புத்துணர்வும் புதுவாழ்வும் பெறத் துடிக்கும் தமிழ்மக்களுக்குப் புறநானூறு ஓர் ஒப்பற்ற அறிவுச் சுரங்கம். அதில் கடவுள் வாழ்த்தாக அமைவது ‘அருந்தவத்தோன்’ ஆகிய சிவபெருமானைப் பற்றியது.
இதனைப் பாடியவர் ‘பாரதம் பாடிய பெருந்தேவனார்’.
பாடல் : 1 – இறைவனின் திருவுள்ளம்
கண்ணி கார்நறுங் கொன்றை; காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை;
ஊர்தி வால்வெள்ளேறே; சிறந்த
சீர்கெழுகொடியும் அவ்வேறு என்ப;
கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை;
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை
பதிணெண் கணனும் ஏத்தவும் படுமே;
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
நீரற வழியாகக் கரகத்துக்
தாழ்சடை பொலிந்த அருந்தவுத் தோற்றே
பாடலின் விளக்கம்:-
சிவபெருமான் தலையில் சூடிக்கொள்வது கார் காலத்தில் மலரும் கொன்றைப்பூ;
அவனது அழகான வண்ண மார்பில் அணிந்து கொள்வதும் கொன்றைப்பூ.
அவன் பயணம் செய்யும் வாகனம் தூய்மையான வெள்ளை எருது.
அவனது பெருமை பொருந்திய சிறந்த கொடியும் அவ் வெள்ளை எருதே என்பர்.
நஞ்சினது கறை அவனின் கழுத்தை அழகு செய்தலும் செய்தது.
அக் கறை அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்மறையை ஓதும் சான்றோர்களால் புகழவும் படுகிறது.
பெண் உருவை ஒருபாகத்திலே அறியக் காட்டியவன் அவன்.
அவ்வுருவைத் தன்னுள் அடக்கி ஒளித்துத் தானாக அவன் தனித்தும் விளங்குகின்றான்.
அவனது நெற்றிக்கு பிறை வனப்பைத் தருகிறது.
அந்தப் பிறையை பதினெட்டு தேவர்களும் போற்றவும் செய்கிறார்கள்.
எல்லா உயிர்க்கும் காவல் தெய்வம் அவன்.
நீர் வற்றுதல் இல்லாத கமண்டலமும் அவன் கையில் உள்ளது.
தவமுதிர்ச்சியின் அடையாளமாக அவன் தாழ்சடை திகழ்கிறது.
பாடலின் உட்கருத்து :-
சிவமாகிய முழுமுதற்பொருளின் தன்மை மிகவும் போற்றுதற்கரியதாகும். சிவபெருமானுடைய தலையையும் மார்பையும், வாகனத்தையும், கொடியையும் கூறி, அவனுடைய பெருங்கருணையையும் வியந்து பெண்ணும் ஆணும் தானேயாகித் திகழும் தன்மையையும் போற்றுகிறது இந்தச் செய்யுள். அவனைச் சார்ந்த தேய்ந்த பிறையும் பதினெட்டு தேவர்களால் போற்றப்பெரும் பெருநிலை எய்திற்று எனச் சொல்லி அவனை நாமும் அடைந்தால் அதனால் நமக்கும் அத்தகு மேம்பாடு வந்தடையும் எனச் சொல்லாமற் சொல்லி, இத்துணை மேதகு நிலையிலும் அவன் தவத்தோனாக விளங்குகின்றான் எனத் தன்னையுணர்ந்து தனித்து அடங்கும் அழகையும் அறிவுறுத்துகிறது இச் செய்யுள்.
No comments:
Post a Comment