Saturday 14 November 2015

ஜப்பான் மொழியின் மூலம் தமிழ் மொழி?

இயற்கையும் சரி, வரலாறும் சரி என்றுமே நமக்கு புரியாத புதிராகவே இருக்கும். சில வரலாற்று நிகழ்வுகள் நமக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தரக்கூடியவை. யாருமே இதுதான் நடந்தது என உறுதிபடக்கூற முடியாது. ஆனால் ஆராய்ச்சி மூலம் கிடைக்கும் பதில்கள் என்றுமே சுவாரஸ்யத்துடன் ஆவலையும் கொடுப்பவை. அதில் ஒன்றுதான் ஜப்பான் மொழியின் மூலம் எந்த மொழி? தமிழா?

ஜப்பான் மொழியின் எழுத்துமுறை சீன மொழியை அடிப்படையாகக் கொண்டது. அவ்வாறு சீன எழுத்துமுறை கலப்பதற்கு முன்பாகவே (கி.மு.500 - கி.பி 300களில்) 7000 கிலோமீட்டர் பயணம் செய்து ஜப்பானில் அரிசி விளைவிக்கும் முறையைக் கற்றுக்கொடுக்க சென்ற தமிழர்கள் மொழியையும் கற்றுக்கொடுத்திருக்க வேண்டும் அல்லது ஜப்பானிய மொழி தமிழிலிருந்து சொற்களைப் பெற்றிருக்க வேண்டும் என்பது ஓனோ அவர்களின் வாதம். அரிசியை உலகிற்கு (கிழக்கு நாடுகளுக்கு) விளைவிக்க கற்றுக்கொடுத்தவர்கள் தமிழர்கள். இதில் எவ்வித ஐயமும் கிடையாது.

ஜப்பானிய மொழியானது கி.மு.200க்கு முந்திய காலத்தில் ஆசியாவிலிருந்தோ அல்லது அருகிலுள்ள பசிபிக் தீவுகளிலிருந்து வந்தவர்களிடமிருந்தோதான் தோன்றியிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. (ஆதாரம் - விக்கிபீடியா)


திருமணத்திற்கு பெண் பார்க்கும் படலம்:

முந்திய காலங்களில் ஜப்பானில் பெண் பார்க்க மூன்றுநாட்கள் பெண்ணின் வீட்டிற்கு செல்வர். மூன்றாவது நாள் பெண்வீட்டார் அரிசி இனிப்புப்பண்டம் (SWEET CAKE) கொடுத்தால் திருமணத்திற்கு சம்மதம் என்று பொருள். இது தமிழில் பழங்காலம் மட்டுமல்ல இன்றும்கூட இருக்கிறது. என்ன பெண் பார்க்கும் நாட்கள் ஒன்றாக சுருங்கிவிட்டது.

ஜப்பானிய-தமிழ் மொழியைப்பற்றி ஆராய்ந்த ஓனோ அவர்களைப்பற்றி அறிந்தால் மட்டுமே இதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். தமிழ் ஓசை களஞ்சியத்திலிருந்து அவர் வரலாறு (18.01.2009)

தமிழ் - ஜப்பானிய மொழி பற்றி ஆராய்ந்த அறிஞர் சுசுமு ஓனோ:

டோக்கியோவில் 23.08.1919 இல் பிறந்த சுசுமு ஓனோ அவர்கள் பழங்கால ஜப்பானிய மற்றும் தமிழ் மொழி ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றிற்கிடையேயான ஒற்றுமைகளை வெளிக்கொணர்ந்தவர். 1943ம் ஆண்டில் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். 1944ல் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பணிபுரியத் தொடங்கினார். 1952 ஆம் ஆண்டு காக்சுயின் பலைகலைக்கழகத்தில் துணைப்பேராசிரியராகப் பணியில் உயர்ந்தார்.அந்தப் பணியுடன் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் 1953 இல் விரிவுரை நிகழ்த்தியுள்ளார். 1960 இல் காக்சுயின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியுயர்வு பெற்றுத் தொடர்ந்து அங்குப் பணிபுரிந்தார்.

பதின்மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு பழஞ்சுவடியை ஆராய்ந்து இவர் வெளியிட்டதைச் ஜப்பானிய அறிஞர்கள் போற்றி இவருக்கு முனைவர் பட்டம் வழங்கினர். இந்த ஆய்வு 1950 இல் ஓர் ஆராய்ச்சி இதழில் வெளிவந்துள்ளதாக அறிஞர் பொற்கோ குறிப்பிடுவார். கியோட்டோ பல்கலைக்கழகம் வழியாக இவர் முனைவர் பட்டம் பெற்றவர்(1952). சுசுமு ஓனோ பழஞ்சுவடிகளை ஆராய்வதில் பேரறிவு பெற்றவர். சொல்லாராய்ச்சி, அகராதிகளில் ஈடுபாடு உடையவர்.இவர் மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட ஜப்பானிய அகராதியின் படிகள் ஜப்பானில் பல்லாயிரக்கணக்கில் விற்கப்பட்டன.1981 இல் இவர் வேறொரு அறிஞருடன் இணைந்து உருவாக்கிய ஜப்பானிய ஒருபொருட் பன்மொழி அகராதி ஓர் ஆண்டில் இலட்சம் படிகள் விற்றனவாம்.

"ஜப்பானிய மொழியின் தோற்றம்" என்ற ஒரு நூலை உருவாக்கி 1957 இல் வெளியிட்டவர். இந்த நூல் ஐந்து இலட்சம் படிகள் விற்றனவாம்.இந்த நூலின் வருகைக்குப் பிறகு ஜப்பான்மொழி பற்றி அறியும் வேட்கை ஜப்பானியர்களுக்கு உருவானது.

ஓனோ அவர்கள் பதினொரு ஆய்வு நூல்களை வெளியிட்டவர். ஏழு நூல்களைப் பிற அறிஞர்களுடன் இணைந்து பதிப்பித்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். பேராசிரியர் சிங்கிச்சி காசிமொத்தோ அவர்களின் மேல் சுசுமு ஓனோ அவர்களுக்கு நல்ல ஈடுபாடு உண்டு.அவர் வழியாகவே ஜப்பானிய மொழியாராய்ச்சியில் ஓனோ அவர்கள் ஈடுபட்டார்.ஆய்வு ஈடுபாடும் மொழிப்புலமையும் கொண்ட ஓனோ அவர்கள் மொழிவரலாற்று ஆய்வு,இலக்கண ஆய்வு,தொன்மையான ஜப்பானிய இலக்கிய ஆய்வுகளில் நல்ல ஈடுபாடு உடையவர்.


1957ல் அவர் ஜப்பானிய மொழியின் மூலத்தை ஆராயத் தொடங்கினார். அவர் ஜப்பானிய மொழியைக் கொரியன் அய்னு மற்றும் அசுடுரேனேசியன் மொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தார். அந்த மொழிகளுடன் எந்த மரபு சார் தொடர்புகளும் அவரால் வெளிக்கொணர முடியவில்லை. இப்போது இவர் கவனம் திராவிட மெழிகளின் மீது பதிந்தது. பேராசிரியர் இமென்யு மற்றும் பொன். கோதண்டராமன் இவர்களின் தூண்டுதலால் இவர் ஜப்பான்-தமிழ் மொழியை ஆராயத் தொடங்கினார்.

இரண்டாம் உலகப் போரின் பொழுது கல்வித்துறைக்கு மிகப்பெரிய பங்களிப்புச் செய்ததையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.டோக்கியோ காக்சுயின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியாற்றிய சுசுமு அவர்கள் மொழிக்கல்வி உள்ளிட்ட பல ஆய்வுகளைச் செய்தவர்.தமிழ் மொழிக்கும் ஜப்பானிய மொழிக்கும் உள்ள உறவை 30 ஆண்டுகளாக ஆய்வு செய்து 1999 இல் தம் ஆய்வை நூலாக வெளியிட்டார். ஜப்பானிய மொழியில் வெளிவந்த அந்நூல் 20 இலட்சம் படிகள் விற்பனை ஆயின (நாம் நூல்களை அச்சிட்டுவிட்டு நூலகத்துறையின் ஆணைக்கு ஆண்டுக்கணக்கில் காத்துக்கிடப்பதை எண்ணி வருந்துக).

தமிழ் படிக்கத் தமிழகத்திற்கு வந்த சுசுமு ஓனோ அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிபுரிந்த முனைவர் பொற்கோ அவர்களிடம் முறையாகத் தமிழ் கற்றார். பின்னர் இரண்டு பேராசிரியர்களும் இணைந்து பல்வேறு ஆய்வுகளைச் செய்தனர்.1980 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகச்சிறந்த ஆய்வு முடிவுகளை வெளியிடும் அளவிற்குச் சுசுமு ஓனோ அவர்களுக்குத் தமிழ் - ஜப்பானிய மொழி உறவு பற்றிய உண்மைகள் வெளிப்படத் தொடங்கின.

1979 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜப்பானிய மாந்தவியல் கழகத்தின் சார்பில் "ஜப்பானிய மொழிகளின் தோற்றம்" என்ற தலைப்பில் ஓனோ அவர்கள் டோக்கியோவில் உள்ள ஆசகி மண்டபத்தில் உரையாற்றினார்.ஆசகி இதழில் இக்கட்டுரை வெளியானது.தமிழ் ஜப்பானிய மொழிகுறித்து வெளிவந்த முதல் கட்டுரையாக பொற்கோ இதனைக் குறிப்பிடுகிறார்.கெங்கோ என்ற இதழிலும் 1980 ஜனவரி முதல் செப்டம்பர் வரை ஓனோ அவர்கள் தமிழ்-ஜப்பானிய உறவு பற்றி எழுதினார்.இதன் விளைவாகத் தமிழ்- ஜப்பானிய மொழி உறவு பற்றி ஜப்பான் நாட்டில் ஒரு பரவலான அறிமுகம் ஏற்பட்டது.

ஆசகி என்ற நாளிதழில் வெளிவந்த கட்டுரை ஒன்றை ஜப்பானில் உள்ள இந்தியத்தூதரகம் சென்னைப்பல்கலைக்கழகத்தின் அந்நாள் துணைவேந்தர் முனைவர் தாமோதரனுக்கு அனுப்பியது.இதன்பிறகு துணைவேந்தரின் இசைவுடன் பொற்கோவும் ஓனோவும் இணைந்து தமிழ்- ஜப்பானிய மொழியாய்வில் ஈடுப்பட்டனர்.மடல்வழியாகஆய்வு முயற்சி நீண்டது.இந்த ஆய்வு பற்றி பொற்கோவுடன் கலந்துபேச ஓனோ அவர்கள் தனிப்பயணமாக 03.04.1980 இல் சென்னை வந்தார்.இரண்டு நாள் உரையாடலுக்குப் பிறகு ஜப்பான் திரும்பினார்.

தமிழ் ஜப்பானிய மொழித்தொடர்பு பற்றிய பல உண்மைகள் புரியத் தொடங்கியதும் ஜப்பானிய ஒலிபரப்பு நிறுவனம்(Nippon Hoso Kyokay) )கள ஆய்வுப்பணிக்கு உதவ முன்வந்தது.ஆசகி என்ற செய்தித்தாள் நிறுவனமும் உதவ முன்வந்தது.11.09.1980 இல் ஜப்பானிலிருந்து களப்பணிக்குக் குழு புறப்பட்டது. ஒருமாத காலம் இந்தக்குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து களப்பணியாற்றித் தகவல் திரட்டியது.கள ஆய்வை முடித்துக்கொண்டு திரும்பிய ஓனோ அவர்கள் தம் குழுவினருடன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கலந்துரையாடினர்.பல்கலைக்கழக இசைவுடன் இந்தக் கலந்துரையாடலைச் ஜப்பான் என்.எச்.கே நிறுவனம் ஜப்பானிய தொலைக்காட்சிக்காகப் படம் எடுத்துக்கொண்டது.

தமிழகத்தில் களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள், தரவுகள் யாவும் ஒழுங்குபடுத்தப் பட்டு 01.11.1980 இல் ஜப்பான் நாட்டில் ஒளிபரப்பானது. ஒன்றரைக் கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர். மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டன. தமிழ்மொழியுடனும் தமிழ்நாட்டுடனும் பலவகையில் தொடர்புகள் தங்கள் மொழிக்கு உள்ளது என்று உணர்ந்ததே ஜப்பானியர்களின் மகிழ்ச்சிக்ககுக் காரணம். இத்தகு பெருமைக்குரிய ஓனோவுக்கு மதுரையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டுக்குச் சிறப்பு அழைப்பு அனுப்பத் தமிழக அரசு முடிவுசெய்தது.மாநாட்டின் பொது அரங்கில் இவர் கட்டுரை தமிழ் ஜப்பானியமொழிக்கு இடையிலான உறவு பற்றி படிக்கப்பட்டது.இந்து.எக்சுபிரசு உள்ளிட்ட ஏடுகள் புகழ்ந்து எழுதின.இவ்வாய்வு முடிவில் உடன்பாடு இல்லாமல் சில அறிஞர்கள் இருந்துள்ளமையையும் அறியமுடிகிறது.


12.09.1980 ஆம் ஆண்டு இந்து நாளிதழில் "தமிழ் ஜப்பானிய மொழியில் திராவிடமொழிகளின் செல்வாக்கு" பற்றிய ஒரு கட்டுரையை எழுதினார். ஜப்பானிய மொழிகளின் வேர்ச்சொற்கள் தமிழில் இணைவதை விளக்க ஐந்நூறு சொற்களைச் சான்றாகக் காட்டி வேறொரு கட்டுரையும் வரைந்தார். இவையெல்லாம் தமிழுக்கும் ஜப்பானிய மொழிக்கும் உள்ள உறவுகளை விளக்கும் வகையில் அமைந்திருந்தன.இக்காலத்தில் "உயிரிடைப்பட்ட வல்லொலிகள்" என்ற தலைப்பிலும்,"மொழிமுதல் சகரம்" என்ற தலைப்பிலும் இவர் உருவாக்கிய ஆய்வுரைகள் சிறப்புடையனவாகும்.

ஓனோ அவர்கள் தமிழ் ஜப்பானிய உறவு பற்றிய தம் ஆய்வுகள் குறித்துத் திராவிட மொழிகளைப் பற்றி நன்கு ஆராய்ந்த எமனோ,பர்ரோ அவர்களின் கருத்தறிய விரும்பினார். அதன்பொருட்டு அமெரிக்கா சென்று எமனோ அவர்களைக் கண்டு உரையாடினார்.எமனோ அவர்கள் மிக மகிழ்ந்து இவ்வாய்வைப் பாராட்டினார்.1981 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஓனோ அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகம் வந்து தம் ஆய்வைத் தொடர்ந்தார்."தமிழ் ஜப்பானிய ஒலி ஒப்புமை" என்ற ஒரு நூல் எழுதித் தம் ஆய்வை உலகிற்கு வழங்கினார்.


சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கு வந்தபிறகு பொற்கோ அவர்களின் நெறிப்படுத்தலில் பல வகையில் தம் ஆய்வுப்பணிகளை வரன்முறைப்படுத்தி ஈடுபட்டார். மொழி ஒப்பியல் வரலாற்றுக்கொள்கைகளை ஊன்றிப் படித்தார்.திராவிடமொழியியலில் வெளிவந்த நூல்களைக் கற்றார். ஆழமாகத் தமிழ்மொழியையும் இலக்கண இலக்கியங்களையும் அறிந்தார்.

தமிழ்மொழிக்கும் ஜப்பானிய மொழிக்கும் மொழிக்கூறுகளில் ஒப்புமை இருப்பது போலவே இலக்கியப் பாடுபொருளிலும் ஒற்றுமை உள்ளதை உணர்ந்தார்..நம் சங்க இலக்கியங்கள் போலச் ஜப்பானிய மொழியில் மங்யோசு என்ற தொகை இலக்கியம் உள்ளது.இரண்டு தொகைகளிலும் பாடுபொருள் ஒற்றுமை உள்ளது.தமிழ் ஜப்பானிய உறவுக்கு ஒலி அமைப்பு, சொல் அமைப்பு,சொற்றொடர் அமைப்பு ஆகியவற்றையும் தொல் இலக்கியங்களையும் சார்ந்து ஆய்வை வளர்த்துள்ளார்.ஒலியாலும் பொருளாலும் ஒப்புமை உடைய நானூறு சொற்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

(எ.கா)
நம்பு- நமு
யாறு- யற
நீங்கு-நிகு
உறங்கு-உரகு
கறங்கு-கரகு
அகல்-அகரு
அணை-அண
கல்-கர

எனச் சொல் ஒற்றுமை உள்ளன. சுசுமு ஓனோ அவர்கள் ஜப்பானிய அரசின் பரிசும் பாராட்டும் பெற்றவர்.

இலங்கைப் பேராசிரியர்கள் முனைவர் சண்முகதாசு,பேராசிரியர் மனோன்மணி சண்முகதாசு ஆகியோரும் சுசுமு ஓனோ அவர்களுடன் இணைந்து பணிபுரிந்துள்ளனர்.மொழியியல் ஆய்வில் வல்ல பேராசிரியர் அ.சண்முகதாசு அவர்களும் பண்பாட்டு ஆய்வுகளில் சிறந்த அவர்மனைவி மனோன்மணி அவர்களும் ஓனோ அவர்களின் ஆய்வுக்குப் பல வகையில் உதவியவர்கள். தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் திருவிழாவைப் போலச் ஜப்பானில் அறுவடைத் திருவிழா நடைபெறுவதை எடுத்துரைத்தவர் சுசுமு ஓனோ அவர்கள்.தமிழர்களின் திருவிழாவான பொங்கலைப் பற்றி ஆராயத் தொடங்கினார்.பொங்கலை ஒத்த அதே நாளில் ஜப்பானில் ஒரு விழா நடைபெறுகிறது.அதனைச் சிறிய புத்தாண்டு(Koshogatsu )என்பர்.விழா நாளில் கொங்கரா எனக் குரல் எழுப்புவர். எனவே இதனைக் கொங்கரா என்பர்.தமிழ்நாட்டுப் பொங்கலுக்கும் ஜப்பானிய கொங்கராவிற்கும் மொழிவகையிலும் பண்பாட்டு வகையிலும் தொடர்பு உண்டு என்பதை உணர்ந்தார். 1982 இல் தமிழகத்துப் பொங்கல் விழாவைக் கண்டு இது ஜப்பானில் கொண்டாடப்படும் பொங்கலுடன் நெருக்கமாக உள்ளதைக் கண்டு வியந்தார். நான்கு நாள் நடைபெறும் விழாக்களும் ஜப்பானில் நடைபெறும் விழாவும் எந்தவகையில் ஒற்றுமையுடையன எனக் கண்டு புலமை இதழில்(1981 டிசம்பர்) எழுதினார்.பழைனவற்றைக் கழித்தல்,சிறுபறை முழக்கல், அரிசியிட்டுப் பொங்கலிடுதல், வாசற்பொங்லன்று காக்கைக்குச் சோறிடல், கொங்கரோ கொங்க என்று கூவுதல் ஆகிய நிகழ்வுகள் ஜப்பானில் நடைபெறுகிறதாம். மாடுகளுக்கு நாம் உணவு ஊட்டுவதுபோல் ஜப்பானில் சில பகுதிகளில் குதிரைக்கு உணவு ஊட்டுவது உண்டாம்.


தமிழுக்கும் ஜப்பான் மொழிக்கும் இடையில் இலக்கிய,இலக்கண,கல்வெட்டு,நாட்டுப்புறவியல் செய்திகளுடன் உள்ள உறவையும் வெளிப்படுத்தியவர். ஜப்பானின் யாயோய் கல்லறைகளுடன் தென்னிந்தியா மற்றும் இலங்கையிலுள்ள (கி.மு. 1300300) காலப்பகுதி கல்லறைகளுடன் ஒப்பிட்டு அவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1990 களின் முற்பகுதியில் வெளியிடப்பட்ட அவரின் ஆய்வுமுடிவுகள் இரு பண்பாட்டுக்குமிடையில் இலக்கியம்,பண்பாட்டு நடைமுறைகள் உள்ளிட்டவற்றில் ஒற்றுமைத் தன்மைகள் வியக்கத் தக்க வகையில் இருந்ததை வெளிப்படுத்தின. இவருடைய பணியைப் பற்றி கமில் சுவலபில் அவர்கள் 1990 இல் சொன்னது : ஜப்பான் மற்றும் திராவிட மொழிகளின் ஒற்றுமையைத் தற்செயலானது என எளிதில் ஒதுக்கிவிட முடியாது. மற்றும் இது ஆழமான மரபு வழி ஒற்றுமையை நமக்குப் புலப்படுத்துகிறது. ஓனோவின் இந்த ஆராய்ச்சி ஒற்றுமையை மெய்ப்பிக்க முயற்சி செய்யும்.

சென்னையில் தங்கியிருந்தபொழுது அவர் எழுதி "உயிரிடை நின்ற வல்லினம்" என்ற கட்டுரை திராவிட மொழியியல் கழகத்தின் ஏட்டில் வெளிவந்தது.உலக அளவில் நடைபெற்ற பல்வேறு கருத்தரங்குகள் மாநாடுகளில் கலந்துகொண்டு தமிழ் ஜப்பானிய உறவுபற்றிய கட்டுரை படித்தவர்.தமிழகப்புலவர் குழு இவருக்குத் தமிழ்ச்சன்றோர் என்ற பட்டம் வழங்கிப் பாராட்டியுள்ளது.சென்னைப் பல்கலைக்கழகத்திற்குச் ஜப்பானிய மொழியைக் கற்பிக்க தில்லியிலிருந்து முனைவர் பாலாம்பாள் அவர்களை அழைத்துப் பணியமர்த்தம் செய்ததில் இவருக்குப் பங்கு உண்டு. 1999 இல் தமிழகம், இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து தமிழியல் மற்றும் மொழியியல் அறிஞர்களைச் ஜப்பானுக்கு அழைத்துத் தமிழ் ஜப்பானியமொழி உறவு பற்றிப் பேசினார் இதில் பொற்கோ ஒருங்கிணைப்பாளர். பேராசிரியர்கள் அகத்தியலிங்கம், செ.வை. சண்முகம், கி.அரங்கன், வ.ஞானசுந்தரம்,தங்க.மணியன் ஆகியோர் இந்தியாவிலிருந்தும், சண்முகதாசு, மனோன்மணி சண்முகதாசு இலங்கையிலிருந்தும்,மணியன் கிருட்டினன், கந்தசாமி, குமரன் மலேசியாவிலிருந்தும் சென்றனர். இந்த ஆய்வரங்க உரைகள் தொகுக்கப்பட்டுச் ஜப்பானிய மொழியில் வெளிவந்தன.29 ஆண்டுகள் தமிழ் ஜப்பானிய ஆய்வில் தொடர்ந்து ஈடுப்பட்ட ஓனோ அவர்களைச் ஜப்பானிய மக்களும்,ஆய்வறிஞர்களும் போற்றி மதிக்கின்றனர்.

தமிழ்க் கல்வி நிறுவனங்கள், தமிழ்அறிஞர்களுடன் பேராசிரியர் சுசுமு ஓனோ நீண்டகாலத் தொடர்புகளைப் பேணிவந்தார். ஜப்பானிய மாணவர்கள் பலரைத் தமிழ் மொழியைக் கற்குமாறு அவர் ஊக்குவித்தார்.தமிழுக்கும் ஜப்பானுக்கும் உறவுப்பாலம் அமைத்தார். தமிழ் மொழிக்கும் ஜப்பான் மொழிக்கும் இடையில் நெருங்கியத் தொடர்பு உள்ளதைப் பல்வேறு சான்றுகள் வழியாக உலகிற்கு வெளிப்படுத்திய பேராசிரியர் சுசுமு ஓனோ அவர்கள் தம் 89 ஆம் அகவையில் 14.07.2008 திங்கள் கிழமை டோக்கியோவில் இயற்கை எய்தினார்.அறிஞரை இழந்து தமிழுலகம் வருந்துகிறது.

டிஸ்கி 1 : இதுபற்றி ஜப்பான் டைம்ஸ் பத்திரிக்கையில் வந்த ஒரு கட்டுரை

டிஸ்கி 2 : சொற்கள், இலக்கணம், பொங்கல் திருவிழா, பெண்பார்க்கும் முறை என எல்லாமே இருமொழிகளிலும் ஒன்றாய் இருப்பதை வெறும் தற்செயல் என ஒதுக்கிவிட முடியாது. நிச்சயம் தொடர்பு இருக்க வேண்டும். இதில் நகைச்சுவை என்னவென்றால் இதுவரை தமிழ்பற்றி ஆராய்ந்து அதன் பெருமைகளைப் போற்றியவர்கள் வேற்றுமொழிக்காரர்களே! :-)

Thursday 12 November 2015

சங்கத்தமிழரின் உணவுமரபு



31.10.2014-தி.ஆ 2045-அவர்களுக்கு அப்போதுதான் திருமணமாகியிருந்தது. மிக இளவயது. இருவரும் தனிக்கு டித்தனம்போவதாக முடிவாகிவிட்டது. ஊரார் ஆசியுடன் குடித்தனத்தைத் தொடங்கியுமம் விட்டனர். துடித்துப்போ னா ள் மணப்பெண்ணின் தாய். தனிக்குடித்தனம் எப்படிச் சாத்தியம்? பொறுப்பேதுமின்றி துடுக்குத்தனத்துடன் உலா வித் திரிந்தவளால் தனக்குடித்தனம் நடத்த முடியுமா? அடுப்பங்கரையே தெரியாதவள் எப்படி ஆக்கிப் போடுவாள்?

தாய்மனதால் அமைதி கொள்ள இயலவில்லை. தன் தோழியை அழைத்து வேதனையைப் பகிர்ந்து கொண்டாள். மகளின் தனிக்குடித்தனச் ‘சிறப்பைக்’ கண்டு வருமாறும் கேட்டுக்கொண்டாள்.

அதுதான் மணமக்கள் குடியிருக்கும் வீடு. அருகே சென்ற தோழி உள்ளே செல்லாது மறைந்திருந்தே நடப்பதைப் பார்ப்பதென முடிவுசெய்தாள்.

கணவன் வேலைக்குச் சென்றிருக்க வேண்டும். திரும்பி வரும் கணவனுக்காக உணவு ஆக்கும் பணியில் இறங்கினாள் இளமனைவி.

நன்கு முற்றிய கட்டியாகியிருந்த தயிரை உறியிலிருந்து இறக்கி எடுத்தாள். எப்போதுமே நன்கு முற்றிய தயிர்தான் உணவுக்குச் சுவை தரும். ஆக்குவதற்;கு முன்பாகத் தயிரைக் கட்டித்தன்மை இல்லாதவாறு பிசைய வேண்டும். தன் மெல்லிய விரல்களால் தயிரைப் பிசைந்தாள். அவ்வேளை அவள் அணிந்திருந்த கலிங்கம் எனப்பட்ட பெறுமதியான சேலை நழுவிவிட்டது. நழுவிய சேலையை அள்ளியெடுத்துச் செருகியாக வேண்டும். தயிர் பிசைந்த கை. சேலையைத் தொட்டால் அது அழுக்காகி விடும். கை கழுவிப் பின் சேலையைச் செருகி மீண்டும் தயிரைத் தொட்டால் தயிரின் பதம் கெட்டுவிடும்.

அவளுக்குத் தயிரின் பதமே பெரிதாகவிருந்தது. தயிர்க்கறை படியச் சேலையை அள்ளிச் செருகிவிட்டு தன்பணி தொடர்ந்தாள்.

நெய்யோடு கடுகு மிளகு என்பன இட்டுத் தாளித்துப் பின் பிசைந்த தயிர் ஊற்றி மோர்க்குழம்பு செய்தாக வேண்டும். முறைப்படி தாளிக்கின்றாள். கடும் மிளகும் இன்ன பிறவும் நெய்யில் வதங்கிப் பொரிய, தாளிதப் புகை பொங்கி எழுந்தது. முகம் எங்கும் படிந்து கண்களினுள் புகைந்தது. கண்ணைக் கசக்கியபடி தாளிதத்தைத் துழாவிக்கொண்டிருந்தாள். தாளிதச் சட்டியைவிட்டு விலகவேயில்லை. சற்றே விலகினாலும் சுவை மாறிவிட வாய்ப்பு உண்டு.

ஒரு வழியாகத் தித்திக்கும் புளிச்சுவை நிறைந்த மோர்க்குழம்பை ஆக்கிவிட்டாள்.

கணவன் வீடு வருகின்றான். இன்முகத்தோடு உணவு பரிமாறுகிறாள். ‘இனிமையாக இருக்கிறதே உணவு’ என்றவாறு கணவன் மகிழ்ந்து உண்கிறான். அந்த அழகைக் கண்ணுறுகிறாள். நுண்மையான இன்பக் கோடுகள் அவள் முகமெங்கும் படர்ந்தன.

இது சங்க இலக்கியமான குறுந்தொகையில் இடம்பெற்றிருக்கும் ஓர் அழகிய காட்சி.

“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்

கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்

குவளை யுண்கண் குய்ப்புகை கமழத்

தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர்

இனிதெனக் கணவ னுண்டலின்

நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே.” கு.தொ. 167

சங்ககாலத்துக் குடும்பப் பெண்ணொருத்தி உணவு ஆக்குவதில் கொண்டிருந்த ஆழமான ஈடுபாட்டைப் புலப்படுத்துகின்றது இப்பாடல்.

சங்ககால மாந்தரது வாழ்வியல் அடையாளங்களில் அவர்கள் கைக்கொண்ட உணவுப் பழக்க வழக்கம் உன்னதமானதொரு இடத்தைப் பெறுகின்றது. உண்ணுதல் என்பது ஓர் உடல் சார்ந்த தேவையாக இல்லாமல் சமூகம் சார்ந்த செயலாகவே சங்ககாலத்தில் நோக்கப்பட்டிருக்கின்றது. அக்காலத்தே விருந்தினருக்குக் கொடுக்கப்பட்ட முதன்மையும், குடும்பம், ஊர் சார்ந்த நிகழ்வுகளில் உணவு பெற்றிருந்த சிறப்பும் உணவின் சமூகச் சார்பைப் புலப்படுத்துகின்றன.

உண், ஊன், உணவு போன்ற சொற்களின் வேர்ச் சொல் ‘உள்’ என்பதாகும் என்கின்றார் தொ. பரமசிவன். உட்கொள்ளுதல் என்ற செயலிலிருந்து பிறந்ததே இந்த வேர்ச்சொல் ஆகும்.

சங்ககாலத்தவரது வாழ்வை நுனிப்புல்லாக மேய்ந்தோர் சிலர் “அக்காலத்தோரின் உணவு மரபு போற்றுதற்குரியதல்ல” எனக் குறிப்பிடுகின்றனர். அவ்வாறானோரின் கருத்துகளை மறுதலிக்கவும், அக்காலத்தோரின் உணவு மரபினை இக்காலத்தோர் விளங்கிக்கொள்ளவும் வாய்ப்பாக இக்கட்டுரை எழுதப்படுகின்றது.

மனித குலத்தின் உணவு தொடர்பான தேடலே அவர்களது பண்பாட்டு வளர்ச்சிக்கு வழி வகுத்தது என்பர். சங்ககாலத்தோரின் வியத்தகு வளர்ச்சியில் உணவுப் பாரம்பரியத்தின் பங்கு இன்றியமையாததாக இருந்தது. மனிதனது உணவுத் தேவையானது இருப்பின் தேவையை நிறைவு செய்த போதும் அது இனம் சார்ந்த பண்பாட்டாலும், சுற்றுப்புறச் சூழல்களாலும் வரையறுக்கப்பட்டிருந்தது. சங்ககால இலக்கியங்கள் வெளிப்படுத்தும் உணவு தொடர்பான செய்திகள் ஒரே களத்தைக் கொண்டவையாகவும், ஓரே காலத்துக்கு உரியனவாகவும் இருக்கவில்லை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என வகுப்பப்பட்ட வாழ்களங்கள் தோறும் மாறுபட்ட உணவு மரபுகளை அவதானிக்க முடிகின்றது. ஒவ்வொரு களத்திலும் குறிப்பிட்ட பொருட்களே கிடைத்தன அல்லது உற்பத்தி செய்யப்பட்டன. இதனால் எல்லாக் களங்களுக்கும் எல்லாம் கிடைக்கவில்லை. தம்மிடம் மேலதிகமான இருப்பதைக் கொடுத்து பிற களத்தாரிடமிருந்து தேவையானதைப் பெற்றுக்கொண்டனர். எனவேதான் பண்டமாற்றும் பகிர்தலும் அக்காலத்தில் ஓங்கியிருந்தன.

சில நூற்றாண்டுகள் இடைவெளியைக் கொண்ட பல வளர்ச்சிப்படிகளினூடாகச் சங்ககாலத்தோரது உணவு மரபினை நாம் நோக்கலாம்.

தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், குறிப்பேடுகள் கல்வெட்டுகள் என்பன சங்ககால உணவுகள் குறித்துப் போதிய சான்றுகளைத் தருகின்றன.

தொல்காப்பியம் தமிழர் வாழ்வியலை நில அடிப்படையில் ஐந்தாக வகுக்கின்றது. ஐவகை நிலங்களில் வாழ்ந்தோர் தமிழர் என்ற போதிலும் நிலம் சார்ந்த பண்பாட்டு மாற்றங்களுக்கு ஏற்பவும், இயற்கை அமைவுகளுக்கிசைவாகவும் உணவுகளும் ஆக்கும் முறைகளும் வேறுபட்டிருந்தன.

தொல்காப்பியம் சுட்டிய ஐவகை நிலங்களுக்குமுரிய உணவும் நீர் வகைகளும் கீழே தரப்படுகின்றன.


➢ முல்லை நிலமக்களுக்கு உணவு- வரகு, சாமை

நீர் – கான்யாறு


➢ குறிஞ்சி நில மக்களுக்கு உணவு – திணை, தேன், மூங்கிலரிசி

நீர் – அருவி நீர், சுனை நீர்


➢ மருதநில மக்களுக்கு உணவு – செந்நெல் – வெண்ணெல்

நீர் – ஆற்றுநீர், மனைக்கிணற்றுநீர், பொய்கை நீர்


➢ நெய்தல் நிலமக்களுக்கு உணவு – உப்புக்கு விலைமாறிய பண்டம், மீனுக்கு விலைமாறிய பண்டம்

நீர் – மணற்கிணறு, உவற்குரிநீர்


➢ பாலை நில மக்களுக்கு உணவு – ஆறலைத்த பொருள், சூறை கொண்ட பொருள்

நீர் – அறுநீர் கூவலும், சுனை நீரும்.


தொல்காப்பியர் மரபியலில் என்னும் பகுதியில்,

“மெய் திரி வகையின் எண்வகை உணவில்” (பொரு 623)

என எட்டுவகை உணவைக் குறிப்பிடுகின்றார். இதற்கு உரை எழுதிய நச்சினார்கினியர் நெல், காணம் (கேப்பை), வரகு, இறுங்கு, தினை, சாமை, புல், கோதுமை என எண்வகைத் தானியங்களைக் குறிப்பிடுகிறார். ஆனால் சங்ககாலத் தமிழகத்தில் இறுங்கு, கோதுமை போன்ற தானியங்கள் வழக்கில் இல்லை. ஆயினும் வடமொழி செவ்வியல் இலக்கியங்கள், தானியவகை, பருப்புவகை, காய்கறி, பழங்கள், மணப்பயிர், பால்தயிர், ஊன், போதை ஏற்றும் குடிவகை என எட்டு வகை உணவுகளைக் குறிப்பிடுகின்றன. தொல்காப்பியர் குறித்த எட்டும் இவையாக இருக்கலாமோ என்ற ஐயமும் ஆய்வாளரிடத்தே உள்ளது.



தமிழில் எழுதப்பட்ட சமையல் நூல் ஒன்று சங்ககாலத்தில் இருந்ததைச் சிறுபாணாற்றுப்படை என்னும் நூல் குறிப்பிடுகிறது. ஓய்மானாட்டு நல்லியக்கோடன் பாணர்களுக்கு விருந்து படைக்கும்போது இந்த நூலிலுள்ள முறைமை வழுவாமல் சமைக்கப்பட்ட உணவை இட்டானாம்.



இந்த நூல் அருச்சுனனின் அண்ணன் வீமனால் எழுதப்பட்டதாம். இது வடமொழி நூலைத் தழுவியதாக இருக்கலாம். இலக்கியத் தொகுப்பிற்கு முன்பாகவே இந்நூல் அழிந்துவிட்டது.



“கா எரியூட்டிய கவர் கணைத் தூணிப்

பூ விரி கச்சைப் புகழோன் தன்முன்,

பனிவரை மார்பன், பயந்த நுண் பொருள்

பனுவலின் வழாஅப் பல் வேறு அடிசில்,

வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த

இளங் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து

விளங்கு பொற்கலத்தில் விரும்புவன பேணி,

ஆனா விருப்பின், தான் நின்று ஊட்டி, (சிறுபாணாற்றுப்படை 238-245)



இந்த நூல் குறித்த செய்திகள் மணிமேகலையிலும், சீவகசிந்தாமணியிலும் காணப்படுகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமையல் தொடர்பாகத் தனி;த்துவமான ஒரு நூல் எழுதப்பட்டிருக்கின்றது என்ற செய்தியே அக்கால உணவு மரபின் சிறப்பைக் காட்டுகின்றது.



அக்காலத்தே பத்துக்கு மேற்பட்ட சொற்களால் உணவைக் குறித்தனர்.


“உணாவே வல்சி உண்டி ஓதனம்

அசனம் பகதம் இரை ஆசாரம்

உறை, ஊட்டம்”

எனப் பிங்கல நிகண்டு உணவைக் குறிக்கும் பிற சொற்களைத் தருகின்றது. இவை தவிர புகா, மிசை என்னும் சொற்களும் உணவைக் குறிக்கப் பயன்பட்டிருக்கின்றன.

அடுப்பு – அட்டில் - குழிசி

நெருப்பைக் கண்டறிந்து அதைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகே சமையல் முறை சிறப்புற்றிருக்க வேண்டும் என்பதில் ஐயப்பாடு இல்லை. நெருப்பு மூட்டிச் சமைக்கும் அடுப்புகள் பற்றிய செய்திகள் இலக்கியங்களில் கூறப்பட்டிருக்கின்றன.



“முடித்தலை அடுப்பு” (புறம்.28.6)

“ஆண்டலை அணங்கடுப்பு” (மது.காஞ்.29)

“ஆடுநனிமறந்த கோடுயர் அடுப்பு” (புறம்.164)

“முரியடுப்பு” (பெரும்பாணாற்றுப்படை)

“களிபடுக்குழிசி கல் அடுப்பு” (நற்றிணை 41)



இவ்வாறான பல அடுப்புகள் அக்காலத்தே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அடுப்பு என்ற சொல்லாட்சி அக்காலத்திலிருந்தே வழக்கிலிருப்பது குறிப்பிடத்தக்கது. அடுப்புகளை விடவும் வேட்டைக்குச் செல்வோர் தீ மூட்டி இறைச்சியை வாட்டி உண்ணும் வழக்கமும் இருந்திருக்கின்றது.



உணவுமரபு வளர்ச்சியின் உன்னதமான நிலை இல்லங்கள் தோறும் தோற்றங் கொண்ட ‘சமையலறை’ எனலாம். அக்காலத்தே வீடுகளில் தனித்துவமான சமையலறைகள் இருந்திருக்கின்றன. அவற்றை அட்டில் என அழைத்திருக்கின்றனர்.



“உதியனட்டில் போல ஒலியெழுத்து அருவியார்க்கும்” என அகநானூறும்

“புளிற்றுநாய் குரைக்கும் புல்லென் அட்டில்” எனச் சிறுபாணாற்றுப்படையும்

“அறநிலை இய அகனட்டில்” எனப் பட்டினப்பாலையும் சமையலறைகளைக் குறிப்பிடுகின்றன.



அக்காலத்தே சமையற் பாத்திரங்கள் குழிசி என்னும் பெயரால் அழைக்கப்பட்டிருக்கின்றன. அவை உட்குழிந்து இருப்பதால் இப்பெயர் தோன்றியிருக்கலாம்.



“இருங்கட் குழிசி” (புறம்.65-2)

“மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி” (புறம்-168-9)

“அட்டகுழிசி அழற்பயந்தாங்கு” (புறம்-23)

“வெண்கோடு தோன்றாக் குழிசி” (புறம்-251)

“முரவு வாய் ஆடுறு குழிசி” (புறம்-371)

“களிபடுக்குழிசி” (நற்றிணை 41)



தண்ணீர் எடு;த்துவரப் பயன்பட்ட பாத்திரம் ஒன்று,



“தொகுவாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார்” - (அகநானூறு 393) என அழைக்கப்பட்டிருக்கின்றது.



இவை தவிர, புகர்வாய்க் குழிசி, சோறடு குழிசி போன்ற பாண்டங்களையும் மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.



சமையல் வகைகளும் உண்ணும் முறைகளும்



சங்கத்தமிழர் பல்வேறு சமையல் முறைகளைப் பயன்படுத்தியுள்ளனர். நீரிலிட்டு அவித்தல், அவித்து வேக வைத்தல், வறுத்து அவித்தல், சுடுதல், வற்றலாக்குதல், நெய்யிலிட்டுப் பொரித்தல், வேகவைத்து ஊறவைத்தல் போன்ற சமையல் முறைகளை இலக்கியங்களில் காணலாம்.

உணவு உண்ணும் முறைகளைத் தமிழர் பன்னிரெண்டாக வகுத்திருந்தனர். அவையாவன,

• அருந்துதல் - மிகச் சிறிய அளவே உட்கொள்ளல்.

• உண்ணல் - பசிதீர உட்கொள்ளல்.

• உறிஞ்சல் - வாயைக் குவித்துக்கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல்.

• குடித்தல் - நீரியல் உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்.

• தின்றல் - தின்பண்டங்களை உட்கொள்ளல்.

• துய்த்தல் - சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல்.

• நக்கல் - நாக்கினால் துலாவி உட்கொள்ளுதல்.

• நுங்கல் - முழுவதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல்.

• பருகல் - நீரியற் பண்டத்தை சிறுகக் குடிப்பது.

• மாந்தல் - பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல்.

• மெல்லல் - கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல்.

• விழுங்கல் - பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல்.



மிக நுட்பமாக உணவருந்தும் வழிகளை ஆய்ந்து பொருத்தமாகப் பெயரிட்டிருக்கும் சிறப்பு வியக்க வைக்கின்றது.

சங்கத்தமிழர் வாழ்நிலமெங்கும் நூற்றுக்கணக்கான உணவுமுறைகள் காணப்பட்டிருக்கின்றன. நிலம், குலம், தொழில் சார்ந்து அவை வேறுபட்டிருக்கின்றன.

இனி சங்கத் தமிழரது உணவு வகைகளையும் ஆக்கும் முறைகளையும் நோக்குவோம்.

சோறு

அக்காலந்தொட்டே வழக்கிருந்து வரும் சொல் சோறு. அக்காலத்திலேயே சோறுதான் முதன்மை உணவாக் திகழ்திருக்கின்றது. பலவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் அரிசியின் பயன்பாட்டை அறிந்திருக்கின்றனர். பழங்காலத் தமிழரது வாழ்வை வெளிப்படுத்தும் சான்றுகளாகத் திகழும் ஆதிச்ச நல்லூர் தொல்பொருட்கள் தமிழரது அரிசிப் பயன்பாட்டைப் புலப்படுத்துகின்றன.

கோதுடன் இருந்தால் நெல், குற்றியெடுத்தால் அரிசி, வேக வைத்தபின் சோறு எனப் பயன்படத்தப்பட்ட சொல் வழக்கங்களே அரிசிப் பயன்பாட்டின் ஆழத்தை வெளிப்படுத்துகின்றன.

வெண்நெல், செந்நெல் என்ற இருவகை நெல்லும் அக்காலந்தொட்டே வழக்கிலிருந்தன. நெல்லுக்கு வரி, செஞ்சாலி, செந்நெல், சொல், இயவை, ஐவனம் என்ற பெயர்களும் புழக்கத்தில் இருந்துள்ளன.

சோறு என்பதை அடிசில், அழினி, கூழ், அவிழ், கொன்றி, நிமிரல், புழுங்கல், பொம்மன், மிதவை, பருக்கை, பிசி, அன்னம் என்ற பல சொற்களால் குறித்தனர்.

பச்சரிசியால் பொங்கப்பட்ட சோற்றைப்; பொங்கல் என்றும்,

புழுங்கல் அரிசியால் பொங்கப்பட்ட சோற்றைப் புழுங்கல் என்றும் அழைக்கப்பட்ட வழக்கம் அக்காலத்தில் இருந்திருக்கிறது.

ஆக்கிய சோற்றுடன் பிற உணவுப் பொருட்களைக் கலந்து உண்டிருக்கின்றனர். கலக்கப்பட்ட பொருட்களுக்கு ஏற்ப, பல பெயர்களால் அவை அழைக்கப்பட்டன.


ஊன் சோறு : ஊனும் சோறும்

கொழுஞ்சோறு : கொழுப்பு நிணம் கலந்து ஆக்கியது

செஞ்சோறு : சிவப்பு அரிசிச் சோறு

நெய்ச்சோறு : நெய் கலந்தசோறு

புளிச்சோறு : புளிக்குழம்பு கலந்தசோறு

பாற்சோறு : பால் கலந்த சோறு

வெண்சோறு : வெள்ளிய அரிசிச் சோறு



அரிசியை மூன்று ஆண்டுக் காலம் பாதுகாக்கும் முறை பற்றிய தொழில்நுட்பம் பற்றிப் பழந்தமிழர் அறிந்திருந்தனர். (னு.ளு. ளுசiniஎயளய ஐலநபேயசஇ 1983இ ப.253)

இராச அன்னம் எனப்பட்ட உயர்வகை அசிரியினை பார்ப்பனர் உண்டனர் என்ற செய்தியும் இலக்கியத்தில் உண்டு.

பண்டமாற்றின் போது பெறுமதி மிக்க பொருளாக நெல் விளங்கியிருக்கின்றது. உப்பும் நெல்லும் ஒத்த பெறுமதி கொண்டதாக கருதப்பட்டிருக்கின்றது.

இருபுறமும் இரும்புப் பூண் கொண்ட உலக்கையால் உரலி;ல் இட்டு நெல் குற்றினர் என்ற செய்தியை,

“இருங்காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த

அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு

கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவிர்” (193-195)

எனச் சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுகின்றது.



சங்ககாலத்தில் அரிசிப்பொரி வழக்கில் இருந்திருக்கின்றது. புழுங்கிய நெல்லிலிருந்து பொரி எடுத்த செய்தியையும் பொரியோடு பாலையும் கலந்துண்ணும் வழக்கம் இருந்ததையும் ஐங்குறுநூறு (53) தெரிவிக்கின்றது.



சங்ககால ஒளவையார், அதியமான் சிறுசோறு, பெருஞ்சோறு வழங்கியதாகக் குறிப்பிடுகின்றார். தனிப்பட்ட ஒருவருக்கோ, சிறு குழுவிற்கோ வழங்கிய சோறு சிறுசோறு எனப்பட்டிருக்கலாம். மங்கல நிகழ்வையொட்டி சிறுசோறு வழங்கப்பட்தாகப் புறநானூறு (110) கூறுகின்றது. போர்வீரர்களுக்கும் பெரு நிகழ்வுகளிலும் வழங்கப்பட்ட சோறு பெருஞ்சோறு ஆகியிருக்கலாம். பாரதப் போரிலே பங்குபற்றிய வீரருக்கு சோறு வழங்கினான் என்பதற்காக “பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன்” என ஒரு சேர மன்னன் அழைக்கப்பட்டிருக்கின்றான்.



நெல்லரிசி தவிர மூங்கிலரிசி, வரகரிசி, சாமையரசி, திணையரிசி, கம்பரிசி, இறுங்கரிசி என்பனவும் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இவை தவிர, பயறு, உழுந்து, எள், கொள்ளு, அவரைப் பருப்பு போன்ற தானியங்களையும் பயன்படுத்தியிருக்கின்றனர்.

இவ்வகை அரிசிகளோடு கூடி ஆக்கப்பட்ட உணவு வகைகளை பின்னர் நோக்குவோம்.

ஊன் உணவு

சங்கத் தமிழரின் பெருவிருப்புக்குரிய உணவாகத் திகழ்ந்தவை ஊன் வகையறாக்களே. ஊர்வன, பறப்பன என்பவற்றோடு பல்வகை விலங்குகளும் உணவாகப் பயன்பட்டிருக்கின்றன. ஊனினைச் சுவைபட பல்வேறு விதங்களில் ஆக்கிப் பதப்படுத்தி உண்டிருக்கின்றனர். அவற்றை சற்று விரிவாக நோக்குவோம்.

ஊன், புலால், புலவு பைந்தடி, பைந்துணி, உணங்கல் எனப் பல பெயர்களால் இறைச்சி வகையாக்கள் அழைக்கப்பட்டிருக்கின்றன.

வெள்ளாடு, வரையாடு, செம்மறியாடு, பன்றி, மான், ஆமான், முயல் போன்ற விலங்குகளும், உடும்பு, அணில், எலி போன்ற சிறு பிராணிகளும், கோழி, காடை, காட்டுக்கோழி, புறா போன்ற பறவையினங்களும் மழைக்காலத்து ஈசல்களும் உணவாக்கப்பட்டிருக்கின்றன. சில பிரிவினரால் மாடு உணவாக்கப்பட்ட செய்திகளையும் சங்க இலக்கியம் கூறுகின்றது.



உணவு சேரிக்கக் கானகம் சென்ற ஒருவன் பிடித்து வரும் உயிரிகளைப் பட்டியலிடுகின்ற நற்றிணை.



‘உடும்பு கொளீஇ வரிநுணல் அகழ்ந்து

நெடுங்கோட்டுப் புற்றத்து ஈயல்

கொண்டி எல்லுமுயல் எறிந்த வேட்டுவன்’….-(நற்றிணை 59)



உடும்பினைக் குத்தித் தூக்கிக்கொண்டு, மண்ணைத் கிளறி வரித்தவளைகளைப் பிடித்துக்கொண்டும், உயரமான மண்புற்றுகளை உடைத்து அங்குள்ள ஈசல்களை அள்ளிக்கொண்டும் சுடவே ஓரு முயலினையும் கொண்டுவந்தான் வேடன்.



இறைச்சியை வேக வைத்தும் சுட்டும் தமிழர்கள் உண்டனர். வேக வைக்கப்பட்டது வேவிறைச்சி என்றும், தீயில் வாட்டப்பட்டது சூட்டிறைச்சி என்றும் அழைக்கப்பட்டது.



இக்காலத்தைப் போன்றே அக்காலத்திலும் இறைச்சியை உப்புக்கண்டம் போட்டு உண்ணும் வழக்கம் இருந்திருக்கின்றது.

இறைச்சித் துண்டங்களை இருப்புக் கம்பிகளில் கோர்த்து உப்பும் கருமிளகுத் பொடியும் கடுகும் சேர்த்து வாட்டியுண்டிருக்கின்றனர்.



வீரர்கள் தொடர்ந்து இறைச்சியைத் உண்டதால் நிலத்தை உழும் கலப்பையின் கொழு தேய்வதைப் போற் பற்கள் மழுங்கிப் போயின என்று பொருநர் ஆற்றுப்படை கூறுகின்றது.



இறைச்சியைக் காயவைத்துப் பதப்படுத்தி வற்றலாகவும் பயன்படுத்தியுள்ளனர்.



“இரும்புலி துறந்த ஏற்றுமான் உணங்கல்” என இச் செய்தியைப் புறநானூறு தெரிவிக்கின்றது.



இறைச்சியை எண்ணெயில் பொரிக்கும் பழக்கம் ஆரம்பகாலத்தில் இருந்திருக்கின்றது. கொதிக்கும் நெய்யில் இறைச்சி பொரிக்கும் போது எழும் ஓசை நீர் நிறைந்த பொய்கையில் மழைத்துளி விழுவது போல் இருந்தது எனப் புறநானூறு (386) கூறுகின்றது.



ஆட்டிறைச்சியைப் பற்றிய பல செய்திகள் சங்க இலக்கியமெங்கும் கூறப்பட்டிருக்கின்றன.



பரிசில் பெறச் சென்ற கூத்தன் ஒருவனுக்கு, தணலில் வேகப்பட்ட (தற்போதைய டீ டீ ஞ வகையைச் சார்ந்த) செம்மறியாட்டு இறைச்சியை கரிகால் வளவன் வழங்கி உபசரித்த காட்சி பொருநராற்றுப்படையில் இடம்பெற்றிருக்கின்றது.



“பதனறிந்து

துராஅய் துற்றிய துருவையம் புழுக்கின்

பராஅரை வேவை பருகெனத் தண்டிக்

காழிற் சுட்ட கோழூன் கொழுங்குறை

ஊழின் ஊழின் வாய்வெய் தொற்றி

அவையவை முனிகுவ மெனினே..."



இது எவ்வாறான உணவு தெரியுமா? அறுகம்புல்லைத் தின்று கொழுத்த செம்மறியாட்டின் இறைச்சியில் சமைக்கப்பட்ட உணவு. அந்த இறைச்சி, இரும்புக் கம்பிகளில் குற்றி பக்குவமாகச் சூடாக்கி வேகவைக்கப்பட்டது. அந்தச் சுவையான உணவினை ஆசையுடன், சூட்டோடு வாயிலிட, அதன் வெம்மை தாங்க முடியவில்லை. வாயில் இடப்புறமும் வலப்புறமுமாக மாற்றிமாற்றிச் சுவைத்து, இனி போதும் போதுமென மறுக்குமளவுக்குத் தான் உணவு உண்டதாகச் சொல்கிறான் அந்தக் கூத்தன்.



உடும்பு இறைச்சி அக்காலத்தோரால் பெரிதும் விரும்பி உண்ணப்பட்டிருக்கின்றது. இன்றும் ஈழத்தில் வன்னி மாவட்டத்தில் உடும்பு இறைச்சிக்குப் பெருமதிப்பு உண்டு.



உடும்புக்கறி சிறந்தது என்பதைக் குறிக்கும் “முழு உடும்பு, முக்கால் காடை, அரைக் கோழி, கால் அடு” என்ற பழைய தொடர் வழக்கிலிருந்திருக்கின்றது. அக்காலத்தில் நாய்களைப் பழக்கி உடும்பை வேட்டையாடியிருக்கின்றனர்.



சிவப்பரிசிச் சோற்றை மூடுமளவுக்கு நாய் கொண்டு பிடிக்கப்பட்ட உடும்புக்கறிப் பொரியலைப் பரிமாறி உண்ணச்செய்த சிறப்பை என்று பெரும்பாணாற்றுப்படை கூறுகின்றது.



“சுவல்விளை நெல்லின் செவ்வவிழ்ச் சொன்றி

ஞமலி தந்த மனவுச்சூ லுடும்பின்

வறைகால் யாத்தது வயின்றொறும் பெருகுவிர்" பெ.பா.ஆ.ப (129-133)



வேட்டையின் போது பெறப்பட்ட மான் இறைச்சியும் விரும்பிச் சுவைக்கப்பட்டிருக்கின்றது.



‘கோப்பெருநற்கிள்ளி என்ற சோழ மன்னன் தீ மூட்டும் கோலால் தீயை உண்டாக்கி, வேட்டையாடிய மானின் இறைச்சியைச் சுட்டு, வேட்டைக்குப்போன ஏனைய வீரர் வருவதற்கு முன்பாக உண்ணுமாறு கொடுக்கப் புவவர்கள் உண்டு பசி தீர்த்தனர்’ என்கின்றது புறப்பாடல் (150) ஒன்று.



இறைச்சிக்காக அக்காலத்தோரல் பெரிதும் விரும்பப்பட்ட மற்றுமொரு விலங்கு பன்றியாகும்.



‘நீரின்றி நிலம் வரட்சியுற்ற காலத்தில் நீர் பெறுவதற்கு வெட்டிய குழிகளில் பதுங்கியிருந்தவாறு நள்ளிரவில் வாகைப்பூவின் வடிவினைக் கொண்ட பன்றிகளின் வரவினை வேடுவர் எதிர்பார்த்திருப்பர்’ என்கிறது பெ.பா.ஆ.ப (106 -111)



இடித்த நெல்லைப் பன்றிக்கு உணவாகக் கொடுத்துக் கொழுக்க வைப்பர். அதனை பெண் பன்றியோடு சேரவிடாது குழிகளுக்குள் இட்டு வளர்த்து அதன் ஊனுக்குச் சுவை கூட்டிக் கொன்று கள்ளோடு உண்பர் என, மேலும் கூறுகின்றது பெ.பா.ப (34-35)



வேடுவர் முயலை வேட்டையாடி உண்டிருக்கின்றனர். திறந்த வாயையுடைய நாயோடு காட்டிற்குச் சென்று வேலிகளில் வலையைக் கட்டுவர். பின் பசிய பற்றைகளிலிருந்து முயலை வெளிப்படச் செய்து பிடிப்பர். பெ.பா.ஆ.ப (111-116)



சுவை கூட்டிய ஊன்கறியைச் சோறு, காய்கறி போன்ற பிற பொருட்களோடு சேர்த்து ஆக்கிய உணவுவகைகளைப் பின்னர் பார்ப்போம்.



நீருயிர் உணவு



நீர்வாழ் உயிரிகளான மீன், நண்டு, இறால், ஆமை, சிப்பி போன்றவற்றை பலவாறாகச் சமைத்து உண்டிருக்கின்றனர். நன்னீரிலும் கடலிலும் இவை பிடிக்கப்பட்டிருக்கின்றன.



நெய்தல் நில மக்களின் முதன்மைத் தொழில் மீன்பிடித்தலாகவே இருந்தது. சிறு மீன்களை வலையெறிந்தும் பெருமீன்களை உளி எறிந்தும் பிடித்திருக்கின்றனர். மீன் பிடிப்பதற்குப் பரவலாக தூண்டில் பயன்படுத்தியிருக்கின்றனர். குறித்தவகை மீன் தங்கத் தூண்டிலுக்கு மட்டுமே சிக்கும் என்பதைக் கண்டறிந்து தங்கத்தூண்டிலையும் பயன்படுத்தியிருக்கின்றனர் (நாஞ்சில் நாடன்).



இறால், சுறா போன்றவற்றோடு பலவகையான மீன்களைப் பிடித்தனர். மீன்களை உப்புக்கண்டம் போட்டு உலர வைத்து கருவாடாக்கியிருக்கின்றனர். சுட்ட கருவாட்டைப் பிற நிலத்தாரும் உணவாகக் கொண்டிருக்கின்றனர்.



மருதம் போன்ற பிற நிலத்தார் நன்னீர் மீன்களைப் பயன்படுத்தியிருக்கின்றனர். நீர் நிறைந்த வயல்களின் அகப்ட்ட மீன், நண்டு, ஆமை என்பன உணவாக்கப்பட்டிருக்கின்றன.


‘சுறவு கோட்டன்ன முள் இலைத் தாழை,’

‘கருங்கண் வரால்,’

‘கடுஞ்சுறா எறிந்த கொடுந் திமில் பரதவர்,’

‘இருஞ் சேற்று அயிரை,’

‘ஒழுகு நீர் ஆரல்,’

‘கணைக் கோட்டு வாளை’

என்ற மீன் வகைகளோடு 17 வகையான மீனினங்கள் சங்க இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ளன.



அயிரை, ஆரல், இரால், சுறா, வரால், வாளை போன்ற மீன்களைச் சுட்டும், வேகவைத்தும், புளிசேர்த்துக் குழம்பாகவும் அக்காலத்தார் எண்ட செய்திகளை இலக்கியங்கள் கூறுகின்றன. (பெரும்பாண் 280, குறும் 320, பட்டினப் 63, நற்றிணை 60)



வாளைமீனைச் சமைத்து உவியல் என்னும் தொடுகறி செய்ததையும் சோற்றுடன் அதைச் சேர்த்து உண்டதையும் புறநானூறு (395) கூறுகின்றது. பெரும்பாலும் பழஞ்சோற்றுக்கு இக்கறி கூட்டாக இருந்திருக்க வேண்டும்.



அயிரை மீன் துண்டுடன் புளிக்கறி ஆக்கி முரல் வெண் சோற்றுடன் உண்ட செய்தியையும் புறநானூறு(60 - 4-6) கூறுகின்றது.



நெய்தல் நில மக்கள் மீனை வாட்டி நெய் எடுக்கக் கற்றுக்கொண்டிருந்தனர். அந்த நெய்யிலே மீன் இறைச்சி போன்றவை பொரிக்கப்பட்டிருக்கின்றன. பிற நிலத்தார் பண்டமாற்றாக மீன் நெய்யைப் பெற்றுச் சென்றிருக்கின்றனர். (தமிழர் உணவு. பக். 110)



குழல் மீனைக் காயவைத்த உணவைக் ‘குழல் மீன் கருவாடு’ என்பர். நெய்தல் நிலவழியாகச் சென்றால் இத்தகைய குழல் மீன் கருவாட்டை உணவாகப் பெறலாம் என்பதை,



“வறல் குழல் வயின் வயின் பெறுகுவிர்”

என சிறுபாணாற்றுப்படை (163)

நெய்தல் நில மக்களின் உணவினைப் பற்றிக் குறிப்பிடுகின்றது.



நெய்தல் நிலக் கள்ளுக்கடைகளில் மீன் வறுவல் விற்கப்பட்டிருக்கின்றது.





காய்கூட்டு(கறிகள்.)



தொ. பரமசிவன் தமிழர் உணவு என்ற கட்டுரையில் காய்கறி என்ற சொல்லைக் கீழ்வருமாறு விளக்குகின்றார்.



“காய்கறி என்ற சொல் காய்களையும் மிளகையும் சேர்த்துக் குறிக்கும். மிளகாய் அறிமுகமாகும்வரை தமிழர் சமையலில் உறைப்புச் சுவைக்காகக் கறுப்பு மிளகினை (கருங்கறி) மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இறைச்சி சமைக்கும்போது அதிகமாக மிளகினைப் பயன்படுத்தியதால் இறைச்சியே 'கறி ' எனப் பின்னர் அழைக்கப்பட்டது. வெள்ளை மிளகினைத் (வால்மிளகு) தமிழர் குறைவாகவே பயன்படுத்தியுள்ளனர்.”



இன்றைய நாட்களில் எமக்குக் கிடைக்கின்ற காய்கறிகள் அப்போது இருக்கவில்லை. வழுதுணங்காய் என அழைக்கப்பட்ட கத்தரி, பாகல், பீர்க்கு, அவரை, முருங்கை, பல்வேறு கீரை வகைகள், அவரைப் பருப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை என்பனவே பயன்படுத்தப்பட்டுள்ளன.



வள்ளிக்கிழங்கு, கருணைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளும் உண்ணப்பட்டிருக்கின்றன.



தற்போது பெரிதும் பயன்படுகின்ற வெங்காயம், மிளகாய், தக்காளி, வெண்டைக்காய், மரவள்ளி, சக்கரைவள்ளி, உருளைக்கிழங்கு மைசூர்ப் பருப்பு, தேங்காய், பழப்புளி என்பன சங்ககாலத்தில் இருக்கவில்லை.



கடுகு, கருமிளகு, வெண்மிளகு, மஞ்சள், இஞ்சி, சீரகம் என்பனவும் அக்காலத்தே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.



வடஇந்தியாலிருந்து இஞ்சியும், சீனாவில் இருந்து மஞ்சளும் சங்ககாலத்திற்கு முன்போ அல்லது தொடக்கத்திலோ தமிழகத்திற்கு வந்திருக்கலாம் என பேராசரியர் கு.வி. கிருஸ்ணமூர்த்தி ‘தாவரமும் தமிழரும்’ என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.



முருங்கைக்காய் சங்ககாலத்திற்கு முன்னரே ஈழம்வழியாக வந்திருக்கலாம் என நாஞ்சில் நாடன் குறிப்பிடுகின்றார்.



தேங்காய் பிலிப்பைன் தீவுகளில் இருந்து ஈழம் வழியாகத் தமிழகத்திற்குள் புகுந்திருக்கலாம் என்பதுவும் பேராசிரியர் கு.வி. கிருஸ்ணமூர்த்தியின் கூற்று.



வெங்காயம், பெர்சியா மற்றம் ஆப்கானிலிருந்து 10ம் நூற்றாண்டில் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. சிலி நாட்டிலிருந்து மிளகாயும், ஐரோப்பிய நாட்டிலிருந்து உருளைக்கிழங்கும் போத்துக்கீயரால் 16ம் 17 நூற்றாண்டில் கொண்டுவரப்பட்டன.



பாதாம் பருப்பு, கிராம்பு என்பனவும் ஈழம் வழியாகத் தமிழகத்தி;ற்கு வந்தவையே என்பது பேராசிரியர் கு.வி. கிருஸ்ணமூர்த்தி கருத்தாகும்.



சங்ககாலத்தோர் தமிழ் நிலத்திற்கே உரித்தான பனைமரத்தைப் போற்றி வளர்த்திருக்கின்றனர். பல உணவுப் பொருட்களைப் பனையிலிருந்து பெற்றிருக்கின்றனர்.



எனினும் 200க்கு மேற்பட்ட உணவுக்குரிய இயல் தாவர வகைகளை சங்கஇலக்கியங்கள் குறிப்பிட்டிருக்கின்றன.



காய்கறிகளை வேறுபொருட்களோடு கூட்டிச் சுவைபட சமைத்து இறைச்சி, சோற்றுடன் கலந்து உண்டிருக்கின்றார்கள்.



உணவுக்குச் சுவை கூட்டும் உப்பு சங்ககாலத்திற்கு முன்பே பாவனைக்கு வந்துவிட்டது. சங்க காலத்தில் உப்பு, விலை உயர்ந்த பொருளாகக் கருதப்பட்டது. “நெல்லும் உப்பும் நேராகும்” என்பதே அன்றைய நிலை. உமணர் என்போரே உப்பை விளைவித்து விற்பனை செய்தனர்.



தேன் அதிகம் பெறப்படுகின்ற குறிஞ்சி நிலத்தோருக்கு மட்டுமல்ல, ஏனைய நிலத்தோருக்கும் உயர்ந்த உணவுப்பொருளாகத் திகழ்ந்தது தேன். தேனைத் தனி;த்தும் வேறு பல உணவுகளோடும் கூட்டி உண்டிருக்கின்றனர்.

கனிகள்

சங்ககால மக்கள் பல்வேறு கனிகளை உண்டு மகிழ்ந்திருக்கின்றனர்.

மா, பலா, வாழை என்பவற்றோடு மாதுளம்பழம், நெல்லி, நாவற்பழம் நாரத்தம் பழம், கொவ்வை, ஆசினிப்பழம், களாம்பழம், காரைப்பழம், துடரிப்பழம் (இலந்தை) போன்றவற்றை அக்காலத்தோர் விரும்பி உண்டிருக்கின்றனர்.



வாழை ‘கதலி’ என்ற பெயரிலேயே இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது.



‘பெரும்பெயர் ஆதி’ என்ற மன்னனுடைய நாட்டிலுள்ள மக்கள் மணல் குவிந்து கிடக்கும் மணல் மேட்டில் ஏறி நின்று நாவற்பழத்தை கொய்து உண்டனர் என்ற செய்தியைப் புறநானூற்றுப் பாடலடிகள் தருகின்றன.



“கருங்கனி நாவலி லிருந்து கொய் துண்ணும்

பெரும்பெய ராதி பிணங்களிற் குட நாட்

டெயினர்” (புறம் 177 11-3)



உண்டவரை நீண்டநாள் வாழவைக்கும் ஆற்றல் கொண்டது நெல்லிக்கனி என்ற செய்தியை,



'சிறியிலை நெல்லித் தீங்கனி குறியா

தாத னின்னகத் தடக்கிக்

சாத னீங்க வெமக்கீந் தனையே (புறம் 91 9-11)

எனவரும் ஒளவையார் பாடிய புறப்பாடல் வழி அறியலாம்.



அன்னாசி, கொய்யா, பப்பாளி போன்ற பழங்கள் அக்காலத்தில் இருக்கவில்லை. அயல்நாடு சென்று வந்த வணிகர் பின்னாளிலேயே இவற்றை எடுத்து வந்தனர்.



அன்னாசி, பப்பாளி மலேசியாவிலிருந்தும், கொய்யா பெரு நாட்டிலிருந்தும் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகின்றது.





சிறப்புக்குரிய உணவு வகைகள்.



மேற்கூறப்பட்ட அரிசி வகைகள், தானியங்கள், ஊன் வகைகள், காய்கறிகள் என்பவற்றைக் கொண்டு சுவை மிக்க உணவுகளை ஆக்கிப் படைத்துள்ளனர் எம் முன்னோர். இன்று அந்நியப் பெயரில் அழைக்கப்படும் பல உணவுகள் சங்கத் தமிழர் உருவாக்கியவையே.



ஊன்சோறு: இன்று பிரியாணி என அழைக்கப்படும் இவ்வுணவு ஊன்சோறு என்ற பெயரால் சுவைமிக்க உணவாக அன்று ஆக்கப்பட்டிருக்கின்றது. இது சங்கப் புலவர்களால் ‘ஊன் துவையடிசில்’ எனச் சிறப்பிக்கப்பட்டிருக்கின்றது. ஐவகை நிலத்தாரும் பல்வகை உணவு முறைகளில் வேறுபட்டிருந்தாலும் ஒன்றுபட்டிருந்த ஓர் உணவுவகை ஊன்சோறுதான். பாமரமக்கள் முதல் மன்னர் வரை ஊன்சோற்றினை உண்டு மகிழ்ந்துள்ளனர்.



அக்காலத்தே சமையற்காரன் வாலுவன் என அழைக்கப்பட்டிருக்கின்றான். அத்ததைய வாலுவன் தன் கைகளையே அகப்பையாகக் கொண்டு, துழாவி

ஊன் சோற்றினைச் சமைத்து உண்போர் வரிசையறிந்து வழங்கினான் என்று மதுரைக்காஞ்சி கூறுகிறது.



"துடித்தோட்கை துடுப்பாக

ஆடுற்ற ஊன்சோறு

நெறியறிந்த கடிவாலுவன்"(மதுரைக்காஞ்சி 34 - 36)



வெண்சோற்றுடன், நெய் கலந்து, ஆட்டிறைச்சி சேர்த்து சமைத்துண்டனர்

என்ற செய்தியை நற்றிணை புலப்படுத்துகின்றது.



“மையூன் தெரிந்த நெய்வெண்புழக்கல்" (நற்றிணை 83, 4-9 வரிகள்)





சோறும் மரக்கறிகளும்



இறைச்சி வகையன்றி மரக்கறி உணவுகளும் அக்காலத்தே சிறப்புப் பெற்றிருந்தன. கடினமற்ற மென்மையான உடையாத முழு அரிசியால் ஆக்கப்பட்ட சோறு விரல் போல் நிமிர்ந்து தனித்தனியாக இருக்கின்றது. அதை பால் விட்டுச் சமைத்த பொரிக்கறிகளோடும், புளிக்கறிகளோடும் நிறைவாக உண்போம் என பொருநர் எனப்படும் கலைஞர் கூட்டத்தார் கூறுகின்றனர்.



முரவை போகிய முரியா அரிசி

விரல்என நிமிர்ந்த நிரல் அமைபுழுக்கல்

பரல்வறைக் கருனை காடியின் மிதப்ப

அயின்ற காலை” பொ. ஆ. ப. (113-116)





புளிக்குழம்பு



அக்காலத்தே புளிக்குழம்பு அல்லது புளிக்கறி பெரிதும் விரும்பி உண்ணப்பட்டிருக்கின்றது. பெரும்பாலும் சோற்றுடன் புளிக்குழம்பைக் கூட்டி உண்டிருக்கின்றனர். இப்போது நாம் பயன்படுத்து;ம புளி அக்காலத்தில் இருக்கவில்லை. புளிச்சுவைக்காக நாரத்தம் (எலுமிச்சை) காய்களைப் பயன்படுத்தியுள்ளனர். மாங்காய்ச் சாற்றினைச் சேகரித்து வைத்து புளிச்சுவை கூட்டியிருக்கின்றனர்.



நெல்லிக்காய், துடரிக்காய் என்பனவும் புளிச்சுவைக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.



புளிச்சுவையோடு கூடிய சோற்றைப் புளிச்சோறு, புளிக்குழப்புச் சோறு என அழைத்திருக்கின்றனனர். மீன் இட்டும் புளிக்கறி ஆக்கப்பட்டிருக்கின்றது. புளிக்குழம்பில் தயிர் மோர் என்பனவும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. (கு.தொ.167)



அவரை விதை, மூங்கிலரிசி, நெல்லரிசி, இவற்றைப் புளியுடன் சேர்த்துச் சமைத்த உணவினை நெய்யோடு கலந்து மருத நிலத்தில் வாழ்ந்த உழவர்; உண்டனர் என்பதை மலைபடுகடாம் கூறுகின்றது.



“செவ்வீ வேங்கைப் பூவின் அன்ன

வேய்கொள் அரிசி மிதவை சொரிந்த

சுவல் விளைநெல்லின் அவரையும் புளிங்கூழ்

அற்கிடை உழந்தநும் வருத்தம் வீட.....” மலைபடுகடாம் (434-443)



குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்த கானகர் எனப்பட்ட வேடுவர் வீட்டில் இறைச்சி வகையறாக்களோடு புளி சேர்த்து உணவு சமைக்கப்பட்டதை கூத்தராற்றுப்படை கூறுகின்றது.



“வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை

முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை

பிணவுநாய் முடுக்கிய தடியொடு விரைஇ

வெண்புடைக் கொண்ட துய்த்தலைப் பழனின்

இன்புளிக் கலந்து மாமோ ராகக்

கழைவளர் நெல்லின் அரியுலை ஊழ்த்து..." கூத்தராற்றுப்படை



‘நன்கு ஆக்கப்பட்ட கடமானின் கொழுப்பு மிக்க தசையும், பன்றித் தசையும் உடும்புக் கறியும் தருவார்கள். அத்துடன் புளியும் மோரும் இட்டு உலையேற்றிச் சமைத்த மூங்கில் அரிசிச் சோறும் தருவார்கள்’ என்கிறார்

இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்.





சோறும் ஊன்கறியும்.



சோற்றோடு ஊன்கறி சேர்த்து உண்டலே சங்ககாலத்தில் பெருவழக்காக இருந்தது. இவ்வுணவு வாழிடச் சூழலுக்கு ஏற்பவும், செல்வநிலைக்கமையவும் வேறுபாடு கொண்டிருந்தது.



மன்னர், நிலவுடமையாளர்; போன்றோர் விருந்தினரைப் போற்றும் வகையில் நெய்யிட்டு ஆக்கப்பட்ட இறைச்சியோடு பலவகைச் சோறும் வழங்கியிருக்கின்றனர்.



இத்தகைய விருந்துண்ட புலவர் பலர் தம் உணர்வையும் உணவின் சுவைகளையும் இலக்கியங்களில் பதிவு செய்திருக்கின்றனர்.



“அவன் எமக்கு வழங்கிய சுவைமிக்க சூட்டிறைச்சி பற்றிச் சொல்வேனா, இல்லை வளமான மனைக்குரிய கள் பற்றிக் கூறுவேனா இல்லை, குறுமுயலின் தசை கலந்து தந்த நெய் மணக்கும் சோற்றைச் சொல்வேனா” என்கிறார் ஒரு புலவர்.



கொழுந்தடிய சூடென்கோ

வளமனையின் மட்டென்கோ

குறுமுயலின் நிணம் பெய்த

நறுநெய்ய சோறென்கோ” - புறநானூறு “:396“



கரும்பனூர்க் கிழான் என்னும் சிற்றூர்த் தலைவன் வழங்கிய விருந்து குறித்து நன்னாகையர் என்னும் புலவர் புறநாநூற்றில் குறிப்பிடுகின்றார்.



ஊன் கலந்த சோற்றுணவில் நீரை விட அதிகளவு நெய்யிட்டுச் சுவை மிகக் கூட்டி சூடு குறையாது நாள்தோறும் தானும் உண்டு மற்றவர்களுக்கும் தந்தான். உண்ணமுடியாமல் எஞ்சிய உணவை இலை மடித்து எறிந்த நாட்களையும், பல்லில் சிக்கிக்கொண்டவற்றைத் தோண்டி எடுப்பதற்குமாகக் கழிந்த நாட்களையும் எண்ண முடியாது என்கிறார்.



“நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை

மண்ணாணப் புகழ் வேட்டு

நீர்நாண நெய் வழங்கிப்

புரந்தோனெந்தை யாமெவன்றொலைவதை

அன்னோனையுடைய மென்ப வினிவறட்கி

யாண்டு நிற்க வெள்ளி மாண்டக

உண்டநன்கலம் பெய்து நுடக்கவும்

தின்ற நன் பல் ஊன் தோண்டவும்

வந்தவைகலல்லது

சென்ற வெல்லைச் செலவறியேனே” – புறநானூறு : 384


புற்றீசல் புளிக்குழம்பு



மழைக்காலத்தில் தோன்றி குறுகிய நாட்களே வாழும் ஈசல்கள் சுவை மிகுந்த உணவாகப் பயன்பட்டிக்கின்றன.



செம்மையான புற்றிலிருந்து பிடிக்கப்பட்ட ஈசலை வறுத்து மோரில் ஊற வைத்துப் புளிக்கறி செய்தனர். இச் செய்தியை,



செம்புற்று ஈயலின் இன்அளைப் புளித்து

மென்தினை யாணர்த்து நந்துங் கொல்லேர்..” என புறநானூறு (119) கூறுகின்றது.



ஈசலைத் தயிர் அல்லது மோரோடு சேர்த்துச் சமைத்து உண்பது பண்டைக்காலத்தில் மரபாக இருந்தது என்பதற்கு அகநானூற்றுப் பாடல் ஒன்றும் சான்று தருகின்றது.



“சிறுதலைத் துருவின் பழுப்புறு விளைதயிர்

இதைப்புன வரகின் அவைப்புமாண் அரிசியொடு

கார்வாய்த்து ஒழிந்த ஈர்வாய்ப் புற்றத்து

ஈயல்பெய்து அட்ட இன்புளி வெஞ்சோறு

சேதான் வெண்ணெய் வெம்புறத்து உருக

இளையர் அருந்த …” (அகநானூறு - 394: 1- 7)



சிறிய தலையையுடைய செம்மறி ஆட்டினது பழுப்பு நிறம் போன்ற முற்றிய தயிரிலே, கொல்லையில் விளைந்த வரகின் குற்றிய அரிசியோடு, கார் காலத்து மழையில் நனைந்து ஈரமான வாயிலையுடைய புற்றிலிருந்து வெளிப்படுகின்ற ஈயலையும் சேர்த்துச் சமைத்த இனிதான சூடான புளியஞ்சோற்றினைப், பசுவின் வெண்ணெயானது வெப்பம் காரணமாக உருகிக்கொண்டிருக்க, உன் ஏவலாளர் அருந்துவர்.

பாலுணவு



சங்ககாலத்திற்கு முன்பே தமிழர்கள் பாலுணவு பற்றி நன்கு அறிந்திருந்தனர். வேட்டைச் சமூகநிலைக்கும் வேளாண் சமூகநிலைக்கும் இடைப்பட்ட காலத்தே மந்தை வளர்ப்பு தோற்றம் கொண்டிருக்கலாம். தொடக்கத்தில் பால், இறைச்சி என்பவற்றிற்காக மந்தை வளர்ப்பில் ஈடுபட்டாலும் பி;ன்னாளில் எருது போன்ற விலங்குகள் வேளாண் தொழிலுக்குப் பேருதவி பரிந்தன. இவ்வுதவிகளே பின்னாளில் மாட்டிறைச்சி உண்ணுதல் வழக்கற்றுப்போகக் காரணமாக இருந்திருக்கலாம்.



மிக நீண்டகாலத்தி;ற்கு முன்பாகவே தமிழர் பாலைப் புளிக்க வைத்துத் தயிராக்கவும். தயிரைக் கடைந்து மோர், வெண்ணெய், நெய் என நுட்பமாகப் பிரித்துப் பயன்படுத்தவும்; கற்றுக்கொண்டிருந்தனர்.

முற்றிய தயிரில் புளிக்குழம்பு செய்யப்படிருக்கின்றது. குளிர்ந்த மோர் சிறந்த பானகமாகக் கருதப்பட்டது. வெண்ணெய் பெறுமதி மிக்க உணவுப் பொருளாகத் திகழ்ந்திருக்கின்றது.



“நறுமோர் வெண்ணெயின்...” என மோர் கடைந்து வெண்ணை எடுக்கப்படுவதனை பெரும்பாணாற்றுபடை கூறுகின்றது.



பசுநெய் பெரும்பாலும் செல்வர்களாலேயே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.



அக்காலத்தில் மாடுகளே பெறுமதி மிக்க செல்வங்களாகக் கருதப்பட்டன. ஆநிரை கவர்தல், ஆநிரை மீட்டல் என்பன தமிழது போர் மரபுகளாகும்.

பார்ப்பனர் உணவு

வேதங்கள் ஒதும் பார்ப்பனர் சங்ககாலத்தில் வாழ்ந்திருக்கின்றனர். அவர்களைப் பற்றிய பல குறிப்புகள் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. அவர்கள் ஊன் உணவை முற்றிலும் தவிர்த்துக் காய்கறிகளையே பெரிதும் உண்டனர்.

தொல்காப்பியர் வாகைத் திணையில் “அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்“ எனக் குறிப்பிடுகின்றார். இத்தகைய பார்ப்பனர்களையே சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

இப்பார்ப்பனர் பாற்சோறும், பருப்புச் சோற்றும் உண்பர். அவர்கள் இராசா அன்னம் என்ற பெயருடைய உயர்ந்த நெற்சோற்றினை விரும்பி உண்பர். மாதுளம் பிஞ்சைப் பிளந்து, மிளகுப் பொடியும், கறிவேப்பிலையையும் கலந்து பசும் வெண்ணெயிலே வேகவைத்து எடுத்த பொரியலையும் வடுமாங்காயினையும் உண்பர்.

தயிர்ச்சோறு, மாங்காய்ச்சோறு, புளியஞ்சோறு போன்ற உணவு வகைகளையும் உண்பர். தம் வீட்டுக்கு வந்தோருக்கும் அவற்றைக் கொடுத்து மகிழ்வர். இச்செய்தியைப் பெரும்பாணற்றுப்படை (301-310) கூறுகின்றது.

மறையோர் வீட்டிற்குச் சென்றால் ‘கருடச் சம்பா அரிசியில் சமைத்த சோற்றையும், மோரில் கடைந்தெடுத்த வெண்ணெயில் மிளகுத்தூளும் கறிவேப்பிலையும் சேர்த்து வதக்கிய காய்கறிப் பொரியலையும், ஊறுகாயுடன் உண்டு மகிழலாம்’ என்று பாணன் கூறுவதாகப் பெரும்பானாற்றுப்படை மேலும் கூறுகின்றது.

செல்வந்தர் உணவு

வேட்டுவநிலையிலிருந்து வேளாண்நிலைக்குச் சமூகம் உயர்ந்தபோது

நிலவுடமைச் சமூக முறைமை தோற்றம் கொண்டது. நில உடைமையாளர்களாக ‘ஆண்டை’களும், தொழிலாளர்களாகக் ‘களமர்’களும் சமூக அமைப்பில் அங்கம் பெற்றனர். இச் சமூக மாற்றம் செல்வநிலையிற் பெரும் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியது. செல்வந்தர்; பெரும் செழிப்புடன் வாழ்ந்தனர். அவர்களது உணவுப் பழக்கமும் உயர்ந்ததாகவிருந்தது.



கடின வேலைகள் செய்து பழக்கப்படாத செல்வர், வீடுகளில் இருந்தபடியே உண்டு மகிழ்ந்தனர். அவர்களது உணவு முறைக்கு ஒரு சான்று தருகின்றது புறநானூறு.



“நீர் நிறைந்த குளத்தில் விழுகின்ற மழைத்துளிகளைப் போன்று, துள்ளித் தெறிக்கின்ற புதிதாக உருக்கிய நெய்யில் பொரிக்கப்பட்ட இறைச்சித்துண்டுகளின் வறுவல்களை மணம் நுகர்ந்து உண்பர். சூட்டுக்கோலால் கிழித்துச் சுடப்பட்ட இறைச்சித் துண்டுகளையும் உண்பர். வெள்ளியாலான பாத்திரத்தில் பால் வழியவும் சுடச்சுட உண்பர். இதனால் அவர்கள் உடல் வியர்த்ததேயன்றி, செய்கின்ற தொழிலால் உடல் வியர்த்தில்லை” என்கிறார் புலவர்.



‘நெடுநீர நிரை கயத்துப்

படுமாரித் துளிபோல

நெய்துள்ளிய வறை முகக்கவும்

சூடுகிழித்து வாடூன் மிசையவும்

ஊன் கொண்ட வெண்மண்டை

ஆன் பயத்தான் முற்றளிப்வும்

வெய்துண்ட வியர்ப்பல்லது.

செய்தொழிலால் வியர்ப்பறியாமை’ - புறநானூறு : 386



வளம்;மிக்கவர்கள் வெண்மையான நெற்சோறுடன் வீட்டில் வளர்ந்த பெட்டைக் கோழியின் பொரியலைச் சேர்த்து உண்டனர். இதனை,



“தொல்பசி அறியாத் துளங்கா இருக்கை

மல்லல் பேரூர் மடியின் மடியா

வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி

மனைவாழ் அளிக்ன் வாட்டொடும் பெறுகுவீர” (253-256)



எனப் பெரும்பாணாற்றுப்படை ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.



உழவோர் உணவு

வேளாண் சமூகத்தில் உழவர்களே மிகுந்திருந்தனர். பெரும்பாலானோர் அன்றாடம் உழைத்து உண்பவர்களாகவே இருந்தனர். அவர்கள் உண்ட உணவு பற்றிப் பல குறிப்புகள் உள்ளன.



கிள்ளிவளவனின் சோழ நாட்டில், சமைக்கும் பெண் அளக்காமல் அள்ளிக்கொண்டு வந்த வெண்ணெல்லைப் பூணுடன் கூடிய பருத்த உலக்கையால் குற்றி அரிசியாக்குவாள். அந்த அரிசியால் ஆக்கிய சோற்றை, புளித்த நீருள்ள உலையில் இடுவாள்.



மாமரத்தின் இனிய மாம்பழங்களைப் பிசைந்து செய்த மணமுள்ள புளிக்குழம்பும், பெரிய கரிய வரால் மீன் இறைச்சியும், கொம்புகளையுடைய சுறாமீனின் துண்டுகளும், வயலில் விளைந்த வள்ளைக் கீரையும், சிறிய கொடியில் முளைத்த பாகற்காயும், பாதிரி அரும்பின் இதழ் விரித்தாற் போன்ற தோலை நீக்கி, கலக்க வேண்டிய பொருள்களைக் கலந்து மூடிவைத்துப் பின் அவித்த சோற்றுடன் உழைப்போர்க்குப் பரிமாறுவாள்.



வைக்கோல் உள்ள இடங்களில் உழைக்கும் உழவர்கள் தாம் உண்ட கள்ளால் களிப்படைந்து மயங்கிச் சோர்ந்திருப்பின், விடியற் காலையில் பழஞ்சோற்றை உண்பர். இச் செய்தியைப் புறநானூறு (399) தருகின்றது.



‘அடுமகள் முகந்த அளவா வெண்ணெல்

தொடிமாணுலக்கைப் பரூஉக் குற்றரிசி

காடி வெள்ளுலை கொளீஇ நீழல்

ஓங்கு சினைமாவின் தீங்கனி நறும்புளி

மோட்டிரு வரா அற் கோட்டு மீன் கொழுங்குறை

செறுவின் வள்ளை சிறு கொடிப் பாகற்

பாதிரி யூழ் முகையவிழ் விடுத்தன்ன

மெய்களைந்தினனொடு விரைஇ

மூழ்ப்பப் பெய்த முழுவவிழ்ப் புழுக்கல்

அளிகளிற் படுநர் களியட வைகிற்

பழஞ்சோறயிலும்’ - புறநானூறு : 399



நன்செய் நிலம் என அழைக்கப்டுகின்ற மென்மையான மருத நிலத்து வயல்களைச் சார்ந்த உழவர் காடும் புல்லும் நிறைந்த முல்லை நிலத்தில் தம் மாடுகளை மேயவிட்டுக் களைப்பாறுவர். அவ்வேளை, குறு முயலின் குழைந்த சூட்டிறைச்சியுடன் நீண்ட வாளைமீனைக் கொண்டு செய்த அவியலைப் பழைய சோற்றுடன் உண்பர்.


‘மென்புலத்து வயலுழவர்

வன்புலத்துப் பகடுவிட்டுக்

குறு முயலின் குழைச் சூட்டொடு

நெடுவாளைப் பல்லுவியற்

பழஞ்சோற்றுப் புக வருந்தி - புறநானூறு : 395



வரகரிசிச் சோற்றை, அவித்த அவரைப் பருப்புடன் கலந்து உழவர் உண்டு வந்தனர். அதனையே விருந்தினர்க்கும் கொடுத்து மகிழ்ந்தனர் என்பதைப் பெரும்பாணாற்றுப்படை கூறுகின்றது.


“நெடுங்குரல் பூளைப்பூவின் அன்ன

குறுந்தாள் வரகின் குறளவிழ்ச் சொன்றி

புகர் இணர் வேங்கை வீசுண்டன்ன

அவரை வான் புழுக்கட்டிப் பயில்வுற்று

இன்சுவை மூரல் பெறுகுவிர்” (192-196)


இது ஏழை உழவர்களின் எளிமையான உணவாக இருந்தது.


அவரை விதை, மூங்கிலரிசி, நெல்லரிசி, இவற்றைப் புளியுடன் சேர்த்துச் சமைத்த உணவினை, நெய்யோடு கலந்து மருத நிலத்தில் வாழ்ந்த உழவுத் தொழில் புரிந்த ஏழைகள் உண்டு வாழ்ந்தனர் என்னும் செய்தியை மலைபடுகடாம் (434-443) குறிப்பிடுகின்றது.


இவ்வாறே வேடவர், பரதவர், எயிற்றியர், எயினர் எனப்பட்டோரும் தமக்கெனத் தனித்துவமான உணவு வகைகளைக் கொண்டிருந்தனர்.


நீரியல் உணவு


அக்காலத்தோரின் நீரியல் உணவு வகைகளில் முதன்மையானவை கூழும் கஞ்சியுமாகும். அதிகளவில் நீர் கலந்து சோறு கரையுமளவிக்கு வேக வைக்கப்பட்ட உணவு கஞ்சி எனப்பட்டது. அரிசி, வரகு, கேப்பை. கம்பு போன்ற தானியங்களைக் கொண்டும் கூழ் ஆக்கப்பட்டது.


சோறு வடித்த கஞ்சி ஆறுபோல் ஓடியது என்பதைப் பட்டினப்பாலை குறிப்பிடுகின்றது.


சோறு வாக்கிய கொழுங் கஞ்சி

யாறு போலப் பரந்து ஒழுகி,

என வருணிக்கிறது. (வரி 44-45)


பழந்தமிழர் பலவகையான பருகுநீர் வகைகளைப் பயன்படுத்தியிருக்கின்றனர். அவற்றுள் சில, இளநீர், கரும்புச்சாறு, நுங்கு, பானகம், பாயசம், அருவிநீர், சுனைநீர், பால், தயிர், மோர், மது என்பனவாகும்.


ஆலை இயந்திரங்களில் கரும்பை இட்டுச் சாறு பிழிந்தனர் என்ற செய்தியை “கரும்பி னெந்திரங் கட்டினோதே” என்ற வரிகளின் வாயிலாக மதுரைக் காஞ்சி புலப்படுத்துகிறது.


சங்ககாலத்துச் சி;ற்றுண்டிகள்


சங்கத்தமிழர் பல சிற்றுண்டி வகைகளை அறிந்திருந்தனர் என்பதற்குச் சங்க இலக்கியங்கள் சான்று தருகின்றன.


கும்மாயம் என்ற ஒருவகைச் சிற்றுண்டி பற்றிப் பெரும்பாணாற்றுப்படை 194-95) குறிப்பிடுகின்றது. இது பயற்றுடன் சர்க்கரை சேர்த்துச் செய்யபப்டுவதாகும்.


இனிப்புச்சுவைக்காகக் கருப்பஞ்சாற்றைக் கட்டியாக்கிப் பயன்படுத்திய செய்தியைப் பெரும்பாணாற்றுப்படை (259) தருகின்றது. பின்னாளில் இதுவே வெல்லக்கட்டியானது.


மதுரைக் காஞ்சி (624) மெல்லடை என்னும் அரிசி உணவைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. அடை என்றால் இலை என்று பொருள். இது இலை வடிவினதான பலகாரமாக இருக்கலாம்.


வெல்லப் பாகையும் பாலையும் கலந்து செய்த பண்ணியம் என்னும் உணவுப் பொருள் பற்றிப் புறநானூறு தெரிவிக்கின்றது


'உனு மூணு முனையி னினிதெனப்

பாலிற்பெய்தவும் பாகிற் கொண்டனவும்” (புறநானூறு 381).



பொருட்களைக் கூவி விற்பதால் கூவியர் எனப்பட்ட வணிகர் 'கரிய சட்டியில் பாகுடனே வேண்டுவன கூட்டி நூல்போல் அமைத்தவட்டம்” என ஒருவகைச் சிற்றுண்டியை விற்றதாகப் பெரும்பாணாற்றுப்படை (377-378) கூறுகின்றது.



“மதுரை நகரக் கடைத்தெருவில் சிற்றுண்டிக் கடைகள் இருந்தன. அவற்றிற் பாகினால் செய்யப்பட்ட நல்ல வரிகளுடைய தேனடையைப் போன்ற மெல்லிய அடைகள் செய்யப்பட்டன. பருப்பை உள்ளீடாய்க் கொண்டு, சர்க்கரை கூட்டிப் பிடித்த 'மோதகம்” என்ற ஒரு வகைத் தின்பண்டமும் செய்யப்பட்டது. இனிய பாகோடு சேர்த்துக் கரைத்த மாவைக் கொண்டு கூவியர் பல சிற்றுண்டி வகைகளைச் செய்தனர்” என மதுரைக் காஞ்சி (624-627) குறிப்பிடுகின்றது.



பொரியையும் பாலையும் கலந்து உண்ணும் வழக்கம் மிகப் பழமையானது. ஐங்குநூறு (53) இதைக் கூறுகின்றது. இப்போது உண்ணப்படுகின்ற ‘சீரியலை’ இது ஒத்ததாகும்.

ஊறுகாய் வகைகள்.



சங்கத்தமிழர்கள் பலவகையான ஊறுகாய்களைப் பயன்படுத்தியிருக்கின்றனர். மாங்காயில் நல்ல மிளகு கலந்து கறிவேப்பலை தாளித்து ஊறுகாய் செய்யும் வழக்கம் அக்காலத்தில் இருந்ததாகப் பெரும்பாணாற்றுப்படை (307-10) கூறுகின்றது. இதே போன்று மாதுளங்காய் ஊறுகாயும் பயன்பாட்டில் இருந்திருக்கின்றது.



“குடும்பத்துடன் உப்பை வண்டிகளில் ஏற்றி ஊர் ஊராய்ச் சென்று வாணிகம் செய்துவந்த உமணர், ஊறுகாய்ப் பானைகளைத் தம் வண்டிகளில் கட்டியிருந்தனர். அந்த ஊறுகாய், 'காடி' எனப்பட்டது. அது வைக்கப்பட்டிருந்த பாத்திரம் 'காடி வைத்த கலம்' எனப்பட்டது. 'புளியங்காய், நெல்லிக்காய் முதலியன ஊறவிட்டு வைத்ததனைக் 'காடி' என்றார்,' என்பது நச்சினார்க்கினியர் விளக்கம்” என இராச மாணிக்கனார் ‘சங்ககாலத்து உணவும் உடையும்’ என்ற தன் கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.





சமையல் நுட்பங்கள்



சங்கத்தமிழரின் உணவு முறைகளில் அதிகமாகக் காணப்பட்ட உணவுப் பொருட்கள் நேரடியாக இயற்கையிலிருந்து கிடைக்கப்பட்டவையே. காய்கறி, கனி, கிழங்கு, ஊன்வகை போன்றவற்றை இயற்கையிடத்தே பெற்றுப் பச்சையாகவும்; வேகவைத்தும் உண்டனர்.



உணவுத் தேடலுக்கான வேட்டையாடுதலே உணவுத்தொழில்நுட்பத்தை நோக்கிய தொடக்கம் எனலாம். குறித்த விலங்கினத்தைப் பிடிக்க கையாண்ட உத்திகளும், கண்டறிந்த வேட்டைக் கருவிகளுமே உணவுத் தொழில்நுட்பம் தொடர்பான தொடக்கச் சிந்தனைகள் ஆகும்.



வேடுவ சமூகத் தளத்தில் இருந்து ஆநிரை சமூகநிலைக்கு நகரும்போது இத்தொழில்நுட்பம் வளர்ச்சியடைகின்றது. பாலிலிருந்து தயிர் மோர், வெண்ணெய், நெய் உருவாக்கக் கற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.



மீன் பிடித்தல் மிக தொன்மையான தொழில். தூண்டில், வலைவீசுதல், உளி எறிதல் போன்ற போன்ற நுட்பங்கள் அன்றே பயன்படுத்தப்பட்டுள்ளன.



உணவைச் சுட்டுத்தின்ற காலத்தை தொடர்ந்து நீரில் வேகவைத்து உண்ணும் நிலைக்கு சமூகம் உயர்ந்தமைக்குக் காரணம் மட்பாண்டங்களின் பயன்பாடடை அறிந்தமையே. பலவகையான மட்பாண்டங்களைச் செய்யும் நுட்பங்களை அக்காலத்தோர் அறிந்து வைத்திருந்தனர். அகழ்வாய்வின் போது கிடைக்கப்பபெற்ற மட்பாண்டங்கள் இதற்குச் சான்று தருகின்றன.



சமூகநிலை மாற்றத்தின் அடுத்த தளமான வேளாண் நிலையே மேலும் பல நுட்பங்கள் தோன்ற வழிவகுத்தது.



உப்பு, நெய், மிளகு, கடுகு என்பவற்றை என்பவற்றை வேண்டிய அளவு சேர்த்துத் தாளிதம் செய்யும் நுட்பத்தைத் தெரிந்து கொண்டிருந்தார்கள். புளியிட்ட உணவு எளிதில் பழுதடையாது என் அறிந்தனர்.



நெல் குற்ற உரல் உலக்கையையும், அரைப்பதற்கு அம்மியையும் (நெடுநல்வாடை 50) கொழிப்பதற்குச் சுளகையும் உருவாக்கினர். உலர்ந்த சுரைக்காயும், மூங்கிற் குழாய்களும் நீர் கொண்டு செல்லப் பயன்பட்டிருக்கின்றன.



பல்வகையான நுட்பங்களுடன் பல்தரப்பட்ட மது வகையறாக்களை வடிக்கக் கற்றுக்கொண்டனர்.



கரும்பிலிருந்து பல படிமுறைகளினூடாகக் கருப்பங்கட்டியை உருவாக்கத் தெரிந்திருந்தனர்.



நிறைவுரை



சங்கத்தமிழரது உணவு மரபுகள் பற்றிய பல செய்திகள் இதுவரையில் மேலே கூறப்பட்டன. பெரிதும் சங்க இலக்கியச் சான்றுகளைக் கொண்டே இச் செய்திகள் பெறப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்கள் வௌ;வேறு காலகட்டங்களில் தோன்றியவை. சில பாடல்கள் காலத்தால் மிக முற்பட்டவை எனக் கருத இடமுண்டு.



இந்தக் காலஇடைவெளிகளை சங்கத்தாரது உணவப் பண்பாட்டிலும் காணலாம்.



ஒரே காலகட்டத்திலும் கூட, நில அமைவுகளும் போக்குவரத்து வசதியின்மையும் சங்ககாலத்தோரது வாழ் களங்களுக்கடையே பெரும் இடைவெளியை ஏற்படுத்தியிருந்தன. குறிஞ்சியில் பெறப்பட்ட தேன், நெய்தல் நிலத்தாருக்கு அரிய பொருள் ஆனது. நெய்தலில் விளைந்த உப்பு குறிஞ்சியாருக்கு எட்டாப் பொருளாயிற்று. பெரும் பணியினூடாகப் பெறப்பட்ட பசுநெய் பலருக்கும் கிட்டாத பெறுமதி மிக்கதானது. மருதத்தில் விளைந்த நெல் மலைக்கும் அலைக்கும் எளிதிற் கிடைக்கவில்லை.



எனினும் தத்தமது சூழலில் விளைந்த, பெறப்பட்ட உணவுவகைகளைக் கொண்டு குறைவிலாது தம் தேவைகளை நிறைவேற்றினர் சங்கத் தமிழர். பெரும் ஆடம்பரமற்ற எளிமையான உணவுப் பழக்கமே சங்கம் எங்கும் பெரிதும் விரவிக் கிடக்கின்றது.



பிற இனத்தாரது பண்பாட்டுப் படையெடுப்புகளால் பாதிக்கப்படாத தனித்துவமான உணவுப் பொருட்களும் சமையல் முறைகளும் சங்ககாலத்திலேயே காணப்பட்டிருக்கின்றன. சங்கத்தை அடுத்த அறநெறிக்காலத்தில் சமணம், பௌத்தம் போன்ற மதங்கள் பெற்ற செல்வாக்கு தமிழர் உணவு மரபில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுவரையில் தமிழர் உணவில் முதன்மையுற்றிருந்த ஊன்வகைகள் பின்தள்ளப்பட்டன. உணவொழுக்கத்தில் சைவம் அசைவம் போன்ற பாகுபாடுகள் தோன்றின. இறை வழிபாடு தழுவிய நோன்பு முறைகளும் மரக்கறி உணவுகளும் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கின.



இம்மாற்றங்கள் சமூக வளர்ச்சியின் பரிணாமப் படிகள் என எடுத்துக்கொண்டாலும் தமிழரின் தனித்துவ மரபுகள் இ;மமாற்றங்களினால் திரிபுகளுக்கு உட்பட்டதை நாம் ஏற்றாக வேண்டும்.



தமிழர் வாழ்வியல் நீட்சியில் எம் பழம்பெரும் பண்பாட்டை உணர்ந்து கொள்வதற்குச் சங்ககாலத்து உணவு மரபுகள் பெரும் துணை செய்கின்றன.



துணை நின்ற நூல்களும் இணையத்தளங்களும்:



தமிழர் உணவு: பக்தவத்சல பாரதி

பண்பாட்டு அசைவுகள்: தொ.பரமசிவன்

முல்லைநில உணவு முறைகள்: முனைவர் சு. அரங்கநாதன்

தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்: கே. கே. பிள்ளை

தமிழரும் தாவரமும்: பேராசிரியர் கு.வி. கிருஸ்ணமூர்த்தி

சங்ககாலத்து உணவும் உடையும்: மா.இராசமாணிக்கனார்.

பண்டைத் தமிழர் உணவுகள்: முனைவர் சி. சேதுராமன்

புறநானூறு

பெரும்பாணாற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை

பரிபாடல்

மதுரைக்காஞ்சி

நற்றிணை

பட்டினப்பாலை

அகநானூறு

Saturday 7 November 2015

உலகின் தலைசிறந்த சிந்தனையாளர்கள் பட்டியலில் திருவள்ளுவர்!

உலகின் தலைசிறந்த சிந்தனையாளர்கள் பட்டியலில் திருவள்ளுவர். சிங்கப்பூரில் உள்ள பிரபல MDIS கல்வி நிலைய வளாகத்தில் திருவள்ளுவர் சிலை.சிங்கையில் உள்ள பிரபலமான மேலாண்மை பட்டப்படிப்பு வழங்கும் MDIS என்னும் (Management Development Institute of Singapore) கல்வி வளாகத்தின் நுழைவாயிலில் உலகின் தலைசிறந்த பத்து சிந்தனையாளர்களின் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளது.


இதில் தமிழர்களின் பெருமையான திருவள்ளுவருக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் நிறுவப்பட்டு பல ஆண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டில் பலருக்கும் இது குறித்த செய்தி தெரியாது. அதனால் இதை பற்றியான செய்தியை நாம் பதிவு செய்கிறோம்.

பல்லாயிரம் பன்னாட்டு மாணவர்கள் பயிலும் இந்த கல்வி நிலையித்தில் இத்தைகைய சிந்தனையாளர்களின் சிலைகளை வைத்திருப்பது , மாணவர்களுக்கு நன்னெறிகளை கற்றுக் கொடுப்பதொடு, நன்மை தீமைகளை மாணவர்கள் பகுத்துணர்ந்து அறிய இத்தகைய முயற்சியை மேற்கொண்டுள்ளது MDIS நிர்வாகம்.

இதில் உள்ள உலகின் தலை சிறந்த சிந்தனையாளர்களின் பட்டியில் இதோ…

இடமிருந்து வலம்.. லூயிஸ் பாஸ்டர், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், இப் கால்டன், பென் ஜான்சன், அரிஸ்டாட்டில், திருவள்ளுவர், பிளாடோ, கன்புயுசியஸ், சாக்ரடிஸ் மற்றும் மரியா மாண்டேசரி

இந்த சிலைகளை இந்த கல்வி நிலையத்தில் நிறுவுவதற்கு காரணமாக இருந்தவர் MDIS நிறுவனத்தின் பொதுச் செயலாளர் முனைவர் தேவேந்திரன் ஆவார். தமிழரான இவரது தாய் தந்தையின் பூர்வீகம் இலங்கை ஆகும். இக்கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்களை மனதளவில் ஊக்கப்படுத்தவும், அவர்கள் வாழ்க்கைக்கு தேவையான ஒழுக்கங்களை பெறுவதற்கும் இந்த தலைசிறந்த மனிதர்களின் உருவச் சிலைகள் உதவும் என்பதற்காக தேவேந்திரன் இந்த சிலைகளை கல்வி நிலையத்தின் வாசலில் நிறுவி உள்ளார். பன்னாட்டு மாணவர்கள் இப்போது யார் திருவள்ளுவர் என்பது பற்றியும் உலகப் பொது முறையாம் திருக்குறள் பற்றியும் அறிந்து வருவது தமிழர்களுக்கு பெருமை தானே.

இது போல் உலகில் பல்வேறு நாடுகளிலும் திருக்குறளின் பெருமையை பற்றியும் திருவள்ளுவரை பற்றியும் அறியுமாறு தமிழர்கள் தங்களால் முடிந்த செயல்களை செய்ய வேண்டும். தமிழுக்கு பெருமை சேர்க்கும் இத்தகைய செயலை நாம் அனைவரும் பாராட்டுவோம்.

தமிழர்களும் செவ்விந்தியர்களும்!

தமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :

உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்பு.இன்று உலகமே மாயன்(Mayan) என்கிற வார்த்தையை அறிந்திருக்கிறது. மாயன்(Mayan) Calendar-யை வைத்து உலகம் முழுவதும் இன்று பரபரப்பு கிளப்பப்படுகிறது. 2012-ல் உலகம் அழிந்திவிடலாம் என்கிற புனைவுகளும் தொலைக்காட்சி மர்மத் தொடர்களால் முன்னெடுக்கப்படுகின்றன.


Omlec, Aztec, மாயன்(Mayan), Inca இவைகள் வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்த மக்களுடைய நாகரீகங்களின் பெயர்கள். இவர்களை வெள்ளையர்கள் செவ்விந்தியர்கள் என்று பொதுபட அழைத்தார்கள். ஆங்கிலேயர்கள் இவர்களை செவ்விந்தியர்கள் என்று அழைத்ததற்கு வரலாற்று பின்னனி உண்டு.

கி.பி. 14, 15 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு செல்ல கடல் வழியைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அந்த காலகட்டத்தில் அட்லாண்டிக் பெருங்கடல் (Atlantic Ocean)-யை குறுக்காக கடந்து இந்தியாவிற்கு போய்விடலாம் என்று கொலம்பஸ் (Columbus) நம்பினார்.

அவருடைய நம்பிக்கையின்படியே அவர் அட்லாண்டிக் பெருங்கடல் (Atlantic Ocean)-யை கடந்தார். ஆனால் அவர் போய் சேர்ந்த கண்டம் அமெரிக்கா. ஆனால் Columbus தாம் வந்து இறங்கிய நாடு இந்தியா என்றே நம்பினார். அமெரிக்க கண்டத்தை சேர்ந்த மக்கள், இனக்குழு வழக்கப்படி தங்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிக்கொள்வது வழக்கம்.

இதை பார்த்த ஐரோப்பியர்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிய அந்த மக்களையும் தாங்கள் கண்டுபிடித்தது இந்தியா என்கிற நம்பிக்கையையும் ஒன்றாக்கி அந்த மக்களை செவ்ந்தியர்கள் (Red Indians) என்று அழைக்கத் தொடங்கினார்கள்.

கொலம்பஸ்(Columbus)-க்கு முன்பே Americo Vesbugi என்பவர் அமெரிக்க கண்டத்தை கண்டுபிடித்துவிட்டார் என்பது வேறு கதை. இவரை பெருமைபடுத்தும் விதமாகவே அந்த கண்டம் America என்று அழைக்கப்படுகிறது.


இந்த செவ்விந்தியர்கள் எப்படி இரு அமெரிக்க கண்டங்களிலும் (Green Land, Ice Land, Canada உட்பட) குடியெரினார்கள் என்பது இன்று வரை அவிழ்க்கப்படாத முடிச்சாக இருக்கிறது. ஆனால் ஒன்றை மட்டும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உருதிபடுத்தியிருக்கிறார்கள்.

அந்த ஒரு விசயத்தைப் பற்றிதான் நம்முடைய முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தெரியாமல் போயிற்று. வரலாற்று அறிவுக்கும் இவர்களுக்கும்தான் ஏழாம் பொறுத்தமாயிற்றே! வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்திய அந்த விசயம் செவ்விந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் தொடர்பு உண்டு என்பதுதான்.

இதை படிப்பவர்களுக்கு, இது எதோ இட்டுகட்டிய சமாச்சாரம், வலிந்து தமிழர்களுக்கு பெருமை தேடுகிற விசயம், உலகத்தில் உள்ளவர்களையெல்லாம் தமிழர்களோடு தொடர்புபடுத்துகிற மோசடி என்று நினைக்கத் தோன்றலாம் ஆனால் உண்மை இதுதான்.


நல்லவேளை இந்த உண்மையை கண்டுபிடித்தவர்கள் வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அதனால் நம்மவர்கள் இதை நம்பத் துணிவார்கள். நம்மவர்களுக்கு Made in Foreign என்றாலே ஒரு கிலுகிலுப்புதானே!

தமிழ் வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒருவர் இந்த உண்மையை கண்டிருந்தால் அவரை பைத்தியக்காரன் என்று முத்திரை குத்தி மூலையில் தள்ளி இருப்போம். தன் இனத்து அறிஞனை மதிக்காத எந்த இனமும் உருப்பட்டதாக வரலாறு கிடையாது. இதற்கு வாழும் உதாரணம் தமிழனே.


The Conquest of Mexico and Peru என்கிற வரலாற்று நூலை எழுதிய William H. Prescott என்பவரே முதன் முதலில் செவ்விந்தியர் தமிழர் தொடர்பை பற்றி பேசுகிறார். ஐரோப்பியர்கள் எப்படி செவ்விந்தியர்களை, மெக்சிகோ மற்றும் பெரூ நாடுகள் முழுவதிலிருந்தும் ஒழித்துகட்டினார்கள் என்பதை விலாவாரியாக இந்த நூல் விவரிக்கிறது.

இந்த நூலின் தொடக்கத்தில் செவ்விந்தியர்களின் பூர்வீகம் குறித்து பேசும் Prescott தமிழர் தொடர்பை அடித்து கூறுகிறார். வரலாற்று ஆராய்ச்சியாளர் இல்லையென்றாலும் சே குவேராவும் தன்னுடைய தென் அமெரிக்க பயண குறிப்புகளில் இதை பற்றி எழுதியிருக்கிறார்.


‘இன்காகள் (Incas) தென் அமெரிக்க சோழர்கள்’ என்கிற ஆராய்ச்சி நூல் ஒன்று தமிழிலும் இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் நூலகத்தில், யாரும் திரும்பி பார்க்க கூட யோசிக்கும் புத்தக அடுக்கில், தூசி தும்பட்டைகளுக்கு மத்தியிலிருந்து எடுத்து இந்த புத்தகத்தை நான் படித்திருக்கிறேன்.

இந்த புத்தகத்தை எழுதிய ஆராய்ச்சியாளரின் பெயரை நான் மறந்துவிட்டதின் காரணமாக என்னால் அது குறித்த தகவலை தர இயலவில்லை. இது வருத்தமளிக்க கூடி விசயம். இந்த கட்டுரை எழுதும் பொறுட்டு இந்த அறுமையான புத்தகத்தை நூலக்கத்தில் எவ்வளவோ முயன்று தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த புத்தகத்திற்கு மறுபதிப்பு இல்லை என்பதும் வேதனையான விசயம். தமிழ் அறிஞர்களின் ஆராய்ச்சி அறிவு இப்படிதான் கண்டுகொள்ள ஆளில்லாமல் காணாமல் போகிறது.


செவ்விந்தியர்களின் கலாச்சார கூறுகள் மிகத் தெளிவாக தமிழர்களின் கலாச்சார கூறுகளை உள்ளடக்கி இருக்கின்றன. தமிழர்களின் வானியியல், செவ்விந்தியர்களின் வானியியலோடு ஒத்துப்போகின்றன. செவ்விந்தியர்களின் வானியியல் நுட்பத்தை ஆராய்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், பல்லாயிரம் ஆண்டுகள் அனுபவத்தின் மூலமாகே இத்தகைய நுட்பங்களை பெற முடியும் என்றும் செவ்விந்தியர்களுக்கு இது ஒரே இரவில் கைவர சாத்தியம் இல்லையென்றும் கணிக்கிறார்கள்.

காரணம் செவ்விந்தியர்கள் ஒரிடத்தில் நிலைத்து வாழ்பவர்கள் கிடையாது அவர்களுடையது நாடோடி கலாச்சாரம். நாடோடி இனம் வானியியலில் தேர்ச்சி பெறுவது சாத்தியம் அற்றது. தமிழர்களுடனான தொடர்பே இவர்கள் வானியியலில் தேர்ச்சி பெறுவதற்கு உதவியிருக்கும் என்று கருதுகிறார்கள். மெசப்பத்தோமியா, எகிப்பது நாகரீகங்களின் தொடர்புகள் செவ்விந்தியர்களிடம் கிடையாது.


செவ்விந்தியர்கள் ஏறக்குறைய 3000 ஆண்டுகளாக அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை, நிலையான விவசாய முறை சார்ந்த நிலவுடமை கலச்சாரம் கொண்டது கிடையாது. காடு சார்ந்த பொருட்களும், கால் நடைகளுமே அவர்களுடைய சொத்துகள்.

தென் அமெரிக்காவில் காடுகளிலும், வட அமெரிக்காவில் இடம் விட்டு இடம் நகரும் வகையிலுமே அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துகொண்டார்கள். அமெரிக்கா போன்ற இயற்கை வளம் நிறைந்த நாட்டில், செவ்விந்தியர்கள் நிலையான விவசாய சமூகத்தை ஏற்படுத்தாதது ஆச்சரியமான விசயம்.

Mel Gibson-னின் Apocalypto படம் தென் அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை மிகத் துள்ளியமாக காட்சி படுத்தியிருக்கும். Hollywood-ன் இனவெறிப் பிடித்த Cowboy படங்களில் வெள்ளையர்களுக்கும் செவ்விந்தியர்களுக்கும் இடையிலான சண்டை காட்சிகளில் வட அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை தெரிந்து கொள்ளலாம்.


ஐரோப்பியர்களுக்கு அமெரிக்கா என்று ஒரு கண்டம் இருப்பதே கி.பி. 12, 13 நூற்றாண்டுகளுக்கு பிறகுதான் தெரியவந்தது. ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு அமெரிக்கா கண்டத்தோடு தொடர்பு இருந்திருக்கிறது. இது கற்பனை கதைப் போல இருந்தாலும் இதற்கு வலுவான சான்று உண்டு.

தென் பசிபிக் மகாகடலில் (Pacific Ocean) ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சி(Ocean Archeology) மேற்கொண்ட சமயத்தில் மிகப் பெரிய சரக்குக் கப்பல் ஒன்றை கண்டுபிடித்தார்கள். முழுவதும் மரத்தால் கட்டப்பட்டிருந்த இந்த கப்பல் வணிகப் பொருட்களுடன் முழ்கியிருக்கிறது.

Carbon-Dating முறையின்படி இந்த கப்பலின் வயது இன்றிலிருந்து 2500 வருடங்களுக்கும் மேல் என்று தெரிந்திருக்கிறது. தரவுகளை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், தமிழர்கள் வணிகத்திற்கு உபயோகப்படுத்திய கப்பல்களில் ஓன்று ஆஸ்திரேலிய கண்டத்தைத் தாண்டி அமெரிக்கா செல்லும் வழியில் பசிபிக் கடலில் முழுகியிருக்கிறது என்ற முடிவிற்கு வந்தார்கள்.


ஆராய்ச்சியார்கள் கண்ணை மூடிக்கொண்டு இந்த கப்பல் தமிழர்களுடையது என்கிற கணிப்பிற்கு வந்துவிடவில்லை. முதலில் இந்த கப்பல் எந்த மரத்தால் கட்டப்பட்டது என்று ஆராய்ந்தபோது தேக்கு மரத்தால் ஆனது என்று தெரிந்திருக்கிறது. தேக்கு தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே கிடைக்க கூடியது.

அதுமட்டும் இல்லாமல் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் கடல்களில் மிகப் பெரிய கப்பல்களை வைத்து வாணிபம் செய்த நாகரீகம் இரண்டே இரண்டுதான். ஒன்று தமிழர்களுடைய நாகரீகம் மற்றது எகிப்திய நாகரீகம். மூழ்கிய அந்த கப்பலின் கட்டுமான அமைப்பு எகிப்தியர்களின் சரக்கு கப்பல்களோடு பொறுந்திபோகவில்லை.

மேலும் எகிப்தியர்கள் கறையோரமாகவே பயணித்து செல்லக் கூடியவர்கள். அவர்களுக்கு நடுகடலில் கப்பல் செலுத்தத் தெரியாது. அதன் காரணமாக அவர்களுடைய கப்பல்களின் கட்டுமானமும் கரையோரமாக பயணிக்க ஏற்ற வகையில்தான் இருக்கும்.


கண்டுபிடிக்கப்பட்ட கப்பலோ மிகப் பெரியதாக நிறைய சரக்குகளை கையாளக் கூடியதாக இருந்ததோடு நடுகடலில் பயணம் செய்வதற்கு ஏற்றபடியும் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கப்பலில் இருந்த சரக்குகளும் தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்ககூடியவைகள்.

தமிழ் இலக்கியங்கள் மட்டுமே கடலில் பயணிக்கும் களங்களுக்கு உபயோகத்தின் அடிபடையில் அமைந்த பெயர்களைப் பற்றி கூறுகிறது. இவைகள் மூலம் தமிழர்களின் கடலோடும் அனுபவத்தை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது தமிழர்களுடைய வணிக கப்பல்தான் என்று உறுதி செய்திருக்கிறார்கள்.

ஆக வெள்ளையர்கள் நாடோடிகளாக சுற்றிதிரிந்த காலத்திலேயே தமிழன் ஆஸ்திரேலிய கண்டத்தையும், அமெரிக்க கண்டத்தையும் கண்டு அறிந்து வைத்திருந்தான். இந்த கண்டங்களோடு வணிகத் தொடர்புகள் அவனுக்கு இருந்திருக்கிறது. நம்முடைய சாபக்கேடு இவற்றை பற்றிய முறையான வரலாற்று ஆவணங்கள் இல்லாதது.

3000 ஆண்டுகளுக்கு முன்பே நடுகடலில் பயணிக்கத் தெரிந்த தமிழன், தன்னுடைய சிறப்புகள் பற்றி பதிய தவறியது கேடுகாலமே.


நல்லவேலை ஆரிய வேதங்கள் கடல் பயணத்தை தடை செய்திருக்கின்றன.. இல்லை என்றால் மூழ்கிய இந்த தமிழர்களுடைய கப்பலுக்கு தலைவன்(Captain) ஒரு பிராமணன் என்று இல்லாத வரலாற்றை இருப்பதுபோல் எழுதியிருப்பார்கள்.

தன்னுடைய சிறப்புகள் பற்றிய விழிப்புணர்வே அற்ற தமிழனும் அதை அப்படியே நம்பிவிடுவான்.உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்புகளைப் பற்றி பேச இன்று நாதியில்லை. ஆங்கொன்றும் இங்கொன்றுமாக நம்முடைய சிறப்புகள் குறித்து வரலாற்று ஆதாரங்கள் கிடைத்தாலும் வெகு மக்களிடம் அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழர்கள் தவறிவிடுகிறார்கள்.

தவறிவிடுகிறார்கள் என்பதை விட அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் இந்த அக்கறையின்மை, நாடு இழப்புகளிலும், இனப் படுகொலைகளிலும் தமிழனை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

நன்றி: மகேந்திரன் ஆறுமுகம்

அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி..!!!

தலைப்பு : “POTSHRED WITH TAMIL-BRAHMI SCRIPT FOUND IN OMAN”. அதாவது ஓமன் நாட்டில் கண்டெடுக்கப்பட்ட ஓட்டுச்சில்லில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் என்பது அதன் பொருள்.

இதைப்பற்றி இந்துவின் இணையதள இதழிலும் வந்தது. இந்தச் செய்தி உண்மையிலேயே தமிழின் தொன்மையையும் தமிழர்கள் கடல் கடந்து மிகப்பழங்காலத்திலேயே பல நாடுகளில் தங்கள் குடியேற்றத்தைச் செய்து கால் பதித்து கலாச்சாரத்தைப் பதித்திருக்கிறார்கள் என்பது ஒவ்வொரு தமிழனும் நெஞ்சு நிமிர்த்தி பெருமை கொள்ளத்தக்கது.

மேற்கூறிய செய்திகளில் தெரிய வருவது நம்மை அதிசயத்தில் உறைய வைக்கிறது. இப்படிப்பட்ட தமிழ் எழுத்துக்கள் தாங்கிய ஓட்டுச்சில்லுகள் மத்தியத் தரைக் கடலின் மேற்குப்பகுதியான எகிப்து முதல் கிழக்குப்பகுதியில் தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகள் வரை பல்வேறு இடங்களில் கிடைக்கின்றன என்றும் இதற்கான செய்திகள் அவ்வப்போது இந்து நளிதழ் உட்பட பல்வேறு மேலை நாட்டு செய்தித்தாள்களிலும் வெளிவந்திருக்கின்றன.

அடடா! “யாதும் ஊரே யாவரும் கேளிர்!” என்று தமிழன் சும்மா பாட்டாக மட்டும் பாடி வைக்கவில்லை.! ஓட்டிலும் எழுதி பல நாடுகளில் ஒட்டி வாழ்ந்திருக்கிறான் என்பது எவ்வளவு பெருமைபடத்தக்க செய்தி!

இப்போது கண்டுபிடிக்கப்பட்ட ஓட்டுச்சில்லு கோர் ரோரி (KHOR RORI) என்ற ஓமன் நாட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஓட்டுச்சில்லில் “நந்தை கீரன்” என்று எழுதப்பட்டிருக்கிறதாம்! இப்போது நாம் பேசிப்பழகி எழுதி வரும் தமிழ் எழுத்து வடிவில் அல்ல! மிகப் பழங்காலத்தில் தமிழ் எழுதப்பட்ட எழுத்து வடிவில்! அதை வல்லுனர்கள் தமிழ்-பிராமி என்று அழைக்கிறார்கள். தமிழ் என்பது சரி. அதென்ன பிராமி? இதில் ஒரு வரலாற்று மோசடி ஒளிந்து கொண்டிருக்கிறது.

இந்த ஓட்டுச்சில்லில் “நந்தை கீரன்” என்று எழுதப்பட்டிருக்கிறதாம்! இப்போது நாம் பேசிப்பழகி எழுதி வரும் தமிழ் எழுத்து வடிவில் அல்ல! மிகப் பழங்காலத்தில் தமிழ் எழுதப்பட்ட எழுத்து வடிவில்! அதை வல்லுனர்கள் தமிழ்-பிராமி என்று அழைக்கிறார்கள்.

தமிழ் என்பது சரி. அதென்ன பிராமி? இதில் ஒரு வரலாற்று மோசடி ஒளிந்து கொண்டிருக்கிறது.

ஒருவேளை, பிராமி என்பது சமஸ்கிருத எழுத்தா? சமஸ்கிருதம் எப்போதுமே எழுதப்பட்டதே இல்லையே! அதற்குத்தான் எழுத்து வடிவமே கிடையாதே! எல்லாம் வாய்மொழியோடு சரி! அதனால்தானே வடவேதத்திற்குக் கூட எழுதாக்கிளவி என்று கூறினார்கள்.

பழங்காலத்தில் சமஸ்கிருதத்தைப் பேசியவர்கள் அதை ஏன் எழுதவில்லை? சிந்திக்க வேண்டிய விசயம்! உலகிலேயே முதன்முதலில் தான் பேசும் மொழிக்கு எழுத்து வடிவம் கொடுத்தவன் தமிழன்! அதைக் கல்லிலும், ஓட்டிலும், ஓலையிலும் எழுதிப்பார்த்தவன் தமிழன்!

சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவமே கிடையாது. இன்று நாம் சமஸ்கிருதத்தை தேவநாகரி என்றும், கிரந்தம் என்றும் இரண்டு இரவல் வாங்கப்பட்ட எழுத்து வடிவில் எழுதிப்படிக்கிறோம். இது இரவல் வாங்கியது! சமஸ்கிருதத்திற்குச் சொந்தமில்லாதது.

கி.பி.5 ஆம் நூற்றாண்டில் சமஸ்கிருதத்திற்குத் தமிழ்நாட்டில் கிரந்தம் என்ற தமிழ் எழுத்துக்கள் உள்ளடக்கிய எழுத்து வடிவம் தமிழ் சிவாச்சாரியார்களால் பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது. அதனால் அதற்கு பல்லவ கிரந்தம் என்றே பெயர்.

அதற்குப்பின் பல நூற்றாண்டுகட்குப்பின் இந்தி மொழி உருவாகிய பின் வடநாட்டினர் சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவத்தை இந்தி வடிவில் கொடுத்ததுதான் தேவநாகரி.

அப்படியானால் மிகப் பழங்காலத்தில் சமஸ்கிருதம் உருவான போது ஏன் எழுத்து வடிவம் அதற்கு இல்லை? ஒரு நொண்டிச் சமாதானம் அதற்குச் சொன்னார்கள் – எழுதினால் அதற்கு ஆற்றல் போய்விடுமாம்!

இது இப்படி இருக்க மேற்கண்ட தமிழ் எழுத்துக்கள் கிறித்து பிறப்பதற்கு பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே எழுதப்பட்டு வந்திருக்கிறது என்று ஓமன் நாட்டில் கண்டெடுத்த ஓட்டுச் சில்லுகளைப்போல பல சான்றுகள் கிடைத்துக் கொண்டே வருகின்றன. இவ்வாறு முதன் முதலில் பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழில் எழுதி வந்திருக்க அதற்கு ஏன் பிராமி என்று ஒரு சமஸ்கிருதப் பெயர் கொடுக்கப்பட வேண்டும்?

இவ்வாறு முதன் முதலில் பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழில் எழுதி வந்திருக்க அதற்கு ஏன் பிராமி என்று ஒரு சமஸ்கிருதப் பெயர் கொடுக்கப்பட வேண்டும்?

(நலன் கருதி இந்த இடத்தில சில வரிகள் நீக்கப்பட்டுள்ளது., இணையத்தில் படித்து தெரிந்துகொள்ளவும்) உண்மையில் பல சமஸ்கிருத புராண நூல்களிலேயே – மொழிகளின் பட்டியல் ஒன்று வருகிறது. அதாவது கி.மு 3-வது நூற்றாண்டிலேயே எழுந்த ‘சமவயங்ககத்தா’ என்ற பிராகிருதத்தில் எழுதப்பட்ட சமண நூல் 18 வகை எழுத்துக்களைக் குறிப்பிடுகிறது.

அவையாவன.
1.பாம்பி
2.யவனானி
3.தோசபுரியா
4.கரோத்தி
5.புக்கரசரியா
6.போகவையா
7.பகாரியா
8.உயமித்ரகரியா
9.அக்கரபுட்டியா
10.தவனானியா
11.கிணிகையா
12.அங்காலிவி
13.கணிதாவிலி
14.காந்தவ்யவிலி
15.ஆடம்சாலிவி
16.மகாசனி
17.தமிழி
18.பொலிம்னி

இங்கே குறிப்பிடப்பட்டுள்ள எழுத்து வடிவப் பட்டியலில் தமிழி இருப்பது காண்க. தமிழ்தானே முதலில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்து வடிவம்? அப்படியானால் அதுதானே பட்டியலில் முதலில் இடம் பிடித்திருக்க வேண்டும்? ஏன் அது 17 ஆவதாகக் காட்டப்பட்டிருக்கிறது? காரணம், இப்பட்டியலை வடநாட்டினர் தயாரித்தனர். எனவே அவர்கள் தென்னாட்டுத் தமிழை இறுதியில் வைத்துவிட்டனர்.

சரி, கி.மு 3-ஆம் நூற்றாண்டிலேயே தமிழின் எழுத்து வடிவம் தமிழி என்று கூறப்பட்டிருப்பதைப் பார்த்தோம். தமிழின் எழுத்து வடிவம் தமிழி என்பதுதானே சரியாக இருக்கமுடியும்! அதென்ன பிராமி?

மேற்கண்ட அசோகன் காலமான கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் கூறப்பட்ட பட்டியலில் எங்காவது பிராமி என்று ஓர் எழுத்து வடிவம் வந்துள்ளதா?

இல்லையே.!
அப்படியானால் தமிழோடு பிராமி என்று ஒட்டு சேர்த்தவன் வேண்டுமென்றே ஓர் உள்நோக்கத்துடன் ஒட்டு சேர்த்திருக்கிறான்! அந்த உள்நோக்கம் தமிழின் தொன்மையைக் குறைக்க வேண்டும் – மாறாக வடமொழிக்கு முதன்மையை ஏற்ற வேண்டும் என்பதுதான். இது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது..!!



நன்றி -
http://arundhtamil.blogspot.ca/2012/12/124.html

(ஆன்மிக மாத இதழ், டிசம்பர் 2012 “தெய்வ முரசு” ஆசிரியர் மேசை பகுதியிலிருந்து)