Monday, 13 October 2014

அகத்தியரும் காக்கா கதையும்

அகத்தியரின் கமண்டலத்தில் இருந்த நீரைக் காகம் கவிழ்த்து விட்டது. அந்த நீரே பெருக்கெடுத்துக் காவிரியாக ஓடியது என்று புராணம் கூறுகிறது. ஆரிய மாயையில் அகப்பட்ட தமிழ்ப்புலவர்களும் அப்புராணக் கதைகளைத் தமிழ்ப் பாக்களில் சாய்த்து விட்ட அவலத்தைக் பல பாடல்களில் காணலாம்.

நிகழ்ந்த உண்மை நிகழ்வுகள் பின்வருமாறு:
சிவபெருமான் உமையம்மை திருமணத்தின் பொழுது உலகமே இமயமலையில் குழுமியது. எனவே வடக்கே இமயமலை தாழ்ந்தது. சிவபெருமானின் ஆணையை ஏற்ற அகத்தியர் தெற்கே, பொதிய மலையை ஏறி மிதித்து நின்றார். எனவே, தெற்கு தாழ்ந்ததால் வடக்கு தாழ்ந்த நிலை மாறி சமமானது. இவ்வாறு, அகத்தியர் பொதிய மலையின் செருக்கை அடக்கினார் என்கின்றன வடமொழிப் புராணங்கள்.

வடக்கே இருந்து தெற்கு நோக்கி ஆரியர்கள் பரவினர். இடையில் குறுக்கிட்ட பொதியமலை ஆரியரின் பரவலுக்குத் தடையாக இருந்து வந்தது. பொதியமலை ஏறிக் கடப்பதற்கு அரிது என்ற எண்ணம் நிலவியது. முதன் முதலில் முழு முயற்சியுடன் ஏறி பொதியமலையைக் கடந்து இப்பால் உள்ள தமிழகத்தில் அகத்தியர் நுழைந்தார். கடப்பதற்கு அரிய பொதியமலையை அகத்தியர் கடந்ததையே, அகத்தியர் பொதியமலையின் செருக்கை அடக்கினார் என்று ஆரியர் மார் தட்டிக் கொள்கின்றனர்.

ஆணவம், கர்வம், முதலான உணர்வுகள் ஆதிக்க குணம் மிக்கவர்களுக்கு உரியன. மலை எப்படிச் செருக்கு கொள்ளும்?. ஆதிக்க குணம் மிக்க ஆரியர் பொதிய மலையின் கம்பீரத்தைச் ‘செருக்கு’ என நிலை நாட்டினர்.

பொதிய மலையைக் கடந்து தமிழகத்திற்குள் ஆரியர் நுழைந்தனர். தமிழகத்தில் இயற்கை, வளமை இருந்தது; தமிழ் மொழிச் செழுமை இருந்தது. தமிழுக்கு என்று முறையான எழுத்து வடிவங்கள், எழுத்து வரையறைகள் இருந்தன. தமிழுக்கு என்று பண்பட்ட நாகரிகம் இருந்தது. இவை அனைத்தையும் அகத்தியர் உள்ளிட்ட ஆரியர் கண்டனர்.

பழந்தமிழின் எழுத்து வடிவங்களையும் வரையறைகளையும் அடிப்படையாகக் கொண்டு ஆரியர் ‘சமற்கிருதம்’ என்னும் மொழியைத் தமக்கென வடிவமைத்துக் கொண்டனர்.
தமக்கென நிலையான வரிவடிவம், வரையறை முதலானவை இன்றி ஆரியர் நிலை தாழ்ந்திருந்தது. இந்த இழிநிலை அகத்தியரால் ஆரியருக்கு நீங்கியது.


தமிழக மன்னர்கள் ஆதரவும் ஆரியருக்கு முழுமையாகக் கிடைத்தது. மக்களுக்குள் இருந்த, வந்தாரை வாழ வைக்கும் விருந்தோம்பல் குணமும், அவரது ஒற்றுமைக் குறைவும் ஆரியருக்கு பக்கபலமாயின.

தீயை வளர்த்து அதனை வலம் வந்து மந்திரம் முணுமுணுக்கும் புதியதொரு வழிபாட்டு முறையை அரசியல் செல்வாக்குடன் மக்களிடையே பரப்பினர். இவ்வாறு தெய்வத்தை வணங்குவதற்கு உரியமொழியாகச் சமற்கிருதத்தை உயர்த்திக் கொண்டனர். காலப்போக்கில் சமற்கிருதத்தை ‘தேவபாஷை’ என நிலைநாட்டிக் கொண்டனர்.

நிலையாக நிற்கும் மலை, கடல், ஆறு, இயற்கை, இலக்கியங்கள் அனைத்திலும் சமற்கிருதப் பெயரையும், கருத்துக்களையும் பதிய வைத்தனர். தம் மொழி உருவாக அடிப்படைக் காரணியாக இருந்த தமிழை ‘நீச பாஷை’ என்றும் ‘பைசாச மொழி’ என எள்ளி நகையாடினர்.

வடவரிடம் இருந்து தமிழில் தப்பித்தவை எ, ஒ, ழ, ற, ன என்னும் 5 எழுத்துக்கள் மட்டுமே.
உண்மை இவ்வாறு இருக்க,
“ஐந்து எழுத்தால் ஒருபாடையும் ஆம்என்று
அறையவும் நாணுவர் அறிவுடை யோரே “
என கேலி பேசவும் (சுவாமிநாத தேசிகர்-இலக்கணக்கொத்து) செய்தனர்.

(நன்றி: வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு – முனைவர் பாக்யமேரி)

No comments:

Post a Comment