Monday 13 October 2014

அறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம்.



ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு வேதம் உண்டு. கிறித்தவர்களுடைய வேதம் ‘பைபிள்’, இசுலாமியர்களுக்கு ‘குரான்’. பௌத்தர்களுக்கு ‘பிடகம்’.

நமக்கு மட்டும் வேதம் வடமொழியில் இருப்பதாக நாம் ஏன் நினைக்கிறோம்? இதைவிட வேடிக்கை ஒன்று உண்டா?. இந்த வேடிக்கையே வாடிக்கையானது தான் வேதனை. காரணம், நாம் எதையும் ஆராய்ந்து பார்க்காமலே சோம்பேறித் தனமாக ஏற்றுக் கொள்ளப் பழகிவிட்டோம்.


நாம் எதையும் காரண காரியத்தோடு ஆராய வேண்டும். தாயுமானவர் உயிர்களை ‘ஆராயும் அறிவு நீ’ என்று பாடினார்.

அப்படியானால் எது தமிழர்க்கு வேதம் என்பதை ஆராயாமலே எவரோ சொல்லும் ஏதோ ஒரு வேதத்தை வேற்று மொழியில் இருப்பதை – எப்படி நம்முடைய வேதம் என்று ஏற்றுக் கொள்வது? எனவே எது வேதம் என்பதை ஆராய வேண்டும்.

வேதம் என்பது இரண்டு விதமாக சொல்லப்படுகிறது.
1) இறைவனால் பாடப்பட்டது.
2) சுயம்பு – தானாகத் தோன்றியது.

வடமொழி வேதத்தை காழ்ப்புணர்ச்சியோடு பார்க்கவில்லை. ஆராய்ச்சி என்றால் காய்தல் உவத்தல் என்பது இருக்கக் கூடாது; உண்மைதான் அதில் முக்கியம். அந்தப் பார்வையால் ஆராய்கிறோம். வடமொழி வேதத்தை – அதாவது நம்மில் பலர் நமது வேதம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமே, அதை வடமொழி வித்தகர்களே தானாகத் தோன்றியது என்கிறார்கள். வைதிகர்கள் அவ்வேதத்தை அப்படித்தான் கொண்டாடுகிறார்கள். அப்படியானால் அந்த வேதத்திற்கும் தமிழர்களுக்கும் நிச்சயமாக தொடர்பு கிடையாது.

தமிழர்களாகிய நமது வேதம் இறைவனால் பாடப்பட்டது. இறைவனால் பாடப்பட்ட வேதம் எதுவோ அதற்கும் நமக்கும்தான் தொடர்பு உண்டு.
“அற்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மை
சொற்றமிழ் பாடுகென்றான் தூமறை பாடும் வாயான்”
என்பது பெரியபுராண வாக்கு. அதாவது தூயமறைகளை எல்லாம் இறைவன் தம் வாயினாலேயே பாடியருளினான் என்கிறார் சேக்கிழார். உடனே நமக்கு சேக்கிழாருக்கு முன்னால் அப்படியாரும் சொன்னார்களா என்று கேட்கத் தோன்றலாம்.

சங்க காலத்தில் கூட வேதம் இறைவனால் பாடப்பட்டது என்றே கூறப்பட்டது. புறநானூற்றில் 166 ஆவது பாட்டில் இது அழகாகக் கூறப்பட்டிருக்கிறது.
“நன்றாய்ந்த நீணிமிர் சடை
முதுமுதல்வன் வாய்போகா
தொன்று புரிந்த ஈரிரண்டின்
ஆறுணர்ந்த ஒரு முதுநூல்”
என்று அப்பாடல் தொடங்குகிறது. சிவபெருமானை முதுமுதல்வன் என்று அப்பாடல் கூறுகிறது. அந்த முதுமுதல்வனாகிய சிவபெருமானின் திருவாயிலிருந்து மறைகள் நீங்காமல் வந்து கொண்டிருக்கிறதாம். ஒரு வேதம் சிவபெருமானால் அருளப்பட்டது என்று சங்க காலம் முதல் சேக்கிழார் வரை கூறப்பட்டது. இன்னொன்று சிவபெருமானால் அருளப்படாமல் தானாகத் தோன்றியது என்று வடமொழியாளர்களால் போற்றிக் கூறப்பட்டு வடமொழியில் உள்ளது. இதிலிருந்து இதுவேறு அதுவேறு என்பது நன்றாகத் தெரிய வருகிறது. ஆனால் நாமோ இதுவரை சிவபெருமான் அருளாத, சுயம்புவாகத் தோன்றிய வடமொழி வேதத்தையே உண்மை வேதம் என்றும் நம்முடைய வேதம் என்றும் கொண்டிருக்கிறோம். பெரியவர்கள் தலைப்பாடாக அடித்துக் கொண்டாலும் நம்முடைய மனம் தாவிக் குதித்து அந்த வடமொழி வேதத்திற்குத் தான் போய் நிற்கிறது.

பெருமான் பாடியதுதான் தமிழ் வேதம்; அதுவே நமக்கு வேதம்.


திருஞானசம்பந்தக் குழந்தை ஒரு வினா எழுப்புகிறது. கல்லால மரத்தின் கீழ் அமர்ந்த பெருமானே! ஏதோ வேதம் சொன்னாயே? என்ன என்று சேய்ஞலூரில் கேட்கிறது.
“நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு
மாலடைந்த நால்வர் கேட்க நல்கிய நல்லறத்தை
ஆலடைந்த நீழல்மேவி அருமறை சொன்னதென்னே
சேலடந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே! “
இது சம்பந்தர் திருசேய்ஞலூரில் பாடியருளியது. சேய்ஞலூர் முருகப்பெருமான் குழந்தையாக இருந்து வணங்கிய தலம். அத்துடன் சண்டீசர் குழந்தை வணங்கிய தலம். இங்கே பார்த்தீர்களானால் அருமறை சொன்னதென்னே என்ற கேள்வி எழுப்பப் பட்டுள்ளது. பதில் இப்பாடலில் இல்லை.

பதிலை வயதான பெரியவர் என்று அழைக்கப்படுகிற சிவபெருமான் தலமான திருமுதுகுன்றப் பதிகத்தில் கூறுகிறார் சம்பந்தர்.
“ சுழிந்த கங்கை தோய்ந்த திங்கள் தொல்அரா நல்லிதழி
சழிந்த சென்னிச் சைவவேடம் தானினைந் தைம்புலனும்
அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு
மொழிந்த வாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே “
அதாவது ‘மாலடைந்த நால்வர் கேட்க’ என்று சேய்ஞலூர் பாடலில் குறிப்பிட்ட சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ற நால்வரைக் குறிப்பிட்டவர், இந்தப் பாடலில் ‘அழிந்த சிந்தனை அந்தணாளர்’ என்று அவர்களைக் குறிப்பிடுகிறார்.

அங்கே அவர்களுக்கு சொன்ன அருமறை என்னே என்று வினாவி அவாய் நிலையாக (SUSPENSE) விட்டவர் இங்கே அது என்ன என்று விளம்புகிறார். அவை அறம், பொருள், இன்பம், வீடு என்றார். இந்த நான்கும் தமிழர்க்கே உரித்தானது என்பதை எல்லா அறிஞர்களும் கூறுகின்றனர். சிவஞான முனிவரும் தொல்காப்பிய முதல் சூத்திர விருத்தியுரையில் இவை தமிழுக்கே உரிய பகுப்பு என்று கூறுகிறார்.


எனவே தமிழில் உள்ள அறம், பொருள், இன்பம், வீடு என்பதுதான் நம்முடைய வேதம். இதுதான் நம்முடையது. சுயம்புவான வடமொழி வேதத்திற்கும் நமக்கும் சம்பந்தமில்லை.

இவை ஒவ்வொன்றிற்கும் நூல்கள் தமிழில் பலவுண்டு. சிலவற்றைப் பார்ப்போம்.
அறம்: 18 நூல்கள் உண்டு. அவை பதிணெண் கீழ்க் கணக்கு எனப்படும் அறநூல்கள், அதில் ஒன்றுதான் திருக்குறள்.
பொருள்: அதாவது உலகியல் அறிவு. பலபேர் பணம் சம்பாதிப்பது மட்டுமே பொருள் என்று நினைக்கின்றனர். இல்லை, நல்ல பெயரைச் சம்பாதிப்பதும் பொருள்தான். அதற்கு உலகியல் அறிவு வேண்டும். திருக்குறளில் பொருட்பால் என்ற ஒரு பிரிவே உண்டு. காஞ்சிபுரத்திலிருந்து வடக்கே சென்ற சாணக்கியனின் அர்த்த சாஸ்திரமே ‘காஞ்சிபுரத்தில் அவன் ஆராய்ந்த தமிழ் நூல்களின் பிழிவே’ என்பது சரித்திர ஆசிரியர்கள் கருத்து.
இன்பம்: அகத்துறை. இது தமிழர்களுக்கே உரித்தானது. இதன்பால் தமிழ்ச் சங்க நூல்கள் ஏராளம். அவ்வளவு ஏன்? சிவபெருமானே ‘இறையனார் களவியல்’ என்ற அகத்துறை நூல் செய்திருக்கிறார்.
வீடு: துறவு பற்றியும் மெய்யுணர்வு பற்றியும் திருக்குறளில் இயலாகவும், அதிகாரமாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழிலக்கணமான தொல்காப்பியத்தில் தாபத பக்கம் பேசப்படுகிறது. இதற்கென காஞ்சித்திணை என்று ஒரு திணையே வகுக்கப்பட்டுள்ளது. மதுரைக் காஞ்சி என்பது பத்துப்பாட்டில் ஒன்று.

இந்த நாலும்தான் வேதம். இந்த நான்கையும் தனித்தனியாக ஆராயும் நூல்கள் தமிழில் இருக்க இந்த நான்கையும் ஒன்றாகக் கூறுவது திருக்குறள்.

ஆக திருக்குறள் உள்ளிட்ட அறம், பொருள், இன்பம் வீடு பற்றிய நூல்கள்தான் நம்முடைய வேதம் என்று உணருவோம்.

காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல் ஈச்சம் பழத்திற்கு நாம் ஏன் இடறவேண்டும்?

No comments:

Post a Comment