Sunday, 11 May 2014

'வ.உ.சி.கட்டுரைகள்'

'கப்பலோட்டிய தமிழன்' எனப் புகழப்படும் வ.உ.சி எனும் பெருந்தகை கூர்த்த மதி நிறைந்த வழக்குரைஞர்
( இவர் தந்தையும் கூட வழக்கறிஞரே.. ) மட்டுமல்ல , மிகச் சிறந்த தமிழ் அறிஞருமாவார் என நான் முன்னர் சொல்லியிருந்தேன் ;
அன்னார் எல்லாம் என்றும் தமிழுலகு முழுவதற்கும் சொந்தம் ! ஆனால் , இப்பேரறிவாளனை இன்று ஒரு சாதித் தலைவராகக்
குறுக்க முயற்சிப்பதில் என் ஆதங்கத்தையும் அப்போது வெளியிட்டிருந்தேன் ;
பின்னர் , அதை நான் நீக்கி விட்டபோது நீங்கள் அதெல்லாம் இருக்கட்டுமே என்று அபயம் அளித்ததால் இங்கு மீண்டும்...

நிற்க...

வ.உ.சி அவர்கள் தமிழ் மறையாம் திருக்குறள் மீது எவ்வளவு பற்று கொண்டிருந்தார்கள் என்பதை கீழே அவர் சொல்லியவை நம் மனதில் நிறுத்தும்...

வ.உ.சிதம்பரனார் ( 1872 - 1936 ) 'வ.உ.சி.கட்டுரைகள்' எனும் நூலில் , " பாயிர ஆராய்ச்சி " எனும் கட்டுரையிலிருந்து...

" தமிழறிகளெல்லோரும் வள்ளுவர் குறளை உரையுடன் அறிந்து பாராயணம் செய்தல் வேண்டும்.
1330 - குறளையும் பொருளுடன் உணர்ந்திலாத தமிழர் முற்றத் துறந்த முனிவரேயாயினும்,
என்னைப் பெற்ற தந்தயே யாயினும், யான் பெற்ற மக்களேயாயினும்,
யான் அவரைப் பூர்த்தியாய் மதிப்பதுமில்லை ; நேசிப்பதுமில்லை. "

வேறொரு இடத்தில் அவர் எழுதுகிறார்...

"ஆரியமே ஏற்றமெனும் அன்பருயர் வள்ளுவரின்
ஓரியலே கற்றாலும் ஓதாராஞ் - சீரடியில்
நூற்பொருளும் வள்ளுவர்போல் நன்குரைக்கும் நூல் ஒன்றங்
கேற்படநாம் கண்டதுண்டோ இன்று "

இப்பாடல் , வ.உ.சி யின் முதல் அரசியல் கட்டுரையான ' சுதேசாபிமானம்'
மதுரை ' விவேகபானு' எனும் திங்கள் இதழில் 1906- பிப்ரவரியில் ஏழு பக்கங்களில் வெளி வந்தது .


மன வேகத்தை அளந்த முதல் ஆய்வாளன் தமிழன் :

கணக்கதிகாரம் என்கின்ற புத்தகம் 15 ஆம் நூற்றாண்டில் காரி என்பவரால் தோன்றிய நூல். இதைத் தமிழரின் கணித கோட்பாடுகள் என்றே உரைக்கலாம். இது தற்கால கணித முறைகளில் இருந்து முழுவதும் மாறுபட்டு விளக்கப்பட்டுள்ளது . தூரம், காலம், நேரம், எடை போன்ற அணைத்து அளவுகளும் மற்ற பொருட்களுடன் ஒப்பிட்டு அனைவருக்கும் புரியும்படி விளக்கப்பட்டுள்ளது .

இதில் நீட்டலளவை (தூரத்தை) அளக்கும் ஒரு அட்டவனையை கண்டேன், அதில் "யோசனை" என்ற ஒரு அளவைக் காணமுடிகிறது . அதைப் பற்றிச் சற்றே யோசித்த வாரே இருந்தேன். அந்த யோசனை அளவை பற்றி ஒரு யோசனை கிட்டியது. இந்தக் கணக்கதிகாரத்தில் அணைத்து அளவுகளும் ஒரு புறபொருளுடன் ஒப்பிட்டேக் கூறுகின்றனர். ஆக, யோசனை என்று ஒரு அளவு எப்படி இருக்கும் என்று கணித்துப் பார்க்க எண்ணினேன்.

1850 ஆம் வருடம் "ஹெர்மன் வோன் ஹெல்ம்வோல்ட்ச" ( Hermann von Helmholtz ) என்ற புகழ் பெற்ற அறிவியலாளர் ஒரு தவளையின் கால்களில் மின்சாரத்தை அளக்கும் கருவியைப் பொருத்தி அதன் மனதின் வேகத்தை அளக்க முடியும் என்று நிருபித்தார்.

அதற்கு பின்பு வந்தவர்கள் அதன் சரியான மனதின் வேகத்தின் அளவைக் கண்டுபிடித்தனர். (Speed of Thought). அவை 50 மீட்டர் /நொடி என்று அளவிடப்பட்டது. எனினும் வேகமாக கடக்கும் தசைகள் இதே தகவலை 100 மீட்டர் /நொடி என்ற அளவிலும் கடக்குமாம்.

சரி இவை ஒரு பக்கம் இருக்க அந்த யோசனை என்ற அளவையும் தற்போதிய கணித அளவையும் ஒப்பிட்டுப் பாப்போம்.

1 முழம் = 46.6666 சென்டிமீட்டர் (Cm )
1 சிறுகோல் = 559.9992 சென்டிமீட்டர் (Cm )
1 கூப்பிடுதூரம் = 279999.6 சென்டிமீட்டர் (Cm )
1 காதம் = 1119998.4 சென்டிமீட்டர் (Cm )
1 யோசனை = 4479993.6 சென்டிமீட்டர் (Cm )

சென்டிமீட்டரை கிலோமீட்டராக மாற்றினால்

1 யோசனை = 44.799936 கிலோமீட்டர் (இது காலத்தை குறிக்காத அளவு)

இப்பொழுது அவர்கள் கூறியபடி 50 மீட்டர்/நொடி என்று கால அளவுடன் கணக்கிட்டால்

50 மீட்டர்/நொடி என்பதை கிலோமீட்டர் கணக்கில் பார்த்தல்

180 km/hr

எனினும் இவர்கள் அறிவித்த இந்த அளவு உணர்ந்து, சிந்தித்து, முடிவெடுத்து, செயல்படுதல் என்ற நான்கு செயல்பாட்டை ஒருகிணைந்த அளவே. இங்கு யோசனை என்ற அளவு சிந்தித்தல் என்ற பகுதியில் வரும். ஆகவே,

180 / 4 = 45 கிலோமீட்டர் / hr என்றே வருகிறது .

45 கிலோமீட்டர் / hr = 1 யோசனை

எனவே காலத்தைக் குறிக்காத ஒரு யோசனையின் அளவு இவர்கள் அறிவித்த அளவுடன் பொருந்துகிறது.

இதே போல்,

நூற்று ஐம்பதாயிரம் யோசனை = 1 கதிரவநியங்குகிற மட்டு (6719990.4 km)
இரண்டு கதிரவநியங்குகிற மட்டு = 1 விண்மீன் மண்டலம் (13439980.8 Km )

இந்த அளவுகளும், நவீன அறிவியலில் கண்டுபிடிக்கப்பட்ட அளவுகளிலும் வேறுபாடு இருந்தாலும். முதல் முயற்சி என்றும் தமிழனின் சொந்தமாக இருக்கிறது. இன்றளவும் ஆய்வாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளில் முதல் வெற்றி காண்பது கடினந்தான்.

இப்படி ஆயிரம் அதிசயங்களைப் புதைத்து வைத்துருக்கும் நம் தமிழரின் அறிவின் அதிசயத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லிப் பெருமிதம் கொள்வோம்.
______________________________

மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை

சேரநன்னாடு தந்த செம்மலாம் சுந்தரம் பிள்ளை தமிழ் நாடக இலக்கியத்திற்கு ஆற்றிய தொண்டு நிலையானதாகும். திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்த இவர், 19 - ம் நூற்றாண்டின் தலை சிறந்த நாடக நூலான "மனோன்மணீ" யத்தைத் தமிழுக்கு அளித்துள்ளார். வேறு பல ஆராய்ச்சி நூல்களையும், நூலக இயல்பற்றிய முதல் தமிழ் நூலான "நூற்றெகை விளக்கம்" என்ற அரிய நூலையும் படைத்தவர். இவர் பாடிய தமிழ்த் தெய்வ வணக்கப் பாடல் தமிழ் மக்களிடை மிகப் பரவிய பாடலாகும்.

மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை (ஏப்ரல் 4, 1855 - ஏப்ரல் 26, 1897) மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடக நூலைப் படைத்தவர். இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா என்னும் ஊரில் பெருமாள் பிள்ளை என்பவருக்கும் மாடத்தி அம்மாளுக்கும் பிறந்தவர் சுந்தரம் பிள்ளை. இளமையிலேயே தேவார திருவாசகங்களையும் சமய சாத்திர நூல்களையும் கற்றார். இவரது தமிழாசிரியராக விளங்கியவர் நாகப்பட்டினம் நாராயணசாமிப் பிள்ளை. இவரிடமே மறைமலை அடிகள் தமிழ் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1876 ஆம் ஆண்டு பி.ஏ. தேர்வில் வெற்றி பெற்றார். அடுத்த ஆண்டில் சிவகாமி அம்மாள் என்பவரைத் திருமணம் புரிந்தார்.

1877 இல் தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்தார். திருநெல்வேலி ஆங்கிலத் தமிழ்க் கல்விச்சாலையின் தலைவராக இரண்டாண்டுகள் பணியாற்றி, அக்கல்விச் சாலையே பின்னர் இந்துக் கல்லூரியாக உயர்வதற்கு உறுதுணையாக இருந்தார், பின்னர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறை ஆசிரியராக சேர்ந்தார். 1880 இல் எம்.ஏ. பட்டம் பெற்றார். அக்கல்லூரியில் தத்துவத்துறைப் பேராசிரியராக இருந்த முனைவர் ஹார்வி துரையின் தொடர்பு இவருக்குக் கிடைத்தது.மூன்றாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய பின்பு திருவனந்தபுரம் அரசர் அரண்மனை வருவாய்த் துறையின் தனி அலுவலராக (Commissioner of Separate Revenue) நியமிக்கப்பட்டார். 1885 இல் டாக்டர் ஹார்வி துரை பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றபோது சுந்தரம் பிள்ளையை தம் பதவிக்குப் பரிந்துரைத்தார். இதனை ஏற்று மீண்டும் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறையின் தலைமைப் பேராசிரியரானார். அப்பணியை அவர் இறுதிவரையில் திறம்பட வகித்தார். 1878இல் தாயாரையும், 1886 இல் தந்தையையும் இழந்தார். இவருடைய மகன் நடராசப்பிள்ளை பின்னாளில் கேரள அரசில் அமைச்சராகவும் இருந்தார்.

திருவனந்தபுரத்தில் சைவப்பிரகாச சபையினைத் தோற்றுவித்து சமயத் தொண்டாற்றி வந்தார். இவருக்கு F.M.U., F.R.H, S.M.R.A.S, ராவ்பகதூர் போன்ற பல பட்டங்கள் கிடைத்தன.

ஒப்பற்ற நாடக நூலான மனோன்மணீயம் இவரால் 1891 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்டார். சுந்தரம் பிள்ளையின் ஞான ஆசிரியராக இருந்தவர் கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் ஆவர்.இத்தொடர்பே மனோன்மணீயத்தில் சுந்தர முனிவர் என்னும் பாத்திரப் படைப்பிற்குக் காரணமாக இருந்தது.கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு திருஞானசம்பந்தர் காலவாராய்ச்சி செய்து அவ்வாராய்ச்சியினை 1894 ஆம் ஆண்டில் வெளியிட்டார். பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வினை ஆங்கிலத்தில் எழுதிச் சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழில் வெளியிட்டார்.
மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தெய்வ வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ் வணக்கப் பாடலாக ஜூன் 1970 இல் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
தெக்கனமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிரைநுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !
உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !
வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !



நிற்புகழ்ந் தேத்துநின் நெடுந்தகை மைந்தர்
பற்பலர் நின்பெரும் பழம் பணி புதுக்கியும்
பொற்புடை நாற்கவிப் புதுப்பணி குயிற்றியும்
நிற்பவர் நிற்க நீ பெறும் புதல்வரில்
அடியேன் கடையேன் அறியாச் சிறியேன்
கொடுமலை யாளக் குடியிருப் புடையேன்
ஆயினும் நீயே தாயெனுந் தன்மையின்
மேயபே ராசையென் மீக்கொள ஓர்வழி
உழைத்தலே தகுதியென் றிழைத்தவிந் நாடகம்
வெள்ளிய தெனினும் விளங்குநின் கணைக்காற்கு
ஒள்ளிய சிறுவிர லணியாக்
கொள்மதி யன்பெ குறியெனக் குறித்தே.
- சுந்தரம் பிள்ளையின் (மனோன்மணீயம் - பாயிரம்)



தமிழ்ப்பணி:-

சுந்தரனார் ஆங்கிலமொழி அறிவு நிரம்பப் பெற்றவர்.
திருமுருகாற்றுப்படை,
நெடுநெல்வாடை
ஆகிய பழந்தமிழ் நூல்களை ஆங்கில உரைநடையில் வெளிநாட்டார் அறியும்படி அளித்தார். மேலும்,
திருஞானசம்பந்தர் காலம்,
பத்துப்பாட்டு (1891),
முற்காலத் திருவாங்கூர் அரசர் (1894),
ஆறாம் நூற்றாண்டுத் திருவாங்கூர் அரசர் (1896),
திருவாங்கூர் கல்வெட்டுகள் (1897)
ஆகிய ஆய்வுக் கட்டுரை மற்றும் நூல்களை அளித்தார்.
நூற்றொகை விளக்கம் (1885,1889),
மனோன்மணீயம் (1891),
நம்பியாண்டார் நம்பி கால ஆய்வு,
பொதுப்பள்ளியெழுச்சி,
நற்றாயின் புலம்பல்,
சிவகாமி சரிதம்
ஆகிய நூல்களைத் தமிழில் படைத்தார்.
சீவராசிகளின் இலக்கணமும் பிரிவும் (1892),
மரங்களின் வளர்ச்சி (1892),
புஷ்பங்களும் அவற்றின் தொழில்களும் (1892)
ஆகிய அறிவியல் நூல்களை எழுதினார்.

இவருடைய குடிமைப் பண்புகள் கண்டு, ஆங்கில அரசு "இராவ் பகதூர்" விருதை (1896) அளித்தது. கிராண்ட் டஃப் என்ற ஆங்கில அறிஞர் இவருடைய வரலாற்றுப் புலமை உணர்ந்து, அரசுக்குரிய வரலாற்று ஆராய்ச்சிக் கழக உறுப்பினர் தகுதிக்குப் (Fellow of Royal Historical Society)பரிந்துரைத்தார். திருவாங்கூர் அரசர் வரலாறு எழுதியதால் அரசருக்குரிய ஆசிய ஆராய்ச்சிக் கழக உறுப்பினராக (Fellow of Royal Asiatic Society) ஏற்றுக் கொள்ளப்பட்டார். இவருடைய பணிக் காலத்தில் 1891 முதற்கொண்டு சென்னைப் பல்கலைக்கழக உறுப்பினராக (Fellow of Madras University) ஏற்றுக்கொள்ளப்பட்டார். அதனால்
இலக்கியம்,
வரலாறு,
தத்துவத் துறைப்
பல்கலைக் கழகத் தேர்வுகளுக்குத் தேர்வாளராக உயர் பணி புரிந்தார்.

சுந்தரனார் எம்.ஏ. தேர்வு எழுதும்போது பம்மல் விஜயரங்க முதலியார் வீட்டினில் தங்கித் தயார் செய்தார்.

சாமிநாதப் பிள்ளை,
வலிய மேலெழுத்து திரவியம் பிள்ளை,
சுப்பிரமணிய பிள்ளை
ஆகியோருடைய நட்புறவால் திருவனந்தபுரத்தில் "சைவப் பிரகாச சபை"யை ஏற்படுத்தி, 1885ல் அதற்கு ஒரு கட்டடம் கட்டினார்கள். அந்தக் கட்டடம் இன்றும் உள்ளது. இங்குதான் விவேகானந்தருடன் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது, ஒரு திராவிடன் என அவரிடம் தம்மைக் குறிப்பிட்டுக் கொண்டார்.

அன்று கல்வி உலகினில் புகழொளி பெற்றுத் திகழ்ந்த,
பூண்டி அரங்கநாத முதலியார்,
வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி,
அரங்காச்சாரி,
உ.வே.சாமிநாதய்யர்
ஆகியோருடன் சுந்தரனார் நட்பு கொண்டிருந்தார். அருட் தந்தை ஜி.யு. போப்புடன் இடையறாத நட்பும் தொடர்பும் கொண்டு இருந்தார்.

சுந்தரனார் தத்துவயியலாளரும், வேதாந்தியும் ஆவார். அதோடு சிறந்த கல்வெட்டு ஆய்வாளரும், வரலாற்று அறிஞரும் கூட. இந்த முறையிலேயே திருவாங்கூர் மற்றும் சென்னை இராசதானியில் உயர்வாக அறியப்பட்டிருந்தார். இந்தத் துறையினில் இவரது ஆய்வுகளை "Tamilnadu Antiquary", சென்னை கிறித்தவக் கல்லூரி பத்திரிகை ஆகிய இதழ்கள் வெளியிட்டன.

சுந்தரனாரின் தத்துவ, வேதாந்த ஞான குருவாகத் திகழ்ந்த கோடகநல்லூர் சுந்தரசுவாமிகள் தமது
நிஜானந்த விலாசம்,
சுவானுபவ மஞ்சரி,
ஸ்வானுபூதி இரசாயனம்
ஆகிய நூல்களைப் போதித்தார். தத்துவராயர் உணர்த்திய பிரம்ம கீதைக்கு உரையும் தந்தார். சுந்தரனார் நிஜானந்த விலாசம் நூலை மாவடி சிதம்பரம் பிள்ளையுடன் சேர்ந்து பதிப்பித்தார். இந்த நூல் இன்றும் உண்டு.
சுந்தரனார் உயிரினப் பரிணாம அறிவை ஆல்ஃப்ரட் இரஸ்ஸல் வாலஸ் எழுதிய டார்வினியம் நூலின் வழி (1889) பெற்றார். விதைகள், மலர்கள், வண்டுகள், புழுக்கள் முதலான உயிர்களின் செயல்களை விளக்குவதற்கு அந்த அறிவை அனுசரித்துக் கொண்டார்.

1894ல் கல்வெட்டு ஆதாரங்களின் அடிப்படையில் கி.பி.13ம் நூற்றாண்டுத் திருவாங்கூர் (வேணாடு) மன்னர்களின் வரலாற்றைக் கண்டார். தம் பங்கிற்கு 14 கல்வெட்டுகளை கண்டு பிடித்தும் காட்டினார். ஆதி சங்கரர் கொல்லம் ஆண்டிற்கு நான்கு ஆண்டுக்கு முன் மறைந்தார் எனவும் உரைத்தார். சுந்தரனாரின் சாதனையால் திருவாங்கூர் மன்னர் வரலாறு முழுமை கண்டது.

1891ல் சுந்தரனார் தாம் இயற்றிய மனோன்மணீயம் நாடகத்தை வெளியிட்டார். 1877-78ல் நெல்லையில் கோடகநல்லூர் சுந்தரசுவாமிகளிடம்
பிரம்ம கீதை,
சூதசம்ஹிதை,
பெருந்திரட்டு
காட்டும் அத்வைத சிந்தனைகளைக் கற்றறிந்தார். அதனால் "பரமாத்துவித" என்ற வேதாந்த ஞானத்தை உணர்ந்தார். தத்துவராயர் முறைப்படுத்திய பரமாத்துவித வேதாந்தத்தையே உட்பொருளாக வைத்து மனோன்மணீயம் நாடகத்தைப் படைத்தார். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எழுதினார். உ.வே.சாமிநாதய்யரிடம் கொடுத்து திருத்தங்கள் செய்து கொண்டார். இந்த நாடகம்,
தரத்தாலும்,
நுட்பத்தாலும்
கட்டுக்கோப்பாலும்
சிறந்து விளங்குகிறது. மேலும் பல்கலைக் கழகப் பாடநூலாகவும் கற்பிக்கப்பட்டது. அத்தோடு இந்த நூலில் இடம் பெற்றுள்ள "நீராடும் கடலுடுத்த நிலமடந்தை" என்ற பாடல்தான் தமிழ்த்தாய் வாழ்த்தாக தமிழகம் முழுவதும் இன்றளவும் ஒலிக்கிறது. தேசிய இயக்கம் உருவாகிக்கொண்டுவந்த அந்தக் காலத்தில்,
மொழி அபிமானம்,
தேச அபிமானங்களைக்
கொள்கைப் பற்றோடு புலப்படுத்தினார். அதனால் தமிழ் மக்களிடையே மொழி மற்றும் நாட்டுப் பற்றுகளுடன் இயக்கங்கள் தோன்ற உள்ளொளியாகத் திகழ்ந்தார்.

சுந்தரனாரின் மகன் நடராசன் இந்திய சுதந்திரப் போராட்டம் வீறு கொண்ட போது, 34வது வயதினில் மகாராசா சமஸ்தான எதிர்ப்புப் போராட்டத்தினில் முன்னணியில் நின்றார். இது கண்ட ஆங்கில அரசு அவருடைய சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்துவிட்டது. ஆதலால் அவர் ஓலைக் குடிசையில் வாழ நேரிட்டது. ஓலைக் குடிசையில் வாழ நேரிட்டாலும் நடராசன் தேசிய ஆன்ம ஒளியோடு திகழ்ந்தார்.

பேராசிரியர் சுந்தரம் பிள்ளை தாம் வாழ்ந்த மனைத் தோட்டத்திற்குத் தம் ஆசிரியர் ஹார்வி அவர்கள் பெயரையே இட்டமையும் தம் மனோன்மணீய நூலினை அவருக்கே உரிமையாக்கியதும் குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை தனது 42வது வயதில் 1897 ஏப்ரல் 26 அன்று மறைந்தார்.

சுந்தரனார் அதி உன்னத வாரிசுச் செல்வத்தையும், வீறார்ந்த இயக்கத் தொடர்ச்சிகளையும் கொண்டு வரலாற்றினில் செம்மாந்த நிலையினில் திகழ்கிறார்.

"தாய்லாந்தில் தமிழ்"

கீழ்க்காணும் படம் ;- தாய்லாந்தில் கண்டெடுக்கப்பட்ட கி.பி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த, தமிழி எழுத்து படிந்த மட்பாண்டம்.



தாய்லாந்து(தாய்) மொழியில் தமிழ் சொற்களின் வேர்கள்.. தாய்லாந்து நம் தமிழ் மன்னர்களால் ஆளப்பட்டது, அக்காலத்தில் தமிழ்
மொழியில் இருந்து பலச் சொற்கள் தாய்லாந்து மொழிக்குத் தருவிக்கப்பட்டன. தாய்லாந்து மொழி தமிழ் மொழியின் துணையோடு தான் வளர்ச்சிக் கண்டிருக்கக் கூடும்.

அதில் சிலச் சொற்கள் பின்வருமாறு,
-------------------------------------------------
1. தங்கம் -> தொங்கம்
2. கப்பல் -> கம்பன்
3. மாலை -> மாலே
4. கிராம்பு -> கிலாம்பு
5. கிண்டி -> கெண்டி
6. அப்பா -> பா
7. தாத்தா -> தா
8. அம்மா -> மே, தான்தா
9. பட்டணம் -> பட்டோம்
10. ஆசிரியர் -> ஆசான்
11. பாட்டன் -> பா, புட்டன்
12. திருப்பாவை -> திரிபவாய்
13. வீதி -> வீதி
14. மூக்கு -> சாமுக்
15. நெற்றி -> நெத்தர்
16. கை -> கை
17. கால் -> கா
18. பால் -> பன்
19. கங்கை -> கோங்கா
20. தொலைபேசி -> தொரசாப்
21. தொலைக்காட்சி -> தொரதாட்
22. குலம் -> குல்
23. நங்கை -> நங்
24. துவரை -> துவா
25. சிற்பம் -> சில்பா
26. நாழிகை -> நாளிகா
27. வானரம் -> வானரா
28. வேளை -> வேளா
29. மல்லி -> மல்லி
30. நெய் -> நெய்யி
31. கருணை -> கருணா
32. விநாடி -> விநாடி
33. பேய்/பிசாசு -> பிச/பிசாத்
34. கணம் -> கணா
35. விதி -> விதி
36. போய் -> பாய்
37. சந்திரன் -> சாந்
38. ரோகம் -> ரூகி
39. தூக்கு -> தூக்
40. மாங்காய் -> மாங்க்
41. மேகம் -> மேக்,மீக்
42. பிரான், -> எம்பிரான் பிரா
43. யோனி -> யூனி
44. சிந்தனை -> சிந்தனக்கம், சிந்தனா
45. சங்கு -> சான்க்
46. தானம் -> தார்ன்
47. பிரேதம் -> பிரீதி
48. நகரம் -> நகான்
49. பார்வை -> பார்வே
50. ஆதித்தன் -> ஆதித்
51. உலகம் -> லூகா
52. மரியாதை -> மார-யார்ட்
53. தாது -> தாட்
54. உலோகம் -> லூகா
55. குரோதம் -> குரோதீ
56. சாமி -> சாமி
57. பார்யாள் -> பார்ய
58. திருவெம்பாவை -> த்ரீயம்பவாய
______________________________

தமிழ் இலக்கியங்களில் ஓசோன் !.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் வந்த தமிழ் இலக்கியங்களில் ஓசோன் !.
தற்கால அறிவியல் அறிஞர்களால் புவிக்கு மேலே இருக்கும் வான்வெளி ஆறு பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.
புவியில் இருந்து ஒன்றன் மேல் ஒன்றாக
ட்ரோபோஸ்பியர்
(troposphere)
ஸ்ட்ரோட்ஸ்பியர்
(stratosphere)
மீஸோஸ்பியர் (mesosphere)
தெர்மாஸ்பியர்
(thermosphere)
எக்ஸோஸ்பியர் (exosphere)
நத்திங்னஸ் (nothingness)
என அவை அமைந்துள்ளன.இவற்றுள் புவிக்கு மேலே முதலில் அமைந்திருப்பது ட்ரோபோஸ்பியர். இது வான்வெளியின் மொத்த கன அளவில் பதினேழில் ஒரு பங்குதான். ஆனால், வான்வெளியில் உள்ள மொத்தக் காற்றின் அளவில் ஐந்தில் நான்கு பகுதி இங்கு தான் இருக்கிறது.

இன்றைக்கு ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்கள் வான்வெளியை ஐந்து கூறுகளாகப் பிரித்துக் கூறி இருப்பதை அறியும்போது வியப்பும் மகிழ்வும், பெருமிதமும் ஒருங்கே உண்டாகின்றன.
"இருமுந்நீர்க் குட்டமும்
வியன் ஞாலத்து அகலமும்
வளிவழங்கு திசையும்
வறிதுநிலைஇய
ஆகாயமும்." (புறநா - 20)

என்னும் வரிகளில் புவிக்கு மேல் உள்ள மூன்று பகுதிகள் கூறப்பட்டுள்ளன.

"செஞ்ஞாயிற்றுச்
செலவும்
அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
சூழ்ந்த மண்டிலமும்
வளிதரு திசையும்
வறிதுநிலை காயமும்." (புறநா -
30)
என்னும் வரிகளால் புவிக்கு மேல் ஐந்து பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

"மயங்கிருங் கருவிய
விசும்பு முகனாக
இயங்கிய இருசுடர்
கண்ணெனப் பெயரிய
வளியிடை வழங்கா வழக்கறு நீத்தம்." (புறநா -
365)
என்னும் வரிகளில் இரண்டு பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இவற்றுள் "திசை" என்னும் பகுதியில் காற்று இருக்கும். "ஆகாயம்", "நீத்தம்" என்னும் பகுதிகளில் எதுவும் இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது. "நீத்தம்" என்பது இன்றைய அறிவியலார் கூறும் "வெறுமை" (நத்திங்னஸ்) என்னும் பகுதி. புவிக்கு மேல் இருக்கின்ற
இரண்டாவது பகுதியான "ஸ்ட்ரோட்ஸ்பியர்" என்னும் பகுதியில் தான் "ஓசோன்" எனப்படும் காற்றுப்படலம் அமைந்துள்ளது.

இப்படலம் கதிரவனிடம் இருந்து வரும் கடும் வெப்பத்தை, தான் தாங்கிக்கொண்டு புவியில் உள்ள உயிர்கள் துன்பம் உறாமல் காத்துவருகிறது. 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஓசோன் படலத்தைப் பற்றி 2ஆம் நூற்றாண்டில்
வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் குறிப்பிட்டிருப்பது வியப்பை அளிக்கிறது அல்லவா?

"நிலமிசை வாழ்வர் அலமரல்
தீர
தெறுகதிர்
வெம்மை கனலி தாங்கி
காலுண வாக
சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரும்
மருள." (புறநா - 43)
என்னும் பாடல் வரிகளின் கருத்து, "புவியில் வாழும் மக்களின் துன்பம் தீர கதிரவனின் வெப்பம் மிக்க கனலைத் தாங்கிக்கொண்டு கதிரவனோடு சேர்ந்து சுழல்கின்ற முனிவர்கள்" என்பதாகும். மேலும், முருகக் கடவுளின் ஒரு கை,

"விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது"
என்று திருமுருகாற்றுப ்படை (107) யிலும்,

"சுடரொடு திரிதரும் முனிவரும், அமரரும் இடர்கெட அருளி நின்
இணையடி தொழுதோம்"
என சிலப்பதிகாரத்திலும் (வேட்டுவ வரி - 18) இக்கருத்து கூறப்பட்டுள்ளது

முனிவர்கள் என்று கூறப்பட்டதாலேயே , மற்ற மதத்தினரும் பகுத்தறிவுவாதிகளும் இது அறிவியல் கருத்தன்று; கற்பகமரம்,
காமதேனு போன்ற கற்பனைகளுள் ஒன்று தான் என்று சொல்லக் கூடும். முனிவர்கள் என்றாலும் சரி அல்லது பிறவற்றைச் சுட்டினாலும்
சரி அது ஒரு பொருட்டன்று. கதிரவனின் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ளும் ஒரு சக்தியைப் பற்றித் தமிழர்கள் (சங்கப் புலவர்கள்) சிந்தித்திருக்கிறார்கள் என்னும் செய்தி நாம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே கூறிவிட்டோம் என்று நினைக்கும் போது, இந்த
செந்தமிழ்நாட்டில் பிறந்ததை எண்ணி நாம் பெருமை கொள்ளவேண்டும் !.அப்படிப்பட்ட நம் தமிழ் மொழியை உலகெங்கும் பரவ வழிவகை செய்ய ஒவ்வொரு தமிழனும் உறுதி ஏற்கவேண்டும் !
______________________________

ஆகாய விமானம் – வானூர்தி
ஆகாரம் – உணவு, உண்டி
ஆசனம் - இருக்கை
ஆசித்தல் – விரும்புதல்
ஆசிர்வாதம் – வாழ்த்து
ஆச்சரியம் – வியப்பு
ஆச்சாரம் - ஒழுக்கம்
ஆடம்பரம் - பகட்டு
ஆடி (மாதம்) - கடகம்
ஆட்சேபனை – மறுப்பு, தடை
ஆதங்கம் - மனக்கவலை
ஆதரவு – அரவணைப்பு, களைகண்
ஆதரி – தாங்கு, அரவணை
ஆதாரம் - நிலைக்களம்
ஆத்திசம் - நம்புமதம்
ஆத்திரேலியா - தென்கண்டம்
ஆபத்து – இடுக்கண், இடையூறு
ஆபரணம்- அணிகலன்
ஆப்பிள் – அரத்தி
ஆமோதி - வழிமொழி
ஆயத்தம் – அணியம்
ஆயுள் – வாழ்நாள்
ஆரம்பம் – துவக்கம், தொடக்கம்
ஆரோகணம் – ஆரோசை
ஆரோக்கியம் - உடல்நலம்
ஆலாபனை – ஆளத்தி
ஆலோசனை - கருத்து
ஆவணி (மாதம்) – மடங்கல்
ஆனந்தம் – மகிழ்ச்சி, களிப்பு
ஆனி (மாதம்) - ஆடவை
ஆன்மா (ஆத்மா) – ஆதன்
ஆஸ்தி – செல்வம்
ஆஷேபி - தடு
_____________________________

பதினாறு பண்புகள்

இயல்பாகத் தோன்றிய இயன்மொழிக்கு பதினாறு பண்புகள் இருக்க வேண்டும்.
அப்பதினாறும் அமைந்த மொழி தமிழ் மொழி மட்டுமே என்று மொழி
வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தொன்மை இயன்மை தூய்மை தாய்மை
முன்மை வியன்மை வளமை மறைமை
எண்மை இளமை இனிமை தனிமை
ஓண்மை இறைமை அம்மை செம்மை
எனும்பதி னாறும் இன்றமிழ் இயல்பனெப்
பன்னுவர் மொழிவலர் பாவாணார் தாமே.


தமிழில் பேசுவது மட்டும் அல்ல ...அதனைத் தெளிவாகவும்
திருத்தமாகவும் பேசுதல் இன்னும் நலம் !
அது சரி ; நெற்றிப்பொட்டில் அடித்தாற் போன்றது அக்கடைசி நான்கு வரிகள்...


இது கொஞ்சம் கனமானது... இருந்தாலும் பரவாயில்லை...
இறைவன் என்பது பழந்தமிழ்ச் சொல். இது ' இறு ' எனும் அடியிலிருந்து பிறந்தது.
எல்லா இடங்களிலும் தங்கிய பொருள் என்பது இதன் மூலப் பொருள்.
இறு - இறை - இறைவன் எனக் குறிப்பார் ஒரு பேரறிஞர்.

லத்தீன் மொழியில் உள்ள era எனும் சொல்லுக்கு மனைவி , இறைவி என்பது அங்கு பொருளாகும்.
erus என வழங்கப்படும் சொல்லுக்கும் இதே பொருள்தான்.
erus - a master , owner , Lord என்பது லத்தீன் அகராதி தரும் விளக்கம்.
' era ' என்பது கிரேக்கப் பெண் தெய்வம் குறிக்கும் ஒரு சொல்.
இந்த ' era ' சொல் hera என ஆகும் எனவும் அதே அகராதி சுவடு காட்டுகிறது.

hera - era என்பதுடன் Hera - the Greek goddess identified with Roman juno என லத்தீன் அகராதி விளக்குவது காணத்தக்கது.
இதிலிருந்தே Hero வும் ; கடவுளின் அருள் பெற்றவன் என்பதே இதற்கு மூலப்பொருள்.
Hercules எனும் ஆங்கிலச் சொல்லின் கிரேக்க வடிவம் Herakles என்பதே.
தெய்வ வல்லமை மிக்கவனாக அவன் ஆண்டுக் கருதப்படுகிறான்.

ஆக, தெய்வம் குறிக்கும் hera சொல் , தமிழின் era வோடு உறவானது !
அனைத்திற்கும் வேர்ச் சொல் ' இறு ' !!
------------------------------------------------------------------------------------------------------------------------------
நாம் வாழும் இப்புவிக்கு தமிழில் பல சொற்கள் உண்டு.
இவற்றுள் ' தாலம் ' என்பதும் ஒன்று !
தாலம் எனில் that which is suspended in space - இப்பொழுது தெளிவாகிறது இல்லையா...!?
புவியை யானைகள் , ஒரு மகாபலசாலி தாங்குவது என்பது போன்ற கற்பனைகள் எல்லாம் மேலோங்கி
இருந்த காலத்தில் இச்சொல் உருவாகியுள்ளதைக் காண்கையில் நாம் சற்று கர்வம் கொள்ளலாம் !

' தாலி ' என்பதும் தொங்குவது என்ற பொருளில்தான் ...
இப்பத் திகைப்பாய் இருக்கு இல்லை...

மேலே உள்ள சொல் விளக்கம் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், ஆழ்ந்த கருத்துகளை ,ஆரவாரமின்றி , அமைதியாக,
ஆற்றொழுக்கான நடையில் ஒருவர் ஆற்றிய நான் கேட்ட ஒரு சொற்பொழிவிலிருந்து...