Monday, 13 October 2014

‘ஐ’ யை மீட்ட ஐயன்


பல தமிழ் எழுத்துக்கள் சீர்திருத்த எழுத்து என்ற முறையில் மறைந்து போய் விட்டன. உயிரெழுத்தில் ஒன்றான ‘ஐ’ என்ற எழுத்திற்கும் சீர்திருத்த எழுத்து முறையால் ஆபத்து வந்தது. அது போயிருந்தால் உயிரெழுத்துக்கள் மொத்தம் 12 ல் இருந்து 11 ஆகி இருக்கும். ஆனால். திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் இதற்கு புண்ணியம் கட்டிக் கொண்டார்கள்.

அமரர் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக, எழுத்துச் சீர்திருத்தத்தை கொண்டு வந்த நேரம், இது பற்றி பேச வாரியார் சுவாமிகள் முதல்வரை பார்க்கச் சென்றார். வாரியார் தம் அலுவலகத்திற்கு வந்ததை கேள்விப்பட்ட முதல்வர், வராண்டாவிற்கே ஓடோடி வந்தார். “சுவாமிகள் சொல்லியிருந்தால் நானே வந்திருப்பேனே” என்று சொன்னார்.


வாரியார் சுவாமிகள் சொன்னார்: “அப்பா! ஒரு ஆர்டர் போட்டு தமிழ்மொழி எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்தாயே. அதில் மறைந்து போன ஏனைய எழுத்துக்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் ‘ஐ’ என்பது மிகப் பெரிய சிறப்பெழுத்து”

“ஐ என்பது தமிழில் ஒர் எழுத்து மட்டுமல்ல; ஓரெழுத்தொரு மொழி. அரசன், திருமகள், கடவுள் ….. என்று பலபொருள் ஒரு மொழி அது. ஒரு பாடல் சொல்கிறேன் கேள்:

“குறியைக் குறியாது குறித்தறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்”

இதில் தனிவேலை நிகழ்த்திடலும் என்பது தனிவேல் + ஐ நிகழ்த்திடலும் என்று பிரிந்து பொருள் தரும். தனிவேல் உடைய கடவுளாகிய முருகப் பெருமான் நிகழ்த்திடலும் என்று பொருள்.”

“இந்த ‘ஐ’ என்பதை நீ எடுத்து விட்டாயே!
இனி இதற்கு நான் என்ன பொருள் சொல்வது?” என்று கேட்டார்.

முதல்வர் எம்.ஜி.ஆர் உடனே ‘ஐ’ எழுத்து மட்டும் அப்படியே இருக்க வேண்டும் என்று மறு ஆணை போட்டார். அதனால் ‘ஐ’ என்ற எழுத்து தப்பியது. இதை மீட்டுக் கொண்டு வந்தவர் வாரியார் சுவாமிகள்.

No comments:

Post a Comment