எந்த மொழியாயினும் மேன்மையானது.

சில கலைச்சொற்கள் அழகாகத் தமிழாக்கம் செய்யப்பட்டிருந்தாலும், பல கலைச் சொற்கள் தமிழாக்கத்தில் தடுமாறிக் கொண்டிருப்பதென்னவோ உண்மை.

உதாரணமாக, "கம்ப்யூட்டர்"(Computer)... முதலில் "கணிப்பொறி"யாகிப் பின்பு "கணினி" எனவும், "டெலிவிஸன்" (Television)... "தொலைக்காட்சி" எனவும், "டெலிஸ்கோப்" (Telescope)... "தொலைநோக்கி" எனவும் சரியான பதத்தில் தமிழாக்கமாகியிருப்பினும்... பல கலைச்சொற்களை நாம் உச்சரிப்பிற்கு இலகுவாகவோ, கருத்திற்குச் சரியானதாகவோ தமிழ் உருவாக்கம் செய்யவில்லை என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

இதற்கு உதாரணமாக, "ட்ரெயின்" (Train) என்பதையே எடுத்துக் கொள்ளலாம்...

அறிமுகமான புதிதில் அதன் நீராவி எந்திரத்தின் புகையை வைத்துப் "புகை வண்டி" என்றும், காலப்போக்கில் அத்தகைய எந்திரமெல்லாம் வழக்கொழிந்து இப்போது மின்சார எந்திரம் வந்தபிறகு "தொடர் வண்டி" என்றும் மாற்றி மாற்றித் தமிழாக்கத்தில் குழப்பத்தான் முடிந்ததே தவிர, இன்னும் சரியான சொல் அதற்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அதற்குப் பேசாமல் "ட்ரெயின்" (Train) என்றும், அதன் பாதையைக் கருத்தில் கொண்டு ஆங்கில வழக்கில் கூறும் "ரயில்" (Rail) என்றும் அப்படியே தமிழில் எடுத்துக்கொள்வது நன்று.

அதேபோல், "பஸ்" (Bus) என்பதற்குத் தமிழில் "பேருந்து" என்று நம்மால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டாலும், "பேருந்து" என்பதை "பஸ்" (Bus)-க்கு மட்டுமே பொருந்தும் பதமாக எடுத்துக்கொள்ள முடியாது.

"பேருந்து" என்பதன் காரணப் பெயர்ப்படி பார்த்தால் நாம் "லாரி" (Lorry) யையும் "பேருந்து" என்றுதான் கூறவேண்டியிருக்கும். மாறாக அதை "சரக்குந்து" என்று கூறினால் அது பொருள் பிறழ்ச்சி மட்டுமல்ல , வேடிக்கையான உச்சரிப்பும்கூட...

இப்படி அன்றாடம் நம்மோடு பழகிப்போன "பஸ்" (Bus), "லாரி" (Lorry) போன்றவற்றிற்குக் கூட இன்னும் சரியானபடி தமிழ்ச் சொற்களை உருவாக்கவில்லை என்கிற நிலைதான் இங்கே...

வேண்டுமானால் இவற்றிற்கு முறையே "பேரூர்தி"மற்றும் "சரக்கூர்தி" போன்ற சொல்லாக்கங்களைக்கூட ஓரளவு நெருக்கமானதாக ஏற்றுக்கொள்ளலாம்.

அப்படியானால், அந்த வரிசையில் அடுத்து வரும் "வேன்" (Van) மற்றும் "கார்" (Car) போன்றவற்றிற்கு என்ன சொல்வது...?

அதிலும், "கார்" (Car)-க்கு "சொகுசு ஊர்தி", "மகிழுந்து" என்றெல்லாம் எதை வைத்துத் தமிழாக்கம் செய்தார்களோ தெரியவில்லை... இயல்போடு ஒட்டாத சொல்.

இதுபோல ஏராளமான சொற்கள் தமிழாக்கத்தில் பொருள் தடுமாற்றத்துடன்தான் புழங்கிக்கொண்டிருக்கின்றன.

தமிழ்ச் சொற்கள் எப்போதுமே அதனதன் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு அமையும் தன்மை கொண்டிருப்பதால்,சில தருணங்களில் பிற மொழிச் சொற்களின் தமிழாக்கங்கள் நமக்கே ஒருவித பொருந்தா உணர்வை ஏற்படுத்துவது உண்மை.

ஒன்று... சரியாகத் தமிழாக்கம் செய்ய வேண்டும் அல்லது அதன் மூலச்சொல்லை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சில சொற்களை அப்படி ஏற்றுக்கொள்வது தமிழாக்கத்தை விடவும் நன்றாகவே இருக்கும். அதில் மாற்றுக் கருத்தே வேண்டியதில்லை.

அது முரண்பட்ட செயலும் கிடையாது.

"தமிங்கலம்" (Taminglish) மட்டுமே முரணானது. அது மட்டுமே இங்கே கவனத்திற்குரியது.

பல நூற்றாண்டுகளாகத் தமிழில் ஊடுருவிப் பேராதிக்கம் செலுத்த முனைந்த "வடமொழி" (சமஸ்கிருதம்) கூட இங்கே ஆங்கிலத்தைப் போல் சாதிக்கவில்லை.

பல தமிழ்ச் சொற்களை அது புழக்கத்திலிருந்து இடம்பெயர்த்தாலும், இன்று நாம் தமிழ்ச் சொற்கள் எனக் கருதிப் பேசும் பல சொற்கள் "வடமொழிச் சொற்களாகவே" அமைந்து விட்டாலும் காலப்போக்கில் தமிழின் பன்முகத் தன்மைக்கு ஈடுகொடுக்க முடியாமல் அது வழக்கொழிந்துதான் போனது. இறை வழிபாடு மற்றும் சடங்குகள் என்கின்ற அளவோடு குறுகித்தான் நின்றது.

வடக்கிலோ அது ஹிந்தி (Hindi), மராத்தி (Marathi) போன்று பல கிளை மொழிகளை ஈன்று விட்டு, நடைமுறையிலிருந்து மறைந்து ஏட்டளவில் சுருங்கி விட்டது.

ஆனால், மிகச் சில நூற்றாண்டுகளே பழக்கப்பட்ட "ஆங்கிலம்" அதை வெகு எளிதாகச் சாதித்திருக்கிறது என்றால், "தமிழர்கள் அவ்வளவு பலவீனமானவர்களா ?" என்கிற அதிர்ச்சியூட்டும் கேள்வியை நம்மால் தவிர்க்கவே முடியாது.

தமிழ் - ஒரு வரலாற்றுப் பயணம்
ஆங்கிலம் கலவாத தமிழ்ச் சூழலைக் காண வேண்டும். அப்படியோர் ஆசை எனக்குண்டு. அப்படியானால், அதற்குச் சில நூற்றாண்டுகள் பின்னோக்கிப் போகவேண்டும்.

எம்மொழிக் கலப்படமும் அற்ற முழுமையான தமிழ் பேசும் தமிழகத்தையும் காண வேண்டும்... அதற்கோ பல நூற்றாண்டுகள் பின்னோக்கி "வடமொழி" ஆதிக்கமெல்லாம் கடந்து செல்லவேண்டும்.

அது ஒரு பன்னெடுங்கால வரலாற்றுப் பயணம்...

இங்கேதான் ஒரு "கால எந்திரத்தின்" தேவையினை, அது கற்பனையாயினும் எண்ணி அவாவுகிறது மனம்.

இயல்பான தமிழ்ச் சூழலைக் காண்பதற்கெனவே, பல்வேறு நூற்றாண்டுகளுடே... பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து பயணிக்கத் துடிக்கிறது.

குமரி மற்றும் பஃருளியாற்றின் கரைகளில் தொடங்கி சிந்து வரை ஒரு தீராத பயணம்... பழந்தமிழகத்தின் எழில்மிகு காவிரி, வைகை, பொருணை தீரங்கள் வரை வாழ்ந்து திளைக்கும் வேகம்...

தென்மதுரை தொடங்கி, கபாடபுரம் கண்டு, சங்ககால மதுரை வரை முச்சங்கங்களிலும் ஒரு புலவனாகிடும் தாகம்...

வானியல் முதல் வாழ்வியல் வரை... பல்துறைகளிலும் வியத்தகு அறிவு படைத்த உலகின் அறிவியல் முன்னோடிகளாம் நம் தமிழ்ச் சான்றோரைக் காணும் ஏக்கம்...



விண்ணறிவிலும், மெய்யறிவிலும் உலகிற்கே ஆசான்களாகத் திகழ்ந்த நம் மெய்யறிஞர்களின் சீடனாகிடும் நோக்கம்...


"இயற்கை கொஞ்சும் சேர நாட்டில் சில காலம்... இயற்கையும் வியக்கும் சோழ நாட்டில் சில காலம்... தமிழும், வளமும் செழிக்கும் பாண்டிய நாட்டில் சில காலம்... 'தமிழரிலிருந்து வந்தவர்தானா ?' என்கிற விடை தெரியாத கேள்வி இருப்பினும், தமிழராகவே இங்கே தொண்டை மண்ணில் கோலோச்சி, பன்னெடுங்காலம் தமிழகத்தைக் கட்டியாண்டு, தங்களின் ஆட்சிக் காலத்தைக் கலைகளின் எழுச்சிக் காலமாக வரலாற்றில் பதித்த பல்லவரின் தேசத்தில் சில காலம்... கொடைத் திறம் ஓங்கி வளர்ந்த கடையெழு வள்ளல்களின் மண்ணில் சில காலம்..." என நீளும் அந்த நெடும் பயணத்திற்கு முடிவுதான் எது...?!



காலத்தின் எண்ணற்ற பக்கங்களில் உறைந்து கிடக்கும் தன்னிகரற்ற தமிழரின் வரலாறுகளை நோக்கிய பயணங்களில் மட்டுமே கண்டறிய முடியும், வெகு எளிதாக நாம் இன்று சிதைத்துப் போட்டுக்கொண்டிருக்கும் நம் தாய்மொழியின் மெய்ப் பிரவாகத்தை...!!!

அதற்குக் "கால எந்திரம்" என்பது வேண்டுமானால் வெறும் கற்பனையாக இருக்கலாம்... ஆனால், காலத்தின் கூற்றுகள் உண்மை.

அதை வெளிச்சமிட்டுக் காட்டுவதற்கென நம்மிடம் இப்போதிருப்பவை... அயலாராலும், நம் அலட்சியத்தாலும் அழிந்தது போக எஞ்சியிருக்கும் மிகச் சொற்ப வரலாற்று ஆவணங்களும், மிகச் சிறிய அளவில் செய்யப்பட்ட மொழி மற்றும் தொல்பொருள் ஆய்வுகளும் மட்டுமே...


அவற்றில் இன்றுவரை வெளிப்படையாக இருக்கும் சிந்து வெளி நாகரிகம் பற்றிய ஆய்வுக் குறிப்புகளே தமிழருக்கு அரியதொரு ஆதாரம்.

சிந்து வெளி ஆய்வுகள்... அதில் அடுத்தடுத்து வெளிவந்த பிரமிப்பூட்டும் உண்மைகள்...

அதுவரை தமிழர் வரலாறு குறித்து அயலார் பொய்யாகப் புனைந்திருந்த கூற்றுக்களெல்லாம் சிதறிப் போயின. உலகின் அத்தனை வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் மொழியியல் வல்லுநர்களின் பார்வைகளும் தமிழரை நோக்கித் திரும்பின. தமிழரின் வரலாறு திருத்தப்பட்டது.


ஆனால்,அந்தத் திருத்தங்கள் "சிந்து வெளியின் தொடக்கம் என்கிற எல்லையோடு முடிந்துவிடாது" என்று கூறி, அதையும் கடந்து காலவெளியில் இன்னும் போகவேண்டிய தூரத்தை வலியுறுத்தும், அவ்வப்போது அங்கங்கே வெளிப்படும் சான்றுகள்தான் ஆய்வாளர்களை மேலும் திகைத்திட வைக்கும் உண்மை.

இங்கே சிந்து வெளியின் காலமே உலகில் தமிழரின் ஒப்புயர்வற்ற தொன்மையைக் கூறப் போதுமானாலும், இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்கின்றன, இன்றைய தமிழகத்திற்குத் தெற்கே கடலடியில் மறைந்திருக்கும் உலகின் ஆதிகாலம் தொட்டுவரும் தமிழரின் தொன்மை கூறும் படிவங்கள்.

தமிழகத்தின் ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு போன்ற இடங்களின் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள் படிவங்களே அதற்கான ஆதாரத் துளிகள்... தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டிய கடலாய்வின் அவசியத்தை வலியுறுத்தும் காரணிகள்.


"தமிழர் வரலாற்றின் தொடர்ச்சியில், காலத்தின் நீட்சியில் ஆங்காங்கு ஒரு சில புள்ளிகளிலிருந்தே பிரிந்து தொடங்குகிறது உலகில் பிற மாந்தரின் நாகரிகங்கள்" என்கிற ஆணித்தரமான வாதங்களுக்கு இப்போதுள்ள மொழியியல் ஆய்வுக்குறிப்புகளே போதிய சான்றுகளாக இருப்பினும், அணுவளவும் மறுமொழி எழாத அளவிற்கான தீர்க்கமான ஆதாரங்கள் மண்ணுக்குள்ளும், கடலுக்குள்ளும் உறங்கிக்கொண்டிருக்கின்றன என்பது தமிழறிஞர்களின் கூற்று மட்டுமல்ல, உலகில் நடுநிலையான அனைத்து மொழியியல் வல்லுநர்களின் கூற்றும் கூட.

இது குறித்துச் சில பல விவாதங்களும், மறுதலிப்புகளும் எழலாம்... ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்ட கருத்துகளில் பல்வேறு முரண்பாடுகள் தோன்றலாம்.

இருப்பினும், இவையனைத்திலும் ஊடுருவி நாம் காணக்கூடிய பொதுவான இழையோட்டம் மட்டும் ஒன்றே ஒன்றுதான்... "தமிழின் தொன்மை, எந்தவிதத்திலும் மறுக்க முடியாதது".

ஆனால், இத்தகைய தன்னிகரற்ற வரலாறும், சிறப்பும் "ஏதோ ஒரு தேசத்தில் , யாரோ சில மனிதர்களைப் பற்றியது" என்கிற அளவில்தான் கடந்து போகின்றன அத்தகைய வரலாற்றை நிகரற்ற பெருமையாகக் கொண்ட, பெரும்பாலான தமிழ் மக்களின் சிந்தனையும், போக்கும்...

வரலாற்று அறிவு
வரலாற்றில் ஆரியர் தொடங்கி ஆங்கிலேயர் ஆதிக்கம் வரை அந்நியர் பலரிடம் அடிமைப்பட்ட இந்த இனம் தன் வரலாற்றை இழந்ததன் பலன், இன்று மொழியையே தொலைத்துக் கொண்டிருப்பது வரலாற்றுச் சோகங்களில் ஒன்று என்று சொன்னால் அது மிகையாகாது.

அந்நியரிடமிருந்து மீண்ட பின்பும், வரலாற்றை மீட்டெடுக்க முயலாததின் பலன், வரலாற்றைச் சரியான முறையில் கல்வியில் கொண்டு செல்லாததன் பலன், இன்று அது தன் தாய்மொழியையே இழித்தும், பழித்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

ஒரு இனம் தன் தாய்மொழியை மதிப்பதற்கு நெடிய வரலாறோ, வரலாற்றுப் பெருமைகளோ வேண்டும் என்பது கூட அவசியமில்லை. "தாய் மொழி" உணர்வும், அறிவும் மட்டுமே அவசியம்.

உலகில் அப்படி எந்த வரலாற்றுப் பெருமைகளும் இல்லாத மொழியினர் கூடத் தங்கள் தாய்மொழியைப் புறந்தள்ளியதில்லை.

ஆனால், எந்த ஒரு மொழிக்கும் இல்லாத ஒப்பற்ற வரலாற்றையும், தொன்மையையும், பெருமையையும் தம் தாய்மொழியான "தமிழ்" பெற்றிருந்தும்... தமிழருக்கு அதன் மேல் எந்தவித மரியாதையும், உணர்வும் இல்லை என்பதுதான் வேதனை.

வரலாறு என்பது கடந்தகாலத்தைக் குறித்த வெறும் செய்தித் தொகுப்பு அல்ல. அது நடப்புச் சமூகத்தின் வாழ்வியலுக்கான பாடம்.பல்வேறு தலைமுறைகளுக்கிடையே பண்பாடு மற்றும் நெறிமுறைகளைக் கடத்த உதவும் பாலம்.

பண்டைய தமிழகத்தின் வரலாறு அதைத்தான் செய்கிறது. அதன் நெடுகிலுமான பதிவுகளும் அதைத்தான் மையமாகக் குறிப்பிடுகின்றன. ஆனால், அதிலிருந்து பாடம் படிக்கத்தான் நமக்கு விருப்பமில்லை.

அதேசமயம், இன்றைய தமிழினத்தைக் குறித்து நாளைய தலைமுறைகள் படிக்கப் போகும் வரலாற்றிலோ, கற்றுக்கொள்வதற்கு அது போன்ற பாடங்களே இருக்கப் போவதில்லை.

ஒரு சமூகம் அறுத்தெறிய வேண்டிய வாழ்க்கைமுறைகளை வேண்டுமானால் எதிர்காலச் சந்ததியினர், இன்றைய நமது வரலாற்றில் கண்டறிய முற்படலாம்.

தமிழ் வரலாற்றின் ஒளிமயமான பக்கங்கள் பண்டைய தமிழரால் உருவானது. அதன் இருண்ட பக்கங்கள் அந்நியரால் ஏற்பட்டது. ஆனால், அவற்றையடுத்த இழிவான பக்கங்கள் இன்றைய தமிழரால் எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது.

"தமிழின்" வரலாற்றுப் பெருமைகள் என்று கூறி இங்கே நாம் மொழி ஆணவத்தை வலியுறுத்த வரவில்லை. மொழி வெறியைத் தூண்ட வரவில்லை. மற்ற மொழிகளைத் துச்சமெனக் கருதும் எண்ணங்களை விதைக்க வரவில்லை.

தொலைந்து கொண்டிருக்கும் ஒரு இனத்திற்கு அதன் மெய் முகம் காட்டும் ஊடகமாக மட்டுமே நின்று அதன் கடந்தகால வரலாற்றை நாம் இங்கே குறிப்பிட்டுக் காட்டுகிறோம்... அவ்வளவே.

உலகின் அனைத்து மொழிகளுக்கும் அவையவைகளுக்கேயுண்டான அழகும், செழிப்பும் நிச்சயமாக உண்டு. அவற்றை நாம் ஒதுக்கலாகாது.

ஆங்கிலத்தையே எடுத்துக் கொண்டால் ஒரு மொழி என்கிற அளவில் அதற்குண்டான மரியாதையையும், அதன் அழகையும் எவரும் புறந்தள்ளிவிட முடியாது.

தாய்மொழியோடு பிற மொழிகளையும் கற்றல் என்கிற அளவில் ஆங்கில மொழியறிவும் சரி... பிற மொழியறிவும் சரி... வெகு நிச்சயமாக போற்றுதலுக்கும், மதிப்பிற்கும் உரியது.

ஆனால், எந்த மொழியறிவையும் ஒருவர் தன் தாய்மொழியை மிதித்துப் பெறுவதில் அந்தப் போற்றுதலுக்கு இடமில்லை.

அப்படியொரு எண்ணம் இருக்குமானால் அது அவரவரின் அறிவீனத்தின் வெளிப்பாடாக மட்டுமே இருக்கும். அது தனியொருவரின் பிழைப்புக்கும், பகட்டுக்கும் வேண்டுமானால் பயன்படலாம்... வாழ்க்கைக்குப் பயன்படாது.

அது அவர்களின் தாய்மொழியை மட்டுமல்ல... வாழ்க்கைத் தடங்களையே அழிக்கக்கூடியது.

அதைத்தான் இப்போது தமிழினம் செய்துகொண்டுள்ளது.

ஆனால், அதிலும் ஒரு முரண்பாடு... 'தமிழினம் கொள்ளும் பெருமை பன்மொழியறிவில் அல்ல, ஆங்கிலத்தில் மட்டுமே' என்பதுதான்.

ஒருவர் எத்தனை மொழிகளைக் கற்று வைத்திருந்தாலும் அவற்றில் ஆங்கிலம் இல்லையென்றால் அவரது பன்மொழித் திறனெல்லாம் தமிழரிடத்தில் பெருமைக்கு உதவாது.

ஆங்கிலம் இருந்தால் மட்டுமே எத்தகைய பன்மொழித் திறனும் இங்கே அங்கீகரிக்கப்படும்.

தமிழரில் ஒருவர் இங்கே தவறான தமிழில் உரையாடலாம், அதில் பிழையில்லை. பிற மொழிகள் பயன்படுத்தும்போதும் அவற்றில் தவறு செய்யலாம், அதில் குற்றமில்லை.

ஆனால், ஆங்கிலத்தில் மட்டும் தவறு செய்யக்கூடாது. அப்படி மட்டும் செய்துவிட்டால் தமிழரின் பார்வையில் அவர் ஓர் "பாமரன்".

இன்னும் சொல்லப்போனால், ஆங்கிலம் என்பது ஒரு "மொழி" என்பதே நம்மில் பலருக்குத் தெரியாத அளவிற்கு அதன் மோகம் கண்களை மறைத்திருக்கிறது.

முன்பே சொன்னது போல், ஆங்கிலம் என்பது "அறிவு"... அதுதான் "உலகம்"... அதுதான் "உயர்வு"... அதை நோக்கித்தான் "வாழ்க்கை"... மொத்தத்தில் அவர்களின் மனக்கட்டமைப்பு இப்படியாகவே அமைந்துவிட்டது.

"வெறும் மொழிக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் ஏன்...?" என்று தாய்மொழி உணர்வு குறித்துப் பரிகசிக்கும் இவர்களுக்குச் சில உண்மைகள் உறைப்பதில்லை.

அது ஒரு இனத்தின் வாழ்வியல் மற்றும் உலகியலின் உயிர்நாடி... தனியொரு மனிதன் மற்றும் சமூகத்தின் பண்பாட்டுத் தளம்...

அந்த வகையில் நமக்குத் "தமிழ்"... ஒவ்வொரு இனத்தவருக்கும் அவரவர் "தாய்மொழி"...

இது எந்தவகையிலும் மாறுபாடற்றது.

உடை முதல் நடை வரை ஒரு இனம் தன் பண்பாடுகளைத் தொலைத்தால்கூட அது தற்காலிக மயக்கம்தான்... காலப்போக்கில் அவர்தம் தாய்மொழி அந்த மயக்கங்களை உள்ளத்தளவிலேனும் நீர்த்துப் போகச் செய்யும்.

ஆனால், தாய்மொழியையே தொலைத்துவிட்டால்...?

அந்த இனத்தின் வாழ்க்கையே நீர்த்துப் போகும்.

ஆனால், சுயத்தைத் தொலைத்துவிட்டு அடிமைகளாக ஆங்கிலம் துதிக்கும் பலருக்கு "அதுவும் வெறும் மொழிதான்... தனக்கென்று சுய அடையாளம் கூட இல்லாத மொழி... அதுவும் அந்நிய மொழி... அது குறித்துத் தனக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் ஏன்...? அதற்கு இங்கு கட்டுமானம் ஏன்...? பொய்யான பெருமிதம் ஏன்...? " என்கிற சிந்தனைகள் எழாததுதான் வியப்பு.

தமிழுக்குத் திதி
பல காலம், பல மொழி ஆதிக்கத்தைக் கடந்து வந்த இந்த இனம், இறுதியில் "ஆங்கிலம்" எனும் மொழியிடம் அனைத்து வகைகளிலும் தன்னையிழந்து கொண்டிருக்கிறது.

தமிழுக்கும், தமிழருக்குமான உறவுகள் மெல்ல மெல்ல அறுந்து கொண்டிருக்கின்றன. வாழ்க்கை சிதைந்து கொண்டிருக்கிறது.

எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் மக்கள் தமிழுக்கு அதிகபட்சமாகக் கொடுக்கும் மரியாதை என்பதே, விழா மேடைகளில் நிகழ்ச்சிகளின் துவக்கத்திற்குமுன் இசைக்கப்படும் "தமிழ்த்தாய் வாழ்த்து" மட்டும்தான். சில நிகழ்ச்சிகளில் அதுவும் இல்லை... தொடக்கம், முடிவு இரண்டிலுமே "தேசிய கீதம்"தான்.

எப்போதாவது இன்னும் சற்று மேலே போய், "தமிழ் வளர்ப்போம்" என்று முழங்கிக்கொண்டு, 'உலகத் தமிழ் மாநாடு', 'செம்மொழி மாநாடு' என்ற பெயர்களில் சிலர் நான்கைந்து நாட்கள் கூடி இறுமாந்து, உணர்ச்சிவயப்படுவதுண்டு என்றாலும் கடைசியில் அதன் பலனும் வெறும் விளம்பர அரசியல் கோலாகலம்தான்.

பலர் அதை ஏதோ வேடிக்கை பார்த்துவிட்டு "அடடா... என்ன அருமையான ஏற்பாடு... பிரம்மாண்டம்... என்ன கூட்டம்... அசத்திட்டாங்கப்பா...!" என்று இரண்டொரு நாட்கள் வியந்து பின் மறந்துவிட...

இன்னும் ஏராளமானோர் அந்த மாநாட்டு விடுமுறையில் ஆயாசமாகத் தொலைக்காட்சியிலும், செய்தித்தாள்களிலும் செய்திகளை மேய்ந்தவாறே "நாட்டுல இருக்கிற ஆயிரம் பிரச்னையில இந்த மாநாடெல்லாம் ரொம்பத் தேவையா...? சும்மாத் 'தமிளு தமிளு'ன்னு சொல்லிட்டிருந்தா... 'தமிள்' சாப்பாடு போட்டுருமாய்யா...? 'தமிளை' வெச்சிக்கிட்டு எவனாவது உருப்படமுடியுமாய்யா...?" என்று சிறிது நேரம் "தமிழை"த் "தமிளால்" காய்ச்சி எடுத்துவிட்டு, சிறிது நேரம் ஆங்கிலத்தைப் போற்றிப் பாடிவிட்டுப் பின் கடமையே கண்ணாக "நாட்டில் இருக்கும் ஆயிரம் பிரச்னைகளையும் தீர்ப்பதற்கான தீர்க்கமான வழிகளைத்" திரைப்படங்கள், தொடர்கள், கிரிக்கெட், தூக்கம் போன்றவற்றில் ஆழ்ந்து தீவிரமாகத் தேடத் தொடங்க...

ஏதோ தமிழின்மீது ஆர்வம் கொண்ட தமிழறிஞர் சிலர் மட்டும் மாநாட்டில் அங்கங்கே ஆளில்லா அரங்கங்களில் தமிழாய்வு செய்துவிட்டு, முடிவில் "சரி விடு... மீதியை அடுத்த மாநாட்டில் பார்த்துக்கொள்ளலாம்" என்று வெளிக்காட்டாத விரக்தியுடன் தங்களைச் சமரசம் செய்து கொண்டு அவரவர் ஊர் திரும்ப...

மொத்தமாகக் கூட்டிக் கழித்துப் பார்த்தால், அங்கு நடந்து முடிவது என்னவோ "தமிழுக்குத் திதி" கொடுக்கும் நிகழ்ச்சிதான்.

தமிழ் - இனி ...?
"ஒரு இனம் தாய்மொழியையே அழித்துவிட்டுத் தன்னை இன்னொரு இனமாகப் பரிணமித்துக் கொண்டது. உலகில் இதைச் சாதித்துக் காட்டிய அந்த முதல் மற்றும் ஒரே இனத்தவருடைய தாய்மொழியின் பெயர்... 'தமிழ்'...!" - நாளைய உலகம் படிப்பதற்கு இப்படியொரு விந்தையான வரலாறுதான் இன்று நம்மால் உருவாகிக்கொண்டு வருகிறது.

பல்லாயிரங்கால நெடுந்தூரப் பயணத்தையும், கட்டமைப்புகளையும் சிதறடித்த வெறும் நானூறு ஆண்டுகால அடிமைத்தனத்தில் விளைந்த நம் அடிமை மோகத்தின் வலிமை அத்தகையது.

இனி அத்தகைய கட்டமைப்புகளை மீட்டுக் கொண்டுவருவது எதிர்கால வரலாற்றிடம் மட்டுமே வைத்தாக வேண்டிய விடை தெரியாத எதிர்பார்ப்பு என்றாலும், நமக்கும் அதற்குமான தொடர்புகள் என்னவோ இன்று அற்றுப்போன நிலையில்...

அதற்கான நம்பிக்கை விதைகள் வெகு நிச்சயமாக நம்மிடம் இல்லை... இப்போதைக்கு இல்லை... கண்ணுக்கெட்டும் தூரம் வரையிலுமில்லை. ஒருவேளை அப்படியொரு மறுமலர்ச்சி எதிர்காலத்தின் ஏதோ ஒரு புள்ளியில் ஏற்படுமானால், அதைக் கண்டு லயித்து மகிழ அப்போது நாம் இருக்கப்போவதுமில்லை.

அது நிகழுமோ, நிகழாதோ தெரியாது. ஆனால், நாளை அந்தக் காலம் வரையிலோ அல்லது இனிமேல் எப்போதுமோ... வெட்கமேயில்லாமல் கொடுமையான ஒரு புது அத்தியாயத்தைத் தமிழினம் படைத்துக் கொண்டேயிருக்கும்.

அந்த அத்தியாயம் உலகிற்கு உரக்கச் சொல்லப்போகும் கூற்று மட்டும் ஒன்றே ஒன்றுதான். அது...

"ஆங்கிலம் - தமிழரின் தாய்மொழி...!!!"

Saturday, 22 August 2015

ஓக கலை

ஓக இருக்கைகளின் தமிழ்ப் பெயர்களுக்கு இணையான
பிற மொழிப் பெயர்கள் பட்டியல்
இயற்கை - NATURE
தமிழ்ப் பெயர்கள் , வடமொழிப் பெயர்கள், ஆங்கிலப் பெயர்கள்
1. ஞாயிறு வணக்கம் - சூரிய நமசுகாரம் - SALUTE TO THE SUN
2. ஒற்றைக்கால் ஞாயிறு வணக்கம்- ஏகபாத சூரிய நமசுகாரம் - SALUTE THE SUN ON ONE LEG
3. அரை நிலாவிருக்கை - அர்த்த சந்திராசனம் - CRESCENT POSTURE
4. மலையிருக்கை - மேரு ஆசனம் - MOUNTAIN POSTURE
5. மலை நிமிர்வு இருக்கை - தாடாசனம் - MOUNTAIN ERECT POSTURE
நிலைத்திணை / பயிர் உயிரிகள் - PLANTS
6. தாமரை இருக்கை - பத்மாசனம் - LOTUS POSTURE
7. எழும்பு தாமரை இருக்கை - உத்தித பத்மாசனம் - RAISED LOTUS POSTURE
8. பூட்டிய தாமரை இருக்கை - பத்த பத்மாசனம் - LOCKED LOTUS POSTURE
9. நாணல் முதுகு இருக்கை - பச்சிமோத்தாசனம் - BACK ERECTING POSTURE
10. மரவிருக்கை - டோலாசனம் - TREE POSTURE
11. மூங்கில் வளைவு இருக்கை, கை கால் இணைவிருக்கை / - பாத அசுதாசனம் - HAND AND FOOT POSTURE
விலங்கு - CREATURES
நீர் உயிரிகள் - AQUATICS
12. தவளை இருக்கை - பெக்காசனம் - FROG POSTURE
13. மீன் இருக்கை - மச்சாசனம் - FISH POSTURE
14. சுறவம் இருக்கை - மகராசனம் - SHARK POSTURE
15. முதலை இருக்கை - மக்கராசனம் - CROCADILE POSTURE
16. சங்கு இருக்கை /
உடல் முறுக்கும் இருக்கை - வக்ராசனம் - SEA SHELL POSTURE
17. ஆமை இருக்கை - கூர்மாசனம் - TORTOISE POSTURE 18. கை நீட்டிய ஆமை இருக்கை விக்சேபம் கூர்மாசனம் - HAND STRETCHED TORTOISE POSTURE
ஊர்வன - REPTILES
19. தேள் இருக்கை - விருச்சிக ஆசனம் - SCORPION POSTURE
20. பாம்பு இருக்கை - புசங்காசனம் - SERPENT POSTURE
நடப்பன - VERTEBRATE
21. ஆமுகவாய் இருக்கை - கோமுகாசனம் - COW FACE POSTURE
22. ஆவினிருக்கை - கோவாசனம் - COW POSTURE
23. பூனை இருக்கை - பில்லியாசனம் - CAT POSTURE
24. ஒட்டகவிருக்கை - உசர்ட்டாசனம் - CAMEL POSTURE
25. நாய்முக இருக்கை - அதோமுக சுனங்கனாசனம்- DOG FACE POSTURE
26. புலி இருக்கை - வியாகராசனம் - TIGER POSTURE
27. அரிமா இருக்கை - சிம்மாசனம் - LION POSTURE
28. மிடுக்கான குதிரை இருக்கை - கம்பீர அசுவினி தீரனாசனம்- BRA
29. முயல் இருக்கை - சசாங்காசனம் - RABBIT POSTURE
30. நரி இருக்கை - மார்சரி ஆசனம் - FOX POSTURE
பறப்பன - AVES & INSECTS
31. வெட்டுக்கிளி இருக்கை - சலபாசனம் - GRASSHOPPER (LOCUST) POSTURE
32. அரை வெட்டுக்கிளி இருக்கை - அர்த்தசலபாசனம் - SEMI GRASSHOPPER POSTURE
33. மயிலிருக்கை - மயூராசனம் - PEACOCK POSTURE
34. புறாவிருக்கை - கப்போட்டாசனம் - DOVE POSTURE
35. பறக்கும் புறாவிருக்கை - உடுத்தாஉவா கப்போர்ட்டா- FLYNG DOVE POSTURE
36. கொக்குவிருக்கை - பக்காசனம் - CRANE POSTURE
37. ஒற்றைக்கால் கொக்குவிருக்கை - ஏகபாத பக்காசனம் - SINGLE FOOTED CRANE POSTURE
38. கலுழன் இருக்கை - கருடாசனம் - EAGLE POSTURE
39. சேவல் இருக்கை - குக்குடாசனம் - COCK POSTURE
40. நிற்கும் மயிலிருக்கை - கடுடா மயூராசனம் - STANDING PEACOCK POSTURE
41. வாத்து இருக்கை - அம்சாசனம் - DUCK POSTURE
நடனம் - DANCE
42. நடன இருக்கை - நடனாசனம் - POSTURE OF NATARASA
43. களிக்கூத்து - ஆனந்த தாண்டவம் - PLEASURE DANCE POSTURE
44. கூத்தரசன் இருக்கை - நடராச ஆசனம் - KING OF DANCE POSTURE
45. வீர அடைவு இருக்கை - வீர அனுமான் ஆசனம் - BRAVE STEP POSTURE
1முத்திரை - GESTURE
46. ஓக முத்திரை - யோகமுத்ரா - OGAM GESTURE
47. பெரு முத்திரை - மகாமுத்ரா - GREAT GESTURE
48. படையல் முத்திரை - அஞ்சலி முத்ரா - HOMAGE GESTURE
49. குதிரை மலவாய் முத்திரை - அசுவினி முத்ரா - HORSE’S ANAL GESTURE
50. ஆறுமுக முத்திரை - சண்முக முத்ரா - HEXAGON GESTURE
கருவிகள் - TOOLS
51. நாற்காலி இருக்கை - உட்கட்டாசனம் - CHAIR POSTURE
52. அரசரிருக்கை - பூரண உட்கட்டாசனம் - THRONE POSTURE
53. சக்கரவிருக்கை - சக்ராசனம் - WHEEL POSTURE
54. அரைசக்கரவிருக்கை - அர்த்தகடி சக்கராசனம் - SEMI WHEEL POSTURE
55. வில்லிருக்கை - தனுராசனம் - BOW POSTURE
56. காதருகுவில்லிருக்கை - ஆகர்ண தனுராசனம் - EXTENDED BOW POSTURE
57. படகிருக்கை / நாவாய் இருக்கை - நவாசனம் - BOAT POSTURE
58. முக்கோணவிருக்கை - திரிகோனாசனம் - TRIANGLE POSTURE
59. பரிமாற்ற முக்கோணவிருக்கை - பரிவர்த்த திரிகோனாசனம்- TRANSFER TRIANGLE POSTURE
60. கலப்பை / ஏர் / உழவிருக்கை - அலாசனம் - PLOUGH POSTURE
தொழில் - ACTIVITIES
61. வழிபாட்டிருக்கை - சசாங்காசனம் - WORSHIP POSTURE
62. வீரவிருக்கை - வீராசனம் - BRAVE POSTURE
63. நெற்றிக்கண் வழியன் இருக்கை - வீரபத்ராசனம் - GLABELLA VIEW POSTURE
64. அம்மி அரைக்கும் இருக்கை - உபவிசுட்டகோணாசனம் - GRINDING POSTURE
65. காலணிதையலிருக்கை - பத்ராசனம் - SHOEMAKER POSTURE
66. தேரோட்டி இருக்கை - சாரதாசனம் - CHARIOT RIDER POSTURE
67. தலை முழங்கால் இருக்கை, பூத்தொடுக்கும் இருக்கை / - சானுசீராசனம் - HORIZONTAL U POSTURE , MAKING GARLAND POSTURE.
உடல் உறுப்புகள் - ORGANS OF HUMAN BODY
68. இணை காலடி இருக்கை - சமபாதாசனம் - PARRALLEL FOOT POSTURE
69. ஒரு காலூன்றி இருக்கை - நின்ற பாதாசனம் - SINGLE LEG POSTURE
70. கோண இருக்கை - கோணாசனம் - ANGLED POSTURE
71. விலாப்பக்க கோண இருக்கை - பார்சுவ கோணாசனம் - RIBSIDE ANGLED POSTURE
72. மண்டிவல்லிருக்கை - வச்சிராசனம் - FIRM KNEELING POSTURE
73. மழலை இருக்கை - பாலாசனம் - CHILD POSTURE
74. கிடைநிலை வல்லிருக்கை - சுப்த வச்சிராசனம் - SUPINE ANKLE POSTURE
75. குந்தி கைகூப்பு இருக்கை - உட்கட்டாசனம் - PERCH AND SALUTE WITH STRETCHED ARMS ABOVE HEAD
76. கை கூப்புகை தாமரை இருக்கை- பர்வட்டாசனம் - OVERHEAD RAISING OF ARMS AT LOTUS POSTURE
77. மாற்று அமர் இருக்கை - அர்த்தமத்ச்யேந்தராசனம் - CONTRA SITTING POSTURE
78. பூட்டிய கோணவிருக்கை - பத்தகோணாசனம் - LOCKED ANGLE POSTURE
79. நீள்காலடி இருக்கை - உத்தான பாதாசனம் - RAISED FOOT ERECT
80. ஓகத்துயில் - யோக நித்ரா - OGAM SLEEP
81. அரை உடல் இருக்கை - விபரீதகரணி - HIP STAND POSTURE
82. முழு உடல் இருக்கை - சர்வாங்காசனம் - SHOULDER STAND
83. பாதி முழு உடல் இருக்கை - பர்வதாசனம் - SEMI SHOULDER STAND
84. மேடை இருக்கை - பீடாசனம் - STAGE POSTURE
85. பகுதலை இருக்கை - அர்த்த சிரசாசனம் - SEMI INVERTTED
86. தலை இருக்கை - சிரசாசனம் - INVERTTED POSTURE
தூய்மை - CLEANSING
87. வளிகழித்தலிருக்கை - பவன முக்தாசனம் - WIND RELEASING TECHNIQUE
88. வளி எழுப்பிக்கட்டுவிருக்கை - உட்டியானபந்தம் - FLYUP LOCK
89. குடல் சுழற்றியிருக்கை - நௌலி - BOWEL CIRCULATING POSTURE
90. மூச்சொழுக்கம் - பிராணாயாமம் - ORDER OF BREATH
91. தலை தூய்மை - கபாலபாதி - CLEANSING OF BRAIN
92. துருத்தி மூச்சு - பசுதிரிகா - BELLOW BREATH
93. சீழ்க்கை - சீத்காரி - WHISTLING
94. நீர்த் தூய்மை - சலநேதி - WATER CLEANSING
95. குளிர் சீழ்க்கை - சீத்தளி - COOL WHISTLE
96. மூலக்கட்டு - மூலபந்தம் - ANAL CONTRACTION
97. நாடித் தூய்மை - நாடி சுத்தி - CLEANSING OF PULSE
98. தேனீ ஒலி - பிராமரி - HONEY BEE HISSING
99. கண் தூய்மை - திராடகா - EYE CLEANSING
100. பல்லிடுக்கில் காற்றுறிஞ்சல் - சதந்தா - INHALING THROUGH CLEANCHED TEETH
101. உள் மூச்சு - அனுலோமம் - INHALING
102. வெளி மூச்சு - விலோமம் - EXHALING
103. தொண்டை ஒலி - உச்சயி - HISSING OF PHARYNX
நிறைவு நிலை - PACIFICATION
104. இயல்பிருக்கை - சுகாசனம் - AT EASE POSTURE
105.. அமைதி இருக்கை - சவாசனம், - LYING RELAX POSTURE

Sunday, 22 March 2015

இது தமிழர்

முதல் இரண்டு தமிழ்ச்சங்கங்களில் உருவான பல அரிய தமிழ்க்கலை நூல்களை தின்றழித்த தாமிரபரணியின் கரையில்தான் இந்த தமிழ்ப்புரட்சியும் நடந்து வருகிறது. காடாகக் கிடந்த 120 ஏக்கர் பரப்பை செதுக்கிச் செப்பனிட்டு, ‘தமிழூர்’ என்ற ஒரு கிராமத்தையே நிர்மாணித்திருக்கிறார் ச.வே.சு என்று அன்பாக அழைக்கப்படும் தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியன். தமிழின் தொன்மத்தை நிறுவும் பல்வேறு ஆராய்ச்சிகள் தமிழூரில் நடந்து வருகின்றன. 25 ஆயிரம் அரிய நூல்களைக் கொண்ட மூன்று நூலகங்கள் எந்நேரமும் ஆய்வு மாணவர்களால் நிரம்பி வழிகின்றன.
முழங்காலுக்கு மேலான வேட்டிக்கட்டு, தோளில் ஒரு துண்டு... டீக்கடை பெஞ்சில் அமர்ந்திருக்கும் ஏதுமறியாத கிராமத்துப் பெரியவரைப் போல காட்சியளிக்கிறார் ச.வே.சு. ‘தமிழ்ப்பழம்’ என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். வீரகேரளம்புதூரைச் சேர்ந்த இவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பும், கேரள பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் பணி செய்ய ஆரம்பித்து, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் முதல் இயக்குனராக உயர்ந்தவர். ‘‘ச.வே.சு சிலப்பதிகாரம் நடத்தினால் வகுப்பறை முழுவதும் தமிழும் இசையும் ததும்பி நிற்கும்’’ என்கிறார்கள் அவரது மாணவர்கள்.

ஓய்வுக்குப் பிறகு, தம் சொந்த ஊருக்கு அருகிலேயே தமிழூரை நிர்மாணித்து, சங்க இலக்கிய ஆய்வுகள், இலக்கிய உரைகள் என எந்நேரமும் தமிழும், இலக்கியமுமாகவே வாழ்கிறார். 84 வயதான இவரது பணியை மெச்சி, சாகித்ய அகாடமியின் பாஷா சன்மான் உள்பட ஏராளமான விருதுகள் கிடைத்துள்ளன.

‘‘இது எனது நெடுநாள் கனவு. உலகில் வேறெந்த சமூகத்துக்கும் தம் மொழியின் பால் இவ்வளவு அலட்சியம் இல்லை. தமிழ் பிழைப்புக்குரிய முதலீடாக இங்கே மாறிவிட்டது. தமிழாசிரியர்கள் கூட தங்கள் பிள்ளைகளை தமிழ் படிக்க வைக்க தயங்குகிறார்கள். சங்க இலக்கியங்கள்தான் நம் மொழியின் செழுமைக்கும், தொன்மைக்கும் சான்று. அதை சர்வதேச தளத்தில் நிறுவுவதற்கான ஆய்வுகள், ஏற்பாடுகள் மிகவும் குறைவாகவே நடக்கின்றன. நிறைய வரலாறு பதிவு செய்யப்படாமல் கிடக்கிறது’’ என்று வருந்துகிற ச.வே.சு, இதுவரை 170 நூல்களை எழுதியிருக்கிறார்.

ஆலங்குளத்துக்கும் தென்காசிக்கும் இடையில், பூலாங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கிறது தமிழூர். அரசுப்பதிவேடுகளும் இப்பெயரை அங்கீகரித்துள்ளன. ச.வே.சு இங்கு வரும்முன்பு, அத்தியூத்து கிராமத்தின் ஒரு அங்கமாக இப்பகுதி இருந்தது. 1985ல் இந்த இடத்தை வாங்கிய ச.வே.சு, இதை ஒரு கல்வி கிராமமாக மாற்றும் எண்ணத்தில் 35 ஏக்கர் நிலத்தை ஒரு பொறியியல் கல்லூரிக்குக் கொடுத்தார். அருகில் ஒரு வேளாண்மைக் கல்லூரியையும் தொடங்கினார். தென்னந்தோப்பு, மாந்தோப்புகளை உருவாக்கினார். உலகத்தமிழ் கல்வி இயக்கம் என்ற அமைப்பு தொடங்கி, சர்வதேச அளவில் தமிழ் பற்றி ஆய்வுசெய்யும் மாணவர்களை ஒருங்கிணைத்தார். குடியிருப்புகளையும் உருவாக்கினார். தற்போது வேளாண் கல்லூரி செயல்படவில்லை. குடியிருப்புகளில் ஆய்வு மாணவர்கள் தங்கியிருக்கிறார்கள். ஊரின் நடுவில் தனக்கென ஒரு வீட்டையும் கட்டியிருக்கிறார். வீட்டின் பெயர் தமிழகம்.


‘‘தமிழ்ல இருக்கிற பழமையான இலக்கியங்களை வெளிக்கொண்டு வரவேண்டிய கடமை என்னைப் போன்றவங்களுக்கு இருக்கு. இலக்கியங்கள்தான் நமக்கு சொத்து. ஆனால், மொழி மேம்பாட்டுக்கான ஆதரவும் இங்கே குறைவா இருக்கு. அந்தக்காலத்தில் தமிழ்ப்பணிக்காக பெரும் செல்வங்களைக்கூட இழந்தவர்கள் இருந்தார்கள். எங்கள் வீரகேரளம்புதூரை உள்ளடக்கிய ஊத்துமலை ஜமீன் இருதாலய மருதப்பர், 37 கவிஞர்களைக் கொண்டு ஊத்துமலை பிரபந்த திரட்டு ஒன்றை உருவாக்கினார். அந்தத் திரட்டின் ஒரு பிரதியை பொக்கிஷம் போல பாதுகாத்து வைத்திருக்கிறேன். காவடிச்சிந்து இயற்றிய சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் போன்ற பலரை அரவணைத்துப் பாதுகாத்தார் மருதப்பர். நெல்லைக்கு வந்த உ.வே.சாமி நாதய்யருக்கு ஒரு மாட்டுவண்டி நிறைய ஓலைச்சுவடிகளை தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்தார். அதில்தான் பத்துப்பாட்டும், குறுந்தொகையும் கிடைத்தன. மருதப்பரைப் பற்றி படித்தபிறகுதான் தமிழில் எனக்கு ஈடுபாடு வந்தது.

எனக்கு வயதாகிக்கொண்டிருக்கிறது. இளைஞர்கள் கையில் இந்த வேலைகளை ஒப்படைக்க வேண்டும். மாதம்தோறும் ஏதேனும் ஒரு கருத்துருவை முன் வைத்து கருத்தரங்கங்களை நடத்துகிறேன். சிறந்த கட்டுரைகளைத் தேர்வுசெய்து பரிசு வழங்குகிறேன். இப்பணியை இன்னும் விரிவுபடுத்த வேண்டியுள்ளது’’ என்கிற ச.வே.சுவின் துணைவியார் பார்வதி அம்மாள். 2 மகன்கள். மூத்தவர், பள்ளி ஆசிரியர். இளையவர், கோவை வேளாண் கல்லூரியில் பேராசிரியர்.

தற்போது ‘தொல்காப்பியமே உலகின் முதல் பொதுநூல்’ என்ற உண்மையை நிறுவும் ஆய்வுகளில் தீவிரமாக முனைந்திருக்கிறார் இவர். தவிர, ‘தமிழ்மரபுச் செல்வம்’ என்ற திட்டத்தை உருவாக்கி, தொல்காப்பியர் தொடங்கி வாலி வரையிலான தமிழ் படைப்பாளிகளின் படைப்புகள் பற்றிய ஆய்வுகள் தமிழூரில் தீவிரமாக நடந்து வருகின்றன.