Saturday 31 October 2015

ஆங்கிலம் - தமிழரின் தாய்மொழி...!!!

மொழியியல் ஆய்வாளர்களும், அறிஞர்களும் மட்டுமே தொடுவதற்கு உரித்தான கருவை மையமாகக் கொண்ட கட்டுரை இது...

பல்வேறு அறிஞர்களால் பலமுறை, பல கட்டுரைகளில், பல்வேறு கருத்தரங்குகளில் எடுத்தாட்கொள்ளப்பட்ட ஒன்றும் கூட...

அவர்கள் அளவிற்கான தகுதிகள் இல்லையாயினும்... எண்ணமும், மொழியின்பால் ஒரு தேடலும் கொண்ட ஆர்வத்தில்...கொடுத்த நம்பிக்கையில்... அதை எனது பார்வையில்... என்னால் இயன்ற பங்காக இங்கே எழுத்துக்களாக்குகிறேன்.

"மொழி", "தாய்மொழி" மற்றும் "பண்பாடு"... இவற்றைப் பொறுத்தமட்டில் என் அகம் வேறு... சூழல் மற்றும் பழக்கத்தால் வார்க்கப்பட்ட என் புறம் வேறு...

ஒன்று உணர்வு சார்ந்தது... மற்றொன்று உலகம் சார்ந்தது...

அகம் விழிப்புணர்வு பெற்றாலும், புறம் இன்னும் அதற்கு முரண்பட்டுத்தான் நிற்கிறது.

அதனால் என்ன...? அகமே விழித்துக்கொண்டபின் புறத்தைப் பற்றியென்ன கவலை...? பழக்கத்தால் ஊறிப்போனதும், சூழலோடு கட்டப்பட்டதுமான அதன் பரிமாணங்கள் வெறும் வேடங்களாகவே இருந்துவிட்டுப்போகட்டுமே...?!

அந்த உணர்வின் ஊக்கத்துடனேயே தொடர்கிறேன்...

இப்படியொரு தலைப்பை இங்கே யோசிக்க வேண்டியிருந்தது இன்றைய சூழலின் கட்டாயம். அதுதான் சூழலுக்கும் பொருந்திப்போகிறது.

ஏனெனில், தமிழரைப் போல் ஆங்கிலத்தை ஆராதிப்பவர்கள், இந்தியாவில்... உலகத்தில்... அவ்வளவு ஏன், ஆங்கிலேயர்களில் கூடக் கிடையாது.

அதுதான் தற்காலத் தமிழரின் மொழியுணர்வு...!

ஆங்கிலம் இங்கே ஏற்படுத்தியிருக்கும் இத்தகைய தாக்கங்கள்தான் எனக்குள் எழும் ஆச்சர்யங்கள்...!!!

அந்த ஆச்சர்யங்களூடே சில சிந்தனைகளைச் செலுத்திப் பார்ப்பதே இங்கே என் விருப்பம்.

ஆங்கிலம் - வரலாறும், வளர்ச்சியும்
ஆங்கிலத்தின் தாக்கத்தைப் பற்றிப் பேசும்போது, குறைந்தபட்சம் அதன் வரலாற்றை மேலோட்டமாகவாவது தொட்டுச் செல்வது அவசியம்.

அதன்படி, ஆங்கிலத்தின் உலக வரலாறு என்று எடுத்துக்கொண்டால், அதன் தொடக்கம் ஏறத்தாழ இன்றிலிருந்து பின்னோக்கி 1600 ஆண்டுகள்.

அவற்றில் அதன் முதல் 600 ஆண்டுகள் என்பது இன்றைய ஆங்கிலத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட "பழைய ஆங்கில" (Old English)-த்தின் காலம்...

அடுத்த 400 ஆண்டுகளோ அதனினும் சற்றே வேறுபட்டு அமைந்த "இடைப்பட்ட ஆங்கில" (Medieval age English)-த்தின் காலம்...

அதற்குப்பின் வந்த "நவீன ஆங்கிலம்" (Modern English) கூட முதல் 200 ஆண்டுகள் "முன் நவீனம்" (Early Modern English) என்றும், அதற்கடுத்து இன்றைய காலகட்டம்வரை "பின் நவீனம்" (Late Modern English) என்றும் அதன் காலத்தைக் கூறிடுகிறது.

இதனை அடிப்படையாகக் கொண்டு நோக்கினால் ஆங்கிலத்தின் இந்திய வரலாறு, அதன் "பின் நவீன" (Late Modern English) காலகட்டத்தின் தொடக்கங்களில்தான், கிழக்கிந்திய நிறுவனத்தினரின் மூலம் இங்கே துவங்குகிறது என்பதை நாம் தெளிவாக அறிந்துகொள்ளலாம்.

எனில், இந்த நாட்டைப் பொறுத்தவரையில், இன்றுவரை ஏறத்தாழ நான்கு நூற்றாண்டு கால வரலாறு மட்டுமே கொண்ட 'ஆங்கிலம்' என்னும் மொழியினால்..., அதைவிடப் பன்மடங்கு அதிகமான காலந்தொட்டு நிற்கும் இந்திய மொழிகளையும், அதன் மக்களையும் ஆட்கொள்ளமுடிந்திருக்கிறது என்றால்... அதன் ஆளுமைத்திறன்தான் இங்கே வியப்புக்குரிய ஒன்று.

அதனினும் மேலாக, பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மை கொண்டதாக அறியப்படும் தமிழ் மொழியை, இன்று அதன் மக்களைக்கொண்டே புறந்தள்ள முடிந்திருக்கிறது என்றால்... அதன் வசீகரம் நிச்சயம் பிரமிப்பூட்டக்கூடியது என்பதில் ஐயமில்லை.

இன்று உலகளாவிய மொழியாக அது நிலை கொண்டதற்கு, உலகெங்கும் குடியேற்ற நாடுகளில் ப்ரிட்டன் (Britain) கொண்ட ஆதிக்கமே முதன்மைக் காரணமாகக் கொள்ளப்படுகிறது.

இருப்பினும், மாற்றங்களை வெகு விரைவாகத் தனக்குள் ஏற்றுக்கொண்டே செல்லும் அதன் தன்மையையே பிரதான காரணமாக மொழியியல் வல்லுநர்கள் முன் வைக்கின்றனர்.

ஆனால், அவ்வாறு குடியேற்றம் கண்ட நாடுகளில் மட்டுமன்றி, ஏறக்குறைய பரவலாக இன்று அனைத்து நாடுகளிலும் உலகத் தொடர்பு மொழியாக அது தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றிருப்பதையும் இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் தொடர்புமொழி என்கிற வகையில் மட்டும் ஆங்கிலத்தை ஏனைய உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள... அடிமைப்பட்ட தேசங்கள் அதைத் தங்கள் ஆட்சி மொழிகளில் ஒன்றாக்கிக்கொள்ள... ஒருங்கிணைந்த இந்திய தேசம் தன் பல்வேறு மொழி பேசும் மக்களுக்கிடையேயான இணைப்பு மொழியாக வைத்துக் கொள்ள... தமிழ்நாடோ அதைத் தன் வாழ்க்கை மொழியாகவே ஏற்றுக்கொண்டது.

"சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தோம்" என்ற நமது பழம்பெருமையெல்லாம் இப்போதைய வாழ்க்கைநிலையில் கதைக்கு உதவாத ஒன்று... வேண்டுமானால் இனி "சங்கம் வைத்து ஆங்கிலம்" வளர்க்கலாம்...

எப்படி வந்தது இந்த நிலை...?!

காலத்தின் பின்னோக்கிச் சென்று பார்த்தால்... ஆங்கிலேய ஆதிக்கத்தின் துவக்கத்தில், அவர்களுடனான தகவல் பரிமாற்றத்திற்காக மட்டுமே என இந்தியர்களால் முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆங்கிலம், பல மொழிகள், பல கலாச்சாரம், பல சிற்றரசுகள் எனச் சிதறிக் கிடந்த மக்களை விடுதலை வேட்கையை முன்னிறுத்தி ஒருங்கிணைக்க எளிதான வழியாகப் பயன்பாட்டில் கொள்ளப்பட்ட ஆங்கிலம்... அந்நிய ஆதிக்கத்தின் முடிவிலும், அவர்களின் அடியொட்டியே அரசு நிர்வாகம், உயர்மட்டத் தொழில் மற்றும் வணிகம், கல்வி வரையில் ஏற்றுக்கொள்ளப்பட, இறுதியில் அதுவே தவிர்க்க முடியாத ஒன்றாக... தவிர்க்கத் துணியாத ஒன்றாக, தவிர்க்க விரும்பாத ஒன்றாக இங்கு நிலைகொண்டுவிட்டது.

ஒரே ஆட்சி அமைப்பினை மையமாகக் கொண்டிருந்தாலும் பல மொழிகள், பல பண்பாடுகள் என இருக்கும் இந்த தேசத்தில் ஆங்கிலத்தை வைத்துக்கொள்வதற்கு அது ஒன்றே காரணமாகிப் போனது. வெளியிலிருந்து வந்த ஆங்கிலம் இங்கே, இப்படி அசைக்க முடியாத இடத்தைப் பிடிப்பதற்கு வேறு காரணங்களுக்குத் தேவையே இல்லாமல் போனது.

ஆயினும், அவர்கள் இங்கிருந்து அகன்றபோது கல்வி வரையில் ஊடுருவி நின்ற ஆங்கிலத்திற்கு, அதன்பிறகு இணை மொழி என்கிற தகுதியைத் தந்து, அவர்கள் சென்று இன்றோடு கிட்டத்தட்ட 64 ஆண்டுகளைக் கடந்து கொண்டிருக்கிற நிலையில் நம் மொழியையும் தாண்டி வளர்த்து விட்டோம்.

கடைசியில் அது நம் உணர்விலும் நிலைத்துவிட்டது.

இன்று படித்தவர்களைப் பொறுத்தவரையில் ஆங்கிலம்தான் அவர்களுக்கான அடையாளம்... பாமரர்களுக்கோ அந்த அடையாளமே தங்கள் சந்ததியினருக்கான இலக்கு...

அடுத்த தலைமுறையினரின் கல்வியில்... பயிலும் துறை எதுவாக இருப்பினும் ஆங்கில அறிவு மட்டுமே கல்வியின் அடிப்படையாக அமைக்கப்பட்டுவிட்டதால் அதனை நோக்கியே ஒருவித வேகம் இங்கே காணப்படுகிறது.

"ஆங்கிலம் நன்கு தெரிந்திருந்தால் போதும்... அனைவரும் மேதைகளே..!" என்றொரு எழுதப்படாத தீர்மானம்தான் தமிழ்நாட்டில் இப்போதைய நடைமுறைக் கொள்கை.

படிப்பும், அறிவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவேயன்றி நடைமுறையில் இரண்டும் வேறுவேறு என்பதோ, இந்த இரண்டிற்கும் அப்பால் மொழியறிவு என்பது முற்றிலும் வேறுபட்டது என்பதோ இங்கே பெரும்பாலும் உணரப்படவில்லை.

இந்தியாவில் ஆங்கிலத்தின் தாக்கத்தைப் பொறுத்தவரையில் மற்ற மொழியினருக்கும், தமிழருக்கும் வேறுபாடு உண்டு.

ஆங்கிலம் அவர்களிடையேயும் பயன்பாட்டில் இருந்தாலும், நம்மைப் போல அதை மகுடமாக அணிந்துகொள்ளும் வழக்கம் மட்டும் அறவே கிடையாது என்பதுதான் அது.

தமது தாய்மொழியைத் தவிர வேறு எந்த மொழியறிவும் அவர்களைப் பொறுத்தவரையில் சூழ்நிலைகளின் தேவைக்காக மட்டுமே.

இந்த நேரத்தில்தான் தமிழர்களின் மொழிப் போராட்டமான "ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை" நாம் நினைவுகூற வேண்டியதாகிறது.

மொழிப் போராட்டம்
ஒரு காலத்தில் மத்திய அரசால் அனைத்து மாநிலங்களிலும் கட்டாயமாக்கப்பட்ட ஹிந்தி (Hindi) மொழிக் கல்வியை, மொழிப் போராட்டங்களின் மூலம் தமிழ்நாட்டில் நுழைய விடாமல் செய்தவர்கள் தமிழ் மக்கள்.

நம்மைப் போல எதிர்ப்புக்குரல் எழுப்பாமல் ஹிந்தியை (Hindi) ஏற்றுக்கொண்டவர்கள் அண்டை மாநில மக்கள்.

ஆனால், அதனால் இருதரப்பிலும் நிகழ்ந்த மாற்றங்கள்தான் வேடிக்கைக்குரியது.

ஹிந்தியை ஏற்றுக்கொண்ட மாநிலங்களில் ஹிந்தியும் (Hindi) சரி, ப்ரிட்டிஷார் (British people) காலத்திலிருந்து இருக்கும் ஆங்கிலமும் சரி... அவர்களின் தாய்மொழிக்குரிய இடத்தை அசைக்கக்கூட முடியவில்லை. இந்த இரண்டு மொழிகளுமே அங்கெல்லாம் இரண்டாம்பட்சமாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

ஆனால், "தமிழைக் காப்போம்" என்ற முழக்கத்துடன் ஹிந்தியை (Hindi) நுழையவிடாமல் விரட்டியடித்த தமிழ்நாட்டிலோ, இன்று தாய்மொழியான தமிழே ஆங்கிலம் கொண்டு விரட்டப்படுகிறது.

ஹிந்தியை எதிர்க்கத் துணிந்த தமிழுணர்வு, இன்று ஆங்கிலத்திடம் தலைவணங்கி நிற்கும் இந்தக் காலகட்டம் ஒரு வரலாற்று வேடிக்கை...!

எண்ணிப் பார்த்தால், இது குறித்து கேள்விகள் பல தோன்றுகின்றன...

தமிழரிடம் மட்டுமே இவ்வாறு காணப்படும் "ஆங்கிலமே உயர்ந்த அறிவின் வெளிப்பாடு" என்றொரு உரத்த சிந்தனை... இந்தியாவில் வேறு எந்த மொழியினரிடமும் எழாத சிந்தனை... "எப்படி உருவானது?" "எப்போது விதைக்கப்பட்டது?""எதனால் அது இன்று இவர்களுக்குள் மிகப்பெரிய மரமாக வளர்ந்து நிற்கிறது?" என...

அதிலும், வரலாறு கூறும் தமிழரின் மீதான பண்பாட்டுப் படையெடுப்புகளையும், 'அனல் வாதம்', 'புனல் வாதம்' போலப் பலவழிகளில் திட்டமிட்டு அழிக்கப்பட்டதாக மற்றும் அந்நியரால் கொள்ளை கொண்டு போகப்பட்டதாகச் சொல்லப்படும் பல்துறை அறிவுச் செல்வங்களையும், இன்னும் சர்ச்சைகளுக்குரியதாகவே இருக்கும் திராவிட-ஆரியப் போர்களையும் பற்றி அறிய வரும்போது... "தமிழரிடம் இன்று அசைக்கமுடியாத நிலைக்கு வளர்ந்து நிற்கும் ஆங்கில மோகத்திற்குப் பின்னணியில்கூட அந்நியர் பலரின் முனைப்பு இருக்கலாமோ?" என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.


இருப்பினும்... இத்தகைய காலகட்டத்தில், இதுபோன்ற கேள்விகளைத் துணிவுடன் எழுப்பி ஆராயும் திடமோ, அதற்கான வலிமையான பின்புலமோ நம்மிடம் இல்லை. இந்த நிலையில், அவற்றை அலட்சியப்படுத்திக் கடந்து செல்வதே கட்டாயமாகிறது.

தமிழ் - தளர்ச்சி நிலை
இன்று தமிழ்நாட்டில் எழும் ஆங்கில உணர்ச்சிப் பிரவாகத்தில் "மொழி" என்பதற்கான பொருளுக்கே அவசியமில்லை.

இதனூடே "தாய்மொழியின் தேவை" பற்றிய பேச்செல்லாம் வெறும் கருத்துக் குப்பை... அவ்வளவுதான்.

பொதுவாக, இங்கே கல்வியில் "தமிழுக்கான" இடம் ஒரு மொழிப்பாடம் என்கிற எல்லை வரை மட்டுமே... அதில் கூட விருப்பமான ஒன்றைத் தேர்வு செய்துகொள்ள வாய்ப்பிருந்தால் அந்த இடமும் இல்லை.

உயர்கல்வி அடிப்படையிலான வேலைவாய்ப்புகளில் "தமிழ்" என்பது ஒரு தீண்டத்தகாத வார்த்தை...

தமிழரின் உலகியல் மற்றும் வாழ்வியலில் "தமிழ் உரையாடல்" என்பது ஒருவரின் அறிவுக் குறைபாட்டிற்கான அடையாளம்...

ஒரு தனிமனிதனின் அறிவை இங்கே ஆங்கிலத்தை அடிப்படையாகக்கொண்டும், முன்னேற்றத்தைப் பணத்தை அடிப்படையாகக்கொண்டும் மட்டுமே அளவிடும் மூர்க்கமான நடைமுறையைப் பின்பற்றத் தொடங்கி விட்ட சமூகச் சூழலில் "தமிழைத் தவிர்த்தலே நலம்" போன்ற தவறான கற்பிதங்கள்தான் அசைக்கமுடியாத உறுதியுடன் திகழ்கின்றன.

சமீபத்தில் ஒரு பேருந்துப் பயணத்தின்போது நடந்த நிகழ்வு ஒன்றை இங்கே கூறுவது அதற்கொரு உதாரணமாகலாம்...

பேருந்தில் அமர்ந்திருந்த ஒரு பள்ளி மாணவனிடம், அருகிலிருந்த ஒருவர் 'தம்பி, என்ன படிக்கறே...?' எனக் கேட்க, மாணவனோ 'பத்தாவது' என்றான்.

உடனே அவர் ஏளனமாக அவனைப் பார்த்துச் சிரித்தார். "என்னப்பா, படிக்கிற பையன்... 'டென்த் (Tenth)'-ன்னு பதில் சொல்ல வேண்டாமா...? என்ன... போ...!".

அவர் கூறியதை ஆமோதிப்பதுபோல் சுற்றியிருந்த சிலரும் அந்தச் சிறுவனைப் பார்க்க, அவனோ கூனிக் குறுகினான்.

இந்த நிகழ்வு நடந்தது தமிழ்நாட்டில்... அதுவும் தமிழருக்கிடையில்...

என்ன சொல்லிவிடமுடியும் இதைப் பற்றி இதற்கு மேல்...?!

சரியாகச் சொன்னால் இன்றைய நம் "தமிழ்", நமது அலட்சியங்களையும், அவமதிப்புகளையும் மீறித் தப்பித் தடுமாறி ஒட்டிக் கொண்டிருக்கும் "தமிழ்"...!

முழுமையான ஆங்கிலப் பழக்கம் தமிழர் அனைவருக்கும் சாத்தியமாகும் வரை இந்த ஒட்டுதல் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

அந்த முழுமை வரும் தலைமுறைகளில் நிச்சயம் சாத்தியமாகும்.

அந்தக் குறிக்கோளை அடைவதற்கான முத்தாய்ப்பு வேலைகளே இன்று அனைத்து இடங்களிலும் முழுவீச்சில் நடைபெற்றுகொண்டிருக்கின்றன.

சில தலைமுறைகளுக்குப் பிறகு, கல்விக்கான வாய்ப்பில்லாமல் ஒதுங்கும் சில மனிதர்களிடம் வேண்டுமானால் தமிழ் இருக்க நேரிடலாம், வெறும் பேச்சுத் தமிழாக...

அதன்பிறகான சில ஆண்டுகளில் அவர்களின் விகிதம் குறையக் குறைய, தமிழ் முழுமையாக ஒருநாள் இங்கிருந்து தகர்க்கப்படும்.

"தமிங்கலம்" (Thaminglish)
"எங்கெங்கு காணினும் சக்தியடா...! ஏழு கடல் அவள் வண்ணமடா...!" என்று இயற்கையைப் பாடிய பாரதிதாசன் இன்னும் சில காலம் இருந்திருந்தால், "எங்கெங்கு காணினும் ஆங்கிலமடா...! அது தமிழ் மாந்தரின் உயர்எண்ணமடா...!" என்றும் கூட தமிழ்நாட்டைப் பார்த்துப் பாடியிருக்கக் கூடும்.

"மெல்லத் தமிழினி சாகும்..." என்றுரைத்த ஓர் பேதையின் கூற்றுக்கே அன்று தன் பதைப்பைப் பாடலில் பதித்த பாரதி மட்டும் இன்றிருந்தால் அந்தப் பேதையின் முன் தலைகுனிந்து போயிருக்கவும் கூடும்.

பாரதியைப் பேதையாக்கி விட்டு, அவன் கண்ட பேதையை மேதையாக்கி விட்டது இன்றைய தமிழ்ச் சூழல்.

கல்வியில் தமிழை இழக்கத் துணிந்தோம்... உயர்மட்டத் தொழில் மற்றும் வர்த்தகங்களில் தமிழை விரட்டத் துணிந்தோம்... பொது இடங்களில், அறிவிப்புகளில், விளம்பரங்களில் மற்றும் நிறுவனப் பெயர்களில் என எல்லா இடங்களிலும் தமிழைத் தவிர்க்கத் துணிந்தோம்... நம் உரையாடல்களில் தமிழை மறக்கத் துணிந்தோம்... இல்லை, மிதிக்கவே துணிந்தோம்.

ஆம், தமிழ் மெல்லச் செத்துக் கொண்டுதானிருக்கிறது.

ஆங்கிலச் சொற்களுக்கான வெறும் இணைப்பு மொழியாக மட்டுமே மாற்றப்பட்டு "தமிங்கலம்" (Thaminglish) எனும் ஒரு விசித்திர மொழியாகி விட்டது.

உதாரணமாக,"காலையில் பார்ப்போம்" போன்ற தமிழ்ச் சொற்றொடரெல்லாம் அரிதாகி, "மார்னிங் (Morning) மீட் (Meet) பண்ணுவோம்" போன்ற "தமிங்கலச்" (Thaminglish) சொற்றொடர் இப்போது பெரிதாகி விட்டது.

"தமிங்கலம்" (Thaminglish) - இது முழுமையான ஆங்கிலத்தை நோக்கிய தமிழரின் பரிணாமச் சுவடு.

ஆங்கிலேயரையே பிரமிக்க வைக்கும் அற்புதம்.

பேச்சு மட்டுமல்ல... எழுத்திலும் கூட "மணிப்பிரவாள நடை" என்று வந்துவிட்டால், அதில் "தமிங்கலத்தைத்" (Thaminglish) தவிர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் இன்று வெகு அரிது.

அது சிலருக்குச் சூழ்நிலையால் வரலாம்... சிலருக்குப் பழக்கத்தால் வரலாம்... ஆனால், பெரும்பாலானோருக்கு அதுதான் விருப்பம்... அதுதான் பெருமை...

சொல் பரிமாற்றம் - ஓர் கண்ணோட்டம்
திசைச் சொற்களையும், கலைச் சொற்களையும் தனக்குள் அனுமதித்தும் தன்னிலை மாறாத தமிழ்தான், இப்போது நம்மால் "தமிங்கலம்" (Thaminglish) என்ற பெயரில் தன்னையே இழந்து கொண்டிருக்கிறது.

உலகில் பல்வேறு மொழிகளுக்கிடையே சொல் பரிமாற்றம் என்பது வெகு இயல்பான ஒன்று.

தமிழும் வெவ்வேறு காலகட்டங்களில் தனக்குப் புதிதான சொற்களைப் பிற மொழிகளிடமிருந்து "திசைச் சொற்கள்" எனவும், அறிவியல் சொற்களைக் "கலைச் சொற்கள்" எனவும் வரவேற்றுத் தன்னுள் ஏற்றுக்கொண்டு, எப்போதும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு வந்திருப்பதை மொழி வரலாறு மற்றும் ஆய்வுகள் உரைக்கின்றன.

தமிழிலிலிருந்தும் ஏராளமான சொற்கள் உலக மொழிகள் பலவற்றால் நேரடியாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. பல தமிழ்ச் சொற்கள் காலப்போக்கில் அந்தந்த மொழியாளர்களின் உச்சரிப்பிற்கு ஏற்பத் திரிந்து, நாளடைவில் அந்த மொழியின் சொற்கள் போலவே உருமாற்றம் பெற்றுமிருக்கின்றன.

தமிழின் "கட்டுமரம்", ஆங்கிலத்தில் "கேட்டமரன்" (CATAMARAN) ஆனது போல்... "மாங்காய்", "மேங்கோ" (MANGO) ஆனது போல்... இத்தகைய உருமாற்றங்கள் ஏராளம்.

ஆனால், அவற்றிலும் தமிழர் பலருக்கு மூலச் சொற்களான தமிழ்ச் சொற்கள் மீதெல்லாம் மரியாதையில்லை.

பிற மொழியினரிடமிருந்து, அதிலும் குறிப்பாக ஆங்கிலேயரிடமிருந்து திரிந்து வந்த சொற்கள் மீது மட்டுமே மரியாதை...

இங்கே மேலே கூறப்பட்டிருக்கும் "மேங்கோ" (Mango) என்ற சொல்லையே எடுத்துக்கொண்டால், அதை நம்மில் பலர் ஆங்கிலத்தில் உரையாடலில் பயன்படுத்தினால்கூட அதை ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால், தமிழ் உரையாடலில்கூட "மாங்காய்"க்குப் பதிலாக "மேங்கோ" (Mango) என்றே பயன்படுத்துவதுதான் விளங்கிக்கொள்ள முடியாத ஒன்று...

:"எனக்கொரு 'மேங்கோ ' (Mango) கொடு..." போன்ற உரையாடல்கள் வெகு இயல்பாகிவிட்டது.

அதேபோல், ஜப்பானிய மொழியின் "சுனாமி" (Tsunami) என்ற சொல்... அது பெரும்பாலானோருக்கு இங்கே 2004 - ம் ஆண்டிற்குப் பிறகுதான் அறிமுகமான ஒன்று...

ஆங்கிலத்தில் அதற்கீடான சொல் இல்லாததால், அதில் "சுனாமி" (Tsunami) என்று ஜப்பானிய சொல்லையே பயன்படுத்தத் தொடங்க... வெகு விரைவில் அது கிட்டத்தட்ட ஆங்கிலச் சொல்லாகவே தோற்றம் பெற்றுவிட்டது.

ஆனால், தமிழிலோ அதற்கீடாகப் பன்னெடுங்காலமாக "ஆழிப்பேரலை", "கடற்கோள்" போன்ற அழகிய சொற்கள் இருக்க...அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, நாமும் ஆங்கிலத்தைப் பின்பற்றி "சுனாமி"(Tsunami) என்றே அழைக்கத் தலைப்பட்டோம். நாளடைவில் அதற்குப் பழகியும் போனோம்.

"சுனாமி" (Tsunami)-க்குத் தமிழில் இப்படிச் சொற்கள் இருப்பதே நிறையத் தமிழருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்... அதிலும் சிலருக்கு "ஆழிப்பேரலை"யாவது தெரிந்திருக்கலாம். ஆனால், "கடற்கோள்" என்கின்ற சொல் தெரிந்திருப்பதற்கான வாய்ப்புகளோ மிக மிக அரிது.

கடல் கொண்டதாக உரைக்கப்படும் நம் பழந்தமிழ்ச் சங்கங்களைப் பற்றிச் சிறிதளவேனும் அறிந்தவர்களுக்கு வேண்டுமானால் "கடற்கோள்" பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கலாம்.

இருப்பினும், இப்போது இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்வதற்கு ஒன்றுமில்லை...

"தமிழ்" என்ற சொல் ஆங்கிலத்தில் "டமில்" (Tamil) என்று உச்சரிக்கப்பட்ட ஒரே காரணத்தினாலேயே, இன்று நம்மில் பலரும் அவ்வாறே உச்சரிக்கும் மிகக் கொடுமையான காலகட்டத்தில், பிற அருந்தமிழ்ச் சொற்கள் இங்கே பலருக்குத் தெரியாமல் போனதைப் பற்றியெல்லாம் பெரிதாகக் கவலைப்படுவது அவசியமற்றது.

ஆங்கிலம் உட்பட பிற மொழிகளிடமிருந்து பெற்ற திசை மற்றும் கலைச்சொற்களை மட்டும் தமிழில் பயன்படுத்தியவரையில் மொழியில் சேதம் ஏற்படவில்லை.

எப்போது அவற்றையெல்லாம் தாண்டி அனைத்திற்குமே ஆங்கிலச் சொற்களைச் செருகப் பழக்கப்பட்டோமோ... அப்போதிலிருந்தே மொழி சிதையத் தொடங்கியது. தமிழ் விட்டுப்போனது. பல தமிழ்ச் சொற்கள் நினைவுகளிலிருந்து மறைந்து போயின. "தமிங்கலம்" (Taminglish) செழித்து வளர்ந்தது.

திசை மற்றும் கலைச் சொற்களைத் தமிழில் பயன்படுத்துவது வேறு... ஆங்கிலச் சொற்களால் தமிழைத் "தமிங்கலம்" (Taminglish) ஆக்குவது வேறு...

எடுத்துக்காட்டாக, "லாரி (Lorry) வாடகை எவ்வளவு ?" என்று கேட்பதற்கும், "லாரி (Lorry) ஃப்ரைட் (Freight) எவ்வளவு ?" என்று கேட்பதற்கும் வேறுபாடு உண்டு.

முன்னதைத் தமிழ் என்று ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், பின்னதை அப்படி ஏற்றுக்கொள்ள முடியாது. அது "தமிங்கலம்" (Taminglish).

இங்கே "லாரி" மட்டுமே கலைச் சொல்... "ஃப்ரைட்(Freight) " என்பது ஆங்கிலம்.

கலைச்சொல் என்பது அறிவியல் சார்ந்தது. அறிவியல் வளர்ச்சியோ இன்று பெரும்பாலும் மேலை நாடுகளை மையம் கொண்டது.

நவீன அறிவியலின் மீதான ஆளுமை கடந்த சில நூற்றாண்டுகளாகவே நம்மிடம் இல்லை.

எனவே, நவீன அறிவியலால் மனித இனம் இன்று பெற்றிருக்கும் எந்திரங்கள், கருவிகள், பயன்பாட்டுப் பொருட்கள் அனைத்திற்குமான கலைச் சொற்கள் பொதுவாக ஆங்கிலத்திலேயே வழங்கப்பட்டு வருவதுதான் இப்போது உலகமெங்கும் இருக்கும் நடைமுறை.

அந்த வகையில் அவற்றை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

கலைச்சொற்களைத் தமிழில் உருவாக்குகிறோம்... தமிழ்ப் படுத்துகிறோம் என்று இறங்கி, அதையும் சரியாகச் செய்யாமல் சிலர் மொழியைப் படுத்தியெடுப்பதைக் காண்கிறோமே... அதற்கு மூலச் சொல்லே, அது எந்த மொழியாயினும் மேன்மையானது.

சில கலைச்சொற்கள் அழகாகத் தமிழாக்கம் செய்யப்பட்டிருந்தாலும், பல கலைச் சொற்கள் தமிழாக்கத்தில் தடுமாறிக் கொண்டிருப்பதென்னவோ உண்மை.

உதாரணமாக, "கம்ப்யூட்டர்"(Computer)... முதலில் "கணிப்பொறி"யாகிப் பின்பு "கணினி" எனவும், "டெலிவிஸன்" (Television)... "தொலைக்காட்சி" எனவும், "டெலிஸ்கோப்" (Telescope)... "தொலைநோக்கி" எனவும் சரியான பதத்தில் தமிழாக்கமாகியிருப்பினும்... பல கலைச்சொற்களை நாம் உச்சரிப்பிற்கு இலகுவாகவோ, கருத்திற்குச் சரியானதாகவோ தமிழ் உருவாக்கம் செய்யவில்லை என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

இதற்கு உதாரணமாக, "ட்ரெயின்" (Train) என்பதையே எடுத்துக் கொள்ளலாம்...

அறிமுகமான புதிதில் அதன் நீராவி எந்திரத்தின் புகையை வைத்துப் "புகை வண்டி" என்றும், காலப்போக்கில் அத்தகைய எந்திரமெல்லாம் வழக்கொழிந்து இப்போது மின்சார எந்திரம் வந்தபிறகு "தொடர் வண்டி" என்றும் மாற்றி மாற்றித் தமிழாக்கத்தில் குழப்பத்தான் முடிந்ததே தவிர, இன்னும் சரியான சொல் அதற்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அதற்குப் பேசாமல் "ட்ரெயின்" (Train) என்றும், அதன் பாதையைக் கருத்தில் கொண்டு ஆங்கில வழக்கில் கூறும் "ரயில்" (Rail) என்றும் அப்படியே தமிழில் எடுத்துக்கொள்வது நன்று.

அதேபோல், "பஸ்" (Bus) என்பதற்குத் தமிழில் "பேருந்து" என்று நம்மால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டாலும், "பேருந்து" என்பதை "பஸ்" (Bus)-க்கு மட்டுமே பொருந்தும் பதமாக எடுத்துக்கொள்ள முடியாது.

"பேருந்து" என்பதன் காரணப் பெயர்ப்படி பார்த்தால் நாம் "லாரி" (Lorry) யையும் "பேருந்து" என்றுதான் கூறவேண்டியிருக்கும். மாறாக அதை "சரக்குந்து" என்று கூறினால் அது பொருள் பிறழ்ச்சி மட்டுமல்ல , வேடிக்கையான உச்சரிப்பும்கூட...

இப்படி அன்றாடம் நம்மோடு பழகிப்போன "பஸ்" (Bus), "லாரி" (Lorry) போன்றவற்றிற்குக் கூட இன்னும் சரியானபடி தமிழ்ச் சொற்களை உருவாக்கவில்லை என்கிற நிலைதான் இங்கே...

வேண்டுமானால் இவற்றிற்கு முறையே "பேரூர்தி"மற்றும் "சரக்கூர்தி" போன்ற சொல்லாக்கங்களைக்கூட ஓரளவு நெருக்கமானதாக ஏற்றுக்கொள்ளலாம்.

அப்படியானால், அந்த வரிசையில் அடுத்து வரும் "வேன்" (Van) மற்றும் "கார்" (Car) போன்றவற்றிற்கு என்ன சொல்வது...?

அதிலும், "கார்" (Car)-க்கு "சொகுசு ஊர்தி", "மகிழுந்து" என்றெல்லாம் எதை வைத்துத் தமிழாக்கம் செய்தார்களோ தெரியவில்லை... இயல்போடு ஒட்டாத சொல்.

இதுபோல ஏராளமான சொற்கள் தமிழாக்கத்தில் பொருள் தடுமாற்றத்துடன்தான் புழங்கிக்கொண்டிருக்கின்றன.

தமிழ்ச் சொற்கள் எப்போதுமே அதனதன் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு அமையும் தன்மை கொண்டிருப்பதால்,சில தருணங்களில் பிற மொழிச் சொற்களின் தமிழாக்கங்கள் நமக்கே ஒருவித பொருந்தா உணர்வை ஏற்படுத்துவது உண்மை.

ஒன்று... சரியாகத் தமிழாக்கம் செய்ய வேண்டும் அல்லது அதன் மூலச்சொல்லை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சில சொற்களை அப்படி ஏற்றுக்கொள்வது தமிழாக்கத்தை விடவும் நன்றாகவே இருக்கும். அதில் மாற்றுக் கருத்தே வேண்டியதில்லை.

அது முரண்பட்ட செயலும் கிடையாது.

"தமிங்கலம்" (Taminglish) மட்டுமே முரணானது. அது மட்டுமே இங்கே கவனத்திற்குரியது.

பல நூற்றாண்டுகளாகத் தமிழில் ஊடுருவிப் பேராதிக்கம் செலுத்த முனைந்த "வடமொழி" (சமஸ்கிருதம்) கூட இங்கே ஆங்கிலத்தைப் போல் சாதிக்கவில்லை.

பல தமிழ்ச் சொற்களை அது புழக்கத்திலிருந்து இடம்பெயர்த்தாலும், இன்று நாம் தமிழ்ச் சொற்கள் எனக் கருதிப் பேசும் பல சொற்கள் "வடமொழிச் சொற்களாகவே" அமைந்து விட்டாலும் காலப்போக்கில் தமிழின் பன்முகத் தன்மைக்கு ஈடுகொடுக்க முடியாமல் அது வழக்கொழிந்துதான் போனது. இறை வழிபாடு மற்றும் சடங்குகள் என்கின்ற அளவோடு குறுகித்தான் நின்றது.

வடக்கிலோ அது ஹிந்தி (Hindi), மராத்தி (Marathi) போன்று பல கிளை மொழிகளை ஈன்று விட்டு, நடைமுறையிலிருந்து மறைந்து ஏட்டளவில் சுருங்கி விட்டது.

ஆனால், மிகச் சில நூற்றாண்டுகளே பழக்கப்பட்ட "ஆங்கிலம்" அதை வெகு எளிதாகச் சாதித்திருக்கிறது என்றால், "தமிழர்கள் அவ்வளவு பலவீனமானவர்களா ?" என்கிற அதிர்ச்சியூட்டும் கேள்வியை நம்மால் தவிர்க்கவே முடியாது.

தமிழ் - ஒரு வரலாற்றுப் பயணம்
ஆங்கிலம் கலவாத தமிழ்ச் சூழலைக் காண வேண்டும். அப்படியோர் ஆசை எனக்குண்டு. அப்படியானால், அதற்குச் சில நூற்றாண்டுகள் பின்னோக்கிப் போகவேண்டும்.

எம்மொழிக் கலப்படமும் அற்ற முழுமையான தமிழ் பேசும் தமிழகத்தையும் காண வேண்டும்... அதற்கோ பல நூற்றாண்டுகள் பின்னோக்கி "வடமொழி" ஆதிக்கமெல்லாம் கடந்து செல்லவேண்டும்.

அது ஒரு பன்னெடுங்கால வரலாற்றுப் பயணம்...

இங்கேதான் ஒரு "கால எந்திரத்தின்" தேவையினை, அது கற்பனையாயினும் எண்ணி அவாவுகிறது மனம்.

இயல்பான தமிழ்ச் சூழலைக் காண்பதற்கெனவே, பல்வேறு நூற்றாண்டுகளுடே... பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து பயணிக்கத் துடிக்கிறது.

குமரி மற்றும் பஃருளியாற்றின் கரைகளில் தொடங்கி சிந்து வரை ஒரு தீராத பயணம்... பழந்தமிழகத்தின் எழில்மிகு காவிரி, வைகை, பொருணை தீரங்கள் வரை வாழ்ந்து திளைக்கும் வேகம்...

தென்மதுரை தொடங்கி, கபாடபுரம் கண்டு, சங்ககால மதுரை வரை முச்சங்கங்களிலும் ஒரு புலவனாகிடும் தாகம்...

வானியல் முதல் வாழ்வியல் வரை... பல்துறைகளிலும் வியத்தகு அறிவு படைத்த உலகின் அறிவியல் முன்னோடிகளாம் நம் தமிழ்ச் சான்றோரைக் காணும் ஏக்கம்...



விண்ணறிவிலும், மெய்யறிவிலும் உலகிற்கே ஆசான்களாகத் திகழ்ந்த நம் மெய்யறிஞர்களின் சீடனாகிடும் நோக்கம்...


"இயற்கை கொஞ்சும் சேர நாட்டில் சில காலம்... இயற்கையும் வியக்கும் சோழ நாட்டில் சில காலம்... தமிழும், வளமும் செழிக்கும் பாண்டிய நாட்டில் சில காலம்... 'தமிழரிலிருந்து வந்தவர்தானா ?' என்கிற விடை தெரியாத கேள்வி இருப்பினும், தமிழராகவே இங்கே தொண்டை மண்ணில் கோலோச்சி, பன்னெடுங்காலம் தமிழகத்தைக் கட்டியாண்டு, தங்களின் ஆட்சிக் காலத்தைக் கலைகளின் எழுச்சிக் காலமாக வரலாற்றில் பதித்த பல்லவரின் தேசத்தில் சில காலம்... கொடைத் திறம் ஓங்கி வளர்ந்த கடையெழு வள்ளல்களின் மண்ணில் சில காலம்..." என நீளும் அந்த நெடும் பயணத்திற்கு முடிவுதான் எது...?!



காலத்தின் எண்ணற்ற பக்கங்களில் உறைந்து கிடக்கும் தன்னிகரற்ற தமிழரின் வரலாறுகளை நோக்கிய பயணங்களில் மட்டுமே கண்டறிய முடியும், வெகு எளிதாக நாம் இன்று சிதைத்துப் போட்டுக்கொண்டிருக்கும் நம் தாய்மொழியின் மெய்ப் பிரவாகத்தை...!!!

அதற்குக் "கால எந்திரம்" என்பது வேண்டுமானால் வெறும் கற்பனையாக இருக்கலாம்... ஆனால், காலத்தின் கூற்றுகள் உண்மை.

அதை வெளிச்சமிட்டுக் காட்டுவதற்கென நம்மிடம் இப்போதிருப்பவை... அயலாராலும், நம் அலட்சியத்தாலும் அழிந்தது போக எஞ்சியிருக்கும் மிகச் சொற்ப வரலாற்று ஆவணங்களும், மிகச் சிறிய அளவில் செய்யப்பட்ட மொழி மற்றும் தொல்பொருள் ஆய்வுகளும் மட்டுமே...


அவற்றில் இன்றுவரை வெளிப்படையாக இருக்கும் சிந்து வெளி நாகரிகம் பற்றிய ஆய்வுக் குறிப்புகளே தமிழருக்கு அரியதொரு ஆதாரம்.

சிந்து வெளி ஆய்வுகள்... அதில் அடுத்தடுத்து வெளிவந்த பிரமிப்பூட்டும் உண்மைகள்...

அதுவரை தமிழர் வரலாறு குறித்து அயலார் பொய்யாகப் புனைந்திருந்த கூற்றுக்களெல்லாம் சிதறிப் போயின. உலகின் அத்தனை வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் மொழியியல் வல்லுநர்களின் பார்வைகளும் தமிழரை நோக்கித் திரும்பின. தமிழரின் வரலாறு திருத்தப்பட்டது.


ஆனால்,அந்தத் திருத்தங்கள் "சிந்து வெளியின் தொடக்கம் என்கிற எல்லையோடு முடிந்துவிடாது" என்று கூறி, அதையும் கடந்து காலவெளியில் இன்னும் போகவேண்டிய தூரத்தை வலியுறுத்தும், அவ்வப்போது அங்கங்கே வெளிப்படும் சான்றுகள்தான் ஆய்வாளர்களை மேலும் திகைத்திட வைக்கும் உண்மை.

இங்கே சிந்து வெளியின் காலமே உலகில் தமிழரின் ஒப்புயர்வற்ற தொன்மையைக் கூறப் போதுமானாலும், இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்கின்றன, இன்றைய தமிழகத்திற்குத் தெற்கே கடலடியில் மறைந்திருக்கும் உலகின் ஆதிகாலம் தொட்டுவரும் தமிழரின் தொன்மை கூறும் படிவங்கள்.

தமிழகத்தின் ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு போன்ற இடங்களின் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள் படிவங்களே அதற்கான ஆதாரத் துளிகள்... தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டிய கடலாய்வின் அவசியத்தை வலியுறுத்தும் காரணிகள்.


"தமிழர் வரலாற்றின் தொடர்ச்சியில், காலத்தின் நீட்சியில் ஆங்காங்கு ஒரு சில புள்ளிகளிலிருந்தே பிரிந்து தொடங்குகிறது உலகில் பிற மாந்தரின் நாகரிகங்கள்" என்கிற ஆணித்தரமான வாதங்களுக்கு இப்போதுள்ள மொழியியல் ஆய்வுக்குறிப்புகளே போதிய சான்றுகளாக இருப்பினும், அணுவளவும் மறுமொழி எழாத அளவிற்கான தீர்க்கமான ஆதாரங்கள் மண்ணுக்குள்ளும், கடலுக்குள்ளும் உறங்கிக்கொண்டிருக்கின்றன என்பது தமிழறிஞர்களின் கூற்று மட்டுமல்ல, உலகில் நடுநிலையான அனைத்து மொழியியல் வல்லுநர்களின் கூற்றும் கூட.

இது குறித்துச் சில பல விவாதங்களும், மறுதலிப்புகளும் எழலாம்... ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்ட கருத்துகளில் பல்வேறு முரண்பாடுகள் தோன்றலாம்.

இருப்பினும், இவையனைத்திலும் ஊடுருவி நாம் காணக்கூடிய பொதுவான இழையோட்டம் மட்டும் ஒன்றே ஒன்றுதான்... "தமிழின் தொன்மை, எந்தவிதத்திலும் மறுக்க முடியாதது".

ஆனால், இத்தகைய தன்னிகரற்ற வரலாறும், சிறப்பும் "ஏதோ ஒரு தேசத்தில் , யாரோ சில மனிதர்களைப் பற்றியது" என்கிற அளவில்தான் கடந்து போகின்றன அத்தகைய வரலாற்றை நிகரற்ற பெருமையாகக் கொண்ட, பெரும்பாலான தமிழ் மக்களின் சிந்தனையும், போக்கும்...

வரலாற்று அறிவு
வரலாற்றில் ஆரியர் தொடங்கி ஆங்கிலேயர் ஆதிக்கம் வரை அந்நியர் பலரிடம் அடிமைப்பட்ட இந்த இனம் தன் வரலாற்றை இழந்ததன் பலன், இன்று மொழியையே தொலைத்துக் கொண்டிருப்பது வரலாற்றுச் சோகங்களில் ஒன்று என்று சொன்னால் அது மிகையாகாது.

அந்நியரிடமிருந்து மீண்ட பின்பும், வரலாற்றை மீட்டெடுக்க முயலாததின் பலன், வரலாற்றைச் சரியான முறையில் கல்வியில் கொண்டு செல்லாததன் பலன், இன்று அது தன் தாய்மொழியையே இழித்தும், பழித்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

ஒரு இனம் தன் தாய்மொழியை மதிப்பதற்கு நெடிய வரலாறோ, வரலாற்றுப் பெருமைகளோ வேண்டும் என்பது கூட அவசியமில்லை. "தாய் மொழி" உணர்வும், அறிவும் மட்டுமே அவசியம்.

உலகில் அப்படி எந்த வரலாற்றுப் பெருமைகளும் இல்லாத மொழியினர் கூடத் தங்கள் தாய்மொழியைப் புறந்தள்ளியதில்லை.

ஆனால், எந்த ஒரு மொழிக்கும் இல்லாத ஒப்பற்ற வரலாற்றையும், தொன்மையையும், பெருமையையும் தம் தாய்மொழியான "தமிழ்" பெற்றிருந்தும்... தமிழருக்கு அதன் மேல் எந்தவித மரியாதையும், உணர்வும் இல்லை என்பதுதான் வேதனை.

வரலாறு என்பது கடந்தகாலத்தைக் குறித்த வெறும் செய்தித் தொகுப்பு அல்ல. அது நடப்புச் சமூகத்தின் வாழ்வியலுக்கான பாடம்.பல்வேறு தலைமுறைகளுக்கிடையே பண்பாடு மற்றும் நெறிமுறைகளைக் கடத்த உதவும் பாலம்.

பண்டைய தமிழகத்தின் வரலாறு அதைத்தான் செய்கிறது. அதன் நெடுகிலுமான பதிவுகளும் அதைத்தான் மையமாகக் குறிப்பிடுகின்றன. ஆனால், அதிலிருந்து பாடம் படிக்கத்தான் நமக்கு விருப்பமில்லை.

அதேசமயம், இன்றைய தமிழினத்தைக் குறித்து நாளைய தலைமுறைகள் படிக்கப் போகும் வரலாற்றிலோ, கற்றுக்கொள்வதற்கு அது போன்ற பாடங்களே இருக்கப் போவதில்லை.

ஒரு சமூகம் அறுத்தெறிய வேண்டிய வாழ்க்கைமுறைகளை வேண்டுமானால் எதிர்காலச் சந்ததியினர், இன்றைய நமது வரலாற்றில் கண்டறிய முற்படலாம்.

தமிழ் வரலாற்றின் ஒளிமயமான பக்கங்கள் பண்டைய தமிழரால் உருவானது. அதன் இருண்ட பக்கங்கள் அந்நியரால் ஏற்பட்டது. ஆனால், அவற்றையடுத்த இழிவான பக்கங்கள் இன்றைய தமிழரால் எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது.

"தமிழின்" வரலாற்றுப் பெருமைகள் என்று கூறி இங்கே நாம் மொழி ஆணவத்தை வலியுறுத்த வரவில்லை. மொழி வெறியைத் தூண்ட வரவில்லை. மற்ற மொழிகளைத் துச்சமெனக் கருதும் எண்ணங்களை விதைக்க வரவில்லை.

தொலைந்து கொண்டிருக்கும் ஒரு இனத்திற்கு அதன் மெய் முகம் காட்டும் ஊடகமாக மட்டுமே நின்று அதன் கடந்தகால வரலாற்றை நாம் இங்கே குறிப்பிட்டுக் காட்டுகிறோம்... அவ்வளவே.

உலகின் அனைத்து மொழிகளுக்கும் அவையவைகளுக்கேயுண்டான அழகும், செழிப்பும் நிச்சயமாக உண்டு. அவற்றை நாம் ஒதுக்கலாகாது.

ஆங்கிலத்தையே எடுத்துக் கொண்டால் ஒரு மொழி என்கிற அளவில் அதற்குண்டான மரியாதையையும், அதன் அழகையும் எவரும் புறந்தள்ளிவிட முடியாது.

தாய்மொழியோடு பிற மொழிகளையும் கற்றல் என்கிற அளவில் ஆங்கில மொழியறிவும் சரி... பிற மொழியறிவும் சரி... வெகு நிச்சயமாக போற்றுதலுக்கும், மதிப்பிற்கும் உரியது.

ஆனால், எந்த மொழியறிவையும் ஒருவர் தன் தாய்மொழியை மிதித்துப் பெறுவதில் அந்தப் போற்றுதலுக்கு இடமில்லை.

அப்படியொரு எண்ணம் இருக்குமானால் அது அவரவரின் அறிவீனத்தின் வெளிப்பாடாக மட்டுமே இருக்கும். அது தனியொருவரின் பிழைப்புக்கும், பகட்டுக்கும் வேண்டுமானால் பயன்படலாம்... வாழ்க்கைக்குப் பயன்படாது.

அது அவர்களின் தாய்மொழியை மட்டுமல்ல... வாழ்க்கைத் தடங்களையே அழிக்கக்கூடியது.

அதைத்தான் இப்போது தமிழினம் செய்துகொண்டுள்ளது.

ஆனால், அதிலும் ஒரு முரண்பாடு... 'தமிழினம் கொள்ளும் பெருமை பன்மொழியறிவில் அல்ல, ஆங்கிலத்தில் மட்டுமே' என்பதுதான்.

ஒருவர் எத்தனை மொழிகளைக் கற்று வைத்திருந்தாலும் அவற்றில் ஆங்கிலம் இல்லையென்றால் அவரது பன்மொழித் திறனெல்லாம் தமிழரிடத்தில் பெருமைக்கு உதவாது.

ஆங்கிலம் இருந்தால் மட்டுமே எத்தகைய பன்மொழித் திறனும் இங்கே அங்கீகரிக்கப்படும்.

தமிழரில் ஒருவர் இங்கே தவறான தமிழில் உரையாடலாம், அதில் பிழையில்லை. பிற மொழிகள் பயன்படுத்தும்போதும் அவற்றில் தவறு செய்யலாம், அதில் குற்றமில்லை.

ஆனால், ஆங்கிலத்தில் மட்டும் தவறு செய்யக்கூடாது. அப்படி மட்டும் செய்துவிட்டால் தமிழரின் பார்வையில் அவர் ஓர் "பாமரன்".

இன்னும் சொல்லப்போனால், ஆங்கிலம் என்பது ஒரு "மொழி" என்பதே நம்மில் பலருக்குத் தெரியாத அளவிற்கு அதன் மோகம் கண்களை மறைத்திருக்கிறது.

முன்பே சொன்னது போல், ஆங்கிலம் என்பது "அறிவு"... அதுதான் "உலகம்"... அதுதான் "உயர்வு"... அதை நோக்கித்தான் "வாழ்க்கை"... மொத்தத்தில் அவர்களின் மனக்கட்டமைப்பு இப்படியாகவே அமைந்துவிட்டது.

"வெறும் மொழிக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் ஏன்...?" என்று தாய்மொழி உணர்வு குறித்துப் பரிகசிக்கும் இவர்களுக்குச் சில உண்மைகள் உறைப்பதில்லை.

அது ஒரு இனத்தின் வாழ்வியல் மற்றும் உலகியலின் உயிர்நாடி... தனியொரு மனிதன் மற்றும் சமூகத்தின் பண்பாட்டுத் தளம்...

அந்த வகையில் நமக்குத் "தமிழ்"... ஒவ்வொரு இனத்தவருக்கும் அவரவர் "தாய்மொழி"...

இது எந்தவகையிலும் மாறுபாடற்றது.

உடை முதல் நடை வரை ஒரு இனம் தன் பண்பாடுகளைத் தொலைத்தால்கூட அது தற்காலிக மயக்கம்தான்... காலப்போக்கில் அவர்தம் தாய்மொழி அந்த மயக்கங்களை உள்ளத்தளவிலேனும் நீர்த்துப் போகச் செய்யும்.

ஆனால், தாய்மொழியையே தொலைத்துவிட்டால்...?

அந்த இனத்தின் வாழ்க்கையே நீர்த்துப் போகும்.

ஆனால், சுயத்தைத் தொலைத்துவிட்டு அடிமைகளாக ஆங்கிலம் துதிக்கும் பலருக்கு "அதுவும் வெறும் மொழிதான்... தனக்கென்று சுய அடையாளம் கூட இல்லாத மொழி... அதுவும் அந்நிய மொழி... அது குறித்துத் தனக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் ஏன்...? அதற்கு இங்கு கட்டுமானம் ஏன்...? பொய்யான பெருமிதம் ஏன்...? " என்கிற சிந்தனைகள் எழாததுதான் வியப்பு.

தமிழுக்குத் திதி
பல காலம், பல மொழி ஆதிக்கத்தைக் கடந்து வந்த இந்த இனம், இறுதியில் "ஆங்கிலம்" எனும் மொழியிடம் அனைத்து வகைகளிலும் தன்னையிழந்து கொண்டிருக்கிறது.

தமிழுக்கும், தமிழருக்குமான உறவுகள் மெல்ல மெல்ல அறுந்து கொண்டிருக்கின்றன. வாழ்க்கை சிதைந்து கொண்டிருக்கிறது.

எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் மக்கள் தமிழுக்கு அதிகபட்சமாகக் கொடுக்கும் மரியாதை என்பதே, விழா மேடைகளில் நிகழ்ச்சிகளின் துவக்கத்திற்குமுன் இசைக்கப்படும் "தமிழ்த்தாய் வாழ்த்து" மட்டும்தான். சில நிகழ்ச்சிகளில் அதுவும் இல்லை... தொடக்கம், முடிவு இரண்டிலுமே "தேசிய கீதம்"தான்.

எப்போதாவது இன்னும் சற்று மேலே போய், "தமிழ் வளர்ப்போம்" என்று முழங்கிக்கொண்டு, 'உலகத் தமிழ் மாநாடு', 'செம்மொழி மாநாடு' என்ற பெயர்களில் சிலர் நான்கைந்து நாட்கள் கூடி இறுமாந்து, உணர்ச்சிவயப்படுவதுண்டு என்றாலும் கடைசியில் அதன் பலனும் வெறும் விளம்பர அரசியல் கோலாகலம்தான்.

பலர் அதை ஏதோ வேடிக்கை பார்த்துவிட்டு "அடடா... என்ன அருமையான ஏற்பாடு... பிரம்மாண்டம்... என்ன கூட்டம்... அசத்திட்டாங்கப்பா...!" என்று இரண்டொரு நாட்கள் வியந்து பின் மறந்துவிட...

இன்னும் ஏராளமானோர் அந்த மாநாட்டு விடுமுறையில் ஆயாசமாகத் தொலைக்காட்சியிலும், செய்தித்தாள்களிலும் செய்திகளை மேய்ந்தவாறே "நாட்டுல இருக்கிற ஆயிரம் பிரச்னையில இந்த மாநாடெல்லாம் ரொம்பத் தேவையா...? சும்மாத் 'தமிளு தமிளு'ன்னு சொல்லிட்டிருந்தா... 'தமிள்' சாப்பாடு போட்டுருமாய்யா...? 'தமிளை' வெச்சிக்கிட்டு எவனாவது உருப்படமுடியுமாய்யா...?" என்று சிறிது நேரம் "தமிழை"த் "தமிளால்" காய்ச்சி எடுத்துவிட்டு, சிறிது நேரம் ஆங்கிலத்தைப் போற்றிப் பாடிவிட்டுப் பின் கடமையே கண்ணாக "நாட்டில் இருக்கும் ஆயிரம் பிரச்னைகளையும் தீர்ப்பதற்கான தீர்க்கமான வழிகளைத்" திரைப்படங்கள், தொடர்கள், கிரிக்கெட், தூக்கம் போன்றவற்றில் ஆழ்ந்து தீவிரமாகத் தேடத் தொடங்க...

ஏதோ தமிழின்மீது ஆர்வம் கொண்ட தமிழறிஞர் சிலர் மட்டும் மாநாட்டில் அங்கங்கே ஆளில்லா அரங்கங்களில் தமிழாய்வு செய்துவிட்டு, முடிவில் "சரி விடு... மீதியை அடுத்த மாநாட்டில் பார்த்துக்கொள்ளலாம்" என்று வெளிக்காட்டாத விரக்தியுடன் தங்களைச் சமரசம் செய்து கொண்டு அவரவர் ஊர் திரும்ப...

மொத்தமாகக் கூட்டிக் கழித்துப் பார்த்தால், அங்கு நடந்து முடிவது என்னவோ "தமிழுக்குத் திதி" கொடுக்கும் நிகழ்ச்சிதான்.

தமிழ் - இனி ...?
"ஒரு இனம் தாய்மொழியையே அழித்துவிட்டுத் தன்னை இன்னொரு இனமாகப் பரிணமித்துக் கொண்டது. உலகில் இதைச் சாதித்துக் காட்டிய அந்த முதல் மற்றும் ஒரே இனத்தவருடைய தாய்மொழியின் பெயர்... 'தமிழ்'...!" - நாளைய உலகம் படிப்பதற்கு இப்படியொரு விந்தையான வரலாறுதான் இன்று நம்மால் உருவாகிக்கொண்டு வருகிறது.

பல்லாயிரங்கால நெடுந்தூரப் பயணத்தையும், கட்டமைப்புகளையும் சிதறடித்த வெறும் நானூறு ஆண்டுகால அடிமைத்தனத்தில் விளைந்த நம் அடிமை மோகத்தின் வலிமை அத்தகையது.

இனி அத்தகைய கட்டமைப்புகளை மீட்டுக் கொண்டுவருவது எதிர்கால வரலாற்றிடம் மட்டுமே வைத்தாக வேண்டிய விடை தெரியாத எதிர்பார்ப்பு என்றாலும், நமக்கும் அதற்குமான தொடர்புகள் என்னவோ இன்று அற்றுப்போன நிலையில்...

அதற்கான நம்பிக்கை விதைகள் வெகு நிச்சயமாக நம்மிடம் இல்லை... இப்போதைக்கு இல்லை... கண்ணுக்கெட்டும் தூரம் வரையிலுமில்லை. ஒருவேளை அப்படியொரு மறுமலர்ச்சி எதிர்காலத்தின் ஏதோ ஒரு புள்ளியில் ஏற்படுமானால், அதைக் கண்டு லயித்து மகிழ அப்போது நாம் இருக்கப்போவதுமில்லை.

அது நிகழுமோ, நிகழாதோ தெரியாது. ஆனால், நாளை அந்தக் காலம் வரையிலோ அல்லது இனிமேல் எப்போதுமோ... வெட்கமேயில்லாமல் கொடுமையான ஒரு புது அத்தியாயத்தைத் தமிழினம் படைத்துக் கொண்டேயிருக்கும்.

அந்த அத்தியாயம் உலகிற்கு உரக்கச் சொல்லப்போகும் கூற்று மட்டும் ஒன்றே ஒன்றுதான். அது...

"ஆங்கிலம் - தமிழரின் தாய்மொழி...!!!"