Monday 13 October 2014

தமிழா, வழிபடு ! தமிழ் வழிப்படு !!


1. தமிழ் ஒன்றுதான் தெய்வத்தமிழ் எனப்படும் மொழி. தெய்வ இந்தி, தெய்வ ஆங்கிலம் என்றெல்லாம் வழக்கில் இல்லை. சமஸ்கிருதம் தெய்வத்தின் மொழியல்ல; தேவர்களின் மொழி என்கிறார்கள்.


2. “ஓம்” என்கிற ஓங்காரத்தின் பொருளை தமிழ்க்கடவுள் எனப்படும் முருகன் சிவபெருமானுக்கு கொஞ்சு தமிழால் விரித்துரைத்தான் என்பது வரலாறு. (கொன்றைச் சடையார்க்கு ஒன்றைத் தெரிய கொஞ்சித் தமிழால் பகர்வோனே” – திருப்புகழ்)

3. தெய்வம் எல்லா மொழிகளுக்கும் பொது; ஆனால், அந்தத் தெய்வம் தான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்மொழிக்குச் சங்கம் கண்டது என்று 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த மூன்றாம் தமிழ்ச் சங்க நூலான இறையனார் களவியல் உரைநூல் சான்று பகர்கிறது.

4. உலகை உருவாக்க உயர்நிலை உயிர்களான சதாசிவர்களைப் பணிகொள்ள இறைவனால் கற்பிக்கப்பட்ட முதல்மொழி தமிழ் என்று வள்ளலார் ‘தமிழ்’ என்ற சொல்லுக்கு எழுதிய விரிவுரையில் உறுதிபட உரைக்கின்றார்.

5. ‘முத்தியை, ஞானத்தை, முத்தமிழ் ஓசையை’ என்று இறைவனே முத்தமிழ் ஓசையாக உள்ளவன் என அடையாளம் காட்டுகின்றார், திருமூலர் – தமிழ் மூவாயிரமாம் திருமந்திரத்தில்.

6. கோயில்கள் எல்லாம் தமிழன் கண்டவை; தமிழ்நாட்டில் உள்ள 1008 சிவாலயங்களும், 108 வைணவத்தலங்களும் இதற்குச் சான்று. தமிழகத்தைத் தாண்டினால் இந்தியாவில் சொல்லும் தரத்தில் பெரிய கோயில்கள் ஏதும் இல்லாததும் இதை உறுதிப்படுத்தும். தமிழக அரசின் முத்திரையில் கோயில் இடம் பெற்றிருப்பதும் இதற்கு மேலும் ஒரு வலிய சான்று.


7. வடக்கே கைலாயத்தில் உள்ளதாகக் கூறப்படும் சிவபெருமான் தெற்கே தமிழ் நாட்டைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறார். தமிழின் இனிமை.

8. தமிழிசையின் இனிமை ஆகியவற்றிற்காக ஏங்கி இறைவன் தெற்கே தில்லைக்கு வந்து கூத்தாடினானாம், ஆடும்போது களைப்பு தீர இடையிடையே தென்றலின் சுகமும் பெறலாம் எனத் தெற்கிற்கு வந்ததாக திருவிளையாடற் புராணம் கூறுகிறது.

9. தமிழகத்தைத் தாண்டி வடக்கே நடராசருக்குக் கோயில் கிடையாது. தென்னாட்டில் தன் சைவம் உருவானதாக காரண ஆகமம் கூறுகிறது. எனவே சிவன் தென்னாடுடைய சிவனானான்.

10. தமிழகக்கோயில்களில் கி.பி. 7-ஆம் நூற்றாண்டு வரை தமிழில்தான் வழிபாடுகள் நடந்தன என்று திருஞான சம்பந்தர் பல பாடல்களில் பதிவு செய்திருக்கிறார். (உ-ம்: “செந்தமிழர் தெய்வமறை நாவர்”, “ஊறும் இன்தமிழால் உயர்ந்தார் தொழுதேத்தும் தில்லை”)

(நன்றி : தெய்வத்தமிழ் அறக்கட்டளை, ஆதம்பாக்கம், சென்னை)

No comments:

Post a Comment