Saturday, 10 May 2014

மாலை மாற்று

திருஞானசம்பந்தர் அவர்களுடைய தமிழ் ஞானத்தைக் காண்போம் வாருங்கள். இவர் 7-ஆம் நூற்றாண்டில், சீர்காழி என்னும் ஊரில், பிராமணக் குடும்பத்திற் பிறந்தார். மூன்று வயதிலேயே தமிழ் புலமைப் பெற்றவர் இவர் என்று வரலாற்று ஏடுகள் கூறுகின்றனர். இவரை சமய வாதியாக உலக பார்த்தாலும் (உண்மை எதுவாகினும்) தமிழை வானுயர வளர்த்த சான்றோர்களின் வரிசையில் இவரும் ஒருவர்.

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

இந்தப் பாடலை முதல் எழுத்திலிருந்து வலப்புறமாகவோ, கடைசி எழுத்தில் தொடங்கி இடப்புறமாகவோ படித்தால் ஒரேமாதிரி இருக்கும். ஆகையால் இப்பாடல் மாலை மாற்று’ என்ற வகையைச் சேர்ந்தது.

பாடலைப் பிரித்துப் படிக்கும் முறை.

யாம் ஆமா நீ ஆம் ஆம் மா யாழீ காமா காண் நாகா
காணா காமா காழீயா மா மாயா நீ மா மாயா

நாங்கள் கடவுள்களா?(யாம் ஆமா?) நீ மட்டும்தான் கடவுள், ஆமாம்! (நீ ஆம் ஆம்)

பெரிய யாழை ஏந்தியவனே (மா யாழீ), எல்லோராலும் விரும்பப்படுகிறவனே (காமா) காணும்படி நாகத்தைக் கழுத்தில் அணிந்தவனே (காண் நாகா),

காமனை எரித்து யாரும் பார்க்கமுடியாதபடி செய்தவனே (காணா காமா) , சீர்காழியில் எழுந்தருளும் இறைவனே (காழீயா)

பெரிய மாயைகளைச் செய்பவனே (மா மாயா) எங்களைப் பிற மாயைகளில் இருந்து காப்பாற்று! (நீ மா மாயா)

என்னங்க? இது தமிழ் தானா என்ற சந்தேகம் வந்து, இப்போது தமிழ்தான் என்று நன்கு தெரிந்திருக்குமே? சத்தியமாக தமிழ் தானிது. இப்படி ஒன்று இரண்டு அல்ல, பல பாடல்களைப் பாடியிருக்கிறார் திருஞானசம்பந்தர்.
______________________________


தமிழ்
இனிது..! இனிது..! இனிது..!
அமிழ்து..! அமிழ்து..! அமிழ்து..!
======================

தமிழ்க் கடலில் நம் உள்ளத்தைக் கொண்டு கொஞ்சம் உலர்த்தலாம் வாங்க. கீழே பதிவிடப்பட்ட பாடல்களைக் கண்டு இது தமிழ்தானா என்று கூட நீங்கள் கேட்கலாம். முழுமையும் படித்து பாருங்கள். அதன் பொருளும் சுவையும் தெரியும். போகலாமா?

காளமேகப் புலவர் வியக்கத்தக்க, சிலேடை புலவராய் இருக்கின்றார். 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அவர் ஆசுகவி, மதுரகவி என்று புகழ் பெற்றவர். நினைத்தவுடனேயே எதைப்பற்றியும் பாடக் கூடிய புலமைப் பெற்றவர்ளைத்தான் ஆசுகவி என்பார்கள்.

தமிழின் "க' என்ற எழுத்து மட்டுமே கொண்ட பாடலை காளமேகத்தைப் பாடச்சொல்ல, காளமேகம் காண்பவர் ஆச்சர்யப்பட, பாடலை அருவியெனக் கொட்டுகிறார்.

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.

(கூகை - ஆந்தை)

காக்கையானது பகலில் கூகையை (ஆந்தையை) வெல்ல முடியும். கூகையானது இரவில் காக்கையை வெல்லமுடியும். கோ எனும் அரசன் பகைவரிடத்திலிருந்து தம் நாட்டை இரவில் ஆந்தையைப் போலவும், பகலில் காக்கையைப் போலவும் காக்கவேண்டும். எதிரியின் பலவீனமறிந்து, கொக்கு காத்திருப்பது போல தக்க நேரம் வரும் காத்திருந்து தாக்க வேண்டும். தகுதியற்ற காலம் எனில் தகுதியான அரசனுக்குக் கூட கையாலாகிவிடக்கூடும் (கைக்கு ஐக்கு ஆகா).

அதே போல 'த' எனும் எழுத்து மட்டும் கொண்ட பாடலை ஒருவர் பாடச் சொல்கிறார். கார்மேகமானது கொட்டும் மழையைப் போல பாடலைக் கொட்டுகின்றார் காளமேகம்.

தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?

தத்தி தாவி பூவிலிருக்கும் தாதுவாகிய மகரந்தத் தூளை திண்ணும் வண்டே, ஒரு பூவினுள் உள்ள தாதுவை உண்ட பின் மீண்டும் ஒரு பூவினுக்குள் சென்று தாதெடுத்து உண்ணுகிறாய், உனக்கு எந்தப் பூவிலுள்ள (எத்தாது) தேன் தித்தித்தது (இனித்தது)?

No comments:

Post a Comment