Saturday, 10 May 2014

தமிழின் அடைமொழிகள்:


1) அந்தமிழ்:- அம் + தமிழ் = அழகிய தமிழ்

2) அருந்தமிழ்:- அருமை + தமிழ் =அருமைபாடுடைய தமிழ்

3) அழகுதமிழ்:- எல்லாவகையிலும் அழகுநலம் மிக்க தமிழ்

4) அமுதத்தமிழ்:- அமுதம் போன்று வாழ்வளிக்கும் தமிழ்

5) அணித்தமிழ்:- அணிநலன்கள் அமைந்த தமிழ்,தமிழினம் பெருமிதமுறும் அணியாக இலங்கும் தமிழ்

6) அன்னைத்தமிழ்:- நமக்கும், உலக மொழிகளுக்கும் அன்னையாக விளங்கும் தமிழ்

7) இசைத்தமிழ்:- முத்தமிழில் ஒரு பிரிவு (ஏனைய மொழிகளுக்கு இல்லாத சிறப்பு)

8) இயற்றமிழ்:- முத்தமிழின் மற்றொரு பிரிவு. ஆயகலை அறுபத்து நான்கும் அவற்றின் வழிவந்தனவும் உணர்த்தும் அறிவுநூல்கள் அடங்கியது

9) இன்றமிழ்:- இனிக்கும் தமிழ் (ஒலிக்க,உரைக்க, சிந்திக்க,செவிமடுக்க, எழுத, இசைக்க என எதற்கும் இனியது)

10) இன்பத் தமிழ்:- இன்பூட்டும் ஒலியமைப்பும் மொழியமைப்பும் இலக்கண இலக்கிய மரபும் கொண்டு,கற்பவர்க்கு எஞ்ஞான்றும் இன்பம் பயப்பது.

11) எந்தமிழ்:- எம் + தமிழ் (கால்டுவெல்,போப்பு போன்ற பிறமொழிச் சான்றோரும், கற்றதும் 'எந்தமிழ்' என்று பெருமித உரிமை பாராட்டும் தமிழ்)

12) உகக்குந்தமிழ்:- மகிழ்ச்சியளிக்கும் தமிழ் 13) ஒண்டமிழ்:- ஒண்மை + தமிழ் (அறிவின் செறிவும் நுட்பமும் கொண்டு ஒளிதரும் தமிழ்)

14) கனித்தமிழ்:- கனிகள் போன்ற இயற்கைச் சுவையுடைய தமிழ்

15) கற்கண்டுத்தமிழ்:- கற்கண்டு கடிதாய் இருப்பினும் சுவைக்கச் சுவைக்கக் கரைந்து இனிமை தருவது போல,அடர்ந்து செறிந்த நிலையிலும் கற்க கற்க மேலும் மேலும் இன்பம் பயக்கும் தமிழ்

16) கன்னித் தமிழ்:- எந்நிலையிலும் தனித்தன்மை கெடாமலும் இளமைநலம் குன்றாமலும் விளங்கும் தமிழ்

17) சங்கத்தமிழ்:- மன்னர்களாலும் புலவர்களாலும் சங்கங்கள் அமைத்துப் போற்றி வளர்க்கப்பட்டத் தமிழ்

18) சுடர்தமிழ்:- அறிவுக்கும் உணர்வுக்கும் சுடர்தரும் தமிழ்

19) சுவைத்தமிழ்:- சொற்சுவை,பொருட்சுவை, கலைச்சுவை,கருத்துச்சுவை என எல்லாச் சுவையும் செறிந்தது

20) செந்தமிழ்:- செம்மை + தமிழ் = எல்லா வகையிலும் செம்மை உடையது(செந்தமிழ் தகைமையால் அன்றே செந்தமிழ் எனப்பட்டது தமிழ்)

21) செழுந்தமிழ்:- செழுமை + தமிழ் - வளம் குன்றாத தமிழ்

22) தனித்தமிழ்:- தன்னிகரில்லாத தனித்தன்மை வாய்ந்த தமிழ்

23) தண்டமிழ்:- தண்மை + தமிழ் - குளிர்ச்சி நிறைந்தது

24) தாய்த்தமிழ்:- நமக்கும், உலக மொழிகளுக்கும் தாயாக மூலமாக விளங்கும் தமிழ்

25) தீந்தமிழ்:- (தேன் > தேம் > தீம்)இனிமை நிறைந்த தமிழ்

26) தெய்வத்தமிழ்:- தெய்வத்தன்மை வாய்ந்தது

27) தேன்தமிழ்:- நாவுக்கும் செவிக்கும் சிந்தைக்கும் இனிமை பயக்கும் தமிழ்

28) பசுந்தமிழ்:- பசுமை + தமிழ் – என்றும் தொடந்து செழித்து வளரும் தமிழ்

29) பைந்தமிழ்:- பைம்மை + தமிழ் (பசுமை > பைம்மை)

30) பழந்தமிழ்:- பழமையும் தொடக்கமும் அறியாத தொன்மையுடைய தமிழ்

31) பாற்றமிழ்:- பால் + தமிழ் – பால் போன்று தூய்மையிலும் சுவையிலும் தன்மையிலும் இயற்கையானது

32) பாகுதமிழ்:- வெம்மையிலும் வெல்லம் உருகிப் பாகாகி மிகுசுவை தருவது போன்று, காய்தலிலும் கடிதலிலும் நயம் குறையாதது

33) நற்றமிழ்:- நன்மை + தமிழ் – இனிய,எளிய முறையில் எழுதவும் கற்கவும் பேசவும் கருவியாகி நன்மைகள் விளையத் துணைபுரிவது

34) நாடகத்தமிழ்:- முத்தமிழுள் ஒன்று –நாடகத்தின் மெய்ப்பாடுகளை நுட்பமாய் உணர்த்தும் சொல்வளமும் பொருள்வளமும் ஒலிநயமும் நிறைந்தது

35) மாத்தமிழ்:- மா – பெரிய –பெருமைமிக்க தமிழ் (மங்கலப்பொருளுணர்த்தும் உரிச்சொல் மா)

36) முத்தமிழ்:- இயல், இசை, நாடகம் என முத்திறம் கொண்டு அமைந்த தமிழ்

37) வண்டமிழ்:- வண்மை + தமிழ் (வளஞ்செறிந்த தமிழ்)

38) வளர்தமிழ்:- காலந்தொறும் வளர்ந்துகொண்டே வரும் தமிழ்

தரவு: பேராசிரியர் முனைவர் இ.மறைமலை
______________________________

தமிழ் மாதங்கள்

தமிழ் மாதங்கள்

நடைமுறை - தமிழில்

சித்திரை............... மேழம்
வைகாசி............... விடை
ஆனி.................... ஆடவை
ஆடி..................... கடகம்
ஆவணி................... மடங்கல்
புரட்டாசி................ கன்னி
ஐப்பசி..................... துலாம்
கார்த்திகை............... நளி
மார்கழி................... சிலை
தை ....................... சுறவம்
மாசி....................... கும்பம்
பங்குனி................... மீனம்
______________________________

சிலேடை

சிலேடை என்பது ஒரு சொல்லுக்கு இரு பொருள் காண்பது. இரு பொருள்பட அமையும் சிலேடை, செய்யுளுக்கு அணியைச் சேர்க்கும் சிறப்புடையது.

சிலேடைச் செய்யுள் பாடுவது மிகுந்த புலமையுடையவர்களால் மட்டுமே முடிந்த செயலாகும். தமிழ்ப் புலவர்களில், கவி காளமேகம் சிலேடை பாடுவதில் சிறந்தவராக விளங்கினார்.

இதோ அடியேன் இரசித்த ஒரு : ஐந்து "டு" பாடல்!

ஓகாமா விதோநே ரொக்க டுடுடுடுடு
நாகார் குடந்தை நகர்க்கிறைவர் - வாகாய்
எடுப்பர் நடமிடுவர் ஏறுவர்அன் பர்க்கும்
கொடுப்பர் அணிவர் குழைக்கு.

விளக்கம்:
ஓ கா மா வீ தோ என்னுமிந்த ஐந்து எழுத்துகளும் டுடுடுடுடு
என்கிற இந்த ஐந்து எழுத்துகளுடன் பொருந்துவதால் உண்டாகும் சொற்கள் முறையே ஓடு, காடு, மாடு, வீடு, தோடு.

குடந்தை நகர்த் தலைவனான சிவபெருமான் ஓட்டைக் கையில் கொண்டுள்ளார். காட்டில் நடனமாடுவார், மாட்டின் மேல் ஊர்வார், வீட்டை (முக்தியை)ப் பக்தர்களுக்கு அளிப்பார். தோட்டைக் (காதணியைக்) காதில் அணிவார்.

புரிதல் ஏற்பட்டதா? என்னைப் போல் நீங்களும் இரசித்தீர்களா?
______________________________

செந்தமிழ் நாடெனும் போதினிலே

செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே-எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே-ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே

(செந்தமிழ்)


வேதம் நிறைந்த தமிழ்நாடு-உய்
வீரம் செறிந்த தமிழ்நாடு-நல்ல
காதல் புரியும் அரம்பையர்போல்-இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு

(செந்தமிழ்)


காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி-என
மேவி யாறு பலவோடத்-திரு
மேனி செழித்த தமிழ்நாடு.

(செந்தமிழ்)


முத்தமிழ் மாமுனி நீள்வரையே-நின்று
மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு-செல்வம்
எத்தனை யுண்டு புவிமீதே-அவை
யாவும் படைத்த தமிழ்நாடு.

(செந்தமிழ்)


நீலத் திரைக்கட லோரத்திலே-நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை-வட
மாலவன் குன்றம் இவற்றிடையே-புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு.

(செந்தமிழ்)


கல்வி சிறந்த தமிழ்நாடு-புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு-நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின்-மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு.

(செந்தமிழ்)


வள்ளுவன் தன்னை உலகினுக்கே-தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு-நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர்-மணி
யாரம் படைத்த தமிழ்நாடு.

(செந்தமிழ்)


சிங்களம் புட்பகம் சாவக-மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி-அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும்-நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு.

(செந்தமிழ்)


விண்ணை யிடிக்கும் தலையிமயம்-எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார்-சமர்
பண்ணிக் கலங்கத் திருள்கெடுத்தார்-தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு.

(செந்தமிழ்)


சீன மிசிரம் யவனரகம்-இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக்-கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும்-மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு.

செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே-எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே-ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே
______________________________

மாலை மாற்று

திருஞானசம்பந்தர் அவர்களுடைய தமிழ் ஞானத்தைக் காண்போம் வாருங்கள். இவர் 7-ஆம் நூற்றாண்டில், சீர்காழி என்னும் ஊரில், பிராமணக் குடும்பத்திற் பிறந்தார். மூன்று வயதிலேயே தமிழ் புலமைப் பெற்றவர் இவர் என்று வரலாற்று ஏடுகள் கூறுகின்றனர். இவரை சமய வாதியாக உலக பார்த்தாலும் (உண்மை எதுவாகினும்) தமிழை வானுயர வளர்த்த சான்றோர்களின் வரிசையில் இவரும் ஒருவர்.

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

இந்தப் பாடலை முதல் எழுத்திலிருந்து வலப்புறமாகவோ, கடைசி எழுத்தில் தொடங்கி இடப்புறமாகவோ படித்தால் ஒரேமாதிரி இருக்கும். ஆகையால் இப்பாடல் மாலை மாற்று’ என்ற வகையைச் சேர்ந்தது.

பாடலைப் பிரித்துப் படிக்கும் முறை.

யாம் ஆமா நீ ஆம் ஆம் மா யாழீ காமா காண் நாகா
காணா காமா காழீயா மா மாயா நீ மா மாயா

நாங்கள் கடவுள்களா?(யாம் ஆமா?) நீ மட்டும்தான் கடவுள், ஆமாம்! (நீ ஆம் ஆம்)

பெரிய யாழை ஏந்தியவனே (மா யாழீ), எல்லோராலும் விரும்பப்படுகிறவனே (காமா) காணும்படி நாகத்தைக் கழுத்தில் அணிந்தவனே (காண் நாகா),

காமனை எரித்து யாரும் பார்க்கமுடியாதபடி செய்தவனே (காணா காமா) , சீர்காழியில் எழுந்தருளும் இறைவனே (காழீயா)

பெரிய மாயைகளைச் செய்பவனே (மா மாயா) எங்களைப் பிற மாயைகளில் இருந்து காப்பாற்று! (நீ மா மாயா)

என்னங்க? இது தமிழ் தானா என்ற சந்தேகம் வந்து, இப்போது தமிழ்தான் என்று நன்கு தெரிந்திருக்குமே? சத்தியமாக தமிழ் தானிது. இப்படி ஒன்று இரண்டு அல்ல, பல பாடல்களைப் பாடியிருக்கிறார் திருஞானசம்பந்தர்.
______________________________


தமிழ்
இனிது..! இனிது..! இனிது..!
அமிழ்து..! அமிழ்து..! அமிழ்து..!
======================

தமிழ்க் கடலில் நம் உள்ளத்தைக் கொண்டு கொஞ்சம் உலர்த்தலாம் வாங்க. கீழே பதிவிடப்பட்ட பாடல்களைக் கண்டு இது தமிழ்தானா என்று கூட நீங்கள் கேட்கலாம். முழுமையும் படித்து பாருங்கள். அதன் பொருளும் சுவையும் தெரியும். போகலாமா?

காளமேகப் புலவர் வியக்கத்தக்க, சிலேடை புலவராய் இருக்கின்றார். 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அவர் ஆசுகவி, மதுரகவி என்று புகழ் பெற்றவர். நினைத்தவுடனேயே எதைப்பற்றியும் பாடக் கூடிய புலமைப் பெற்றவர்ளைத்தான் ஆசுகவி என்பார்கள்.

தமிழின் "க' என்ற எழுத்து மட்டுமே கொண்ட பாடலை காளமேகத்தைப் பாடச்சொல்ல, காளமேகம் காண்பவர் ஆச்சர்யப்பட, பாடலை அருவியெனக் கொட்டுகிறார்.

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.

(கூகை - ஆந்தை)

காக்கையானது பகலில் கூகையை (ஆந்தையை) வெல்ல முடியும். கூகையானது இரவில் காக்கையை வெல்லமுடியும். கோ எனும் அரசன் பகைவரிடத்திலிருந்து தம் நாட்டை இரவில் ஆந்தையைப் போலவும், பகலில் காக்கையைப் போலவும் காக்கவேண்டும். எதிரியின் பலவீனமறிந்து, கொக்கு காத்திருப்பது போல தக்க நேரம் வரும் காத்திருந்து தாக்க வேண்டும். தகுதியற்ற காலம் எனில் தகுதியான அரசனுக்குக் கூட கையாலாகிவிடக்கூடும் (கைக்கு ஐக்கு ஆகா).

அதே போல 'த' எனும் எழுத்து மட்டும் கொண்ட பாடலை ஒருவர் பாடச் சொல்கிறார். கார்மேகமானது கொட்டும் மழையைப் போல பாடலைக் கொட்டுகின்றார் காளமேகம்.

தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?

தத்தி தாவி பூவிலிருக்கும் தாதுவாகிய மகரந்தத் தூளை திண்ணும் வண்டே, ஒரு பூவினுள் உள்ள தாதுவை உண்ட பின் மீண்டும் ஒரு பூவினுக்குள் சென்று தாதெடுத்து உண்ணுகிறாய், உனக்கு எந்தப் பூவிலுள்ள (எத்தாது) தேன் தித்தித்தது (இனித்தது)?

ருத்ர வீணை

நாதத்திலிருந்தே எல்லாம் வந்தது. ஸப்த ஸவரங்களும் ஸப்த மண்டலங்கள்,ஸப்த ரிஷிகள், ஸப்த தாதுக்களாய் வந்ததாகச் சொல்வார்கள். இந்த பிரபஞ்சத்தில் அசையும், அசையாத எல்லாப் பொருள்களிலும் ஏதோ ஒரு ரீங்காரம் இசையாய் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.இசை நாடி நரம்புகளிலெல்லாம் ஊடுருவிச் சென்று மூளையை அடைந்து உணர்வுகளை மாற்றி விடும் வல்லமை உடையது.

மலையாளத்தில் தெருவ கீதங்கள் என்ற படத்தில் உள்ள இரண்டு ஜேசுதாஸ் பாடல்களை மொட்டை மாடியிலோ, தோட்டத்திலோ அமர்ந்து கொண்டு ஒலிக்கச் செய்தால் காற்றே இல்லாத நேரத்தில் கூட மெல்லிய தென்றல் காற்று வந்து உங்களைத் தழுவுவதை உணர முடியும். அமிர்த வர்ஷினி பாடினால் மழை வரும் என்கிறார்கள். வந்தது, அது ஒரு காலம். இப்போது காற்று மண்டலம் எங்கும் ஒலி, ஒளி அதிர்வுகளும், அலைகளும் குறுக்கிடுவதால் அதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவே. செல் போன் டவரில் இருந்து வரும் கதீர் வீச்சுகளால் குருவி முட்டை குஞ்சு பொரிப்பதற்கு முன்பே உடைந்து போய் குருவிகளின் எண்ணிக்கை கனிசமாகக் குறைந்து விட்டதல்லவா ? அதுபோல எத்தனையோ குறுக்கீடுகள் இசை அலைகளை வெகு தூரம் சென்று இலக்கை அடையவிடாமல் தடுத்து விடுவதாகச் சொல்லப்படுகிறது.

இயற்கையின் வடிவான இறைவனை ஆராதிக்கவும், அந்த ஆராதனையின் மூலம் உயிர்களை மகிழ்விக்கவும், அவற்றின் மனதை அமைதிப்படுத்தவும் இசைக் கருவிகள் தோன்றின. ஆதியிலிருந்தே எண்ணற்ற இசைக் கருவிகள் உருவாகியும், இடையில் அழிந்தும் மீண்டும் உயிர் பெற்றும் சிறப்புச் செய்திருக்கின்றன. தோல் வாத்தியங்கள், தந்தி வாத்தியங்கள், காற்று வாத்தியங்கள், உராய்வு வாத்தியங்கள் போன்ற எண்ணற்ற வாத்தியங்கள் இசை உலகில் ஆதிக்கம் செலுத்தி வந்திருந்தாலும், தந்தி வாத்தியங்கள் இவற்றில் தனி ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளன. தந்தி வாத்தியங்கள் அனைத்தும் யாழ் வகையைச் சேர்ந்தவைகளே. 200 தந்திகள் கொண்ட யாழ் கூட இருந்ததாகச் சொல்வார்கள். அப்படிப்பட்ட அதிசயமான யாழ் வகைகள் ஏதும் இப்போது இல்லை என்பது வேதனையான விஷயம்.


இதில் வீணை என்பது மிகவும் அற்புதமான வாத்தியம். மனித உடலையும் வீணையையும் ஒப்பிட்டு பேசுவார்கள். வீணையின் நடுவே நீளமாக காணப்படும் பகுதி மனிதனின் முதுகுத்தண்டாகவும், குடத்தை தலையாகவும், சிம்ம முகத்தை மூலாதாரமாகவும், தந்திகளை நரம்புகளாகவும், தந்திகளை இழுத்து சரி செய்வதை யோகப் பயிற்சியாகவும் கூறுவார்கள். நன்கு சுருதி சேர்தந்து வைக்கப்பட்டுள்ள வீணை அருகில் ஒலிக்கும் ஒலியை அதிர்வுகளாய் வெளிப்படுத்தும். அது போல யோகப் பயிற்சியில் சிறந்தவர் அருகில் உள்ளவர்களின் உணர்வுகளை உணர்ந்து விடுவார் என்று சொல்வார்கள். வீணையை இசைப்பவரின் பிராண சக்தி அந்த வீணையில் ஓடிக் கொண்டே இருப்பதாகச் சொல்வார்கள். வீணைகளில் எண்ணற்ற வீணைகள் இருந்தாலும், மூன்றுவிதமான வீணைகள் அங்கங்கே வாசிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் இந்திய தேசத்தை பாரம்பரியமாகக் கொண்டவை. ருத்ர வீணை, விசித்திர வீணை, சரஸ்வதி வீணை போன்றவைகளில் தென் இந்தியாவில் சரஸ்வதி வீணையே பெரும்பாலும் வாசிக்கப்படுகிறது.

மந்திர உபாசணைகளால் எத்தனைவிதமான சித்திகளைச் செய்ய முடியுமோ, அத்தனையையும் வீணையை இசைத்து ராக ஆலாபணைகளால் செய்ய முடியும். இதற்கு இராவணனை உதாரணமாகச் சொல்வார்கள்.குதிரை முக தேவர்கள் மூலம் யாழ், நாரதர்கள் வழியாக தும்புறுஎன்கிற தம்புரா, கலைவாணி இசைக்கும் ஸாரஸ்வத வீணா போன்ற இசைக் கருவிகள் எல்லாம் தேவர்களால் மனிதர்களுக்கு அருளப்பட்டது என்ற நம்பிக்கை உண்டு. இறைவனால் வழங்கப்பட்ட 64 தந்திரக்கலைகளில் கந்தர்வ தந்திரம், ருத்ரயாமளம், யக்ஷிணிதந்திரம், வீணா என்ற தந்திரங்கள் யாவும் இசையைப் பற்றியதே. இந்தத் தந்திரங்களை உபாசிப்பவர்களுக்கு இசை ஞானமும், இசைக் கருவியும் இறைவனால் வழங்கப்படும் என்று தந்திர சாஸ்திரம் சொல்கிறது.

துருபதம் என்ற பண்டைய இசைப் பாரம்பரியம் 19 ஆம் நூற்றாண்டு வரை காணப்பட்டது. அவர்கள் இசைக்கும் வீணை ருத்ர வீணையாகும். அது இறைவன் தந்தது என்றும் இறைவனின் வடிவமாகும் என்றும் எண்ணற்ற அதிசயங்களை ராக ஆலாபணைகளால் செய்யக் கூடியது என்றும் சொல்வார்கள். இதன் அமைப்பும், வடிவமும் வித்தியாசமாக இருப்பதோடு இதன் மீட்டல் லயம் நீண்ட நேரத்திற்கு இன்பம் தருபவையாக இருக்கும் எனச் சொல்லப்பட்டுள்ளது. தேக்கு மரத்தாலானது. இரண்டு குடங்களும் பதப்படுத்தப்பட்ட பூசணிக் காயால் ஆனது. இது 22 உலோகக் கட்டைகளும், ஏழு தந்திகளையும் உடையது. விசித்திர வீணையும் ருத்ர வீணையைப் போன்ற தோற்றத்தையே பெற்றிருக்கிறது. ஆனால் 16 தந்திகளையே கொண்டுள்ளது. அதில் 6 முக்கியமான தந்திகள். இதில் உலோகக் கட்டைகள்(frets) கிடையாது. மனிதன் பேசுவது போலக் கூட இதில் இசைக்க முடியும். தென்னிந்தியாவில் பிரபலமானது ஸரஸ்வத வீணை. இது பலா மரத்தின் ஒரே கட்டையால் செய்யப்படுகிறது. இதில் 24 உலோகக் கட்டைகள் உண்டு. 7 தந்திகளும் உண்டு. இதில் 4 மீட்டுவதற்கும், 3 தாளத்திற்கும் பயன்படும். இதில் இடது பக்கம் காணப்படும் சிறு பானை போன்ற அமைப்பு வடிவத்திற்காகவும், லாவகமாகக் கையாள்வதற்காக மட்டுமே.

எண்ணற்ற தேவ வாத்தியங்களும், இசைக் கருவிகளும் காலத்தால் அழிந்து விட்டாலும், இருக்கும் சிலவற்றையாவது காப்பாற்றும் கடமை நமக்கும் உள்ளது. ஏனெனில் தேவ வாத்தியங்களில் இறை சக்தி உள்ளது. அது எல்லா நிலைகளிலும் மக்களைக் காத்திருக்கின்றன என்பதை புராணங்கள் வாயிலாக அறிகிறோம். இதை அறிவுறுத்தவே எல்லா தெய்வவடிவங்கள் கைகளிலும் ஏதாவது ஒரு வாத்தியக் கருவி காணப்படுகிறது.
______________________________

தமிழ் மொழி

ஆங்கிலம் மட்டுமே போதும் என்ற நிலைக்கு இன்று பெரும்பான்மையானவர்கள் கருதுகிற நிலையில் தமிழில் என்ன இருக்கிறது என்ற சிறப்பு அடுத்த சந்ததிக்குத் தெரியாமலே போகிறது. தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்கு தமிழின் சிறப்புகளை இங்கே ஒவ்வொரு பகுதியாக சுட்டிக்காட்டுகிறோம்.

இன்றைக்கு நம் வீட்டில் நமது குழந்தைகளுடன் சின்னஞ்சிறு வயதிலேயே ஆங்கிலத்தில் பேசத் துவங்குகிறோம். தமிழ் குறித்த அறிவையும் ஞானத்தையும் போதிப்பதை விட்டுவிட்டு நம் சொந்த அடையாளங்களைத் தொலைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று ஆங்கில மொழி உலக மொழியாக உருவெடுத்துள்ளதால் சமுதாயத்தில் தன்னை தக்க வைத்துக்கொள்ள ஆங்கிலம் தேவை என்றாலும் அவசியம் ஒரு போதும் அடையாளம் ஆகிவிடாது என்பதை உணர வேண்டும். தமிழை முழுமையாக தெரிஉந்து கொண்டு பின்னர் ஆங்கிலத்தை படியுங்கள்.

ஆங்கிலத்தை வளர்த்த தமிழனால் ஏன் தமிழை வளர்க்க முடியவில்லை? காரணம், தமிழ் மீதான ஒரு அறுவருப்பு தமிழனுக்குள்ளேயே விதைக்கப்பட்டிருக்கிறது. தமிழுக்காக போராட வேண்டாம் வீட்டில் தமிழில் பேசுங்கள் போதும். அது தான் தமிழை வளர்க்கும். ஆரியம், இங்கிலாந்து என எத்தனையோ படையெடுப்பைத் தாண்டி வாழ்ந்த தமிழ் இன்று தமிழனாலே மாண்டு விடுமோ? உலகிலேயே ஆங்கிலத்தை மிகச் சரியாக உச்சரிப்பவர்களும் தமிழர் தான், தன் தாய் மொழி குறித்த அடிப்படை அறிவு பெறாதவர்களும் தமிழர் தான். இது பெருமை படக் கூடிய விடயமா? தமிழின் சிறப்புகளை இங்கே உணர்த்துவதே எமது நோக்கம். தமிழின் சில சிறப்புகளை இங்கே காணலாம்.

தமிழ் மொழிக்கு என்று இயற்கையாகவே சில சிறப்புகள் உண்டு. தமிழ் மொழி மற்ற எல்லா மொழிகளையும் விட மிக எளிமையானது. ஒரு மிகச் சிறந்த இலக்கணத்தைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட மொழி தமிழ் மொழி. இன்றைக்கு ஆங்கிலத்தை பெருமையாக நினைப்பவர்கள் இதைக் கண்டிப்பாக உணர வேண்டும். வெறும் 26 எழுத்துக்களைக் கொண்ட மொழி, ஒரு செம்மையான இலக்கணம் இல்லாத மொழி, ஒரு ஒழுங்கில்லாத மொழி ஆங்கிலம். ஆனால் தமிழ் அப்படி இல்லை. வாழ்வியல், அறிவியல் என அனைத்து பரிமாணங்களையும் உள்ளடக்கி செதுக்கப்பட்டது தமிழ் மொழி. அதற்கு ஒரு சில சான்றுகளை இங்கே காணலாம்.

ஆங்கிலத்தில் 'BOOK' என்பதை எவ்வாறு எழுதுகிறீர்கள் B - பி, o - ஒ, o - ஒ, k - கே. அதாவாது பிஓஓகே என்ற எழுத்துக் கூட்டு புக் என உச்சரிக்கப்படுகிறது. இதன்மூலம் ஆங்கில எழுத்துகளுக்கு நிலையான ஓசை இல்லை என்பதை நாம் உணரலாம். ஆனால் தமிழில் இதையே புக் என எழுத முடியும்.

அடுத்ததாக 'ARAVAIND' என்ற சொல்லை அரவிந்த் என்று உச்சரிக்கிறோம் ஆனால் 'ANGEL' என்ற சொல்லை ஏஞ்சல் என்று உச்சரிக்கிறோம். இங்கே 'A' என்ற ஒரே சொல்லே இடத்திற்கேற்ப 'அ' என்றும் 'ஏ' என்றும் வெவ்வேறு ஓசையைக் கொள்கின்றன.

ஆங்கிலத்துல் குறில், நெடில் என்ற பாகுபாடே இல்லை. ‘BEE’ என்ற சொல்லில் இரு குறில்கள் சேர்ந்து நெடிலாகிறது, அதே சமையம் ‘LARGE’ என்ற சொல்லில் குறிலே இங்கு நெடிலாக மாறுகிறது. மேலே குறிப்பிட்டுள்ள ‘BOOK’ என்ற சொல்லில் இரு குறில்கள் வந்தாலும் அது குறிலாகவே நிலைப்பெறுகிறது.

வெறும் 26 எழுத்துக்களே பெற்று எழுத்து பற்றாக்குறை கொண்ட மொழி ஆங்கிலம். அதனால் தான் ஒரே எழுத்துக்கு பல உச்சரிப்புகள், ஓசைகள் பெறுகின்றன. ஆங்கில மொழியின் உயிர் எழுத்துக்கள் வெறும் 5 எழுத்துக்களே ‘A, E, I, O, U’ மீதம் உள்ள 21 எழுத்துக்களை உயிர் மெய் எழுத்துக்கள் எனக் கொள்ளலாம். ஆனால் இவை மட்டும் ஒரு மொழியின் தேவையை பூர்த்தி செய்து விட முடியாது. ஆங்கிலத்தில் மெய் எழுத்துக்களே கிடையாது, ஆனாலும் ஒரு சில நேரங்களில் ‘Consonents’ என்று சொல்லப்படும் ஆங்கில உயிர் மெய் எழுத்துக்கள் மெய் எழுத்துக்களாக தோன்றும். உதாரணமாக “PARK” என்ற சொல்லை பார்க் என்று உச்சரிக்கும் போது ‘R’ மற்றும் ‘K’ என்ற எழுத்துக்கள் மெய் எழுத்துகளாகத் தோன்றுகின்றன.

ஆக தோழர்களே இவ்வளவு குழப்பங்களும், குறைபாடுகளும் உள்ள ஆங்கில மொழி உங்களுக்கு சிறப்பானதா?, எளிதானதா?. உங்கள் வசதிக்காக ஆதித் தமிழன் பார்த்து பார்த்து செதுக்கிய தமிழ் மொழி எப்படி தாழ்ந்து போகும். சிந்தியுங்கள். மீண்டும் கேட்டுக்கொள்கிறேன், அவசியத்திற்கு ஆங்கிலம், அடையாளமாய்த் தமிழ்!
______________________________

ஐயா, அம்மையீர்..!

நீங்கள் தமிழர்களாயின் இதைச் சற்றே படித்துப் பலருடன் பகிருங்கள்.
தினமணி(26/5/13) தமிழ்மணிப் பகுதியில் திரு சிவதானுப்பிள்ளை எழுதிய தமிழா, டமிலா என்ற கட்டுரையில் ஒரு பகுதியில் தெரிவித்ததாவது:

அண்மையில் 400 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மலையாளம் செம்மொழியாகும் நிலையில் மார்தட்டிக் கொள்ளும் மலையாளிகள், "உங்கள் தமிழ் மொழியில் ழ ஒலியே கிடையாது. அது எங்களுக்கே உரிய சிறப்பெழுத்து. அதனால்தான் தமிழர்கள் எல்லோரும் மலை, தமில் ,அளகு ,பலம், பளகு , எளில் (மழை , தமிழ் , அழகு, பழம், பழகு, எழில்) என்று பலுக்குகின்றனர் (உச்சரித்தல்) என்று கூறினாராம்.

அவர்கள் கூற்று முற்றிலும் ஏற்கக்கூடியதே! அவர்களை சினக்கத் தேவையில்லை. நம்மில் பலர், புலம் பெயர்ந்தோர், தென் தமிழகத்தார் ஆகியோர் ழகரம் பலுக்க இயலாதது ஒரு தவக்குறைவோ என எண்ண வேண்டியுள்ளது. சற்றே முயன்றால் ழகரம் ஒலிபபது கைகூடுமே. தயங்காது முயன்றால் அது திருவினையாகும்.

இல்லையெனில் தமிழர் என்ற அடையாளங்களை ஒவ்ஒன்றாக இழந்து விடுவோம் என்பது திண்ணம். தூய தமிழ் ஒலிகளை வருங்காலத்தில் காணொளி, குறுந்தகடுகளில் மட்டுமே பின் தலைமுறையினர் காட்சிப் பொருளாக, வரலாறாகத் தான் காணக் கேட்கக் கூடியதாக இருக்கும்.

மலையாளிகள் எவ்வளவு பற்றாக வாய் குழைத்து ஆலம்புழா, மலப்புழா, கோழிக்கோடு, தகழி என்றெல்லாம் பிசகாமல் ஒலிக்கின்றனர். இந்தப் பற்று ழகர எழுத்துரிமை பெற்ற நமக்கு வேண்டாமோ! அன்று கடன் பெற்றவர்கள் இன்று முதலாளி ஆகிவிட்டனர். இந்நிலையில் நாம் எந்தப் பொறுப்பும் ஏற்காமல் பார்த்து வாய் பிளந்து நிற்கின்றோம். இனியேனும் தமிழ் மரபால் ழகரத்தால் ஒன்றிணைவோம் எனச் சூளுரைத்து நிற்போம் செயல்படுவோம்.

கழு தைக்க (கழுதைக்குத்) தெரியுமாம் கற்பூரவாசம்.

கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது...

மற்றபடி கழுதைக்கும், மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை, காலத்தால் மருவியதே.



தமிழின் சிறப்பு-
”உலகில் தமிழே பண்பட்ட மொழி. தனக்கென எல்லாம் வாய்ந்த இலக்கிய செல்வங்கள் பெற்ற மொழி” -மாக்கஸ் முல்லர்-
”ஈற்றல் மிக்கதாகவும். சொல்ல வந்த பல விடயத்தை சில சொற்களில் தெளிவாக சொல்ல வல்லதுமான மொழி தமிழ் போல் வேறில்லை. ” -பெர்கில் பாதிரியார்-
”உலக அறிவை உணர்த்தம் சிறப்பில் திருக்குறளுக்கு இணையாக உலக இலக்கியத்தில் வேறில்லை. ” -டொக்ரர் இல்பட் சுவைட்சர்-
”தமிழில் உள்ள அகத்துறை இலக்கியங்கள் போல் உலகில் வேறெந்த மொழியிலுமில்லை. ” -பெஸ்கிப் பாதிரியார் (வீரமாமுனிவர்)-

சமணரின் கருத்துரைக்கும்……………… சிலப்பதிகாரம். சீவக சிந்தாமணி பௌத்த கருத்துரைக்கும்……………… மணிமேகலை
சைவ கருத்துரைக்கும்……………… கந்தபுராணம். பெரியபுராணம்
வைஸ்ணவ கருத்துரைக்கும்……………… கம்பராமாயணம்
கிறிஸ்தவ கருத்துரைக்கும்……………… தெம்பவாணி
இஸ்லாமிய கருத்துரைக்கும்……………… சீறாப்பராணம்

ஆகிய பேரிலக்கியங்கள் தமிழ் மொழியிலேயே எழுதப்பட்டிருக்கின்றன.
______________________________
______________________________