Monday, 13 October 2014

தமிழ் தாழ்ந்தது – நக்கீரர் கோபம்

ஒருமுறை நக்கீரர் மதுரையில் பட்டி மண்டபத்தில் புலவர்களுடன் வீற்றிருந்த போது அந்த அவையில் குயக்கொண்டான் என்பான் ஒருவன் இருந்தான். அவன் எழுந்து ‘வடமொழியே உயர்ந்தது என்றும் தமிழ் தாழ்ந்தது என்றும் கூறினான். உடனே கோபம் வந்து விட்டது நக்கீரருக்கு. தமிழ் மொழியைத் தம் உயிரினும் மேலாகக் கருதியவர் அவர். தமிழின் தெய்வத்தன்மையும் அதன் பெருமைகளையும் அவரைப்போல அறிந்தவர் யார்?. சினம் தாளாமல்,
“முரணில் பொதியின் முதற்புத்தேள் வாழி
பரண கபிலரும் வாழி – அரணிய
ஆநந்த வேட்கையான் வேட்கோ குயக்கொண்டான்
ஆநந்தம் சேர்க சிவா ”
என்று பாடினார். உடனே அந்தக் குயக்கொண்டான் வீழ்ந்து இறந்து போனான். அவையே அதிர்ந்து போயிற்று.
அவை நிதானம் அடைவதற்குச் சற்று நேரம் ஆயிற்று. பின்னர் அவையில் உள்ள ஆன்றோர்கள் நக்கீரரைச் சமாதானப்படுத்தினார்கள். “அவன் தமிழை அறிந்தது அவ்வளவுதான். ஏதோ அவனது அறிவின்மையால் உளறிவிட்டான். அதற்காக அவன் இறக்கும்படி பாடியது எங்கள் மனத்தை எல்லாம் பிசைகிறது. எனவே இறக்கும்படி பாடிய நீங்களே அவனை எழுப்பும்படி பாடியருள வேண்டும்.” என்று வேண்டினார்கள்.
அமைதியடைந்த நக்கீரர் உடனே
“ ஆரியம் நன்று தமிழ்தீ தெனவுரைத்த
காரியத்தால் காலக்கோள் பட்டானை – சீரிய
அந்தண் பொதியின் அகத்தியனார் ஆணையினால்
செந்தமிழே தீர்க சிவா “
என்று பாடினார். தூங்கியவன் விழித்தெழுந்ததுபோல அவன் எழுந்து கொண்டான்.
எனவே நக்கீரர் ஒருவனைச் சாவவும் வாழவும் வைக்க வல்ல மந்திரத்தமிழில் ஆற்றல் பெற்றவர் என்பது தெரிகிறது.
(நன்றி : திருமுருகாற்றுப்படை – சகுந்தலை நிலையம் வெளியீடு)

No comments:

Post a Comment